தோக்கியோ சுவடுகள்3

இரண்டாம் நாளின் மாலையில் முழுமதி அறக்கட்டளையோடு தொடர்புடைய பல்வேறு துறையைச் சேர்ந்த நண்பர்கள் அனைவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது ஒரு உற்சாகமான சந்திப்பு .
நிமித்தம் நாவல், மற்றும் எனது படைப்புகள் பற்றித் துவங்கி மெல்ல கிளைவிட்டு,  பிள்ளைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பது தேவையா, ஆங்கில வழிக்கல்வி சரியானதா, தீவிர இலக்கியம் ஏன் புரியவில்லை, தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படியிருக்கும், பௌத்தம் ஏன் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தது. அம்பேத்காரின் சிந்தனைகள் குறித்த பார்வைகள், பெரியாரை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, உலக இலக்கியத்தின் இன்றைய  போக்குகள், ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை, எதிர்காலம், போருக்கு பின்பு அங்கு நடைபெற்று வரும் அரசியல் நெருக்கடிகள், ரஜினியோடு எனக்குள்ள நட்பு,  இன்றைய தமிழ்சினிமா எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து மூன்று மணிநேர உரையாடல் நடைபெற்றது,
இதற்காக ஒதுக்கபட்ட உள்அரங்கில் நேரம் முடிந்த காரணத்தால் இதே விவாதம் அருளின் வீட்டில் தொடர ஆரம்பித்தது, அன்றிரவு தோக்கியோ நகரின் இரவு வெளிச்சத்தை ரசித்துப் பார்த்தபடியே பதினாலாவது தளத்தின் உயரத்தில் நின்றிருந்தேன்,
நான் ஜப்பான் வந்து சேர்ந்த நாளில் இருந்து ஒவ்வொரு நிகழ்வையும் சுந்தர் தனது கேமிராவில் தொடர்ச்சியாகப் படம் எடுத்துக் கொண்டேயிருந்தார்,நம்மைப் புகைப்படம் எடுக்கிறார்கள் என்ற உறுத்தலே இல்லாமல் அவர் இயங்கிக் கொண்டிருந்தார், அந்தப் புகைப்படங்களை இப்போது காணும் போது ஒவ்வொரு நிமிஷமும் அபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது சந்தோஷம் தருவதாக உள்ளது,
அருளின் வீட்டில் அத்தனை விருந்தினர்களுக்கும் படுப்பதற்கு இடமில்லை என்பதால் அந்தக் குடியிருப்பில் இருந்த நண்பர்கள் வீடுகளில் சிலர் தங்கிக் கொண்டார்கள், அன்று இரவும் உறங்குவதற்கு மணி ஒன்றாகியிருந்தது,
மறுநாள் பொங்கல் கொண்டாட்டம் என்பதால் இரவிலும் அருளும், வேல்முருகனும் அவரது துணைவியாரும் வேலை செய்து கொண்டிருந்தார்கள், நான் உறக்கம் அழுத்த படுக்கையில் விழுந்தேன், விமானத்தில் பறந்து கொண்டிருப்பது போன்ற உணர்வேயிருந்தது. நல்ல தூக்கமில்லை, மனம் பாதி விழிப்பில் அமிழ்ந்துகிடந்தது
மறுநாள் விடிந்து எழுந்தபோது லேசான வெயில் வந்திருந்தது, சென்னை வெயிலை அறிந்தவர்களுக்குத் தோக்கியோ வெயில் என்பது மயிலிறகால் தடவுவது போன்றது, அந்த வெயிலில் உஷ்ணமேயில்லை, குளிர்காற்று அதிகமாக இருந்த காரணத்தால் காதின் நுனிகள் சிவந்து போய் வலிக்கத் துவங்கின,
தோக்கியோவில் காலை வெயிலை காண்பது ரம்மியமானது, கார் நிறுத்தும் இடத்திற்கு நடந்து வந்தபோது சாலையில் உள்ள மரங்களை முறையாக வெட்டி சரிசெய்து கொண்டிருந்த இருவரை கண்டேன், அவர்கள் அந்தப் பணியை மிகச்சிரத்தையாகக் கவனத்துடன் செய்து கொண்டிருந்தார்கள், ஜப்பானிய தோட்டங்கள் பேரழகானவை.சகுராவிற்கு முன்பு இப்படி மரங்களின் கிளைகளை வெட்டிவிடுவார்கள் என்றார்கள்,
விடுமுறை நாள் என்பதால் சாலைகள் வெறிச்சோடியிருந்தன, கடைகள் திறக்கபடவில்லை, கழுவி துடைத்து வைத்தது போன்ற தூய்மையான சாலைகள், மேடு பள்ளம் என வளைந்து வளைந்து செல்கிறது பாதை.
காரில் போய்க் கொண்டிருக்கும் போது இசைஞானி இளையராஜாவின் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை ஒலிக்க விட்டார் பாலு, உலகில் எந்த நாட்டிற்குப் பயணம் செய்தாலும் என் வழித்துணைவனாக இருப்பவர் இளையராஜா தான், அவரது பாடல்கள் உடனிருந்தால் போதும் எங்கும் சந்தோஷம் தொற்றிக் கொண்டுவிடும், பாலு எனக்குப் பிடித்தமான பல இளையராஜாவின் பாடல்களை வைத்திருந்தார், ரசித்துக் கேட்டபடியே காரில் வந்தேன்,
ஜப்பானியக் குழலிசையை விரும்பிக் கேட்பவன் நான், என்னிடம் சிறந்த இசைத்தொகுப்புகள் நிறைய இருக்கின்றன, ஜப்பானிய ராக், பாப், ஹெவிமெட்டல் வகை இசையும் கொஞ்சம் கேட்டிருக்கிறேன், ஜப்பானியர்கள் இசையைத் தீவிரமான நேசிக்கிறார்கள், காபி ஷாப்களில் அருமையான சங்கீதம் ஒலிக்கிறது, அதிக அளவில் இசைதட்டுகள், குறுவட்டுகள் விற்பனையாகும் நாடு ஜப்பான், உலக அளவில் இரண்டாவது இடம் என்கிறார்கள். Taiko என்ற முரசு போர் காலங்களில் அடிக்ககூடியது, அது இன்று முக்கிய
இசைக்கருவிகளில் ஒன்றாக உள்ளது,
இந்த இசைத்தொகுப்பை கேட்டுப்பாருங்கள்
பொங்கல் கொண்டாட்டத்திற்காகத் தோக்கியோவில் உள்ள இந்திய உணவகமான ஸ்ரீபாலாஜி ரெஸ்ட்ராரெண்டில் இருந்து சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
குறிஞ்சி பாலாஜி அந்த உணவகத்தை நடத்துகிறார், அவர் எனது நெருக்கமான நண்பர், சென்னையில் நிவேதனம் என்ற உணவகத்தை நடத்துவதும் அவரே, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது, அருமையான சைவ உணவகமது.
தோக்கியோவில் தென்னிந்திய உணவு சாப்பிட விரும்பிகிறவர்கள் முதலாவதாகத் தேர்வு செய்கிற உணவகம் அவருடையது தான், அன்று முழுமையான பொங்கல் விருந்தை படைத்திருந்தார், அவ்வளவு சுவையான கல்கண்டு பொங்கலை இதுவரை நான் சாப்பிட்டதே கிடையாது, அடிக்கும் குளிரில் சூடான பொங்கல் சாப்பிடும் போது தான் ருசியை முழுமையாக உணரமுடிகிறது
குறிஞ்சி பாலாஜி ஒரு அற்புதமான மனிதர், ஜப்பானில் சுனாமி , நிலநடுக்கம் தாக்கியபோது ஒடியோடி பல்வேறு விதமான உதவிகள் செய்திருக்கிறார், தமிழ்நாட்டிலும் அவர் செய்து வரும் உதவிகள் ஏராளம், இவரைப் போலவே அவரது மருமகன் குறிஞ்சி பிரபாவும் இலக்கியவாதிகளைத் தேடித்தேடி உதவி செய்யும் அன்பர்,
இந்தியாவில் இருந்து யார் ஜப்பான் வந்தாலும் குறிஞ்சி பாலாஜியின் விருந்தினராகத் தங்கி உணவருந்தி தான் போகிறார்கள், அந்த அளவு பண்பும் அக்கறையும் கொண்டவர், நான் ஜப்பான் புறப்படும் முன்பே அவர் தொலைபேசியில் அழைத்து நீங்கள் எனது விருந்தினர், ஆகவே உங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது எனது பொறுப்பு எனச் சொல்லிவிட்டார், அதை முழுமையாக ஜப்பானில் உணர்ந்தேன்
அவரது அன்பும் கவனிப்பும் நன்றிக்கு அப்பாற்பட்டது, குறிஞ்சி பாலாஜியோடு அதிக நேரம் செலவிட முடியாமல் போனதே என்ற ஏக்கம் இப்போதும் இருக்கிறது,
தமிழ்நாட்டில் கூட அவ்வளவு சுவையான உணவு கிடைக்குமா என்பது சந்தேகம், முருங்கைகாயில் இருந்து மாங்காய் வரை அத்தனையும் தமிழகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார், அவியலும் பொறியலும் கூட்டும் ரசமும் வடையும் பாயசமும் எனப் பெரும் விருந்து வைத்துவிட்டார், இதற்காகப் பாலாஜியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்று மதிய அமர்வில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன், அதில் தமிழர் பண்பாடு, வரலாறு, தமிழ் இலக்கியத்தின் முக்கியப் போக்குகள், எனது வாசிப்பு அனுபவங்கள், ஜப்பானின் சிறப்புகள் என உரையாற்றினேன், அதைத் தொடர்ந்து ஒரு மணி நேர அளவில் கேள்விபதில் நிகழ்வும் நடைபெற்றது,
அன்றைய நிகழ்வில் செந்தில் ஒரு குறுநாடகம் ஒன்றினை நிகழ்த்திக் காட்டினார், அருள் முழுமதி அறக்கட்டளை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார், வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார், பாலா, சதீஷ் இருவரும் இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள், குழந்தைகள் பலரும் ஆடிப்பாடி மகிழ்வித்தார்கள்,
இந்த நிகழ்வின் போது ஜப்பானுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தம் குடியேறி இன்றுவரை தொடர்ந்து தமிழ்சேவை செய்து வரும் டாக்டர் ஜீவானந்தம், மற்றும் கோவிந்த் இருவரையும் சந்தித்தேன், கோவிந்த் எனது நண்பன் ராஜகோபாலின் மாமா என்பதால் அவருடன் நிறையப் பேசிக் கொண்டிருக்க முடிந்தது,
ஜீவானந்தம் தோக்கியோவில் நிறையத் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திவருபவர், அருமையான மனிதர், அவரும் அவரது துணைவியார் சரஸ்வதி இருவரும் அன்போடு பழகினார்கள், அன்றிரவு கோவிந்த் வீட்டில் எங்களுக்குச் சிறப்பு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதற்காக நானும் செந்திலும் ஜீவானந்தம் உடன் கோவிந்த் வீட்டிற்குச் சென்றோம்
கோவிந் தேர்ந்த இலக்கிய வாசகர், அவரது பையன்  சிறந்த இசை ரசிகன், தமிழ் திரையிசை குறித்து அவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை வாசித்துப் பார்த்தேன், நுட்பமான அவதானிப்புகள் கொண்ட கட்டுரையது,
எனது நண்பன் ராஜகோபாலுக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஹருகி முரகாமியின் புத்தகங்களை அனுப்பிவைத்து எங்களை வாசிக்கச் செய்தவர் கோவிந்த், அவரது வீட்டில் நல்ல சாப்பாடுடன் இரண்டு மணிநேரம் இலக்கியம், ஜப்பானிய சினிமா, இசை, பண்பாடு பற்றிப் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷமாக இருந்தது
எனக்குக் கோவிந்தின் அழகிய வீடு ரொம்பவும் பிடித்திருந்தது. (Yasujirō Ozu )ஒசுவின் திரைப்படங்களை வியந்து கோவிந்த் பேசிக் கொண்டிருந்தார், ஜப்பானில் எங்காவது அகிரா குரசேவாவிற்கு நினைவகம் இருக்கிறதா எனக்கேட்டேன், இல்லை, அவரது நினைவாக ஒரு கலையரங்கம் உள்ளது, அதில் தொடர்ச்சியாக அவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன என்றார்,
பேச்சு டொனால்டு ரிச்சி பற்றி (Donald Richie ) திரும்பியது, ஜப்பானிய சினிமா பற்றி அவர் எழுதிய புத்தகங்களை வியந்து பேசிக் கொண்டிருந்தோம், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான Kenzaburō Ōeயின் படைப்புகள் பற்றிக் கோவிந்த் விரிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார், A Healing Family என்ற அவரது புத்தகத்தில் ஒயி தனது மாற்றுதிறனாளியான மகனை பற்றி நெஞ்சுருக எழுதியிருக்கிறார், அதைப்பற்றி நான் சொன்னேன்,
தோக்கியோவில் ஆண்டுத் தோறும் நடைபெற்று வரும் தமிழ்நிகழ்வுகளைப் பற்றி ஜீவானந்தம் விரிவாக எடுத்துச் சொன்னார், கோவிந்தின் துணைவியாரும் பிள்ளைகளும் நிறைய வாசிக்ககூடியவர்கள் என்பதால் அன்றைய இரவு அர்த்தமுள்ளதாக மாறியது.
பொதுவாக ஜப்பானில் வீடுகள் மிகுந்த கலைநுட்பத்தோடு வடிவமைக்கபட்டிருக்கின்றன, வீட்டினை அழகாக அலங்கரித்திருக்கிறார்கள் பூக்கள் மற்றும் அழகிய ஒவியங்களையும் வேலைப்பாடு மிக்கச் சிற்பங்களையும் ஒன்றிணைந்து உருவாக்கியிருப்பது மனதை உற்சாகப்படுத்துகிறது
அன்றிரவு செந்தில் வீட்டிற்குத் தங்குவதற்குச் சென்றேன், ஒரு மணி நேரப்பயணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டில் இருந்த ஜப்பானிய தொலைக்காட்சியில் மாறி மாறி காமெடி நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன,
மறுநாள் காலை புல்லட் ரயிலில் ஹிரோஷிமா போக முடிவு செய்திருந்தோம், Shinkansen எனும் அந்த ரயில் மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது, நாங்கள் போக வேண்டிய தூரம் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகம், மூன்றரை மணிநேரத்தில் போய்விடும் என்றார்கள்
காலை ஏழுமணிக்கு ரயிலை பிடிக்க வேண்டும், அதற்காகச் செந்தில் வீட்டில் இருந்து ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் காலை ஆறுமணிக்கு கிளம்புவது என முடிவு செய்து அவசரமாக உறங்கச் சென்றேன், ஆனால் உறக்கம் பிடிக்கவேயில்லை
குளிர் தனிமை உணர்வை அதிகப்படுத்துகிறது, மனதில் ஏதேதோ தொடர்பற்ற நினைவுகளைக் கிளர்ந்து எழச்செய்கிறது, பேசிக் கொண்டிருக்கும் போது சட்டெனப் பேச்சு அறுபட்டு மனது எதையோ நினைக்கத் துவங்கிவிடுகிறது, அன்றைய இரவில் அப்படியான நினைவுகள் என்னை அழுந்தத் துவங்கின, வீட்டில் இருந்தால் ஏதாவது பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
எப்படியாவது உறங்கியே ஆக வேண்டும் எனத் தோணியது, மனதை ஒருமுகப்படுத்தி உறங்கத் துவங்கினேன், சூடாக்கபட்ட அறையை மீறி குளிர் உடலை நடுக்கிக் கொண்டுதானிருந்தது
•••
0Shares
0