விருதுநகர் பொது நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். அந்தச் சிறுவனுக்கு பத்து பனிரெண்டு வயதிருக்கும். அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவனது அப்பா நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வருவார். ஒரு முறை கூட அப்பா தனியே நூலகத்திற்கு வந்ததாக நினைவேயில்லை. பெரும்பாலும் சனிக்கிழமை காலையிலும் ஞாயிறு மாலையிலும் அவர்கள் நூலகத்திற்கு வருவார்கள்.
அப்பா நூலகத்தின் நீண்ட அடுக்குகளுக்குள் அந்த பையனை அழைத்துக் கொண்டு போய் மெல்லிய குரலில் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருப்பார். அந்த சிறுவன் தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டிருப்பான். சில நேரம் பெரிய அட்லஸை அவன் கையில் எடுத்துக் கொடுத்துப் புரட்டிப் பார்க்க சொல்வார்.
தத்துவம், அறிவியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என ஒவ்வொரு அடுக்காக அந்த தந்தையும் மகனும் நிற்பதைக் கண்டிருக்கிறேன்.
அந்தக் காட்சி மனதை விட்டு அகலவேயில்லை. அந்த தந்தையும் மகனும் போல வேறு எவரும் அப்படி இணக்கமாக நூலகத்திற்கு வந்ததேயில்லை. தன் மகனின் எதிர்காலம் குறித்த தந்தையின் கனவு அவரது கண்களில் ஒளிர்வதைக் காணமுடிந்தது.
தனக்கு வேண்டிய புத்தகத்தை அப்பா எடுத்துக் கொண்டபிறகு மகன் படிப்பதற்கான புத்தகத்தை தேர்வு செய்யும் வரை காத்துக் கொண்டிருப்பார். பிறகு மகன் படிப்பதற்காக ஜன்னலை ஒட்டிய மேஜையில் இடம் பிடித்துத் தருவார். மகன் படித்துக் கொண்டிருக்கும் போது அவர் மௌனமாகப் பார்த்தபடியே இருப்பார்.
சில நேரம் அந்த சிறுவன் தந்தையிடம் சந்தேகம் கேட்பான். ரகசியம் பேசுவது போல மெதுவான குரலில் அதை விளக்கிச் சொல்லுவார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பையன் புத்தகம் படித்துக் கொண்டிருப்பான். தந்தை அசைவற்று அவனைப் பார்த்தபடியே இருப்பார். பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக நடந்து செல்வார்கள்.
புத்தகம் ஒரு சிறுவனுக்கு எப்படி அறிமுகமாகிறது என்பது முக்கியமானது. நிறையப் பேருக்குப் புத்தகம் பள்ளியின் வழியே தான் அறிமுகமாகியிருக்கிறது. அதுவும் பாடப்புத்தகங்கள் மட்டுமே. கதைகள் கட்டுரைகள் கவிதைகள் வாழ்வில் அறிமுகமாகவில்லை. அல்லது இருபது வயதிற்கு பிறகே அறிமுகமாகியிருக்கிறது.
இன்னும் சிலர் புத்தகங்களை ஏதோ அருவருப்பான பொருளைப் பார்ப்பது போல நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாகவே இருக்கும். பணத்தின் மதிப்பு தெரியாதவர்களுக்கு அது வெறும் காகிதம் தானே.
சிறுவயதில் படிக்க வேண்டிய புத்தகங்களை அந்த வயதில் படிக்காமல் போய்விடுவது இழப்பே. ஒரு சிறுவனுக்குப் புத்தகம் பரிசாகக் கிடைக்கும் போது அவன் அடையும் சந்தோஷம் நிகரற்றது. முதன்முறையாகப் புத்தகத்தில் தன் பெயரை ஒருவன் எழுதிக் கொள்வது எவ்வளவு சந்தோஷமானது. நீங்களே யோசித்து பாருங்கள். புரியும்.
அதே நேரம் சிறுவர்கள் புத்தகம் படிப்பதும் பெரியவர்கள் புத்தகம் படிப்பதும் ஒன்றில்லை. சிறுவர்கள் புத்தகங்களுக்குள் எதையோ தேடுகிறார்கள். கண்டறிகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளே அவர்களை வழிநடத்துகின்றன. பெரியவர்களுக்குக் கடந்தகாலம் பற்றி ஏக்கமே வாசிக்க வைக்கிறது. அல்லது நிகழ்கால பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடியோ, ஆறுதல் தேடியோ புத்தகங்களை நாடுகிறார்கள்.
தேவதைகள் உலகில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை புத்தகம் வழியே தானே அறிமுகமானது. பெரியவர்கள் ஆனதும் தேவதைகள் மறைந்து போனார்கள். மனிதர்களின் நற்செயல்களே அவர்களைத் தேவதையாக்குகின்றன என்பது புரிய ஆரம்பித்தது.
அது போலவே ஒரு தவளை இளவரசியாவதைச் சிறுவன் எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறான். பெரியவர்களுக்குத் தவளை தவளையாகவே இருக்க வேண்டும். அதை விடவும் விலங்குகளைப் பற்றிய கதைகள் எல்லாமும் சிறுவர்கள் படிப்பதற்கு மட்டுமே எழுதப்படுவதாகப் பெரியவர்கள் நினைக்கிறார்கள்.
புத்தகத்தின் ஒரு வரி அல்லது சில சொற்கள் சிறுவனின் மண்டைக்குள் புகுந்து செய்யும் மாற்றங்களை நம்மால் கணிக்கமுடியாது. பெருவெடிப்பு போன்ற மாயமது. ஒரே பூமியில் தான் உலகம் முழுவதுமுள்ள மரங்கள் வேரூன்றி இருக்கின்றன என்ற வரியைப் புத்தகம் ஒன்றில் படித்த போது சட்டென எனது ஊரில் உள்ள மரங்களும் வடதுருவத்தில் உள்ள மரங்களும் சகோதரிகளே என்ற எண்ணம் உருவானது. அது எவ்வளவு பெரிய விடுதலை. சந்தோஷம்.
சோபியின் உலகம் நாவலில் இப்படி ஒரு சிறுமியிடம் கேட்கப்படும் தத்துவார்த்த கேள்விகளுக்கு விடை தேடுவதன் வழியே தத்துவத்தின் வரலாறே விளக்கபட்டுவிடுகிறது.
நூலகத்திற்கு மகனை அழைத்துக் கொண்டு வரும் தந்தை நீந்தக் கற்றுத் தரும் மனிதரைப் போலவே தோன்றினார். நீச்சல் கற்றுக் கொள்ளும்வரை தான் துணை வேண்டும். பிறகு உள்ளூர் கிணற்றில் மட்டுமில்லை. பெருங்கடலிலும் எளிதாக நீந்த முடியும். பயமிருக்காது. அப்படியானது தான் வாசிப்பும்.
ஆரம்ப நிலையில் நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிக்கவும் வாசித்தவற்றை விவாதிக்கவும் துணை தேவை. அந்த பயிற்சியின் வழியே ஒருவன் ஆழ்ந்து வாசிக்கத் துவங்கிவிட்டால் பின்பு அவனே அந்த வெளிச்சத்தினை உயர்த்திப் பிடித்துப் பயணிக்கத் துவங்கி விடுவான்.
மற்ற வீடுகளில் உள்ள தந்தையைப் போல மகன் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற கனவு இந்த தந்தைக்கும் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர் அது மட்டும் முக்கியமில்லை என்று உணர்ந்திருக்கிறார். அவனது ஆளுமையை உருவாக்கவே முயன்றிருக்கிறார்.
உலக வரைபடங்களை விரித்து வைத்து அவனுக்கு உலகின் மிகப்பெரிய கடல்களை விரலால் தொட்டு பார்க்க வைத்த அந்த தந்தை மகத்தானவர்.
சில நாட்கள் அந்த தந்தை மகனை ஊரில் நடக்கும் இலக்கிய கூட்டத்திலும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள். பையனுக்கு நல்ல புத்தகங்களை, நல்ல உரைகளை அறிமுகம் செய்யும் அந்த தந்தையைக் காணும் போது ஏக்கமாக இருக்கும்
பள்ளி வயது முதலே நான் தனியாகத் தான் நூலகத்திற்குப் போய் வருவேன். அப்பா வந்து நூலகரிடம் அறிமுகம் செய்து வைத்ததோடு சரி. அதன் பிறகு ஒரு முறை கூட அவருடன் நூலகம் சென்றதில்லை. ஆனால் அவர் நூல் நிலையத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஒரே வீட்டில் ஆளுக்கு ஒரு புத்தக ரசனை இருப்பது வியப்பானது.
அந்த பையனும் தந்தையும் சில நாட்கள் விளையாட்டு மைதானத்தின் ஓரமாக உள்ள வேப்பமர நிழலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் தோற்றத்திலே தெரியும். வசதியில்லாத ஒரு தந்தையால் புத்தகங்களைத் தவிர வேறு எப்படி உலகை அறிமுகம் செய்து தர முடியும்.
ஒரு நாள் அந்தப் பையன் புத்தாடைகள் அணிந்திருந்தான். நூலகத்திலிருந்த எல்லோருக்கும் அவன் சாக்லேட்டுகள் வழங்கி தனக்கு பிறந்த நாள் என்று சொன்னான். அந்த தந்தை அவனை வாழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். ஒருசிலரைத் தவிர பலரும் ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாக சாக்லேட் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்கள். மனம் நிறைய வாழ்த்துவதற்குக் கூடவா சொல்லித்தர வேண்டியிருக்கிறது. என்ன மனிதர்கள் என்று தோன்றியது.
தன் மகனின் பிறந்தநாளை அவர் நூலகத்தில் கொண்டாடியது மறக்க முடியாதது.
தனக்கு விருப்பமான புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது நல்ல வாசகனின் இயல்பான பணி. அவனால் படித்த புத்தகங்களை மனதில் புதைத்து விட்டு சும்மா இருக்க முடியாது. நிச்சயம் பகிர்ந்து கொள்ள மனது துடிக்கவே செய்யும். ஆழ்ந்து புத்தகம் வாசிக்க வாசிக்கப் பேச்சில் செயலில் மாற்றம் உருவாக ஆரம்பிக்கும். அது ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும்.
சாமுராய்கள் வாட்பயிற்சி துவங்கும் போது வேகவேகமாக வாளை வீசி சண்டையிடுவார்கள். எப்போது சண்டை வரும் காத்திருப்பார்கள். வாள் வீச்சு பற்றி காரசாரமாக பேசிக் கொள்வார்கள். ஆனால் அனுபவம் மிகுந்த சாமுராய் தேவையில்லாமல் வாளை வெளியே எடுக்க மாட்டான். எடுத்தாலும் ஒரே வீச்சில் வேலையை முடித்துவிடுவான். அதைப் போலவே அவன் சண்டை செய்வதைப் பற்றிப் பேசவே மாட்டான். மகா மௌனியாக இருப்பான்.
நீண்ட காலம் புத்தகம் படிப்பவர்கள் அப்படியான ஒரு நிலைக்கே சென்றுவிடுகிறார்கள். அவர்கள் அதிகம் விவாதிப்பதில்லை. ஆனால் பேச வேண்டிய அவசியம் வந்தால் சுருக்கமாக, அழுத்தமாகத் தனது கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். அந்த மனப்பக்குவம் புத்தகம் உருவாக்கியதே
நல்ல உடைகளை வாங்கி தருவது. விருப்பமான உணவுகளை, இனிப்புகளை வாங்கிக் கொடுப்பது மட்டும் ஒரு தந்தையின் கடமையில்லை. அதைவிடவும் இது போல நல்ல புத்தகங்களை நல்ல இசையை, கலைகளை, நல்ல மனிதர்களை அறிமுகம் செய்வதும் தந்தையின் கடமையே. அதைச் சரியாகச் செய்த மனிதராக நூலகத்திற்கு வந்த தந்தையைத் தான் சொல்வேன்
விருதுநகரிலிருந்து சென்னை வந்தபிறகு அவர்களை நான் சந்திக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த பையன் உயர்வான நிலைக்கு வந்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இவரைப் போன்ற தந்தைகள் இன்று நிறைய உருவாகியிருக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு ஒருவரோ இருவரோ தான் அப்படியிருந்தார்கள்.
சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் தன் மகனை ,மகளை அழைத்துக் கொண்டு வந்து பைபையாக புத்தகங்களை வாங்கிச் சென்ற தந்தைகளை நான் அறிவேன். அது போலவே புதிதாக வேலைக்குச் சென்ற மகன் அல்லது மகள் தனது தாயிற்காகப் புத்தகம் வாங்கிப் போவதையும் பார்த்திருக்கிறேன். நல்ல மாற்றமிது.
நிச்சயம் கடந்த பத்தாண்டில் புத்தக வாசிப்பு அதிகமாகியிருக்கிறது. ஆனால் வாசித்த நல்ல விஷயங்கள் ஒருவன் மனதில் ஏற்படுத்தும் விளைவுகள் தான் குறைந்து வருகிறது. கேளிக்கைகள் தேவைதான் ஆனால் கேளிக்கைகள் மட்டுமே வாழ்க்கையில்லை.
வெளிச்சம் மௌனமாகவே நமக்கு வழிகாட்டுகிறது. புத்தகங்கள் செய்வதும் அது போன்ற ஒரு பணியே. சொற்களே நம்மை ஆற்றுப்படுத்துகின்றன. சந்தோஷம் கொள்ள வைக்கின்றன. துயரயத்தில் துணைநிற்கின்றன. மீட்சி தருகின்றன.
பேசக்கற்றுத் தருவதைப் போலவே படிக்கக் கற்றுத்தருவதும் பெற்றோரின் கடமையே.
••