திரைக்கூட்டணி

புக்கர் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது இரண்டையும் வென்ற ஒரே எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜாப்வாலா. மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இவரே திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். இவர்கள் கூட்டணி கடைசிவரை நீடித்தது.

ஹாலிவுட் சினிமாவில் பெண் திரைக்கதை ஆசிரியர்கள் குறைவு. அதிலும் இப்படி நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கூட்டணியாகத் திரைப்படத்தில் பணியாற்றுவது அபூர்வமானது.

ஜாப்வாலா பன்னிரண்டு நாவல்களையும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 23 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். இதில் இரண்டு முறை சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.

ஜாப்வாலா ஜெர்மனியில் பிறந்தவர். யூத சமயத்தைச் சேர்ந்தவர். லண்டனில் படித்துக் கொண்டிருந்த போது பார்சி மாணவராக இருந்த ஜாப்வாலாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகே ஜாப்வாலா இந்தியாவில் குடியேறினார். அவரைப் பலரும் இந்தியர் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதுடில்லியில் வாழ்ந்து வந்த அவர் 1963ல் தற்செயலாகவே திரையுலகிற்குள் நுழைந்தார். அவரது நாவலின் உரிமையைப் பெறுவதற்காக இஸ்மாயில் மெர்சண்ட் அணுகிய போது அவரைத் தவிர்க்கவே ஜாப்வாலா முயற்சித்தார். ஆனால் அந்தச் சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றிவிடும் என்று அறிந்திருக்கவில்லை.

மும்பையில் பிறந்த இஸ்மாயில் மெர்சண்ட் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தி நடிகை நிம்மியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த மெர்சண்ட் அவரது உதவியோடு சினிமா உலகிற்கு அறிமுகமானார். தனது 22 வயதில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக மெர்சண்ட் அமெரிக்கா சென்றார். பின்பு அங்கேயே வாழத்துவங்கினார். அமெரிக்காவில் வசித்த நாட்களில் நிறையச் சர்வதேச திரைப்படங்களைப் பார்த்தார். இந்திய திரைப்படங்களை அமெரிக்காவில் திரையிடுவதற்கான வழிகளை உருவாக்கினார்.

திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் ஐவரியை நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து நட்பு கொண்டார். அவர்கள் இணைந்து மெர்சண்ட் ஐவரி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்கள். அந்தக் கூட்டணி நாற்பது ஆண்டுகள் நீடித்தது.

இவர்கள் தயாரித்த சில படங்கள் இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டவை. குறிப்பாகப் பிரிட்டிஷ் வாழ்க்கையை அல்லது பிரிட்டிஷ் கால இந்திய மேல்தட்டு வர்க்க வாழ்க்கையை விவரித்தன.

மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் உருவான திரைப்படங்களில் ஷேக்ஸ்பியர்வாலா தான் மிகச்சிறந்தது என்பேன். அதில் சசிகபூர் முக்கிய வேஷத்தில் நடித்திருக்கிறார். சசிகபூரின் மனைவி ஜெனிபர் கேண்டல் ஒரு பிரிட்டிஷ் பெண் அவரது தந்தை ஜெஃப்ரி கெண்டல் ஷேக்ஸ்பியர் நாடகங்களை இந்தியாவில் நடத்தியவர். அதில் ஜெனிபரும் நடித்திருக்கிறார். அந்த அனுபவங்களை முதன்மைப்படுத்திய இந்தப்படம் உருவாக்கபட்டிருக்கிறது

இப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருப்பது சுப்ரதா மித்ரா. பனிப்புகையினுள் சசிகபூர் தன் காதலியோடு செல்லும் காட்சி எத்தனை அழகானது. அது போலவே ஷேக்ஸ்பியர் நாடகங்களை நிகழ்த்தும் அரங்க காட்சிகளும் மிக நேர்த்தியாகப் படமாக்கபட்டிருக்கின்றன. படத்தின் துவக்க காட்சியிலே படத்தின் தனியழகு புரியத்துவங்கிவிடுகிறது.

சசிகபூர் ஒரு நாடக நிகழ்வில் தான் ஜெனிபரை சந்தித்தார். இருவரும் ஒன்றாக நடித்தார்கள். அந்த நட்பு வளர்ந்து காதலாக மாறியது. இவர்கள் திருமணத்தை ஜெஃப்ரி கெண்டல் ஏற்கவில்லை. அந்த எதிர்ப்பை மீறி சசிகபூர் 1958ல் ஜெனிபரை திருமணம் செய்து கொண்டார்

திருமணத்திற்குப் பிறகு அவர்கள் ஒன்றாகப் பல படங்களில் நடித்தனர், குறிப்பாக மெர்சண்ட் ஐவரி தயாரிப்புப் படங்களில் சசிகபூர் தொடர்ந்து நடித்து வந்தார். .இதன்வழியே ஆங்கிலப் படங்களில் அதிகம் நடித்த இந்திய நடிகராகச் சசிகபூர் விளங்கினார்.

மெர்சண்ட் ஐவரி நாற்பது திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். இதில் பாதிக்கும் மேல் புகழ்பெற்ற நாவல்கள். இந்த நாவல்களுக்கு ரூத் ப்ராவர் ஜாப்வாலா திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தக் கூட்டணி எந்தச் சூழலிலும் பிரியவில்லை. ஒரு குடும்பம் போல அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள்.

யூதரான ஜாப்வாலாவின் குடும்பம் நாஜி கொடுமையிலிருந்து தப்பி இங்கிலாந்தில் அடைக்கலமானது. லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த ஜாப்வாலா ஆங்கிலச் சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்றார். . நான்கு நாவல்களை எழுதியுள்ளார். திரைப்படங்களை விரும்பி பார்க்கக் கூட விரும்பாத அவரை மெர்சண்ட் திரைக்கதை எழுத அழைத்தபோது அது தனக்கான வேலையில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் மெர்சண்ட் தொடர்ந்து வற்புறுத்தவே ஒத்துக் கொண்டிருக்கிறார். அப்படித் தான் அவரது திரை வாழ்க்கை துவங்கியது.

விமர்சகராகத் தான் ஒரு போது எந்த நாவல் பற்றியும் கட்டுரைகள் எழுதியது கிடையாது. அது தான் திரைக்கதை எழுதச் சாதகமான விஷயமாக இருந்தது. ஒரு நாவலைப் படித்து ஆராதித்து அதிலே மூழ்கியிருக்கும் போது அதை எப்படிச் சாரம் கெடாமல் திரைக்கு மாற்றுவது என்று புலப்படத் துவங்கும். நீங்கள் விமர்சகராக இருந்துவிட்டால் நாவலை கூறுபோட ஆரம்பித்துவிடுவீர்கள். கேள்வி கேட்கத் துவங்கிவிடுவீர்கள். அது நாவலின் சாரத்தைச் சிதைத்துவிடுவதாக இருக்கும் என்கிறார் ஜாப்வாலா.

நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களை நாம் திரைக்கு ஏற்ப மாற்றக்கூடாது. அது நாவலுக்குச் செய்யும் அநீதி. மாறாகக் கூடுதலாகச் சிறுநிகழ்வுகளை இணைத்துக் கொள்ளலாம். அல்லது சில நிகழ்வுகளைக் கைவிடலாம். ஆனால் கதாபாத்திரத்தின் இயல்பை மாற்றித் திரைக்கதை எழுதக்கூடாது. அது நாவலுக்குச் செய்யும் துரோகம் என்கிறார்

திரைப்படமாக்கப் போகிற நாவலைப் பலமுறை படிப்பேன். குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். அதிலிருந்து ஒரு வரைபடத்தை மனதிற்குள் உருவாக்கிக் கொள்வேன். அப்படித் தான் எனது திரைக்கதை பணி நடைபெறும் என்றும் சொல்கிறார் ஜாப்வாலா.

The Householder என்ற ஜாப்வாலாவின் நாவல் பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் பிரேம் சாகரைப் பற்றியது. புதிதாகத் திருமணமாகி மனைவி இந்துவோடு வாழுகிறார். அவனது அம்மாவின் வருகை மனைவியோடு பிணக்கு ஏற்படச் செய்கிறது. திருமண வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் பிரேம் தடுமாறுகிறான். அந்த அலைக்கழிப்பை நாவல் விவரிக்கிறது. எளிமையான கதை. அதை மெர்சண்ட் ஐவரி அழகான படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.. இந்தப்படம் சத்யஜித்ரேயின் Apur Sansar பாதிப்பில் உருவானது போலவேயிருக்கிறது.

Heat and Dust ஜாப்வாலாவின் புக்கர் பரிசு பெற்ற நாவல். 1982 ஆம் ஆண்டில், ஆனி என்ற வெள்ளைக்கார பெண் தனது அத்தை ஒலிவியா காணாமல் போன சம்பவம் பற்றி விசாரிக்கத் துவங்குகிறார். ஒலிவியாவிற்கு என்ன நடந்தது. ஏன் அவர் காணாமல் போனார் என்பதைக் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகளின் உதவியோடு கண்டறிய முற்படுகிறார். ஒலிவியா பிரிட்டிஷ் ஆட்சியில் உதவி ஆட்சியாளராக இருந்த டக்ளஸின் மனைவி.

ஒலிவியாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது ஃப்ளாஷ்பேக்கில் கூறப்படுகிறது. 1923 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது மாவட்ட சப்கலெக்டராக இருந்த டக்ளஸ் ரிவர்ஸை (கிறிஸ்டோபர் காசெனோவ்) திருமணம் செய்து கொண்டார் , மத்திய இந்தியாவிலுள்ள சதிபூரில் வாழ்ந்து வருகிறார்

இந்தியாவின் கடுமையான வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒலிவியா கோடைக்காலத்தைச் சிம்லாவில் கழிக்க வேண்டும் என்று டக்ளஸ் வலியுறுத்தும்போது அவள் மறுக்கிறாள். ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறை அவளுக்குச் சலிப்பூட்டுகிறது. இந்திய ஆண்கள் மிக மோசமானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று திருமதி க்ராஃபோர்டு பயமுறுத்துகிறாள்.

ஒலிவியா இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு இந்திய இசையும் வாழ்க்கையும் பிடித்திருக்கிறது. ஒரு நாள் நவாபின் விருந்தில் கலந்து கொள்கிறார். அங்கே நடைபெறும் கச்சேரியை ரசித்துக் கேட்கிறாள். நவாப் அவளையும் டக்ளஸையும் மறுநாள் தனிச் சிறப்பு விருந்திற்கு அழைக்கிறார்

இந்த விருந்தின் வழியே அவள் நவாப்போடு பழக ஆரம்பிக்கிறாள். அடிக்கடி நவாபினை காண வருகிறார். அது ரகசிய காதலாக மாறுகிறது.

இதே நிகழ்வின் மறுவடிவம் போலவே ஆனிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கிறது. இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜாகிர் உசேன் இந்தர்லால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒலிவியா நவாப்பின் உறவால் கர்ப்பமாகிறாள். இது எதிர்பாராத பிரச்சனைகளை உருவாக்குகிறது. ஒலிவியாவிற்கு என்ன ஆனது என்பதே படத்தின் மீதக்கதை.

பத்தொன்பதாம் நூற்றாண்டு ரொமான்டிக் நாவல்களில் ஒன்று போலவே தான் ஜாப்வாலாவின் நாவலிருக்கிறது. அதைப் படமாக்கிய விதம் சுவாரஸ்யமாக உள்ளது. முன்பின்னாக நகர்ந்து செல்லும் திரைக்கதையும் கதாபாத்திர சித்தரிப்பும் அழுத்தமாக உள்ளன. அரங்க அமைப்பும் இசையும் சிறப்பாக உள்ளன.

மெர்ச்ண்ட் ஐவரி முயற்சியால் தான் சத்யஜித்ரே திரைப்படங்கள் அமெரிக்காவில் திரையிடப்பட்டன. ஆகவே ரே அவர்களுடன் நெருக்கமாக இருந்தார். ஷேக்ஸ்பியர்வாலா படத்திற்கு இசையமைக்க மிகக் குறைவான கால அவகாசமே ரேயிற்கு அளிக்கப்பட்டது. மிகச்சிறந்த இசையைப் படத்திற்கு ரே வழங்கியிருக்கிறார்.

அனிதா தேசாயின் எழுத்துகளைப் போலவே ஜாப்வாலாவின் படைப்புகளும் இருக்கின்றன. ஆனால் தேசாயிடம் ஏற்படும் நெருக்கம் ஜாப்வாலாவிடம் கிடைப்பதில்லை. இந்திய ஆங்கிலப் படைப்பாளிகளில் ஒருவராக ஜாப்வாலா பல்வேறு இந்திய பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படுகிறார். அவரது நாவல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் பொதுவெளியில் அவரது நாவல்கள் சிறுகதைகள் இன்று பெரிய கவனம் பெறவில்லை.

1960களில் இந்தியாவின் ஞானத்தைத் தேடி அமெரிக்க இளைஞர்கள் படையெடுத்து வர ஆரம்பித்தார்கள். யோகா மற்றும் தாந்திரீக முறைகளின் மீது பெரிய கவனம் உருவாக ஆரம்பித்தது இந்தியத் துறவிகளுக்கு வெளிநாட்டுச் சீடர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். அந்தச் சூழல் தான் ஜாப்வாலாவை எழுத வைத்தது. அவரது நாவல்களில் வரும் வெளிநாட்டுப் பெண்கள் இப்படி இந்திய ஆன்மீகத்தால். இசையால், பண்பாட்டால் ஈர்க்கபடுகிறார்கள். ஆன்மீக தேடலில் ஈடுபடுகிறார்கள்.

இந்தியாவில் வாழ்ந்து இந்தி கற்று தன் மூன்று பிள்ளைகளையும் இந்தியாவில் வளர்த்த போதும் அவரால் இந்தியாவைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. இந்தியாவை வெளியிலிருந்து பார்க்கும் பார்வையே கொண்டிருந்தார். அது தான் அவரது படைப்புகளிலும் வெளிப்பட்டது. அதன் காரணமாகவே அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். புக்கர் பரிசில் கிடைத்த பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் குடியேறிய ஜாப்வாலா இறுதி வரை அங்கேயே வசித்தார்

ஜாப்வாலா இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்றிருந்த போதும் மெர்சண்ட் ஐவரி தயாரிப்பு தவிர வேறு எவரது திரைப்படத்திலும் பணியாற்றவில்லை. அது தான் வியப்பாக இருக்கிறது. மூவர் கூட்டணியின் உறுதியான நட்பினை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கிறது

••

0Shares
0