மூன்று கடல் தாண்டி.

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் மதியம் மூன்று மணிக்குச் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களைத் தமிழ் சப்டைட்டிலுடன்  திரையிடுகிறார்கள். புகழ்பெற்ற ரஷ்யத் திரைப்படங்கள் இதில் ஒளிபரப்பாகியுள்ளன. சில படங்கள் பலமுறை திரையிடப்படுகின்றன.

அப்படி ஒளிபரப்பான Journey Beyond Three Seas திரைப்படத்தைப் பார்த்தேன். இதே படத்தை முன்பு தூர்தர்ஷன் ஒளிபரப்பு ஒன்றில் பார்த்திருக்கிறேன். இப்படம் 1957 ல் “Pardesi” என்ற பெயரில் இந்தியில் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த குதிரை வர்த்தகரான அஃபனாசி நிகிதின் எழுதிய பயணக்குறிப்புகளை மையமாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது

இந்திய ரஷ்யக் கூட்டுத்தயாரிப்பில் உருவான படம். பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான கே.ஏ. அப்பாஸ் படத்தின் இந்தியப்பகுதிகளை எழுதி படமாக்கியிருக்கிறார். பத்மினி நர்கீஸ் இருவரும் முக்கிய வேஷத்தில் நடித்திருக்கிறார்கள்.

நிகிதின் தனது இந்தியப் பயணத்தில் கண்ட சம்பவங்கள். சந்தித்த மனிதர்கள். அனுபவங்களைத் தனி நூலாக எழுதியிருக்கிறார். அதைத் தான் இந்தப்படம் விவரிக்கிறது

படம் பதினைந்தாம் நூற்றாண்டு ரஷ்யாவில் தொடங்குகிறது, அங்குச் சோர்ந்து களைத்துப் போன அஃபனசி நிகிதின் (ஒலெக் ஸ்ட்ரிஷெனோவ்) ஒரு மடத்தில் தங்குவதற்கு இடம் கேட்கிறார். அவர் இரவு தங்கிக் கொள்ள மதகுரு அனுமதிக்கிறார். அங்கிருந்தபடியே அஃபனசி நிகிதின் தனது கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறார்.

ஃப்ளாஷ்பேக்கில் படம் விரியத்துவங்குகிறது

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, துடிப்பு மிக்க இளைஞரான நிகிதின் தன்னால் முடிந்தவரை உலகத்தைப் பார்க்க வேண்டும் எனத் தேசாந்திரியாக அலைந்து திரிகிறார். இதைக் கண்டு அவரது தாய் வர்வாரா கோபம் கொள்கிறார். மகனுடன் சண்டையிடுகிறார். திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துகிறார் ஆனால் நிகிதன் தன்னுடைய கால்களில் சக்கரம் உள்ளது. தான் தொடர்ந்து பயணித்தபடியே இருப்பேன் என்கிறார். தாயால் அவரைச் சமாதானம் செய்ய இயலவில்லை.

இந்நிலையில் நண்பனின் அழைப்பின் பேரில் மாஸ்கோ செல்லும் நிகிதின் அங்கே ரஷ்ய இளவரசனைச் சந்திக்கிறார். அவர்களின் உரையாடலில் இந்தியப்பயணம் பற்றிய கற்பிதமான எண்ணங்களைக் கேட்ட நிகிதன் அவை பொய் என மறுக்கிறார்.

ஒரு சவால் உருவாகிறது. இந்தியாவிற்கான சாகசப்பயணத்தை மேற்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

அஃபனசி நிகிதினுடன் இந்தியாவிற்கு வணிக குழு பயணிப்பதற்கும் இந்தியாவில் ரஷ்யப் பொருட்களுக்கான சந்தைகளையும், ரஷ்யாவில் விற்கக்கூடிய இந்தியப் பொருட்களையும் கண்டுபிடிப்பதாக அந்தப் பயணம் அமைய வேண்டும் என இளவரசர் கூறுகிறார். அதை நிகிதின் ஏற்றுக் கொள்கிறார்.

நிகிதின் பயணம் வோல்காவில் நதியில் துவங்குகிறது. அழகான காட்சியது. பயண வழியில் ஹசன் பெக் என்ற தூதுவரைச் சந்திக்கிறான். இன்னொரு இடத்தில் எதிர்பாராமல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பொருளை இழக்கிறான். அவனும் நண்பன் மிகைலோவும் தப்புகிறார்கள். பாலைவனப்பயணத்தில் உடல் நலிந்த நிலையில் மிகைலோ இறந்துவிடவே ஒற்றை ஆளாக நிகிதின் பயணம் மேற்கொள்கிறான்.

வேறு பயணக்குழு அவனைக் காப்பாற்றுகிறது. அங்கே குதிரை திருடன் ஒருவனைத் துரத்திப் போன நிகிதின் இந்தியாவிற்குச் செல்லும் கப்பலில் குதிரையோடு பயணிக்க ஆரம்பிக்கிறான்.

நிகிதின் இந்தியாவைக் காணும் காட்சி பரவசமூட்டுகிறது. இந்தியாவின் பண்பாடு தான் அதன் அடையாளம் என்பதைப் படம் அழகாகச் சித்தரிக்கிறது. பாம்பு கடித்து மரணத்துடன் போராடும் சம்பாவை விஷமுறிவு மருந்து கொடுத்து காப்பாற்றுகிறார் நிகிதின். அவள் முகத்தைக் கூட அஃபனசி நிகிதின் பார்ப்பதில்லை.

பின்பு ஒரு மழைக்காலத்தில் பயணத்தின் நடுவே அவர்கள் வீட்டிலே அடைக்கலமாகிறார். அவருக்கும் சம்பாவிற்குமான காதல் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. முடிவில்லாமல் பெய்யும் மழை. சின்னஞ்சிறிய கிராமத்து வீடு. அன்பான மனிதர்கள். ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்க்கும் நிகிதின் என அந்தப்பகுதி படத்தில் தனிச்சிறப்பு மிக்கது. வண்ணத்தில் மிகக் கவித்துவமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

சம்பாவைப் பிரிந்து நிகிதின் புறப்படும் போது காதலின் துயரில் சம்பா அழுகிறாள். நிகிதின் தன்னால் அங்கேயே தங்கி வாழ முடியாது எனப் பயணத்தைத் தொடருகிறான்.

பயணத்தில் ஒரு இடத்தில் அவனது குதிரை காணாமல் போகிறது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சகாரம் என்பவனுடன் நட்பு கொள்கிறான் நிகிதின். அவன் உதவியால் குதிரை ஆளுநர் ஆசாத் கான் வசமிருப்பதை அறிந்து கொள்கிறான்.

அவரைச் சந்திக்கச் செல்கிறான்.. வழியில் நடனக்காரியான பத்மினியைச் சந்திக்கிறான். பத்மினியின் மிகச்சிறந்த பரதநாட்டிய நிகழ்வு படத்தில் இடம்பெற்றிருக்கிறது. சைகையாலே அவர் வழிகாட்டுகிறார். அவரது வீடு தேடிப்போய் உதவி கேட்கிறான் நிகிதின்.

ஆசாத் கானை சந்திக்க வழி சொல்கிறார். ஆசாத் கானோ நிகிதினை மதமாற்றம் செய்யும்படி வற்புறுத்துகிறார். நிகிதின் மறுக்கிறான். அவனைச் சிறையில் அடைக்கப் போவதாக மிரட்டுகிறார். ஆனால் எதிர்பாராமல் ஹசன் பெக்கை சந்தித்து அவரது உதவியால் தனது குதிரையை மீட்கிறான் நிகிதின் முடிவில் நிகிதினின் பயண நோக்கம் நிறைவேறுகிறது. தனது தேசம் நோக்கிச் செல்ல திட்டமிடுகிறான்.

தனது தேசம் திரும்பும் போது வழியில் மீண்டும் சம்பாவைச் சந்திக்கிறான். அந்தக் காட்சி மிக உணர்ச்சிப்பூர்வமானது. சம்பா குழந்தையுடன் இருக்கிறாள். அவளை ரகசியமாகவே நிகிதின் பார்க்கிறான். அவர்களின் வீடு இடிந்து போயிருக்கிறது.

தன் காதலின் மீளாத்துயரில் அங்கிருந்து நிகிதின் விடைபெறுகிறான்

படத்தின் இசை, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு யாவும் சிறப்பாக உள்ளன. சம்பாவின் கதை கே.ஏ.அப்பாஸின் நாவலைப்போல அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படம் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் அரங்குகளில் வெளியானது. ரஷ்யாவில் பெரிய வெற்றி பெற்றபோதும் இந்தியாவில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அஃபனசி நிகிதின் எழுதிய Journey Beyond Three Seas நூலை அழகான ஓவியங்களுடன் ரஷ்ய அரசு பதிப்பித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு பிரதி  ரஷ்ய கலாச்சார மையத்தால் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த நூலை இந்தப்படம் பார்த்தபிறகு வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தை விடவும் படமே எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவத்தைத் தருவதாக இருந்தது .

••

31.7.20

0Shares
0