கவிதை எனும் வட்டக்கண்ணாடி.

There are three idealists: God, mothers and poets!

They don’t seek the ideal in completed things—

they find it in the incomplete.

என்ற பீட்டர் ஆல்டென்பெர்க்கின் (Peter Altenberg) வரிகள் தான் அவரைத் தேடி வாசிக்க வைத்தது. ஆல்டென்பெர்க் ஆஸ்திரியாவின் முக்கியக் கவிஞர். வியன்னாவிலுள்ள கபே சென்ட்ரல் என்ற காபிஷாப் தான் இவரது உலகம். இவரது பெரும்பான்மைக் கவிதைகள் இந்தக் காபிஷாப்பில் வைத்து எழுதப்பட்டவை. இவரை “coffee house poet” என்றே அழைக்கிறார்கள் , இவருக்கு வரும் தபால்கள் கூட கபே சென்ட்ரல் முகவரியிட்டு தான் அனுப்பிவைக்கபட்டன.

இலக்கியவாதிகள், ஒவியர்கள். கலைவிமர்சகர்கள் சந்திக்கும் மையமாக விளங்கியது அந்தக் காபி ஷாப். அன்றாடவாழ்வின் தருணங்களைக் கவிதைகளாக்கியவர் ஆல்டென்பெர்க். காப்காவும் தாமஸ் மானும் இவரது கவிதைகளைப் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள்.

காபி ஷாப்பின் முக்கியத்துவம் பற்றிய இவரது கவிதை சிறப்பானது

You’ve got troubles of one kind or another — get thee to the coffeehouse!

She can’t make it to your place for whatever perfectly plausible reason — to the coffeehouse!

Your boots are torn — to the coffeehouse!

You make four hundred Crowns and spend five hundred — coffeehouse!

You’re a frugal fellow and don’t dare spend a penny on yourself — coffeehouse!

You’re a paper pusher and would’ve liked to become a doctor — coffeehouse!

You can’t find a girlfriend up to snuff — coffeehouse!

You’re virtually on the verge of suicide — coffeehouse!

You loathe and revile people and yet can’t live without them — coffeehouse!

No place else will let you pay on credit — coffeehouse!

அவரது Telegrams of the Soul என்ற புத்தகத்தை தினசரிவாழ்வின் கவித்துவக் குறிப்புகள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். இந்த வகை எழுத்திற்கு short prose எனப் பெயர்

இத்தொகுப்பு முழுவதிலும் காபி ஷாப்பில் அவர் சந்தித்த இளம்பெண்கள். கலைஞர்கள். மனிதர்கள், நிகழ்வுகள் குறித்துச் சின்னஞ்சிறிய குறிப்புகளாக எழுதியிருக்கிறார்.

கபே சென்ட்ரலில் ஆல்டென்பெர்க்கை சுற்றிலும் எப்போதும் இளம்பெண்களின் கூட்டமிருந்தது. குறிப்பாக பள்ளிச்சிறுமிகளில் பலர் அவரது நெருக்கமான தோழிகள். அவர்களுக்காகக் கவிதைகள் எழுதியிருக்கிறார். தாங்கள் சந்தித்த முதல்கவிஞர் ஆல்டென்பெர்க் என அந்த மாணவிகள் பெருமிதம் கொண்டிருக்கிறார்கள்.

ப்யானோ வகுப்பிற்குக் கட் அடித்துவிட்டு காபிஷாப்பிற்கு வரும் மாணவி ஒருத்தியுடன் நடந்த உரையாடலை அப்படியே பதிவு செய்திருக்கிறார். காதல் ததும்பும் அந்தப் பதிவில் தான் எத்தனை கேலி, கிண்டல்.

போதிய வருமானமின்றிக் கடன்சுமையில் வாழ்ந்தவர் என்பதால் இவரது எழுத்தில் ஆழ்ந்த வருத்தமும் கவலையும் அடிநாதமாக ஒலிக்கின்றன.  ஆல்டென் விசித்திரமான மனிதராகவே எப்போதுமிருந்திருக்கிறார்.  தன் கவிதைகளைப் பாதுகாத்து வைத்துக் கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. கவிதையை ஒரு பரிசுப்பொருள் போல பகிர்ந்து அளித்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்த இவர் பனிபெய்யும் நாட்களில் கூட வீட்டுஜன்னலைத் திறந்து வைத்து தூங்கும் பழக்கம் கொண்டவராகயிருந்தார்.

காபி ஷாப்பில் அவருக்கென ஒரு தனிடேபிள் எப்போதுமிருந்தது. கையில் நிறைய அஞ்சல்அட்டைகள், விதவிதமான பேனாக்கள். யாருக்காவும் ஒரு கவிதையை எழுதித் தர எப்போதும் தயாராகயிருந்தார். அப்படி அவர் ஒரு போஸ்ட்கார்டில் எழுதி தந்த கவிதை இசையமைப்பாளர் ஒருவரிடம் கிடைத்தது. அவர் அக்கவிதையை இசையமைத்து பாடியதன் வழியே ஆல்டென்பெர்க் புகழ்பெற்றார். அதன் தொடர்ச்சியாக அவரது கவிதைகள் இசையோடு பாடப்பட்டன

Telegrams of the Soul தொகுப்பில் அம்மாவின் வாசனைத் திரவியம் என்றொரு குறிப்பு உள்ளது.

சிறுவயதில் அம்மாவின் மேஜையை நெருங்கிப் போகையில் அங்கிருந்த பெர்ப்யூம் ஒன்றின் வாசனை சுண்டியிழுப்பதாகயிருக்கும். அது என்ன வாசனைத்திரவியம் எனத்தெரியாது ஆனால் அதன் நறுமணம் அம்மாவை நினைவுபடுத்தக்கூடியது. காலியான பெர்ப்யூம் பாட்டிலை நுகரும் போது அம்மாவின் மணம் நாசியில் படரும். ஒரு காலத்தில் நான் அறிந்த ஒரே பெண்ணாக அம்மா மட்டுமே இருந்தாள். அவள் வழியாகவே இன்பதுன்பங்கள் அறிமுகமானது. ஆனால் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு எத்தனையோ பெண்கள், எவ்வளவோ சந்தோஷங்கள். அந்தப் பெண்களில் சிலர் விலைஉயர்ந்த வாசனை திரவியங்களைக் கூடப் பரிசளித்திருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் அம்மாவின் வாசனை திரவியத்திற்கு ஈடாகவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னொரு நாள் அந்தப் பெர்ப்யூமைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி நுகர்ந்த போது அம்மா இல்லாத வெறுமையை முழுமையாக உணர்ந்தேன்.

இது போலவே படுக்கை பற்றிய ஒரு குறிப்பு

நீங்கள் படுக்கைக்கு வெளியே வெளியுலகில் ஆயிரம் பேருடன் போராடலாம். வாதம் செய்யலாம்.. ஆனால் படுக்கையில் நீங்கள் வேறு ஒருவர். சரணாகதி அடைந்தவர். படுக்கை உங்களை அடுத்த நாளுக்குத் தயார் செய்கிறது படுக்கை உங்கள் கவலைகளை ஆற்றுபடுத்துகிறது. புதிய சக்தியை உருவாக்கித் தருகிறது. படுக்கை உறங்குவதற்கானது மட்டுமில்லை. படுக்கையிலிருந்து எழுந்து கொள்வது மிக முக்கியமானது.

இன்னொரு குறிப்பில் பலூன்களுக்கு ஆசைப்படும்  ஏழைச்சிறுமிக்கும் பலூன்களை மொத்தமாக வாங்கிப் பறக்கவிடும் பணக்காரசிறுமிக்குமான வேறுபாட்டினையும் சுட்டிக்காட்டுகிறார்.  எது உண்மையான சந்தோஷம் என்பது அவர்களின் செயல்பாட்டிலுள்ளது எனப்புரிகிறது

தனக்குப் பிடித்த பறவை மீன்கொத்தி. காரணம் அது ஒன்று தான் மணிக்கணக்கில் பொறுமையாக, மௌனமாகத் தன் இரைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது தன்னைப் போல என்கிறார்.

இப்படி தன்னைப் பகடி செய்துகொள்வதிலும். தன்னைத் தேடி வரும் இளம்பெண்களைக் கேலி செய்வதிலும் ஆல்டென்பெர்க் நிகரற்றவராகத் தோன்றுகிறார்.

மனச்சிதைவின் காரணமாகச் சில மாதங்கள் மனநலக்காப்பகம் ஒன்றில் அனுமதிக்கபட்ட ஆல்டென்பெர்க் அங்குள்ள மருத்துவர்கள் தாதிகள். நோயாளிகள் ஆகியோர் பற்றியும் இதுபோல நகைச்சுவையான குறிப்புகளை எழுதியிருக்கிறார்

நம் அனைவரையும் மகிழ்சியின்மை துரத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்கவே நாம் எதையெதையோ செய்கிறோம். மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பதும் நமதாக்கிக் கொள்வதற்கும் போராடுகிறோம். உண்மையில் மகிழ்ச்சி என்பது தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய விஷயமில்லை. அது நம்மைச் சுற்றிலும் ஏராளமிருக்கிறது. நாம் அதை உணரமாலிருக்கிறோம். பணம் கொடுத்து பெறுவதே மகிழ்ச்சி என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சி என்பது உருவாக்கபடுவது. நாம் அதை ஏற்றுக் கொள்பவராகவும் இருக்கலாம். உருவாக்குபவராகவும் இருக்கலாம் என்கிறார் ஆல்டென்பெர்க்

ஆல்டென்பெர்க்கின் இன்னொரு குறிப்பு பார்க் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் பற்றியது

அதில் சிறுவயதில் இப்படித்தான் அப்பா அம்மாவுடன் வந்து பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பூங்காவில் நடப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த நாட்களில் ஒருமுறை கூடப் பெற்றோர் தன்னைக் கோவித்துக் கொண்டது கிடையாது. இன்று பொது இடம் எனப்பார்க்காமல் சிறுவர்களைப் பெற்றோர்கள் கோவித்துக் கொள்கிறார்கள். திட்டுகிறார்கள். இதைக் காணும் போது முந்தைய தலைமுறை பெற்றோர்களின் கருணையை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

தன்னுடைய எழுத்து பெண்களின் கைப்பையிலுள்ள சிறிய வட்டக்கண்ணாடி போன்றது. கையடக்கமானது. மனதிற்கு நெருக்கமானது. கண்ணாடியைக் கொண்டு தன்னை வியந்து கொள்ளும் அழகிய பெண்ணைப் போலவே நான் எழுதுகிறேன் என்கிறார் ஆல்டென்பெர்க்

காதலைக் கொண்டாடும் ஆல்டென்பெர்க் இப்படி எழுதுகிறார்

“For a man the whole world is his love. For a woman love is her whole world.”

••

0Shares
0