.
1952ல் வெளியான திரைப்படம் The Bad and the Beautiful. வின்சென்ட் மின்னெல்லி இயக்கியுள்ளார்.

இது சினிமாவைப் பற்றிய சினிமா. பொதுவாகச் சினிமா எடுப்பதைப் பற்றிய திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. Sunset Boulevard, Day for Night 8½ போல அபூர்வமாகச் சில படங்கள் பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும் படமிது.
1950களின் ஹாலிவுட் ஸ்டுடியோ இயங்கும் முறையினையும், அந்தக் காலத் தயாரிப்பாளர்களின் கெடுபிடிகள். மற்றும் நடிகர் நடிகைகளின் ஈகோ, சினிமா எடுப்பதன் பின்னுள்ள நிஜங்களை படம் சிறப்பாகப் பேசுகிறது.
“Don’t worry. Some of the best movies are made by people working together who hate each other’s guts. ” என்றொரு வசனம் படத்திலுள்ளது. அது இன்றைய சில வெற்றிப்படங்களுக்கும் பொருந்தக்கூடியதே.
“மெமோரியல் டு எப் பேட் மேன்” என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது. ஜொனாதன் ஷீல்ட்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கதாபாத்திரத்தில் கிர்க் டக்ளஸ் நடித்திருக்கிறார். அவரது திரைவாழ்வில் மறக்க முடியாத கதாபாத்திரமிது.

படத்தின் துவக்க காட்சியில் ஹாலிவுட் இயக்குனர் ஃப்ரெட் அமீல் வீட்டில் தொலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் ஜொனாதன் ஷீல்ட்ஸ் பேசுகிறார். ஆனால் பிரெட் அவருடன் உரையாட விருப்பமின்றிப் போனை துண்டிக்கிறார். அதே அழைப்பு இப்போது நடிகை ஜார்ஜியா வீட்டில் ஒலிக்கிறது. அவளது பணிப்பெண் போனை எடுக்கிறாள். ஜார்ஜியா பேசவிருப்பமில்லை என்றதும் அழைப்பை துண்டிக்கிறாள்.
இப்போது ஜொனாதன் ஷீல்ட்ஸ் திரைக்கதை எழுத்தாளர் ஜேம்ஸ் லீ பார்ட்லோவிற்குப் போன் செய்கிறார். அவர் இணைப்பில் வருகிறார். ஆனால் உரையாடலை துவங்கும் முன்பு போன் இணைப்பு துண்டிக்கபட்டு விடுகிறது.
அந்த மூவரையும் திரைப்படத் தயாரிப்பாளர் ஹாரி ஸ்டுடியோவிற்கு வரவழைக்கிறார். ஒரு முக்கியமான விஷயம் குறித்து ஜொனாதன் ஷீல்ட்ஸ் அவர்களிடம் பேச விரும்புவதாகச் சொல்கிறார். மூவரும் விருப்பமில்லை என்று மறுக்கிறார்கள்.
அந்த மூவரின் கடந்தகாலமும் விவரிக்கபடுகிறது. ஜொனாதன் ஷீல்ட்ஸ் தான் அவர்கள் மூவரையும் உருவாக்கியவர். புகழ்பெற வைத்தவர். ஷீல்ட்ஸுடனான அவர்களின் நட்பு மற்றும் உறவு குறித்த கடந்தகால நினைவுகள் ஃப்ளாஷ்பேக்கில் விவரிக்கபடுகின்றன.

ஒரு புதுமுக நடிகை எப்படித் தேர்வு செய்யப்படுகிறார். எப்படித் திரைக்கதை உருவாகிறது. எப்படிப் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். படத்தின் இயக்குநர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் நடிகர்களின் ஈகோ என அந்தக் கால ஹாலிவுட் ஸ்டுடியோ வாழ்க்கையைப் படம் அசலாகச் சித்தரித்துள்ளது.
போதைக்கு அடிமையாகி தனது தந்தையின் இடிந்த மாளிகை ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்ணான ஜார்ஜியா லொரிசனை தற்செயலாக ஒரு நாள் சந்திக்கிறார் ஷீல்ட்ஸ். சினிமாவில் துணை நடிகையாக அவள் பணியாற்றுகிறாள். அவளை தனது படத்தின் புதிய கதாநாயகியாக தேர்வு செய்து எப்படிப் புகழ்பெறச் செய்கிறார் என்பதே படத்தின் மையக்கதை.
துணை நடிகையாக வாழ்ந்து வரும் அவளுக்கே தனது வெற்றியின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் ஷீல்ட்ஸ் அவளது திறமையை நம்புகிறார். ஒரு நாள் அவள் குடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு வரவில்லை. அனைவரும் அவளைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள். அவளைத் தேடிச் செல்லும் ஷீல்ட்ஸ் அவள் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துச் சொல்லி நடிக்க மறுக்கும் அவளைத் தேற்றுகிறார்.
‘When you’re on the screen, no matter who you’re with, what you’re doing, the audience is looking at you. That’s star quality. எனச் சொல்கிறார் ஷீல்ட்ஸ்.
அப்போது அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஷீல்ட்ஸிடம் கேட்கிறாள். தனக்குத் தேவை நடிகை தானே தவிர மனைவியில்லை என்று மறுக்கிறார்.

ஒரே படம் அவளைச் சினிமா உலகின் ராணியாக மாற்றுகிறது. வெற்றியைக் கொண்டாடும் இரவில் அவள் கையில் மதுப்புட்டியோடு அந்த விழாவிற்கு வராமல் ஒதுங்கிய ஷீல்ட்ஸை காண அவரது வீட்டிற்கு வருகிறாள். மிகவும் அழகான காட்சியது. அதில் ஒரு படம் முடிந்தவுடன் ஏற்படும் வெறுமை குறித்து ஷீல்ட்ஸ் பேசுவது முக்கியமானது.
இது போலவே ஷீல்ட்ஸ் தற்செயலாகச் சந்தித்த பேராசிரியரான ஜேம்ஸ் லீயை ஹாலிவுட்டிற்கு வரவழைத்து திரைக்கதை எழுதுவதில் உறுதுணை செய்ய வைத்து அவரை புகழ்பெற்ற திரைக்கதையாசிரியராக மாற்றுகிறார் என்பதும் சிறப்பானதே
குறிப்பாக ஜேம்ஸ் லீயின் மனைவியான ரோஸ்மேரி ஒரு தனித்துவமிக்கக் கதாபாத்திரம். பணம், ஆடம்பரமான வீடு. வசதி என ஏங்கும் அவளது ஆசைகளைப் புரிந்து கொண்ட ஷீல்ட்ஸ் அவளைப் பயன்படுத்தி ஜேம்ஸ் லீயை ஹாலிவுட்டிற்கு வரவழைக்கிறார். தனது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
தான் எழுதிய எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. திரைக்கதை எழுதுவது என்பதே தயாரிப்பாளரின் விருப்பத்தை எழுதிக் கொடுப்பது தான் என ஜேம்ஸ் லீ புரிந்து கொள்கிறார். ஜேம்ஸ் லீ கதாபாத்திரம் எழுத்தாளர் பிட்ஜெரால்ட்டின் சாயலில் உருவாக்கபட்டுள்ளார்
படத்தின் துவக்க காட்சியில் ஹாலிவுட் சினிமாவின் உடைகள் மற்றும் அரங்கப் பொருட்களைப் கேலி செய்யும் ஷீல்ட்ஸ் சினிமா தயாரிப்பாளராகும் தனது கனவை நோக்கி செல்லும் விதமும். அதில் அடையும் வெற்றிகளும் நிஜமாகச் சித்தரிக்கபட்டுள்ளன.
ஷீல்ட்ஸ் தனது புதிய படத்திற்கு நெருங்கிய நண்பரான இயக்குநர் ஃபிரெட்டிற்குப் பதிலாக புகழ்பெற்ற இயக்குநரை நியமிக்கிறார். படம் பெரிய வெற்றியை அடைய எதையும் செய்யலாம் என நினைக்கிறார். இதை ஏற்க முடியாத ஃபிரெட் முகத்திற்கு நேராகக் கோவித்துக் கொண்டு பிரிகிறார்.
ஷீல்ட்ஸ் படத்தின் இயக்குநருடன் படப்பிடிப்புத் தளத்தில் சண்டையிடுகிறார். அப்போது இயக்குநர் உங்கள் விருப்பப்படி நான் படம் எடுக்க முடியாது. வேண்டும் என்றால் நீங்களே படத்தை இயக்கிக் கொள்ளுங்கள் என்று விலகிவிடுகிறார். நெருக்கடியை சமாளிக்கத் தானே படத்தை இயக்குகிறார். ஆனால் அது எளிதான விஷயமில்லை என்பதைப் படம் எடுத்து முடித்தபின்பு உணருகிறார். தனது தோல்வியை ஷீல்ட்ஸ் ஒத்துக் கொள்ளும் இடம் பிரமாதமானது.

படத்தின் துவக்கத்தில் சூதாடி பணத்தைத் தோற்கிறார் ஷீல்ட்ஸ். வெற்றிக்கான அவரது வெறித்தனமான தேடலில் அந்தச் சூதாட்ட மனப்பான்மையே வெளிப்படுகிறது
சினிமா எடுப்பது வெறும் சூதாட்டமில்லை. அது ஒரு கலை, சிருஷ்டி என்பதை முடிவில் ஷீல்ட்ஸ் புரிந்து கொள்கிறார். கிர்க் டக்ளஸின் அற்புதமான நடிப்பு ஷீல்ட்ஸை மறக்க முடியாத கதாபாத்திரமாக்குகிறது.
‘She doesn’t speak. We move the camera in close on her. She opens her mouth to talk, but she can’t. And what she’s feeling we’ll leave for the audience to imagine. Believe me, Jim, they’ll imagine it better than any words you and I could ever write.’ என்று ஒரு காட்சியில் ஷீல்ட்ஸ் சொல்கிறார்.
அப்படிச் சொல்லாமல்விடப்பட்ட மௌனம் கொண்டிருப்பதே இதனைச் சிறந்த திரைப்படமாக இன்றும் பேசவைக்கிறது.
••