தொஷிரோ மிபுனே

 


 


 


ஏப்ரல் 1 மிபுனேயின் பிறந்த தினம். யார் மிபுனே என்று கேட்கிறீர்களா? பெயரைச்சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்காது ஆனால் அகிரா குரசேவாவின் படங்களில் சாமுராயாக நடித்தவர் என்றால் நிச்சயம் பலருக்கும் அடையாளம் தெரிந்துவிடும்.

ஹாலிவுட் நடிகர்களை அறிந்துள்ள அளவு பிறமொழிகளின் நடிகர்களைக் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. உலகத் திரைப்படங்களைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் கூட படத்தின் இயக்குனர் யார் என்பதில் கொள்ளும் கவனம் யார் நடித்திருக்கிறார்கள் என்பதில் இருப்பதில்லை. ஒரு சில முகங்கள் அடிக்கடி காணுகின்ற காரணத்தால் மனதில் பதிந்து விடுகின்றன. ஆனால் அவர்களின் பெயர்கள் நினைவில் நிற்பதில்லை.

நான் இதில் விதிவிலக்கு. பெரும்பாலும் திரைப்படங்களின் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை நினைவில் வைத்துக் கொள்வேன். மேலும் அவர்களைப் பற்றிய கூடுதல் விபரங்களையும், உருவாக்கத்தின் பின்னுள்ள விபரங்களையும் வாசித்து அறிந்து கொள்ள முயற்சிப்பேன்.

நடிகர்களில் ஹாலிவுட்டின் அல்பேசினோ, ராபர்ட் டிநீரோ, வுடீ ஆலன், கோடார்ட் படங்களில் நடித்த பெல்மான்டோ, சிரனோ டி பெர்ஜார் போன்ற படங்களில் நடித்த ஜெராடு டிபெர்டியூ, சேகுவாராவாக நடித்த கேல் கார்சியா பெர்னல், சினிமா பாரடிஷோ மற்றும் பாப்லோ நெருதாவாக நடித்த பிலிப்பே நோய்ரெட் , ஹெர்சாக் படங்களில் தொடர்ந்து நடித்த கின்ஸ்கி தற்போது ஜப்பானியப் படங்களில் பிரபலமாக உள்ள டகாசி கிடானோ, ஒல்டு பாய் போன்ற கொரியப் படங்களில் நடித்த ஷோய்மிக்சிக் போன்றவர்களை என் விருப்பத்திற்குரியவர்கள்.

இவர்களின்றி என் விருப்பத்தின் பட்டியலில் தனியிடம் கொண்டிருப்பவர் தொஷிரோ மிபுனே. (Toshiro Mifune) அகிரா குரசேவாவின் பதினாறு படங்களில் நடித்துள்ள இவரை மறந்து குரசேவாவை நினைவு கொள்வது இயலாது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த போதும் இவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர் குரசேவா ஒருவர் மட்டுமே.

அவர் தான் மிபுனே என்ற நடிகரைக் கண்டு பிடித்து அறிமுகம் செய்தவர். பதினாறு படங்களிலும் பதினாறு வகையான குணபாவமுடைய கதாபாத்திரங்கள். ஜப்பானின் சிறந்த நடிகர் என்ற பெயரும் புகழும் உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவை குரசேவாவின் படங்கள்.

தொஷிரோ மிபுனேவிற்காகவே அவர் நடித்துள்ள ஆங்கில படங்களில் பத்துக்கும் மேற்பட்டதை பார்த்திருக்கிறேன். ஆனால் ஹாலிவுட்டில் அவரது ஆளுமை பெரிதாகக் கவனிக்கபடவில்லை. டப்பிங் செய்யப்பட்ட குரலும் பொருந்தாத உடைகளும் அவரைக் கோமாளி போல ஆக்கியிருந்தன.

எனக்கு விருப்பமான மிபுனேயின் ஐந்து படங்கள் ரோஷோமான், செவன் சாமுராய், ரெட் பியர்டு, ஹை அண்ட் லோ, த்ரோன் ஆப் பிளட்.

ரோஷோமானில் காட்டிற்குள் வழிப்பறி செய்யும் டோஜிமொரு என்ற கதாபாத்திரத்தில் மிபுனே நடித்திருப்பார். வனச்சிறுத்தையின் சீற்றமும், கம்பீரமும் கொண்டதொரு தோற்றம். இருளும் ஒளியும் கலந்த வனத்தினுள் பதுங்கிப் பதுங்கி செல்லும் சீற்றம். அழகான இளம்பெண்ணைக் கண்டவுடன் மனதில் தோன்றும் இச்சையுடன் வெறித்து பார்க்கும் மிருகநிலை

தன் இரையைக் குறி வைத்துப் பாயும் மிருகத்தின் பாய்ச்சல் போல காமம் பற்றி எரிய அந்த பெண்ணை வீழ்த்தி ருசிப்பதும், அவள் தன் கணவனைச் சண்டையிட்டு கொல்லச் சொல்லிமன்றாடும் போது ஏற்படும் திகைப்பும், அவனோடு சண்டையிடும் போது காட்டும் வெறுப்பும் என மிபுனே வனத்திருடனாகவே மாறியிருப்பார்.

மிபுனேயின் சிறப்பு அம்சம் அவர் தன் உடலை தன்னுடைய கட்டிற்குள் வைத்திருக்கும் விந்தை. அவரது கைகள், நிற்கும்பாங்கு. கண்கள், முகத்தை திருப்பும் லாவகம் என அத்தனையும் வியப்பானது. அத்தோடு மின்சாரம் பாய்வது போல அவர் செயல்களில் தென்படும் வேகம் ஆச்சரியமூட்டக்கூடியது.

மார்லன் பிராண்டோவைப் போலவே மிபுனேயும் வசனங்களை உச்சரிக்கும் விதம் மாறுபட்டது . பெரும்பாலும் இவர் படங்களில் அதிகம் பேசுவதில்லை. மனத்தின் குழப்பங்களையும் சந்தோஷத்தையும் உடல் மொழியின் வழியாக வெளிப்படுத்தக் கூடியவர். தேர்ந்த நடிகரின் சிறப்பு அது தானே.

மரங்களுக்கு இடையில் குதிரையில் வந்து கொண்டிருக்கும் பெண்ணைக் கண்டதும் அவரது முகத்தில் தோன்றி மறையும் காம இச்சை, தண்ணீரில் பிரதிபலிக்கும் நிலவைப் போல கடந்து போகிறது. காலைப்பற்றி கொண்டு அந்தப் பெண் மன்றாடும் போது அவரது முகத்தில் தோன்றும் குழப்பமும் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்ற புரியாமையும் அவளை உதறி தள்ளும் தடுமாற்றத்தில் வெளிப்படுகிறது. காமம் வடிந்த பிறகு அது எப்படி குற்றவுணர்ச்சியாகிறது என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

ரோஷோமானின் மையம் திருடனுக்கும் அப்பாவி பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நிகழ்வு என்பதால் குரசேவா அதிக கவனம் எடுத்திருக்கிறார். காட்டில் சிங்கம் எப்படி வேட்டையாடும் என்ற ஆப்பரிக்க வனவிலங்குப் படம் ஒன்றை மிபுனேக்கு தனியாகத் திரையிட்டு காட்டியிருக்கிறார். அதில் சிங்கம் ஒடிவரும் வேகம் மற்றும் அதன் கண்களில் வெளிப்படும் மூர்க்கம் திருடனிடம் வெளிப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதன் பாதிப்பை மிபுனேயின் செயல்களில் காணலாம்

செவன் சாமுராயில் வரும் மிபுனேயின் கதாபாத்திரம் ரோஷமோனிலிருந்து பெரிதும் மாறுபட்டது. பசியால் வாடியபடியே அலைந்து திரியும் கிகுஜியா என்ற கதாபாத்திரம். சண்டையில் அவனை யாரும் வெல்ல முடியாது. ஆனால் சோம்பேறி. பசியால் அலைந்து திரிகின்றவன். யாராவது சீண்டினால் மட்டுமே சண்டையிடக்கூடியவன்.

கிராமத்தை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற போராடும் விவசாயிகள் அவனை எப்படியாவது தங்களது கிராமத்தைக் காப்பாற்றும் அணியில் சேர்த்துக் கொள்ளப் போராடுவார்கள். அவன் தன்னை ஒரு சாகசக்காரனாக வெளிக்காட்டிக் கொள்வதை விடவும் கோமாளி போலவே வெளிக்காட்டி கொள்வான். ஜென் பௌத்தம் சாமுராயைப் பற்றி சொல்வது அத்தகையதே.

உண்மையான போர் வீரர்கள் சண்டையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தவிர்க்க முடியாத போது மட்டுமே சண்டையிடுவார்கள். ஒருவன் எவ்வளவு பெரிய கத்தி எடுக்கிறான் என்பது முக்கியமில்லை. கத்திக்கும் எதிரியின் இதயத்திற்கும் உள்ள இடைவெளியை அறிந்திருப்பது தான் முக்கியமானது என்கிறார்கள் சாமுராய்கள்.
விவசாயிகளுக்காகப் போராடுவதற்காக அந்த கிராமத்திற்கு வந்த பிறகு தன்னோடு வந்தவர்களில் ஒருவன் கிராமத்துப் பெண்ணைக் காதலிப்பதை அறியும் போதும் காட்டும் அலட்சியமும், கொள்ளையர்கள் ஊரைச் சுற்றி வளைக்கும் போது தனி ஆளாக நின்று சண்டையிடும் போதும் வெளிப்படுத்தும் ஆவேசமும் மிபுனேயை நிஜமான சாமுராய் என்றே நினைக்க தோன்றுகிறது.

சண்டைக்காட்சிகளில் இவர் அளவு நேர்த்தியும்வேகமும் கோபமும் கொண்ட நடிகரை நான் கண்டதில்லை. அவர் படங்களில் இடம்பெறும் சண்டைகள் வாள் மற்றும் நேரடி தாக்குதல் கொண்டவை. அவற்றில் கூர்ந்த பார்வையும் உடனடி செயல்பாடுமே முதன்மையானது. சண்டையின் போது அவரது இயல்பான விளையாட்டுதனம் கூடவே இருப்பதை பல படங்களில் காண முடிந்திருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமுராய்களைசமகாலத்தைய மனிதர்களைப் போல திரையில் நடமாட செய்தார் குரசேவா . அதை நிஜமாக்கியதில் மிகுந்த உறுதுணையாக இருந்தவர் மிபுனே.

மிபுனே திரைப்படங்களில் மட்டுமல்ல. நிஜவாழ்விலும் சாசகக்காரரே. இரண்டாவது உலக யுத்ததின் போது விமானப்படையில் பணியாற்றியவர். சண்டை முடிந்து ஊர் திரும்பியதும் நண்பர் ஒருவரின் உந்துதலால் டோகா தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்புத் தேர்வு ஒன்றிற்கு விண்ணப்பம் செய்தார். என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே அதற்கு முயற்சி செய்தார்.

ஆனால் 4000 விண்ணப்பங்களில் இருந்து மிபுனேயும் 40 பேர்களும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபட்டார்கள். அங்கே நடுவர்களில் ஒருவர் சிரித்துக் காட்டும் படியாகச் சொன்னதும் சிரிக்கும் அளவிற்கு அங்கே எதுவும் நடக்கவில்லையே என்று மிபுனே இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு சொல்லியிருக்கிறார்.

சரி கோபப்பட்டு காட்டுங்கள் என்றதும் கோபபடுவதற்கு என்ன இருக்கிறது என்று அதையும் மறுத்திருக்கிறார். நடுவர்கள் ஆத்திரமாகி அவரை வெளியே அனுப்பி வைத்தார்கள்.. ஆனால் அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் டோகா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அகிரா குரசேவாவிடம் சென்று தான் இன்று ஒரு நடிகரைப் பார்த்தேன். முரண்டு பிடிக்கும் கோபக்கார இளைஞன் என்று சொன்னதும் மதிய அமர்வில் அகிரா குரசேவா நேரில் வந்து மிபுனேயை நடிக்கச்சொல்லி பார்த்தார்.
அவரிடமும் மிபுனே அதிகாரத் தோரணையில் தான் நடந்து கொண்டார். ஆனால் அவரது தோற்றமும் கோபமும் குரசோவாவிற்கு பிடித்திருந்தது. அவரை நடிக்கத் தேர்வு செய்தார். அப்படி அறிமுகமானது தான் அவர்களது நட்பு.

1948 வருடம் ட்ரங்கன் ஏஞ்சல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மிபுனே. அதன் இரண்டு வருடங்களில் வெளியானது ரோஷோமான். அவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கமான புரிதல் இருந்தது. அவருக்காகவே கதாபாத்திரங்களை உருவாக்கினார் குரசேவா. மிபுனேயும் குரசேவானின் மனதில் இருந்த கற்பனை சித்திரங்களுக்கு நூறு சதவீதம் உயிர் கொடுக்கும் அளவு தன்னை வளர்த்துக்கொண்டார்.

ரோஷமான், செவன் சாமுராய் இரண்டிலிருந்தும் விலகி முற்றிலும் மாறுப்பட்ட ரெட் பியர்டு என்ற மருத்துவரின் கதபாத்திரத்தில் மிபுனே நடித்திருக்கிறார். குரசோவாவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடமிது. ஏழை எளிய மக்களுக்காக மருத்துவம் செய்து கொண்டு அவர்களின் சொந்த வாழ்வின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து வாழும் ரெட் பியர்டு கதாபாத்திரம் திரை வரலாற்றில் மறக்க முடியாத கதாபாத்திரம்.

ஒரு வகையில் அவர் ஞானி. இன்னொரு வகையில் போராளி. பதின்வயது சிறுமி ஒருத்தியை பிடித்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தும் போது அந்தச் சிறுமியை காப்பாற்றுகிறார். தடுக்க வருகின்றவர்களை நிமிச நேரத்தில் அடித்து வீழ்த்திவிட்டு அடிபட்டுக் கிடப்பவர்களை தனது மருத்துவமனைக்கே எடுத்து சென்று முதல் உதவியும் செய்கிறார் ரெட் பியர்டு.

நவீன மருத்துவம் ஏழை எளிய மக்களுக்கு ஏன் எட்டாக்கனவாக உள்ளது. மருத்துவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். மருத்துவப் பணி எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டு. மருத்துவக் கல்லூரிகளில் பாடமாக வைக்கபட வேண்டிய முக்கிய திரைப்படம், இதில் ஆவேசமற்ற, பௌத்த துறவியின் நிதானம் கலந்த உடல்மொழியை முகபாவத்தை, மருத்துவரின் கருணை நிறைந்த கண்களை மிபுனேயிடம் காணலாம்.

வீரசாகசம் மற்றும் காவியத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த மிபுனேயை சமகால நவீன மனிதனின் அகசிக்கலைப் பிரதிபலிக்கும் ஹை அண்ட் லோவில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வைத்தார் குரசேவா.

வணிக நிறுவனங்களுக்குள் உள்ள போட்டியில் வெல்ல வேண்டும் என்று முயற்சிக்கும் கிங்கோ கோன்டோ என்ற நிர்வாகி கதாபாத்திரம் அது. கிங்கோ புதிய பங்குகளை வாங்குவதற்காக பணம் திரட்டும் முயற்சியில் உள்ள போது அவரது பையன் கடத்தப்பட்டுவிடுகிறான். அவனைத் திரும்ப ஒப்படைக்க பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் கடத்தல்காரர்கள்.

போலீஸ்க்குப் போனால் பையனை உயிரோடு பார்க்க முடியாது என்ற நிலை. என்ன செய்வது எனத் தெரியாமல் தத்தளிக்கிறார். ஆனால் எதிர்பாராமல் ஒரு தகவல் கிடைக்கிறது. கடத்தப்பட்டது தனது பையன் அல்ல. தன்னுடைய டிரைவரின் பையன் என்று.

அதை அறிந்த டிரைவர் தன் மகனை எப்படியாவது காப்பாற்றும்படியாக கெஞ்சுகிறான். டிரைவர் பையனுக்கு தான் ஏன் பணம்செலவு செய்து காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலை கிங்கோவிற்கு வந்துவிடுகிறது. உதவி செய்ய மறுக்கிறார்.

ஆனால் கிங்கோவின் மனைவி யாருடைய குழந்தை என்பது முக்கியமில்லை. அது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. கடத்தபட்டதற்காக காரணம் உங்களுக்குள் ஏற்பட்ட தொழில்போட்டி. ஆகவே பணத்தைக் கொடுத்து குழந்தையை மீட்டுவாருங்கள் என்கிறாள். இந்த ஊசலாட்டத்தில் எப்படி வெல்கிறார்கள் என்பதை மிபுனே சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

மிபுனேவின் நடிப்பிற்கு கிரீடம் சூட்டியது போன்ற சிறப்பு தந்தது த்ரோன் ஆப் பிளட். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை குரசேவா உருமாற்றி த்ரோன் ஆப் பிளட்டாக படமாக்கினார். அதில் மெக்பெத்தின் கதாபாத்திரத்தில் மிபுனே நடித்திருக்கிறார். ஷேக்ஸ்பியர் நடிகர்கள் மெக்பெத்தை நூற்றாண்டுகாலமாக நடித்து அதன் பல்வேறு பரிமாணங்களை வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகர்களிடம் காணமுடியாத அகவெளிப்பாடும், குழப்பமும் மூர்க்கமும் மிபுனேயிடம்சாத்தியமாகியிருந்தது.

மெக்பெத் இப்படிதான் இருந்திருப்பான். இப்படி தான் அவன் மனது குழப்பமடைந்திருக்கும் என்பதற்கு இப்படம் சான்று. சிறப்பான காட்சிகள் என்று அடையாளம் காட்ட இந்த படத்தில் நாற்பது ஐம்பது நல்ல காட்சிகள் உள்ளன.

குறிப்பாக ஆரம்ப காட்சியில் வழிதவறி காட்டிற்குள் அலையும்போது பனிப்புயலில் குதிரைகள் தடுமாற அலைவது, சூன்யக்காரி தோன்றி தான் மன்னராகப் போகின்றதைப்பற்றி தெரிவித்தபோது ஏற்படும் உள்ளார்ந்த சந்தோஷமும், தனக்கு பிறகு தன்வாரிசுகள் அரியணையில் அமர மாட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு மனதில் ஏற்படும் வருத்தமும் என முதல் காட்சியில் மிபுனேவின் முகம் கொள்ளும் மாற்றங்கள் அற்புதமானவை.

மன்னரைக் கொன்றுவிட்டு தானே புதிய அரசனான பிறகு நடைபெறும் விருந்தில் மனக்குழப்பத்துடன் அங்கே மன்னர் ஆவியாக வந்திருப்பது போல உணரும் இடத்தில் வெளிப்படும் கோபமும், திகைப்பும், பயமும் உளறுதலும் மிபுனே தேர்ந்த கலைஞர் என்பதற்கான சாட்சிகள். மனைவியை பீடித்துள்ள மனநோய் தன்னையும் பற்றிக் கொள்ளுமோ என்ற பயமும் தனிமையை வெறுக்கும் அவரது மனநிலையும் அற்புதமானவை.

அது போலவே தன்னைக் கொல்வதற்காக வந்துள்ள படைவீரர்களுடன் சண்டையிடும் போது ஏற்படும் உக்கிரமும். நூற்றுக்கணக்கான அம்புகள் பட்டும் அடங்காத ரௌத்திரம் கொண்டு துள்ளும் வீரமுமாக அலறும் இறுதிகாட்சிகள் மறக்கமுடியாதவை. அதனால் தான் நூற்றாண்டின் சிறந்த படமாக இன்றும் கொண்டாடப் படுகிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்டிருந்த போதும் மிபுனேயை ஜப்பானிய திரையுலகம் இரண்டாம் இடத்திலே தான் வைத்திருந்தது. அவரது வசன உச்சரிப்பு தவறானது. அவரால் செவ்வியல் நடிகர்களைப் போல துல்லியமான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. அவர் ஒரு கழைக்கூத்தாடி போல துள்ளக் கூடியவர் என்று கடுமையான விமர்சனங்கள் இருந்தன. மிபுனே ஆங்கிலம் கற்றுக் கொண்டு ஹாலிவுட்படங்களில் நடிக்கத் துவங்கினார். மிஷோகுஷி போன்ற குரசேவாவிற்கு நிகரான இயக்குனரின் படங்களில் நடித்தார்.

கான்ஸ் திரைப்படவிழாவின் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ள மிபுனே நடிப்புக்கலைக்கான பள்ளி ஒன்றை ஜப்பானில் ஏற்படுத்தியுள்ளார். தனக்கென தனியான நடிப்பு பாணியை உருவாக்கி கொண்ட மிபுனே 1997 ஆண்டு காலமானார். அவரது முக்கிய படங்கள் Drunken Angel ,Stray Dog, Rashomon ,Seven Samurai, The Lower Depths,Throne of Blood, The Hidden Fortress, High and Low ,Red Beard, Hell in the Pacific, Red Sun, Midway .

கதாநாயகர்கள் என்றாலே துரத்தி துரத்திக் காதலித்து பெண்களிடம் தங்களின் இளமையை காட்டிக் கொள்கின்றவர்கள் என்ற பொதுப்பிம்பத்தினை முற்றிலும் அழித்து எழுதியவர் தொஷிரே மிபுனே. அவர் படங்களில் காதலிப்பதில்லை. அவரது நடிப்பு உடலை மினுக்கிகாட்டுவதல்ல. மாறாக மனதின் சிறு சலனங்களை கூட கண்களில் உடலில் வெளிப்படுத்தும் நுட்பமான நடிப்பு அது.

சாமுராய் சினிமா என்ற தனித்தவகை உருவாவதற்கு காரணமாக இருந்தவர் அகிரா குரசேவா. என்றும் சாமுராயாக நினைவில் நிற்பவர் மிபுனே

0Shares
0