நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயிஸ் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். சோர்வாக உணரும் நாட்களில் அவரது படங்களை மறுபடி பார்ப்பேன். உற்சாகம் தானே தொற்றிக் கொண்டுவிடும்
சில நாட்களுக்கு முன்பு ஜெர்ரி லூயிஸ் நடித்த The Bellboy திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் துவக்கக் காட்சியில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கற்பனையான நிர்வாகத் தயாரிப்பாளர் ஜாக் ஈ. முல்ச்சர் படத்தை அறிமுகப்படுத்துகிறார்
அப்போது இந்தப் படத்தில் கதை கிடையாது. திருப்பங்கள் எதுவும் கிடையாது. இது ஒரு கதாபாத்திரத்தின் சில வேடிக்கையான நிகழ்வுகளை விவரிக்கக்கூடியது மட்டுமே எனச் சொல்லிச் சிரித்தபடியே விடைபெறுகிறார்.
சிசில் பி டிமிலி தனது படங்களின் துவக்கத்தில் தோன்றி படத்தின் கதை பற்றியும் தாங்கள் அதை உருவாக்க எடுத்துக் கொண்ட சிரத்தைகள் பற்றியும் பேசுவதைக் கேலி செய்யும்விதமாக இந்த அறிமுகக்காட்சி இடம்பெற்றிருக்கிறது.
பிரபலமான தங்கும்விடுதி ஒன்றில் ஏவல் பணிகளைச் செய்யும் ஒருவனின் அன்றாடச் செயல்பாடுகளைப் படம் நகைச்சுவையாக விவரிக்கிறது.
ஜெர்ரி லூயிஸ் சாப்ளின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். இந்தப் படத்தில் சாப்ளின் பாதிப்பு நிறையவே தெரிகிறது. ஆனால் காட்சிகளை உருவாக்குவதிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துவதிலும் ஜெர்ரி லூயிஸ் தனிப்பாணி கொண்டிருக்கிறார். காட்சிக்குக் காட்சி வெடித்துச் சிரிக்கும்படியான படம்
அமெரிக்காவின் மியாமி கடற்கரையிலுள்ள ஃபோன்டைன்லேவ் ஹோட்டலில் ஸ்டான்லி எடுபிடி ஆளாகப் பணியாற்றுகிறான். படம் முழுவதும் அவன் பேசுவதேயில்லை. கடைசிக் காட்சியில் மட்டுமே பேசுகிறான். இதுவரை தான் பேசுவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை என்று சொல்கிறான். காரணம் எப்போது அவன் பேச முயன்றாலும் யாராவது குறுக்கிட்டுத் தடுத்துவிடுகிறார்கள்.
கடைசிக்காட்சியில் நாம் ஜெர்ரி லூயிஸ் மீது பரிதாபம் கொள்கிறோம். பணியாளர்களை இயந்திரங்களைப் போல நிர்வாகம் நடத்துவதை உணருகிறோம்.
படத்தின் ஒரு காட்சியில் காரிலுள்ள பொருட்களை எல்லாம் அறைக்குக் கொண்டு வாருங்கள் என்று ஒருவர் ஸ்டான்லிக்கு உத்தரவு போடுகிறார். உடனே ஸ்டான்லி அவரது பயணப்பெட்டிகளை மட்டுமின்றிக் காரின் முழு என்ஜினையும் கழட்டி அவரது அறைக்குக் கொண்டு செல்கிறான். இது தான் ஜெர்ரி லூயிஸ் பாணி நகைச்சுவை.
திருமதி ஹார்ட்டுங் என்ற பணக்காரப் பெண் அந்த ஹோட்டலுக்கு வந்து தங்குகிறாள். தீவிரமான உணவுக்கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தித் தன் உடல் எடையை இழக்கிறாள் ஆனால் அவள் வீடு திரும்பும் நாளில் ஒரு சாக்லெட் பெட்டியை ஸ்டான்லி பரிசாக அளிக்கிறான். அத்தனையும் சாப்பிட்டு மறுபடி அதே உடல் எடைக்கு வந்துவிடுகிறாள்.
ஹோட்டலின் ஆடிட்டோரியத்தை நாற்காலிகள் போட்டு தயார் செய்து வைக்கும்படி ஸ்டான்லிக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த அரங்கின் பிரம்மாண்டமும் அங்குள்ள ஆயிரக்கணக்கான நாற்காலிகளையும் பார்த்தால் அதைச் செய்து முடிக்க ஐம்பது பேர் தேவை எனப் புரிகிறது. ஆனால் அந்தப் பணியை எந்த முகச்சுழிப்புமின்றி எளிதாகச் செய்து முடிக்கிறான் ஸ்டான்லி.
படத்தில் நடிகராகவும் ஜெர்ரி லூயிஸ் தோன்றுகிறார். அவரும் அவரது பட்டாளமும் ஹோட்டலுக்கு வரும் காட்சி நகைச்சுவையின் உச்சம்.
கைப்பிடி இல்லாத பெரிய பெட்டி ஒன்றை அறைக்குக் கொண்டு செல்ல ஸ்டான்லி முயற்சிக்கும் காட்சி சிறப்பான நகைச்சுவை. அவனது வாழ்க்கை கைப்பிடியில்லாத பெட்டியைப் போன்றதே
விமானி ஒருவர் மறந்துவிட்ட ஒரு பெட்டியை விமானத்தின் காக்பிட்டிலிருந்து மீட்டெடுத்து வரும்படி ஸ்டான்லியை திரு. நோவக் அனுப்பி வைக்கிறார். ஸ்டான்லி நேரடியாக விமானத்திற்குள் சென்று பெட்டியோடு ஹோட்டலை நோக்கிப் பறந்து வரத் துவங்கிவிடுகிறான். என்னவொரு கற்பனை.
ஒருமுறை ஸ்டான்லி தனியாக ஒதுங்கி மதிய உணவைச் சாப்பிட முயல்கிறான், கண்ணாடிச்சுவரின் மறுபக்கமிருந்து நீந்துகிறவர்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். அவனுக்குத் தனிமை அனுமதிக்கப்படுவதில்லை.
இன்னொரு காட்சியில் ஒரு மனிதன் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆப்பிளைச பாதிச் சாப்பிட்டுவிட்டு மீதத்தை, ஸ்டான்லியைச் சாப்பிடச் சொல்லித் தருகிறான். அதை அத்தனை ஆசையாக ஸ்டான்லி சாப்பிடுகிறான்.
ஸ்டான்லி ஒரு கோல்ஃ போட்டிக்குச் செல்கிறான், அங்கு அவரது கேமிராவின் ஒளிரும் விளக்கைத் தவறாகப் பயன்படுத்தவே விளையாட்டுவீரன் போட்டியில் தோல்வியை அடைகிறான். அவன் கோபத்தில் ஸ்டான்லி அடிக்கத் துரத்துகிறான்
ஒரு காட்சியில் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் முகத்தை ஒரு துணியால் மூடி வெயிலைத் தடுக்கிறான் ஸ்டான்லி. துரதிர்ஷ்டவசமாக, ஸ்டான்லி பயன்படுத்திய துணியின் அச்சுவடிவங்கள் அவரது முகத்தில் பதிந்துவிடுகின்றன.
அதிகாலை 3:30 மணிக்கு, முழு நிலவின் புகைப்படத்தை எடுக்க ஸ்டான்லி வெளியே செல்கிறான். புகைப்படம் எடுத்தவுடன், சந்திரன் மறைந்து ஒரு சொடக்கில் பகல் தோன்றிவிடுகிறது. வசீகரமான மாயமது
ஒரே போலத் தோற்றம் கொண்ட இருவரால் ஏற்படும் குழப்பங்கள் இன்னும் சுவாரஸ்யமானது. இன்னொரு காட்சியில் விருந்தினர்களின் நாய்களைச் சமாளிக்கமுடியாமல் இழுபடுகிறான். இப்படிப் படம் முழுவதும் ஸ்டான்லியின் போராட்டங்கள் தொடர்கின்றன
ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு எவ்வளவு பெட்டிகளை, பொருட்களை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். எப்படி எல்லாம் உத்தரவு போடுகிறார்கள் என்ற உண்மையை நகைச்சுவையாகத் தெரிவிக்கிறார் லூயிஸ். பல காட்சிகளில் நமது அபத்தமான நடவடிக்கைகளை நமக்கே புரிய வைக்கிறார். ஒரே நேரத்தில் நான்கு வேலைகளைச் செய்யச்சொல்லி உத்தரவிடும் போது எதைச் செய்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஹோட்டலுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரும் தன்னை ஒரு அரசனைப் போலவே நினைத்துக் கொள்கிறார்கள். விசித்திரமான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
படம் முழுவதும் ஸ்டான்லி தனக்கு இடப்படும் உத்தரவுகளைச் சந்தோஷமாகவே ஏற்றுச் செயல்படுகிறான். விருந்தினர்கள் மீது நிஜமான அன்பு காட்டுகிறான். ஆனால் அவனது செயலின் தீவிரம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.
விடுதியில் தங்க வரும் அத்தனை பேரையும் அன்பாகக் கவனித்துக் கொள்ளும் ஸ்டான்லியிடம் அன்பு காட்ட ஒருவருமில்லை. அவனால் நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை.
ஸ்டான்லி ஒரு போதும் கோபம் அடைவதில்லை. புகார் சொல்வதில்லை. புலம்புவதில்லை. கடைசிக்காட்சியில் தான் தனக்கும் ஒரு அடையாளமிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறான்.
அப்பாவியான முகத்துடன் அசுர வேகமான செயல்பாட்டுடன் ஹோட்டலை சுற்றிவரும் ஜெர்ரி லூயிஸ் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போலவே இயங்குகிறார். அவரை அப்படி ஆக்கிவைத்திருக்கிறது ஹோட்டல் நிர்வாகம்.
அவரை ஒத்த மற்ற பணியாளர்கள் எவரும் அப்படி நடக்கவில்லை. அப்பாவிகளின் மீது தான் இந்த உலகம் சகல சுமைகளையும் இறக்கி வைக்கும் என்பதற்கு ஸ்டான்லி ஒரு உதாரணம்.
ஸ்டான்லிக்குள் ஒரு சிறுவனிருக்கிறான். அவன் வேடிக்கைகள் செய்ய விரும்புகிறான். புதிய விஷயங்களில் ஆர்வமாக ஈடுபடுகிறான். மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றித் தன் விருப்பங்களைச் செய்து பார்க்கிறான். அந்தச் சிறுவனை உலகம் புரிந்து கொள்வதில்லை என்பது தான் வருத்தமானது
சாப்ளின் படங்களில் எல்லாப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் ஒரு காதல் மலரும். சாப்ளின் காதலிக்கும் விதம் அலாதியாக இருக்கும். பலநாள் பசியில் கிடந்தவன் ஒரு ஆப்பிளைக் காணுவது போலவே அவர் அழகிகளைக் காணுவார். நாக்கை சுழற்றி சப்புக் கொட்டுவார். அவர்களுடன் நடனமாடும் போது அவரது வேகம் மிக அதிகமாகிவிடும். முத்தமிடுவது கூட வேகமாகதானிருக்கும்.
உலகம் கண்டுகொள்ளாத எளிய மனிதனை நேசிக்கவும் ஒரு பெண் இருப்பாள் என்பதைச் சாப்ளின் பார்வையாளருக்கு உணர வைத்துவிடுகிறார். படத்தில் தான் காதலிக்கும் பெண்ணிற்கு அவர் எல்லா விதங்களிலும் உதவி செய்வார். அதை அவள் புரிந்து கொள்ளாத போது கண்ணீர் வடிப்பார். அவளை ஒரு போதும் வெறுப்பதில்லை. ஜெர்ரி லூயிஸ் படங்களில் இது போன்ற தூய காதல் கிடையாது. பலூனை வைத்துவிளையாடும் சிறுவனைப் போன்றதே ஜெர்ரி லூயிஸின் காதல்.
சாப்ளின் பசியைத் துரத்துவது போன்றே ஜெர்ரியும் பசியைத் துரத்துகிறார். அநாகரீகம் என உலகம் நினைப்பதைத் துணிந்து செய்கிறார். ஜெர்ரி லூயிஸ் முகம் தான் அவரது பலம். அவர் காட்டும் பாவனைகள் அபாரம்.
உணவகத்தில் நமக்குப் பரிமாறும் சர்வர்களுக்குப் பெயரில்லை. அவர்கள் வயதைப் பற்றி எவரும் பொருட்படுத்துவதில்லை. எத்தனை பெரியவராக இருந்தாலும் ஒருமையில் தான் அழைக்கிறார்கள். லிப்ட் பாய். கூரியர் ஆள், பால்காரர் என நமக்குச் சேவை செய்யும் எவரது பெயர் விபரங்களையும் நாம் அறிந்து வைத்திருப்பதில்லை. அவர்களின் தனித்துவத்தை, அடையாளத்தை நமக்குப் புரிய வைக்கவே இது போன்ற படங்கள் முயல்கின்றன.
பல காட்சிகளில் இப்படம் Jacques Tati’s M. Hulot’s Holiday படத்தினை நினைவுபடுத்துகிறது. ஜெர்ரி லூயிஸ் இந்தத் திரைப்படத்தை நான்கு வாரங்களில் படமாக்கியிருக்கிறார். இப்படம் வசூலில் பெரிய சாதனையைப் புரிந்திருக்கிறது
தொழில்நுட்ப ரீதியாகப் பல்வேறு புதிய விஷயங்களைத் தனது படங்களில் செய்து பார்ப்பவர் ஜெர்ரி லூயிஸ். இந்தப்படத்திலும் நீச்சல்குளக்காட்சி அதற்குச் சிறந்த உதாரணம். மிகக்சிறந்த அரங்க அமைப்பு. மற்றும் கேமிராக் கோணங்களைக் கொண்டு படமாக்குவது அவரது தனித்துவம்.
அமெரிக்காவை விடவும் ஐரோப்பாவில் ஜெர்ரி லூயிஸ் அதிகம் கொண்டாடப்பட்டார். அவரை அமெரிக்காவின் மிக முக்கிய இயக்குநராகப் பிரெஞ்சு சினிமா உலகம் கொண்டாடுகிறது.
1960ல் வெளியான இந்தத் திரைப்படம் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மகிழ்ச்சியைப் பார்வையாளனுக்கு ஏற்படுத்துகிறது என்பதே இப்படத்தின் தனிச்சிறப்பு.