குறுங்கதைகள் விமர்சனம்

பொன் மாரியப்பன். தூத்துக்குடி.

காலச்சுவடு 2021 ஆகஸ்ட் மாத இதழ் வாங்கினேன். 21 குறுங்கதைகளில் தங்களின் 3 குறுங்கதைகள் படித்தேன். மூன்றும் வாசிப்பில் இனிமையும் மாற்றத்தையும் உருவாக்கியது. இது போன்ற குறுங்கதைகள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்பேன்.

பதினேழாவது ஆள்

பழைய நிழற்படத்தைக் கொண்டு வாசிக்கும் எல்லோருடைய மனதிலும் பதினேழாவது ஆள் தோன்றி மறைகிறான்.அது தான் மனசாட்சி.

அந்த நிழற்படத்தின் பதினேழாவது தான் என்னை எழுத வைக்கிறது.ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் குரூப் போட்டோ தூசி தட்டப்படும். நினைவுகள் திரும்பத் திரும்ப ஒளித்திட வேண்டுமெனில் குரூப் போட்டோவைத் தேட வைக்கிறது.

பஷீரின் திருடன்

ஒரு கதையில் முக்கிய கதாபாத்திரமாக வேண்டும் என்றால் ஸ்பெஷலாக ஏதாவது விசயம் இருக்க வேண்டும் என்கிறார் பஷீர். இந்த கதையில் பஷீர் வருவது ஸ்பெஷலான விஷயமே. .பஷீர் பற்றி சிறப்பாகவே எழுதி இருக்கிறார் எஸ்ரா. மனிதர்களின் மனம் தினந்தினம் ஸ்பெஷலைத்தான் விரும்புகிறது. முத்தத்தைத் திருடி வர முடியுமா என்று கேட்கிறார் பஷீர். முடியாது என்றான் திருடன். பின்பு ஒரு பெண்ணின் கனவைத் திருடி வர முடியுமா? என்று பஷீர் திருடனிடம் கேட்கிறார். அதையும் திருடன் முடியாது என்றான். ஸ்ரீதரனின் மனைவி அப்சராவின் கன்னங்கள் மாம்பழம் போல இருக்கும் என்கிறார். கனவு என்பது தூக்கத்தில் அல்ல, விழித்திருக்கும் போது அல்ல வருணிப்பதும் கனவுதான். வருணிப்பதும் திருடப்பட்ட கனவு தான். கடைசியாகக் கோழி திருடும் பெண்ணின் மூக்குத்தியைத் திருட முடியுமா? எனக்கேட்கிறார். இதற்கு மட்டும் திருடன் சம்மதிக்கிறான். கடைசியில் காதலித்து நாராயணியையே திருடி விட்டான். காதலின் திருட்டினைக் கதை உணர்த்துகிறது.

வாளும் மலரும்

கவிதைகள் ஆட்சி செய்யுமா? என்றால் செய்யும் என்கிறது இந்த குறுங்கதை வாளும் மலரும் கதையில் வரும் சீன அரசன் போரை விரும்புவதில்லை. அவன் சந்திக்கும் பெண் கவிஞரோ தனது கவிதையின் மூலம் வாளை மலராக்கிவிடுகிறார். இந்த அதிசயம் தான் கதையின் சிறப்பு.

கவிதைகள் ஆயுதத்தைக் கூட மலராக மாற்றக் கூடியது அதையே கதையிலும் காணுகிறோம்.. ஒவ்வொருவரும் கவிதை எனும் மலர்களைப் பரிமாறிக்கொண்டால் அங்கு உயிர்ப்பலி இராது. வாளை ஒரு மலராக மாற்றியது பிடித்திருந்தது. இது போன்ற குறுங்கதைகளின் வழியே மனதை மேம்படுத்தும் தங்கள் பணி மேலும் தொடரட்டும்

0Shares
0