வீட்டின் இதயம்

லியோ மெக்கரி இயக்கி 1937ல் வெளியான “Make Way for Tomorrow” என்ற படத்தைப் பார்த்தேன்.

பார்க்லி மற்றும் லூசி கூப்பர் வயதான தம்பதியினர். அவர்களின் வீடு கடனுக்காகப் பறிபோகும் நிலையில் படம் துவங்குகிறது. இனி தாங்கள் எங்கே வாழுவது என்பதைத் தீர்மானிக்கத் தனது ஐந்து பிள்ளைகளையும் அவர்கள் வரவழைக்கிறார்கள். ஐந்தாவது மகள் தொலைவில் கலிபோர்னியாவில் இருக்கிறாள். ஆகவே அவள் வரவில்லை.

மற்ற நான்கு பிள்ளைகளும் பெற்றோர்களைக் காண வருகிறார்கள். இனி முதுமையின் காரணமாகத் தன்னால் வேலை செய்ய இயலாது, ஆகவே கடனை அடைப்பது இயலாத காரியம் என்கிறார் பார்க்லி.

ஒரு மகள் பெற்றோர்களைத் தன்னோடு வைத்துக் கொள்ளச் சம்மதம் ஆனால் கணவரிடம் அனுமதி கேட்க வேண்டும். முடிவு செய்ய மூன்றுமாதகாலமாகும் என்கிறாள். மற்றவர்களோ இருவரையும் வைத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள்

தற்காலிக தீர்வாகப் பெற்றோர் பிரிந்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பிள்ளையுடன் வாழ வேண்டும் என முடிவு செய்கிறார்கள்.

இத்தனை ஆண்டுக்காலம் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிள்ளைகளால் பிரித்து வைக்கப்படுகிறார்கள். கடைசியாக அவர்கள் தங்கள் வீட்டில் இரவைக் கழிக்கும் காட்சி மிகச்சிறப்பு.

லூசி கூப்பர் தனது பேத்தி ஒருத்தியின் அறையைப் பகிர்ந்து கொள்கிறார், பார்க்லி நியூயார்க் நகரில் ஒரு மகனின் அறையிலுள்ள சோபாவில் படுத்து உறங்குகிறார். மனைவி ஒரு சிறிய ஊரில். பார்க்லி பெரிய நகரில் எனப் பிரிந்து வாழுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை பற்றிக் கடிதம் எழுதிக் கொள்கிறார்கள்.

பிள்ளைகள் வீட்டில் அவர்கள் வேலையாளைப் போல நடத்தப்படுகிறார்கள். பேத்திக்கும் பாட்டிக்குமான உறவு அழகாகச் சித்தரிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளும் பெற்றோர்களைத் தங்களுடன் வைத்துக் கொள்வதை இடையூறாக நினைக்கிறார்கள். இதனால் எத்தனை வயதானாலும் தான் சம்பாதித்து வாழாவிட்டால் அவமானமே எனப் பார்க்லி உணருகிறார். வேலை தேட ஆரம்பிக்கிறார். அவருக்கு ஒரு யூத நண்பர் உதவிசெய்கிறார்.

அப்போதும் அவர் மனைவி லூசி உற்சாகம் கொடுத்து நம் வாழ்க்கையை நாமே கவனித்துக் கொள்வோம் என்கிறாள்.

உடல்நலமற்ற நேரத்தில் கூடத் தன்னைப் பிள்ளைகள் கவனிப்பதில்லை என்பதைப் பார்க்லி நன்றாக உணருகிறார். மூத்தமகன் ஜார்ஜ மீது தாய் மிகுந்த அன்பு செலுத்துகிறார். அதை மகனும் நன்றாக உணர்ந்திருக்கிறான். ஆனால் அவனது மனைவி அனிடா லூசியைத் தேவையற்ற சுமையாக நினைக்கிறாள். அவர்கள் லூசியை மட்டும் ஒரு முதியோர் இல்லத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறார்கள். இது பார்க்லிக்கு மேலும் அதிர்ச்சியைத் தருகிறது. ஐந்தாவது மகளுடன் வசிப்பதற்காக அவர் கலிபோர்னியா செல்ல முடிவு செய்கிறார்.

அதற்கு முன்பாகப் பெர்கலியும் லூசியும் சந்தோஷமாக ஒரு நாளை கழிக்கத் திட்டமிடுகிறார்கள்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் எந்த ஹோட்டலுக்குத் தேனிலவிற்கு வந்தார்களோ அதே விடுதிக்குச் சென்று அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். காலம் அவர்களை எவ்வளவு உருமாற்றியிருக்கிறது என்பதை இருவரும் புரிந்து கொள்கிறார்கள். அந்த நாள் மறக்க முடியாத சந்தோஷத்தினைத் தருகிறது. இனி தன் விதிப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது எனக் கலிபோர்னியா நோக்கி பார்க்லி புறப்படுகிறார்.

இறுதியில், பார்க்லி ரயிலில் புறப்படும் நாளில் லூசி வழியனுப்பி வைக்க வருகிறாள். கண்ணீர் வரவழைக்கும் காட்சியது.

பார்க்லி நம்பிக்கையோடு புறப்படுகிறார். லூசி கையசைத்து விடை தருகிறாள், இது கிட்டத்தட்ட அவர்களின் இறுதி தருணம் என்று நமக்குப் புரிகிறது. ரயில் புறப்படுகிறது.

இந்தப் படத்தின் பாதிப்பில் தான் ஜப்பானிய இயக்குநர் ஓசுவின் டோக்கியோ ஸ்டோரி உருவாக்கப்பட்டிருக்கிறது

படத்தில் வரும் பிள்ளைகள் யாரும் கொடூரமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் பெற்றோருடன் அன்பாகவே பேசுகிறார்கள். நடந்து கொள்கிறார்கள் ஆனால் பரபரப்பான வாழ்க்கை மற்றும் அவர்களின் பொருளாதார நெருக்கடி பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள முடியாத சூழலை உருவாக்குகிறது.

வயதான பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் நவீன வாழ்க்கையோடு பொருந்திப் போக முடியவில்லை. அவர்கள் வேறு தலைமுறை சார்ந்தவர்கள். அவர்கள் பொறுப்புணர்வோடு எதையும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் விளையாட்டுத் தனமாகப் பிள்ளைகள் நடந்து கொள்வது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

இப்படம் வயதான பெற்றோர்களின் நிர்கதியை, ஆழமான உறவுப் பிணைப்பு மிக அழகாக விவரிக்கிறது. அந்த வகையில் ஹாலிவுட் சினிமாவில் இது என்றும் மறக்கமுடியாத படமாகும்

The most powerful films often simply show you events without instructing you how to feel about them. It is remarkable that a film this true and unrelenting was made by Hollywood in 1937 என்கிறார் விமர்சகர் ரோஜர் எபர்ட். அது உண்மையே.

••

14/8/20

0Shares
0