நகரம் அழைக்கிறது

Empty Eyes 1953ல் வெளியான இத்தாலியத் திரைப்படம்

காஸ்டெலூசியோவில் வசிக்கும் இளம் பெண் செலஸ்டினா பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிவருவதில் படம் துவங்குகிறது. அப்பா அம்மா இல்லாத செலஸ்டினா கிராமப்புறத்திலிருந்து ரோம் நோக்கிச் செல்கிறாள். அவளை வழியனுப்ப வந்துள்ள சகோதரர்கள் தைரியம் சொல்லி பேருந்தில் ஏற்றிவிடுகிறார்கள்.

முதன்முறையாக வீட்டை விட்டு தனியே பயணம் செய்கிறோம் என்ற பயம். இனி ஊர் திரும்பி வரமுடியாதோ என்ற குழப்பம் எனப் பேருந்தினுள்ளும் அவள் அழுகிறாள். பேருந்தின் ஒட்டுநர் அவளிடம் விசாரிக்கிறார்.

வீட்டு வேலைக்காகத் தன்னை ரோமிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். யார் வீட்டிற்குப் போகிறோம். என்ன வேலை என்று எதுவும் தெரியாது என்கிறாள். ரோமிற்குச் சென்றவர்கள் பின்பு ஊர் திரும்பவே மாட்டார்கள். கவலைப்படாதே என்று அவர் சமாதானப்படுத்துகிறார்

ரோமிற்கு வந்து இறங்கும் செலஸ்டினா கன்னியாஸ்திரீகள் உதவியோடு ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேருகிறாள். அந்தக் குடும்பம் அப்போது தான் புதிதாக வீடு மாறி வந்திருக்கிறது. அவர்கள் வீட்டை செலஸ்டினாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. கிளை பிரியும் பாதைகள். ஒன்று போலிருக்கும் வீடுகள் அவளை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

கைக்குழந்தையைக் கவனித்துக் கொண்டு வீட்டு வேலைகள் யாவையும் பார்க்க வேண்டும். குழந்தை இரவெல்லாம் அழுகிறது. அதை அவளால் சமாளிக்க முடியவில்லை. எஜமானி காரணமின்றி அவளைக் கோவித்துக் கொள்கிறாள். அவசரத்தில் பீங்கான் பாத்திரங்களைக் கவனமின்றி உடைத்துவிடுகிறாள். தண்ணீர் குழாயை உடைத்துவிடுகிறாள். அதைச் சரி செய்ய வந்த பிளம்பர் அவளைக் கட்டி அணைக்கிறான். முகத்தில் அறைந்துஅவனை வெளியே துரத்திவிடுகிறாள். இப்படி விதவிதமான நெருக்கடிகள்.

நகரவாழ்க்கை அவளுக்குப் பிடிபடவேயில்லை. அறைக்குள்ளாகவே அடைந்து கிடக்கிறாள். அந்தக் குடியிருப்பில் அவளைப் போலப் பணிப்பெண்ணாக உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் ஒன்று சேர்ந்து சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். செலஸ்டினாவிற்கோ அணிந்து கொள்ள நல்ல உடைகள் இல்ல. காலணிகள் இல்லை. ஆகவே அவள் வெளியே போகத் தயங்குகிறாள்.

பக்கத்துவீட்டுப் பெண் அவள் மீது பரிவு கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியே அழைத்துப் போகிறாள். அன்று அவளது தலை அலங்காரத்தை மாற்றி அழகுபடுத்தி நடனக்கூடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.. அங்கேயும் நடனத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறாள்.

ஆனால் முதல் நாள் அவளுடன் சண்டையிட்ட பிளம்பர் பெர்னாண்டோ இன்று ஆசையோடு நெருங்கி நடனமாட அழைக்கிறான். அந்த நடனத்தில் அவனுடன் நட்பாகிறாள். அன்று தாமதமாக வீடு திரும்பி எஜமானியின் கோபத்திற்கு ஆளாகிறாள்.

இரவில் அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தத் தெரியாமல் அடுப்பில் உள்ள சமையல் வாயுவைத் திறந்துவிட்டு குழந்தையைச் சுவாசிக்கச் செய்கிறாள். அதைக் கண்டு பதறிய எஜமானி குழந்தையைக் கொல்ல முயன்றாள் என்று குற்றம் சாட்டி வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறாள்.

அவளது வேலை பறிபோகிறது. வேறு வேலை தேடிப் போகிறாள். பின்பு ஓய்வுபெற்ற தம்பதியரால் பணியமர்த்தப்படுகிறார், அங்கும் பெர்னாண்டோ அவளைத் துரத்துகிறான். பெர்னாண்டோவுடன் காதல் பிறக்கிறது. அப்பாவிப் பெண்ணாக ரோமிற்கு வந்த செலஸ்டினா எப்படி நகரத்துப் பெண்ணாக மாறுகிறாள். அவளது வாழ்க்கையின் பாதை எப்படித் திசை மாறிப் போகிறது என்பதை இப்படம் மிக அழகாக விவரிக்கிறது.

அன்டோனியோ பீட்ராஞ்செலியின் இயக்கிய முதற்படமிது. போருக்குப் பிந்திய ரோம் நகர வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை காட்டியிருக்கிறார். தேர்ந்த ஒளிப்பதிவு. இயல்பான நடிப்பு. பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை. சிறிய கதாபாத்திரங்களை கூட தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்ட அழகு என படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது

கிராமத்திலிருந்து நகரிற்கு வரும் இளம்பெண்ணின் கதை சினிமாவில் பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ரோமிற்கு வரும் போது செலஸ்டினாவிடம் கனவுகள் எதுவுமில்லை சகோதரர்கள் அவளைப் பார்க்க வரும் நாளில் கூட அவள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய்விட வேண்டும் என்றே சொல்கிறாள். அவர்கள் பிழைப்பிற்காக ஆஸ்திரேலியா புறப்படுகிறார்கள். படியில் அவர்கள் இறங்கிச் செல்லும் போது இனி அவர்களைக் காண முடியாதோ என்ற பயத்தால் ஓடிவந்து கண்ணீருடன் செலஸ்டினா விடை தருகிறாள். மிக அழகான காட்சியது.

ரோம் நகர வாழ்க்கை அவளுக்குள் சாதுரியத்தையும் ஆசைகளையும் உருவாக்குகிறது. அவளது தோற்றம் மற்றுமின்றி இயல்பும் மாறிவிடுகிறது. உண்மையில் செலஸ்டினா ஏமாற்றப்படுகிறாள். அவளை நம்பியவர்களே அவளை ஏமாற்றுகிறார்கள். ஆனால் முன்பின் அறியாதவர்கள் உதவி செய்ய முன்வருகிறார்கள். அடைக்கலம் தருகிறார்கள். அவளது பாவங்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்குப் பாதிரியாருக்குக் கூட நேரமில்லை.

முதன் முறையாகச் சம்பளம் வாங்கிய செலஸ்டினா அந்தப் பணத்தை வியப்போடு தோழிகளிடம் காட்டுகிறாள். இன்னும் அதிகம் சம்பளம் கேள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவளோ இவ்வளவு பணத்தை இதற்கு முன்பு கண்டதேயில்லை என்று பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறாள்.

நகரில் ஏன் இவ்வளவு வம்பு பேசுகிறார்கள். காரணமின்றி ஒருவரை வெறுக்கிறார்கள். சிறு விஷயங்களுக்குக் கூடச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று செலஸ்டினாவிற்குப் புரியவேயில்லை. உன்னை மற்றவர்கள் ஏமாற்றும் போது நீ ஏன் அடுத்தவரை ஏமாற்றக்கூடாது என்று தோழிகள் கேட்கிறார்கள். தன்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்கிறாள் செலஸ்டினா. ஆனால் வாழ்க்கைச் சூழல் அவளை நெருக்கடியில் தள்ளிவிடுகிறது. களங்கமில்லாத அவளது முகத்தில் குழப்பம் படர்ந்துவிடுகிறது. கயிறு அறுந்த பட்டம் போலாகிவிடுகிறது அவளது நிலை.

இத்தாலிய நியோ ரியலிச திரைப்படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் செலஸ்டினாவும் மறக்க முடியாதவள்.

••

,

0Shares
0