நெட் கெல்லி 


 


 நெட் கெல்லியை ஆஸ்திரேலியாவின் கட்டபொம்மன் என்று சொல்லலாம். வெள்ளை அதிகாரத்திற்கு எதிராகப் போராடி பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட அவரை ஆஸ்திரேலியா மக்கள் போராளியாகக் கொண்டாடுகிறார்கள். நெட் கெல்லி (Ned Kelly) அடைத்து வைக்கபட்ட மெல்போர்னில் உள்ள நூற்றாண்டுப் பழமையான ஹால் (Gaol) எனும் சிறைச்சாலையை ஆஸ்திரேலியா சென்றிருந்த போது பார்த்தேன். இருண்ட சிறைச்சாலை என்பதால் ஜெயில் என்பதற்கு பதிலாக ஹால் என்று குறிப்பிடுகிறது. இது குகை என்று பொருள்படும் லத்தீன் மொழியின் கொச்சை சொல்லாகும்.

மெல்போர்ன் நகரின் ரஸ்ஸல் வீதி அருகில் உள்ள இந்தச் சிறைச்சாலை மூன்று தளங்களைக் கொண்டது. 1864ல் கட்டப்பட்டிருக்கிறது. இதில் 135 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் நெட்கெல்லி. தற்போது ம்யூசியமாக பாதுகாத்து வைக்கபட்டிருக்கும் இந்தச் சிறைச்சாலையை இரண்டாம் உலக யுத்தத்தின் போது யுத்த கைதிகளை அடைத்து வைக்கும் இடமாகச் செயல்பட்டிருக்கிறது

சிறைச்சாலையின் வெளிச்சுவர்களைக் காணும் போது அந்தமான் சிறைச்சாலை நினைவிற்கு வந்தது. பார்வையிட உள்ளே நடந்தபோது கல்லால் ஆன அந்தக் கட்டடித்தின் மௌனத்தில் கைதிகளின் மூச்சொலிகள் படிந்திருப்பதை உணர முடிந்தது. குளிர்காலத்தில் பனிக்கட்டியின் மேல் படுத்துக்கிடப்பது போல உடல் ஜில்லிட்டு விடும். அறைகளுக்குள் வெளிச்சமும் வராது. இருட்டுக்குள் ஒரு சவப்பெட்டியில் படுத்திருப்பது போன்றே இதற்குள் கைதிகள் வாழ்ந்தார்கள் என்று அதைச் சுற்றி காட்டியவர் சொல்லிக் கொண்டு வந்தார். சிறைச்சாலைகளின் நினைவுகள் சொல்லில் அடங்காதவை.

தஸ்தாயெவ்ஸ்கி மரணவீட்டின் குறிப்புகள் என்று ஒரு குறுநாவலை எழுதியிருப்பார். அது சைபீரியச் சிறைச்சாலையைப் பற்றியது. அது போல எண்ணிக்கையற்ற கதைகள் இந்தச் சுவர்களுக்குள் புதைந்திருப்பதை உணர முடிந்தது.

இதே சிறைச்சாலையை இரவில் பார்த்தால் நன்றாக இருக்கும். மறுநாள் திரும்பவும் வரலாம் என்றார் நண்பர். அதன்படியே மறுநாள் இரவு வந்த போது மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தோடு சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள்

கண்முன்னே காலம் நழுவி வேறு ஒரு நூற்றாண்டின் இருண்ட பாதையில் தனியே நடந்து போய்க் கொண்டிருப்பது போன்ற உணர்வு உண்டானது. மெழுகுவர்த்தியின் வெளிச்சம் சுவர்களில் ஏறி நடமாடும் போது சிறைக்கூடம் விசித்திரமானதாக தெரிந்தது. நிழல்கள் சரிந்து செல்கையில் அது முன்நடப்பவர்களின் நிழல்கள் தானா இல்லை முந்தைய காலத்தின் நிழலா எனத்தெரியாத குழப்பம் உண்டானது. வழியில் எங்காவது நெட் கெல்லியே நேரில் வந்துவிடுவானோ என்று கூடத் தோன்றியது

சிறைச்சாலைகளில் கவியும் இருட்டு பிசுபிசுப்பானது. அதில் முகம் காட்டாத மனிதனின் அழுகை கலந்திருக்கிறது. ஒரு தாய் குழந்தையை அரவணைப்பது போல சிறையிலிருந்தவர்களை இருட்டு அரவணைத்து வேதனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இரவில் பதினைந்து பேர்களுக்கும் குறைவாகவே சிறைச்சாலையை பார்வையிட்டோம். யாவர் முகமும் சிறையின் உள்ளே சென்றவுடன் இறுக்கமடைந்தும் ஒடுங்கியும் மொழிகடந்த மயக்கத்துடன் இருப்பதைக் காண முடிந்தது.

சிறைச்சாலைகளின் வரலாறு இன்று வரை தொகுக்கபடாதது. உலக யுத்தத்தின் போது சிறையில் அடைக்கபட்டவர்களின் சுயசரிதைகளை வாசிக்கையில் நெருக்கடியான கணங்களை அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

நெட்கெல்லி அடைத்து வைக்கபட்டிருந்த சிறையைத் திறந்து உள்ளே சில நிமிசங்கள் தனித்து நிற்க அனுமதித்தார்கள். அந்தச் சிறையின் சுவர்களைத் தடவிப்பார்த்தேன். கருங்கற்கள். ஒரு காலத்தில் எங்கோ ஒரு மலையாக இருந்திருக்க கூடும். அந்தச் சுவர்கள் குளிர்ச்சியோடு காணப்பட்டன. இதே சுவரை நெட்கெல்லியும் தடவியிருப்பான் என்று அந்த நிமிசத்தில் தோன்றியது.

நெட் கெல்லி சாகும் போது அங்கிருந்தவர்களைப் பார்த்து இவ்வளவு தான் வாழ்வு என்று சொன்னதாகவும் அது இன்று வரை மிக முக்கிய அரசியல் பிரகடனம் போல சொல்லப்பட்டு வருவதாகவும் சிறைக் காப்பாளர் சொன்னார்.

நெட் கெல்லியின் உடற்கவசங்களும் துப்பாக்கியும் அவரது முககாப்பும் ஒரு இடத்தில் காட்சிக்கு வைக்கபட்டிருந்தன. வன்முறையின் முதல் களம் உடல் தான் இல்லையா. அதிகாரத்தின் பெயரால் மனிதவதை காலம் காலமாக நடந்து கொண்டேதானிருக்கிறது.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிறையை விட்டு வெளியே வந்து மெல்போர்னின் குளிர் நிரம்பிய வீதியில் காரில் சென்ற போதும் நெட்கெல்லி நினைவில் கூடவே வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த நாட்களில் நெட்கெல்லியைப் பற்றிய திரைப்படங்களை பார்த்தேன். அவரைப்பற்றிய புத்தகங்களை வாசித்தேன்.

காமிக்ஸ் புத்தகங்கள், கதைப்பாடல்கள் என்று அவரை மக்கள் கொண்டாடுகிறார்கள். காலனிய அதிகாரத்தால் தொடர்ந்து துன்புறுத்தபட்டு அவர்களை எதிர்த்துப் போராடிய ஒருவனின் கதைதான் நெட் கெல்லியின் வாழ்வு.

நெட்கெல்லியின் அப்பா ஜான் ரெட் கெல்லி அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவர் இரண்டு பன்றிகளைத் திருடியதற்காக ஏழு வருசகாலம் டாஸ்மேனியாவில் உள்ள சிறை ஒன்றிற்கு அனுப்பட்டு தண்டனை பெற்றார். தண்டனை முடிந்து திரும்பிய ஜான் கெல்லி பிலிப் துறைமுகத்திற்கு வந்து இறங்கி விக்டோரியாவில் வாழ்ந்து வந்த எலன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அருகாமையிலே ஒரு பால்பண்ணை அமைத்துக் கொண்டு வாழத்துவங்கினார். எட்டுக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒருவர் தான் நெட் கெல்லி. 1854 ஆண்டு டிசம்பரில் நெட் கெல்லி பிறந்தார்.

நெட் கெல்லிக்கு குதிரைகளைப் பழக்குவதில் நல்ல திறமை இருந்தது. அது போலவே துப்பாக்கி சுடுவதிலும் மிகுந்த தேர்ச்சி கொண்டிருந்தார். அந்த நாட்களில் நிக்கோல்சன் என்ற காவல்துறை அதிகாரி நெட் கெல்லியின் வீடு திருடர்களுக்கு புகலிடம் கொடுக்கிறது என்று சந்தேகப்பட்டு அவரது அம்மாவை விசாரணைக்கு அழைத்துசென்று சித்ரவதை செய்து அவமானப்படுத்தினார்.

அதை அறிந்த நெட் கெல்லி ஆத்திரமாகி போலீஸாரின் குதிரையைத் திருடிவிட்டார். இது அவருக்கும் காவல்துறைக்கும் இடையே விரோதத்தை வளர்த்தது. தனது 14வது வயதில் ஒரு சீனாக்காரனை அடித்தார் என்று குற்றம் சாட்டி நெட் கெல்லி பத்து நாட்கள் சிறையில் அடைக்கபட்டார். முடிவில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் சில வருடங்களின் பின்பு போலீஸ் அவரை மான் வேட்டையாடினார் என்று கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்த போலீஸ் கொடுமையால் அவதிப்பட்ட நெட்கெல்லி சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர்களை எதிர்க்கத் துவங்கினார். குத்துச் சண்டை வீரராக இருந்த அவருக்கு இயற்கையான மனஉறுதியும் போராடும் குணமும் இருந்தது. வெள்ளைகாரர்களை எதிர்த்துப் போராட தன்னுடன் சில நண்பர்களையும் சேர்ந்து கொண்டார்.

பணக்காரர்களின் குதிரைகளைத் திருடுவது, ஏழை மக்களுக்கு உதவி செய்யக் கொள்ளையடிப்பது என்று ராபின்ஹூட் பாணியில் செயப்படத் துவங்கினார். அது ஆளும் வெள்ளையர்களுக்கு சவால் ஆக அமைந்தது. நெட் கெல்லியைக் கைது செய்வதற்காக பெரிய போலீஸ்படையே துரத்தியது. ஆனால் அவர்களால் கைது செய்யவே முடியவில்லை.

புதர்களில், கானகங்களில் ஒளிந்து மறைந்து வாழ்ந்த நெட்கெல்லி தனது செயல்பாட்டிற்கான நியாயத்தை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்று தனது அறிக்கையை வெளியிடும்படி மிரட்டி வெளியிட வைத்தார். மக்கள் அவர் பக்கம் நின்றார்கள். அதிகாரம் அவரைக் குற்றவாளி என்றது. நெட் கெல்லி தன்னை அழிக்க நினைப்பவர்களை வேட்டையாடத் தயங்கவேயில்லை.

இதனால் அவர் மீது குற்றங்களின் பட்டியல் ஏறிக் கொண்டே போனது. அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கபட்டது. அவர்கள் நெட்கெல்லியின் வீட்டில் இருந்தவர்களை சித்ரவதை செய்து சிறையில் அடைத்த போது அவரைப் பிடிக்க முடியவில்லை. முடிவில் அவரது நண்பர்களில் ஒருவனே பணத்திற்கு ஆசைப்பட்டு நெட்கெல்லியைக் காட்டிக் கொடுத்தான். போலீஸ்படை அவரைச் சுற்றி வளைத்தது. பெரிய துப்பாக்கிச் சண்டைக்குப் பின்பு பிடிபட்ட நெட் கெல்லி ஹால் சிறையில் அடைக்கபட்டு பொது விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார். 1880 நவம்பர் 11ல் நெட் கெல்லி கொல்லப்பட்ட போது அவருக்கு வயது 25.

பிரிட்டீஷ் காலனியாக இருந்த ஆஸ்திரேலியாவை வெவ்வேறு நாடுகளில் அதிகாரத்தை எதிர்ப்பவர்களைப் பிடித்து வந்து அடைக்கும் பீனல் காலனியாகவே பிரிட்டீஷ் அரசாங்கம் வைத்திருந்தது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிக்களை ஒடுக்கி அழித்து இன்றும் இரண்டாம் தர பிரஜைகளைப் போலவே வைத்திருக்கிறது. அபார்ஜினல்ஸ் எனப்படும் ஆஸ்திரேலிய பூர்வகுடிமக்களின் வசிப்படங்களைத் தேடிச் சென்று பார்த்தேன்.

அவர்கள் தங்கள் வரலாற்றை கனவுக்காலம் என்று குறிப்பிடுகிறார்கள். கனவுக்காலம் பல பகுதிகள் உடையது. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது. மனிதர்கள் எப்படி படைக்கபட்டார்கள். மனிதர்கள் பூமியில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கடவுள் இட்ட கட்டளைகள் என்று கிளைகளாக விரிகிறது இந்தச் சரித்திரம். ஆண் பெண் தெய்வங்களால் உலகம் படைக்கபட்டது என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. கனவு காணுதல் என்பதைக் காலத்தை கடந்து செல்வது என்றே அவர்கள் நம்புகிறார்கள்.

கனவுக்காலத்தின் கதைகள் தலைமுறை தேறும் வாய்மொழி மரபாகவே சொல்லப்பட்டு வருகின்றன. இன்றும் கதை சொல்லிகள் அதிகம் உள்ள தேசம் ஆஸ்திரேலியா. பூர்வகுடிகளின் இசைக்கருவிகளில் மிக முக்கியமானது டிஜிருரு . இது காடுகளில் காணப்படும் அதிசய மரம், மூங்கில் போன்று உள்ளே சதைப்பற்று இல்லாத இம்மரத்தை அப்படியே அறுத்து வந்து அதை இசைக்கருவியாக்கி வாசிக்கிறார்கள். கானகத்தின் விசித்திர இசையை அது வெளிப்படுத்துகிறது. மிக அருமையான இசையது.

தன் இறப்பின் பிறகு மனிதர்கள் மீண்டும் மிருகங்களாக, நட்சத்திரங்களாக, குன்றுகளாக ஏன் நம் வீட்டில் அன்றாடம் பயன்படும் கத்தி, அடுப்பு, தண்ணீர்பானை என ஏதோவொரு வடிவம் எடுத்துவிடுகிறார்கள். ஆகவே அவை யாவற்றிற்குள்ளும் பழம்நினைவுகள் புதைந்திருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தும் தருணங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன என்று பூர்வகுடிகள் சொல்கிறார்கள்

கதைகளின் வழியே பாதுகாக்க படவேண்டிய நினைவுகள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு என கடந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பூர்வகுடி மக்கள். நெட் கெல்லியும் இன்று கதையாகவே இருக்கிறார்.

**

0Shares
0