வரையாத வட்டம்

புதிய சிறுகதை. அக்டோபர் 2026

கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த சாக்பீஸை கீழே போட்டு இருமினான் புருஷோத்தமன். சாக்பீஸ் உடைந்து துண்டானது.

அவனால் இருமலை அடக்க முடியவில்லை. வறட்டு இருமல். தொடர்ந்து இருமி இருமித் தொண்டை புண்ணாகிவிட்டது. கண்கள் ரத்தவரிகள் போலச் சிவந்து போனதுடன் தலையும் பாரமாகயிருந்தது. வெள்ளிகிழமை வரை ஓட்டிவிட்டால் இரண்டு நாள் ஊருக்குப் போய் உடம்பைச் சரி செய்து கொண்டு வரலாம் என நினைத்துக் கொண்டான்.

அதுவரை எப்படி வகுப்பைச் சமாளிப்பது எனத் தெரியவில்லை.

வாயைத் திறந்தால் இருமல். சில நேரம் இருமி இருமி வயிறு எக்கிப் பிடித்துக் கொள்கிறது. அன்றைக்கும் அப்படிதான் ஆனது.

“சார் நான் வேணும்னா.. கிட்ணன் வீட்ல போயி வெந்நீர் வாங்கிட்டு வரவா சார்“ எனக்கேட்டாள் மாணவி ஆனந்தி

வேண்டாம் எனச் சைகை காட்டினான்

“வயித்தைப் பிடிச்சிக்கிட்டு ரொம்ப இருமுறீங்க சார்“ எனக் கவலையாகச் சொன்னாள் ஆனந்தி

“சரியாகிடும்“ எனச் சைகை செய்தபடியே கர்சீப்பால் உதட்டைத் துடைத்துக் கொண்டான்.

பாடம் நடத்த முடியவில்லை. எதையும் போர்டில் எழுதிப் போடவும் முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இரவுக்காட்சி பார்க்க போனபோது தியேட்டரில் குளிர்பானம் குடித்தான். அது தான் காரணமாக இருக்கக் கூடும். அடுத்தநாள் காலையிலே இடைவிடாத தும்மல். மதியம் காய்ச்சலும் தொண்டை வலியும் சேர்ந்து கொண்டது. முக்கு ரோட்டிலிருந்த ஜெயராம் டாக்டரிடம் காட்டி ஊசி போட்டான். மூன்று வேளைக்கு மாத்திரையும் இருமல் டானிக்கும் கொடுத்திருந்தார். அதனை வேளை தவறாமல் சாப்பிட்டும் இருமல் நிற்கவில்லை.

வகுப்பில் அவன் இருமும் போதெல்லாம் ஆனந்தி கண்களை மூடி சாமியிடம் ஏதோ வேண்டிக் கொண்டாள். அடுத்த நாள் வீட்டில் சுக்குமல்லிக் கஷாயம் தயாரித்து ஒரு தூக்குவாளியில் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தாள்.

அவன் இருமும் நேரங்களில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்தி அழுவதைக் கண்டிருக்கிறான். வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் காட்டாத அக்கறையை அவளிடம் உணர்ந்தான்.

அன்று காலையில் கூடப் பிள்ளையார் கோவிலில் இருந்து திருநீறு கொண்டு வந்து வகுப்பறையிலே அவனைப் பூசிக் கொள்ளச் சொன்னாள் ஆனந்தி.

“அதான் மாத்திரை சாப்பிடுறேன்ல.. சரியாகிரும்“ என்றான்

“சொகமானதும் பிள்ளையாருக்கு ஒரு செதறு தேங்காய் போடணும் சார்“ என்றாள் ஆனந்தி. அது அவளது வேண்டுதல் போலும்.

••

புருஷோத்தமன் சீயார்பட்டியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தான். ஆசிரியர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளே ஆகியிருந்தன. இந்த ஆண்டு தான் மாறுதலாகி சீயார்பட்டி பள்ளிக்கு வந்திருந்தான்.

நாலே தெருக்கள் உள்ள சிறிய ஊர். ஊரின் நடுவே ஒரு மாரியம்மன் கோவில். அருகில் இரட்டை வேப்பமரங்கள். அதன் எதிர்புறம் பள்ளிக்கூடம். பக்கத்து ஊர்களில் இருந்து நிறைய மாணவர்கள் வந்து படித்தார்கள். அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிருந்தது.

வேலை செய்யும் ஆசிரியர்களில் புருஷோத்தமன் ஒருவனே வெளியூர்காரன்.. இருவர் பக்கத்து ஊரிலிருந்து பைக்கில் வந்து போனார்கள்.

சாத்தூரிலிருந்து தினமும் வந்து போக முடியாது என்பதால் சீயார்பட்டியிலே தங்கியிருந்தான். வயர்மேன் பாஸ்கர் வீட்டு மாடியை அவனுக்காகத் தந்திருந்தார்கள். அந்த ஊரில் ஹோட்டல் கிடையாது. ஒரேயொரு டீக்கடை. அதுவும் காலை ஆறு மணிக்குத் துவங்கி ஒன்பது மணிக்குள் முடிந்துவிடும். ஊரில் இரண்டு பெட்டிக்கடைகள். ஒரு மைக் செட் கடையைத் தவிர வேறு எதுவும் கிடையாது.

டூத் பேஸ்ட் வேண்டும் என்றாலும் முக்கு ரோட்டிற்குப் போய் வர வேண்டும். புருஷோத்தமனிடம் பைக் இல்லை. ஆகவே பாஸ்கரனின் பைக்கை இரவல் வாங்கிக் கொண்டு போய் முக்கு ரோட்டிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு வருவான். சில நாட்கள் இரவுக்காட்சி காண பாஸ்கருடன் அருப்புக்கோட்டை போய் வருவதும் உண்டு..

வாரம் வெள்ளிகிழமை மாலையில் ஊருக்குக் கிளம்பிவிடுவான். திங்கள் காலை தாமதமாகவே பள்ளிக்கு வந்து சேருவான். சாத்தூருக்கே மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தான். ஆனால் கிடைக்கவில்லை. சீயார்பட்டி உலகின் கண்களுக்குத் தெரியாமல் கரிசல் நிலத்தின் வளைந்த சுண்டுவிரலைப் போல உள்ளடங்கியிருந்தது.

••

ஆனந்தி பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாக்கியத்திடம் சொன்னாள்

“சார் இருமுறதைப் பாக்க கஷ்டமா இருக்கு. எனக்கு அழுகையா வருது“

“அவரு வாயை மூடிட்டு இருக்க வேண்டியது தானே. எதுக்குப் பாடம் நடத்துறாரு“ எனக் கேட்டாள் பாக்கியம்

“வாய்ல மிளகைப் போட்டு ஒதுக்கிட்டு இருந்தா இருமல் வராது. “

“உன் வீட்ல இருந்து கொண்டாந்து குடுக்க வேண்டியது தானே“

“எங்க வீட்ல மிளகு இல்லை. புவனாகிட்ட கேட்டிருக்கேன். “

வகுப்பில் யாரோ ஒரு மாணவன் உரத்த சப்தம் எழுப்பவே அவனை அடக்குவதற்காகப் புருஷோத்தமன் எழுந்து ஏதோ சொல்ல முயன்றான். அவனால் பேச முடியவில்லை., வகுப்பை விட்டு வெளியே வந்து காற்று வாங்குவதற்காக வராந்தாவில் நின்று கொண்டான்

திடீரென ஆனந்தி வகுப்பிலிருந்து வெளியேறி ஒடினாள். எங்கே போகிறாள் என அவனுக்குப் புரியவில்லை. அவள் திரும்பி வந்த போது கையில் ஒரு சொம்பில் சுடுதண்ணீர் இருந்தது. துணியால் அந்தச் சொம்மைப் பிடித்துக் கொண்டு ஆனந்தி நின்றிருந்தாள்

“நல்ல சூடா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா குடிங்க சார்“

“அப்படி வச்சிடு“ என மேஜையைக் காட்டினான்

“இப்பவே குடிங்க சார்“ என நீட்டிக் கொண்டிருந்தாள்

“வச்சிட்டு உன் இடத்துல போயி உட்காரு “ என எரிச்சலுடன் சொன்னான்.

ஆனந்தி மேஜையில் சொம்பை வைத்துவிட்டு கவலையான முகத்துடன் தனது பெஞ்சில் போய் உட்கார்ந்தாள்.

எதற்காகத் தன் மீது இவ்வளவு அன்பு செலுத்துகிறாள் எனப் புரியாதவனாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் புருஷோத்தமன்.

••

அந்தப் பள்ளிக்கு வேலைக்கு வந்த வந்த நாள் முதல் ஆனந்தியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படித் தான் நடந்து கொள்கிறாள். வகுப்பில் அவனுக்குச் சாக்பீஸ் தேவை என்றால் உதவி செய்ய ஹெட் மாஸ்டர் அறைக்கு ஒடிப்போவாள். வகுப்பு முடிந்து மாலை மாணவர்கள் வெளியேறும் போது “எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க“ என்று கூப்பிடுவாள்.

வெள்ளிகிழமை மாலையில் அவன் ஊருக்கு கிளம்பும் போது “எங்களை எல்லாம் மறந்துராதீங்க சார்“ என்று வேடிக்கையாகச் சொல்வாள். திங்கள்கிழமை அவன் பள்ளிக்கு திரும்பி வரும் போது “ஊருக்கு போயிட்டு வந்தா உங்க முகம் தெளிச்சியா இருக்கு சார்“ எனச் சொல்லி சிரிப்பாள்.

ஒரு முறை பெரிய வெள்ளரிப்பழம் ஒன்றை கொண்டு வந்து கொடுத்து “இதுல சக்கரை போட்டு சாப்பிடுங்க சார்“ என்றாள். அந்தப் பழத்தை பாஸ்கர் வீட்டில் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இன்னொரு முறை வகுப்பிலே “உங்க அம்மா பேரு என்ன சார்“ என்று ஆனந்தி கேட்டாள்.

“ராஜலட்சுமி “என்று அவன் சொன்னதும் “அவங்களுக்கு நாம எல்லாம் சேர்ந்து ஒருதடவை கைதட்டுவோம்“ என்று சொல்லி மாணவர்களைக் கைதட்டச் செய்தாள் ஆனந்தி

“எதுக்கு இந்தக் கைதட்டு“ எனச் சிரித்தமுகத்துடன் கேட்டான் புருஷோத்தமன்

“நல்ல சாரை எங்களுக்குக் குடுத்ததுக்கு “என்றாள் ஆனந்தி.

வியப்போடு ஆனந்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

••

அந்த வாரம் ஊருக்குப் போன போது வகுப்பில் நடந்ததை அம்மாவிடம் சொன்னான்.

“அந்தப் பிள்ளைக்கு அப்பா கிடையாதா“ எனக்கேட்டாள் அம்மா

“ஆமா. உனக்கு எப்படித் தெரியும்“

“அப்பா இல்லாத பிள்ளக மனசுல இருக்க அன்பை எல்லாம் வாத்தியார்கிட்ட தான் காட்டும். என்கூட நங்கைனு ஒருத்தி படிச்சா. அவளும் இப்படிதான். வாத்தியாரை அய்யா. அய்யானு தான் கூப்பிடுவா. அவரு கோபத்துல ஒரு வார்த்தை திட்டினா.. அழுதுருவா. வாத்தியார் எல்லாருக்கும் வெறும் வாத்தியார் இல்லைடா. சிலருக்கு அதுக்கும் மேலே. “

“ஆனந்தியும் அப்படிதான்மா.. கையைக் கட்டிக்கிட்டு அந்தப் பொண்ணு பேசுறதை பாக்கணுமே. அவ்வளவு அழகா இருக்கும், “

“அந்தப் பிள்ளை நல்லா படிக்குதா“

“படிப்பு சரியா வரலை. சின்னக் கணக்கை கூடச் சரியா போட தெரியலை. “

“மனசுல என்ன கவலையோ. நீ ஒண்ணுக்கு நாலு தடவை நல்லாப் புரியுற மாதிரி சொல்லிக்குடு.. “ என்றாள் அம்மா

“ஆனந்தி ஒரு நாள் கூட ஸ்கூலுக்கு லீவு போட்டதே கிடையாதும்மா“

“நீ அவங்க வீட்டுக்கு போனயா.. “

“கூப்பிட்டுக்கிட்டே இருக்கும். நான் போனதில்லை“

“ஒரு தடவை போயிட்டு வாய்யா.. “

“போனா சாப்பிடமா விடாதும்மா. அவங்களே கஷ்டப்படுற குடும்பம். இதுல நான் போயி எப்படிச் சாப்பிடுறது. “

அதுவும் சரிதான் என்பது போல அம்மா தலையாட்டிக் கொண்டாள்.

••

அந்த வாரம் திங்கள்கிழமை பள்ளிக்குத் திரும்புவதற்காக அவன் கிளம்பிக் கொண்டிருந்த போது அம்மா இரண்டு ஆரஞ்சுவண்ண ரிப்பனையும், ஒரு பால்கோவா பாக்கெட்டையும் கையில் கொடுத்து “.இதை ஆனந்திகிட்ட குடுத்துரு“. என்றாள்

பள்ளியில் அதை ஆனந்தியிடம் கொடுத்த போது அவளால் நம்பமுடியவில்லை

“இது எனக்கா சார்“.

“உனக்கு தான். எங்கம்மா குடுத்துவிட்டாங்க. “

அதைக் கேட்டதும் அவளது கண்கள் கலங்கிவிட்டன. உடனே தன்னுடைய தலையில் கட்டியிருந்த ரிப்பனை அவிழ்த்துவிட்டுப் புதுரிப்பனைக் கட்டிக் கொண்டாள்

“பால்கோவாவை கிளாஸ்ல இருக்கிற எல்லோருக்கும் குடுக்கவா சார்“ எனக்கேட்டாள்

“ உன் இஷ்டம்“

வகுப்பில் இருந்த அத்தனை மாணவர்களுக்கும் பிரசாதம் கொடுப்பது போலப் பால்கோவாவை கையில் எடுத்துக் கொடுத்தாள். அவனுக்கும் கொஞ்சம் நீட்டியபோது “எனக்குப் பால்கோவா பிடிக்காது“ என்றான்.

“அப்போ எனக்கும் பிடிக்காது சார்“ எனத் தன்னுடைய வாயிலிட்டிருந்ததைத் துப்பினாள்

“ஏன் இப்படிப் பண்ணினே.. உனக்காக நான் பால்கோவா சாப்பிடுறேன்“ என வாங்கிக் கொண்டான்.

அன்று மதியம் உணவுவேளையின் போது அவனைத் தலைமை ஆசிரியர் அழைத்திருந்தார்

“இதெல்லாம் தப்பான பழக்கம் புருஷோத்தமன்….. கிளாஸ்ல படிக்கிற பிள்ளைகளுக்குள்ளே பிரச்சனை வந்துரும்“

“இதுல என்ன சார் பிரச்சனை வரப்போகுது“

“ஆனந்திக்குக் கிடைக்கிறது நமக்குக் கிடைக்கலையேனு மத்த பிள்ளைக நினைக்கலாம்லே. அது நாளைக்குச் சாதிபிரச்சனையா மாறிடும் பாத்துக்கோங்க“

“இதுல எங்கே சார் சாதி வருது“

“உங்களுக்குத் தெரியாது. ஸ்டுடண்ட் கிட்ட அளவா பழகணும். இப்படிச் சிரிச்சி பழக்கிட்டு இருந்தா. உங்க மேல பயம் இல்லாம போயிரும்“

“எதுக்குப் பயப்படணும். புரியலை“

“நீங்க யங்ஸ்டர் இப்படித்தான் பேசுவீங்க. எனக்கு இருபத்திரெண்டு வருச சர்வீஸ். நிறையப் பாத்துட்டேன். “

“இதுல என் தப்பு எதுவுமில்லே சார்“

“சொல்ல வேண்டியது என் கடமை. வாத்தியார் வேலைங்கிறது ஒரு வட்டம். அதுக்கு வெளியே போகக் கூடாது. பழகக் கூடாது“

“சரி சார். “ எனக் கோபமாகச் சொல்லிவிட்டு வகுப்பறைக்கு வந்தான்

ஆனந்தி புது ரிப்பனைப் பற்றி ஏதோ சொல்லி அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். . தலைமை ஆசிரியர் ஏற்படுத்திய கோபத்தை அவளிடம் காட்டுவது போலப் புருஷோத்தமன் சொன்னான்

“ரிப்பன் எல்லாம் அழகா தான் இருக்கு. படிப்பு தான் உன் மண்டைல ஏற மாட்டேங்குது“

ஆனந்தி அதைக்கேட்டதும் கலங்கிவிட்டாள்

“நான் படிப்பேன் சார்“ எனத் தழுதழுத்த குரலில் சொன்னாள்

“அதான் முட்டை மார்க் வாங்குறயாக்கும் “என்றான் புருஷோத்தமன்

அதைக் கேட்டதும் விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள். அத்தோடு சட்டெனத் தனது ஜடையில் இருந்த ரிப்பனை அவிழ்த்துப் பையில் வைத்துக் கொண்டாள். பாக்கியம் அவளைச் சமாதானம் செய்த போதும் அழுகை நிற்கவில்லை

ஏன் ஆனந்தியைக் கோவித்துக் கொண்டோம் என உணர்ந்தவனாகப் புருஷோத்தமன் அவளைச் சமாதானப்படுத்தினான். அவள் அழுகுரலோடு சொன்னாள்

“படிப்பு என் மண்டைல ஏற மாட்டேங்கு சார். நான் மக்கு. தெண்டம். “

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீயும் நூறு மார்க் வாங்குவே பாரு“

“என்னாலே முடியாது சார். “

“உன்னைப் படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. கண்ணைத் துடை.. ஆனந்தி தைரியமான பொண்ணு. அது தைரியம் யாருக்கும் வராதுனு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கண்ணைக் கசக்கிட்டு நிக்குறே. “

“அழுகை தானா வருது சார்“. என்றாள் ஆனந்தி

“அழுகைக்கு ஒரு அக்கா இருக்கா தெரியுமா. அவ பேரு சிரிப்பு. ரொம்பச் சிரிச்சா.. அழுகை வந்துரும். ரொம்ப அழுதா. அப்புறம் தானா சிரிப்பு வரும்“

அதைக்கேட்டு ஆனந்தி சிரித்தாள்.

••

அதன்பிறகான நாட்களில் ஆனந்தியின் மீது கூடுதல் கவனம் எடுத்து படிக்க வைக்க முயன்றான். அவளால் பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. எப்போதும் எதையோ நினைத்து வருந்திக் கொண்டேயிருந்தாள். அவளது முகத்தில் இனம் புரியாத கவலை. குழப்பம். என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை

தன்னால் படிக்க முடியாது என்ற எண்ணம் அவளுக்குள் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதைப் போக்குவதே அவனது முக்கியச் சவாலாக மாறியது.

திடீரென நாலைந்து நாட்கள் ஆனந்தி பள்ளிக்கு வரவில்லை. அதைப்பற்றி வகுப்பிலிருந்த மாணவிகளிடம் கேட்டபோது “.அவங்க அம்மா விட மாட்டேங்குது சார்“. என்றார்கள்.

ஏன் அவளைப் படிக்க அனுப்ப மறுக்கிறார்கள் எனப் புரியாமல் ஆனந்தி வீட்டிற்கு அவளைக் காணுவதற்காகப் பள்ளி முடிந்த மாலையில் சென்றிருந்தான்.

ஆனந்தியின் வீடு தெற்குத்தெருவில் இருந்தது. வளைந்த வேப்பமரத்தை ஒட்டிய ஓட்டு வீடு. வேம்பில் ஒரு ஆடு கட்டப்பட்டிருப்பதைக் கண்டான். அருகே நாலைந்து கோழிகள் மண்ணில் எதையோ கொத்திக் கிளறிக் கொண்டிருந்தன. இடது புறம் ஒரு சிமெண்ட் தண்ணீர் தொட்டி. அதை ஒட்டி பெரிய ஆட்டு உரல். கயிற்றுக் கொடியில் பாவாடை ஒன்று காய்ந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டது..

வீங்கிய வயிற்றோடு டவுசர் மட்டுமே அணிந்த பனிரெண்டு வயதுப் பையன் மண்ணை அள்ளி அள்ளித் தன்னுடைய மடியில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். புருஷோத்தமனைப் பார்த்தவுடன் மிட்டாய். மிட்டாயி எனக் கைகளை நீட்டினான். அது ஆனந்தியின் அண்ணனாக இருக்ககூடும். மனவளர்ச்சியற்ற பையனாக இருந்தான். உதட்டில் எச்சில் வழிந்து கொண்டிருந்தது.

இருட்டடைந்து போன வீடு. வாசலை ஒட்டி ஒரு பாட்டி பழைய சாக்கு ஒன்றை விரித்து அதில் சுருண்டிருந்தாள். ஆனந்தியின் பெயரைச் சொல்லி அழைத்தான். உள்ளிருந்து ஒரு பெண் குரல் உரத்து கேட்டது

வீட்டிற்குள் செல்லாமல் தயங்கி வெளியே நின்றபடியே “ஆனந்தி … ஆனந்தி“ எனக்கூப்பிட்டான்

“ஏய் ஆனந்தி சனியனே. வெளியே யாருனு பாருடி“ எனக் குரல் கேட்டது

ஆனந்தி வரவில்லை. வீட்டிற்குள்ளிருந்து நாற்பது வயதைக் கடந்த ஒரு பெண் வந்தாள். ஆனந்திவின் அம்மாவாக இருக்கக் கூடும். சிக்குப்பிடித்த தலைமயிர். அழுக்கடைந்த பச்சைவண்ண புடவை. சிடுசிடுத்த முகம். இடுப்பில் கையை ஊன்றி நின்றபடி கோபமான குரலில் கேட்டாள்

“யாரு வேணும்“

“நான் ஆனந்திவோட வாத்தியார்“

அதனால் என்ன என்பது போல முறைத்தபடியே கேட்டாள்

“ஆனந்தி உசிரோட இருக்காளா.. செத்துப்போயிட்டாளானு பாக்க வந்தீங்களா“

அந்தக் கேள்வி அவனை அதிர்ச்சி கொள்ளச் செய்தது..

“ஆனந்தி ஸ்கூலுக்கு வரலை அதான்“ என தயக்கத்துடன் சொன்னான்

“அவ படிச்சி கிழிச்சதெல்லாம் போதும். வத்தல் கம்பெனிக்கு அனுப்ப போறேன்“

“நல்லா படிக்கிற பொண்ணு. அது படிப்பை ஏன் நிறுத்துறீங்க“

“படிக்கப் போயிட்டா… வாங்கி வச்ச கடனை யாரு அடைக்குறது.. இவன யாரு பாத்துகிடுறது.. இவ படிச்சி எந்தச் சீமைக்கு வேலைக்குப் போகப்போறா.. “

“படிக்கிற புள்ளைய வேலைக்கு அனுப்புறது தப்பும்மா“ என்றான்

“என் புள்ளைய என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்“. என கோபமாகச் சொன்னாள் ஆனந்தியின் அம்மா.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு பிளாஸ்டிக் வாளியை கையில் பிடித்தபடியே ஆனந்தி வீட்டை நோக்கி வந்தாள்.

புருஷோத்தமனைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தவளாக “சார். வாங்க“ எனச் சிரித்தாள்.

“என்ன ஆனந்தி ஸ்கூலுக்கு வரல“ எனக்கேட்டான்

“வீட்டுல வேலையிருந்துச்சி சார். திங்கள்கிழமை வந்துருவேன்“ என்றாள்

“உன்னை ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறதுக்குத் தான் உங்க அம்மா கிட்ட பேசிகிட்டு இருக்கேன்“

“அதெல்லாம் வந்துருவேன் சார் “என்றபடி அம்மாவிடம்“ எங்க சாரும்மா. நல்ல சார்….. அவரு குடிக்கிறதுக்கு ஏதாவது குடு“ என ரகசியமான குரலில் சொன்னாள்

“அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. இங்க பாருடீ,, வாத்தியாரை வரச்சொல்லி நாடகம் ஆடுறயா. யார் சொன்னாலும் உன்னைப் படிக்க அனுப்ப மாட்டேன் பாத்துக்கோ. வீரமணிகிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டேன். நீ வத்தல் கிள்ளுற வேலைக்குப் போறே. “

“சாரை உள்ளே வரச்சொல்லி உட்காரச் சொல்லுமா “ என முறைத்தபடியே சொன்னாள் ஆனந்தி

அம்மா கோபம் குறையாதவளாகப் புருஷோத்தமனைப் பார்த்து சொன்னாள்

“கிளம்புங்க. உங்களுக்கு விருந்து வைக்க இங்கே ஒண்ணும் கொட்டிக்கிடக்கலை. “

அதைக் கேட்டதும் ஆனந்தியின் முகம் இருண்டுபோனது. அவள் அம்மாவின் வாயை அடைக்க முடியாதவளாக ஆத்திரத்துடன் சொன்னாள்

“நீ உள்ளே போம்மா“

“நான் எதுக்குடி போகணும். ஆம்பளை இல்லாத வீடுனு.. கண்ட தெருநாயும் படியேறி வந்து நியாயம் பேச ஆரம்பிச்சிருச்சி`. எனத் தலைமயிற்றை அவிழ்த்து முடிந்து கொண்டாள்.

புருஷோத்தமனுக்கு அவர்கள் சொல்லாமலே அந்த வீட்டின் பிரச்சனைகளும். இல்லாமையும் புரிந்தன.

அவன் அமைதியாகப் பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

தனது வீடு தேடி வந்தவருக்கு எதுவும் கொடுக்காமல் இப்படி அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறோமே என்ற வருத்தம் மேலிட அவன் பின்னாலே ஆனந்தி நடந்து வந்தாள். வழியில் ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசிக் கொள்ளவில்லை.

பள்ளியை நெருங்கும் போது ஆனந்தி சொன்னாள்

“நான் நல்லா படிப்பேன் சார். எப்படியாச்சும் ஸ்கூலுக்கு வந்துருவேன். “

அப்படி அவள் சொல்வதைக் கேட்கும் போது அவனை அறியாமல் கண்கள் கலங்கின. அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆனந்தியிடம் சொன்னான்

“எனக்குத் தெரியும்“

ஆனந்தி பள்ளியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். பாஸ்கர் வீட்டை நோக்கி புருஷோத்தமன் நடக்கத் துவங்கினான். பாதி தொலைவில் திரும்பிப் பார்த்த போது ஆனந்தி அதே இடத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

அதைக் காணும் போது அவள் பள்ளியிடம் ஏதோ பிரார்த்தனை செய்வதைப் போல புருஷோத்தமனுக்குத் தோன்றியது

••

0Shares
0