காதலின் சாவி.

கிரேக்கத் தொன்மத்தில் வரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் (Pyramus and Thisbe) காதல் கதையின் பாதிப்பில் தான் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டும் பகையான குடும்பத்திற்குள் நடக்கும் காதலையே பேசுகின்றன. ரோமானிய கவிஞர் ஓவிட் இக்கதையைத் தனது மெட்டாமார்போசிஸில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

கிழக்குப் பாபிலோனில், ராணி செமிராமிஸ் நகரத்தில், அடுத்தடுத்த வீட்டில் வசித்துவரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் பெற்றோர்கள் நீண்டகாலமாக வெறுப்பும் பகையும் கொண்டிருந்தார்கள். ஆனால் காதலர்களான பிரமிஸ் மற்றும் திஸ்பே இரண்டு வீட்டிற்கும் பொதுவாக இருந்த சுவரிலிருந்த துளை வழியாக ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள். பெற்றோர்களின் கண்டிப்பு பற்றிப் புகார் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இரவு பிரியும் போது சுவரை முத்தமிட்டுக் கொண்டு பிரிகிறார்கள். இப்படியாக அவர்கள் காதல் வளர்க்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்கள், ஆனால் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இனியும் பொறுக்க முடியாது என வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஒருநாள் முடிவு செய்கிறார்கள்

நகர வாயில்களுக்கு வெளியே, நினஸ் மன்னரின் கல்லறைக்கு அருகில் உள்ள ஒரு மல்பெரி மரத்தடியில் இரவு சந்திக்கத் திட்டமிடுகிறார்கள்.

அதன்படி, திஸ்பே மாறு வேடமிட்டு வீட்டை விட்டு வெளியேறி வருகிறாள். நினஸின் கல்லறைக்கு அருகில் உள்ள மல்பெரி மரங்களின் தோட்டத்திற்கு வந்து சேருகிறாள். அந்த இடம் வெறிச்சோடியிருந்தது. மங்கிய நிலவொளி. பிரமஸ் எங்கேயிருக்கிறான் எனத் தெரியாமல் அவனைத் தேடுவதற்காகத் தனது முகத்திரையை அகற்றுகிறாள். அப்போது அங்குள்ள குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு சிங்கம் வந்திருந்தது. அச்சிங்கம் அவளைத் தாக்க முற்படவே தப்பியோடி பாறைகளுக்கு இடையே ஒளிந்து கொள்கிறாள்.

வெறி கொண்ட சிங்கம் இரத்தம் தோய்ந்த தாடையால் அவளது முகத்திரையைக் கிழித்து எறிகிறது. அங்கு வந்த பிரமஸ் கிழிந்துகிடந்த இரத்தக் கறை படிந்த முகத்திரையைப் பார்க்கிறான் அது திஸ்பேயின் முகத்திரை என அறிந்து அதிர்ச்சி அடைகிறான். சிங்கம் அவளைக் கொன்றுவிட்டதாக நினைத்து வருந்தி தனது வாளால் தற்கொலை செய்து கொள்கிறான்.

திஸ்பே அவனைத் தேடி வருகிறாள். அங்கே பிரமஸ் இறந்துகிடப்பதைக் கண்டு அதே வாளால் தன்னையும் மாய்த்துக் கொண்டு இறந்து போகிறாள். இதை அறிந்த அவர்கள் பெற்றோர்கள் உடலைக் கைப்பற்றுகிறார்கள். பின்பு காதலர்கள் ஒரே கல்லறையில் ஒன்றாக அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்தக் காதலர்களின் ஒப்பற்ற காதலின் நினைவாகக் கடவுள் வெள்ளையாக இருந்த மல்பெரி மரத்தின் பழங்களைச் சிவப்பாக மாற்றினார் என்கிறார்கள். அது முதலே மல்பெரி பழம் சிவப்பாக உள்ளது என்கிறது கிரேக்கக் கதை.

கிரேக்கப் புராணங்களில் இது போல மலரின், பழங்களின் நிறம் மாறுவது தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது. நர்சிசஸ் இறந்துவிடுகிறான் அவனது இரத்தத்திலிருந்து நார்சிசஸ் மலர் முளைத்ததாகச் சொல்கிறார்கள். இது போலவே அடோனிஸின் இரத்தக் கறை படிந்த வெள்ளை ரோஜாக்கள் காரணமாகவே பூமியில் சிவப்பு ரோஜாக்கள் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பிரமஸ் மற்றும் திஸ்பேவின் வீட்டுத் துளையின் பார்வையில் அர்ஜென்டினா எழுத்தாளர் என்ரிக் ஆண்டர்சன் எம்பெர்ட் குறுங்கதை ஒன்றினை எழுதியிருக்கிறார். இவர் குறுங்கதைகளை எழுதுவதில் முன்னோடியான எழுத்தாளர். Woven on the Loom of Time என அவரது குறுங்கதைகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.

அவரது குறுங்கதையில் பாபிலோனில் இரண்டு பழைய வீடுகளுக்கு இடையே இருந்த சுவர் ஒன்றில் சிறிய துளை விழுகிறது. சில வாரங்களில் அந்தத் துளை வாய் போன்ற வடிவம் கொள்கிறது. நாளடைவில் அது காது போன்ற வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. பின்பு கண் வடிவமாகிறது.

இரண்டு பக்கம் நடப்பதையும் ஆசையாகக் கவனிக்கத் துவங்குகிறது. காதலர்கள் ரகசியமாகச் சந்தித்துக் கொள்ள மாட்டார்களா என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பயனற்ற காத்திருப்பு எனப் புரிந்து கொள்கிறது. பிரமஸ் மற்றும் திஸ்பே பற்றி ஒருபோதும் அறியாத அந்தத் துளையைக் காலவோட்டத்தில் சிலந்தி வலை படர்ந்து மூடிவிடுகிறது.

எம்பெர்ட் சுவரில் விழுந்த துளையால் வசீகரிக்கப்படுகிறார். அதை ஒரு கதாபாத்திரமாக உருவாக்குகிறார். தனது சிறிய கதையின் வழியே கிரேக்க தொன்மத்தை நோக்கி நம்மை பயணிக்கச் செய்கிறார். குறுங்கதை என்பது ஒருவகை நினைவூட்டல். ஒரு மறு உருவாக்கம்.

நான் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் கதையை சிங்கம் வழியாகவே எழுத விரும்புவேன். அது தான் கதையின் முடிச்சு. சிங்கம் இல்லாவிட்டால் அவர்கள் காதல் கதை மகிழ்ச்சியாக முடிந்திருக்கும். சிங்கம் நிஜமாக வந்திருக்குமா என்பதே கேள்வி தான். அப்படி நம்ப வைத்திருக்கலாம்.

பிரமஸ் மற்றும் திஸ்பே கதையை படிக்கும் போது பஷீரின் மதிலுகளில் வரும் சிறைச்சாலைச் சுவர் நினைவிற்கு வருகிறது. பெண் கைதியின் காதலும் அதைப் பஷீர் சொன்னவிதமும் அழகானது. அதிலும் மலரே காதலின் சாட்சியமாகிறது. அவர்கள் சுவரை முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

பெற்றோரின் பகை சுவரை எழுப்பி அவர்களின் காதலைத் தடுக்கிறது. ஆனால் துளை காதலின் சாவியைப் போல அவர்கள் உரையாட வழியை உருவாக்குகிறது. காதல் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். அது தான் சுவரிலிருந்த துளை.

வாய், கண் காது எனத் துளை உருக் கொள்வது கதையின் சிறப்பு. இக்கதையை வாசிக்கும் போது சர்ரியலிச ஓவியம் ஒன்றைப் பார்த்த அனுபவம் உருவாகிறது.

0Shares
0