மதுரை புத்தகக் கண்காட்சியில்

மதுரைப் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியீடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தோழர் எஸ். ஏ.பெருமாள் வெளியிடத் தீபா வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார்.

ஐந்து நாட்கள் மதுரையிலிருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்பியது போலவே புதிய நாவல் அதிகமும் இளைஞர்களால் வாங்கிச் செல்லப்பட்டது சந்தோஷம் அளித்தது.

இந்நாவலைப் படமாக்குவதற்காக மூன்று இயக்குநர்கள் தொடர்பு கொண்டார்கள். ஒரு நாவல் வெளியான சில தினங்களிலே அதன் உரிமையை வாங்குவதற்குத் திரைத்துறையினர் முன்வந்திருப்பது வரவேற்க வேண்டிய முயற்சி. பெரிய நிறுவனம் ஒன்று இந்த நாவலின் உரிமையைக் கேட்கிறார்கள். இது குறித்த மேலதிகமான விபரங்களைப் பின்பு வெளியிடுகிறேன்.

புத்தகத் திருவிழா நடைபெற்ற தமுக்கம் மைதானத்தின் எதிரேயுள்ள நார்த் கேட் ஹோட்டலில் தங்கியிருந்தேன். ஆகவே பெரும்பான்மை நேரத்தைப் புத்தகத் திருவிழாவில் செலவிட முடிந்தது.

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதன் மூலம் விதவிதமான வாசர்களைச் சந்திக்கவும் உரையாடவும் சந்தர்ப்பம் உருவாகிறது. என்ன புத்தகங்களை வாசிக்கிறார்கள். எதற்காக வாசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் வாசகர்களின் அன்பும் அக்கறையும் என்னைப் போல எழுத்தை மட்டுமே நம்பி வாழுபவனுக்கு மிகுந்த உத்வேகம் தருவதாகயிருக்கிறது

புத்தகக் கண்காட்சியில் இருபது புத்தகங்கள் வாங்கினேன். அதில் பாதி ஆங்கில நூல்கள். 1)ஆற்றூர் ரவி வர்மா பற்றிக் காலச்சுவடு வெளியிட்டுள்ள நூல். 2) சிற்பி தனபால் பற்றிய நூல், 3)முகுந்தன் கதைகள், 4) குஞ்சுண்ணி கவிதைகள், 5) திற்கோட்டூர் நாவல்கள், 6) கில்கமெஷ் காவியம், 7) குப்ரின் எழுதிய செம்மணி வளையல், 8) Coromandel: A Personal History of South India 9) Empires of the Indus / Alice Albinia 10) The Tears of the Rajas: Mutiny, Money and Marriage in India – Ferdinand Mount 11) Shekhar: A Life / S H Vatsyayan (agyeya) Novel. 12) Three Novels / Cesar Aira 13) The Book Of Disquiet – Fernando Pessoa 14) The Dialogue of Two Snails / Federico García Lorca 15) P. V. Bapat – 2500 Years of Buddhism 16) Denise Gigante -Taste- A Literary History 17) Old path white clouds-Thich Nhat Hanh 18) Ray bradbury : The Last Interview 19) Oliver Sacks: The Last Interview 20) Zen Baggage -A Pilgrimage to China. – Red Pine

சென்ற வாரம் நான் சென்னையில் குட்டி இளவரசன் குறித்துச் சிறப்புரை  ஆற்றினேன். அதை இணையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதன் விளைவாகப் புத்தகக் கண்காட்சியில் பலரும் குட்டி இளவரசனைத் தேடி வாங்கி என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஒரு உரையின் மூலம் இத்தனை இளம் வாசகர்களை புத்தகத்தை தேடி வாசிக்க செய்தது மகிழ்ச்சி அளித்தது

பொதுவாக வரலாறு சார்ந்த நூல்களை வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.  சிறுகதைகள் வாசிப்பது மிகவும் குறைந்து வருகிறது. நாவல்களைத் தேர்வு செய்து வாங்குகிறார்கள்.

••

புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பக நூல்களை வாங்கி ஆதரவு அளித்த வாசகர்கள். நண்பர்கள். எழுத்தாளர்கள்  அனைவருக்கும் நன்றி.

நிகழ்வை படம் பிடித்து ஒளிபரப்பு செய்த ஸ்ருதி டிவிக்கும், ஆனந்தவிகடன் இணையதளம் மற்றும் தி இந்து தமிழ்  நாளிதழுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

புகைப்படங்கள்

நன்றி :  ஹரி பிரசாத்

••

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை

விலை ரூ 200

தேசாந்திரி பதிப்பகம்.

••

பதிவு செய்த நாள் 12.09.2019

0Shares
0