அமெரிக்க எழுத்தாளரான சிந்தியா ஓசிக்கின் “பொறாமை; அல்லது, அமெரிக்காவில் யித்திஷ்” என்ற குறுநாவல் இரண்டு எழுத்தாளர்களுக்கிடையேயான பொறாமையைப் பேசுகிறது.

யித்திஷ் மொழி எழுத்தாளரான ஆஸ்ட்ரோவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் புகழ்பெற்றுவிடுகிறார். அதே மொழியில் எழுதும் கவிஞர் எடெல்ஸ்டீனை யாரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அத்தோடு யித்திஷ் மொழியில் கவிதை படிப்பவர்களும் வெகுவாகக் குறைந்து வருகிறார்கள்.
ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகின் கவனத்தைப் பெற வேண்டுமா. அல்லது சொந்த மொழியில் எழுதி அந்த வட்டத்திற்குள் மட்டும் புகழ் அடைந்தால் போதுமா என்ற கேள்வியை கதை எழுப்புகிறது.
எடெல்ஸ்டீன் பிடிவாதமாக யித்திஷ் மொழியில் மட்டுமே கவிதைகள் எழுதுவேன் என்கிறார். எவ்வளவு பேர் தன்னைப் படிக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் கவலை கொள்வதில்லை.
அதே நேரம் தனது சக எழுத்தாளர் ஆங்கில மொழியாக்கத்தின் மூலம் பரந்த வாசக உலகை அடைவது அவருக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது.
ஒரு எழுத்தாளனின் வெற்றி எது என்பது குறித்துக் குழப்பமடைகிறார்.
ஆஸ்ட்ரோவர் கதாபாத்திரம் ஐசக் பெஷ்விஷ் சிங்கரை நினைவுபடுத்துகிறார்.
ஐசக் பெஷ்விஸ் சிங்கருக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு இன்னொரு யித்திஷ் மொழி எழுத்தாளருக்குக் கிடைக்கவில்லை. காரணம் சிங்கர் தொடர்ந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. அதுவும் சால்பெல்லோ போன்ற முக்கிய எழுத்தாளர் அவரை மொழிபெயர்ப்பு செய்தது. அதன் காரணமாகவே அவரால் நோபல் விருதைப் பெற முடிந்தது.
ஆஸ்ட்ரோவர் யித்திஷ் மொழியில் கதைகளை எழுதினார்; அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் புகழ் பெற்றன. சொந்த மொழியில் இரண்டாம் தரமாக எழுதும் ஒரு நபர் சர்வதேச சந்தையில் எப்படிப் புகழ்பெறுகிறார் என எடெல்ஸ்டீன் கோபம் கொள்கிறார்
தனது படைப்புகள் ஆங்கில உலகிற்குச் செல்வதற்காகத் தனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை பரிந்துரை செய்யும்படி எடெல்ஸ்டீன். பதிப்பாளரைக் கேட்கிறார் பதிப்பகமோ புகழ்பெற்றவர்களை மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்ய விரும்புகிறார்கள். ஆகவே நீங்கள் முதலில் புகழ்பெறுங்கள் என்று பதில் தருகிறது.
மொழிபெயர்ப்பாளர் இருந்தால் மட்டுமே எல்லை கடந்து இன்னொரு மொழிக்கு போக முடியும் என்ற நெருக்கடி அவருக்குள் உருவாகிறது.
இன்னொரு மொழிக்கு செல்ல விரும்பும் எழுத்தாளர் காணும் கனவு வேறு. அங்குள்ள கள யதார்த்தம் வேறு. அதனைப் புரிந்து கொள்ளாமல் எடெல்ஸ்டீன் தவிக்கிறார்.
ஆங்கிலத்தில் வெளியான புத்தகங்கள் யாவும் புகழ்பெற்றுவிடுவதில்லை. தரம், உண்மை, தனித்துவம் மற்றும் அந்தப் படைப்பின் தேவையே அதனை வாசிக்க வைக்கிறது. கொண்டாடச் செய்கிறது. உனக்குத் திறமையில்லை என்கிறது சாத்தான். என்னால் பிரெஞ்சு அல்லது இத்தாலிய மொழியில் எழுத முடிந்திருந்தால் உலகப் புகழ்பெற்றிருப்பேன் என்கிறார் எடெல்ஸ்டீன். அது உண்மையில்லை என்பதைச் சாத்தான் உணரச் செய்கிறது

யித்திஷ் மொழியில் வாசிப்பவர்கள் குறைவு என்பது யித்திஷ் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதில் இன்றைய தலைமுறைக்கு ஆர்வம் குறைவதாகவே அர்த்தம் என்கிறார் எடெல்ஸ்டீன்.
ஒரு மொழி ஏன் தனது வாசகப்பரப்பை இழந்துவருகிறது என்ற கேள்வி அவரை வாட்டுகிறது. யித்திஷை மறப்பவர்கள் வரலாற்றை மறக்கச் செய்கிறார்கள். அந்த மறதி ஏற்கனவே நிகழ் ஆரம்பித்து விட்டது. அதனை யார் தடுத்து நிறுத்துவது எனச் சிந்தியா கேட்கிறார்.
எழுத்தாளரின் வெற்றி என்பது வாசகர்களின் எண்ணிக்கையை வைத்தோ, வணிக வெற்றியை வைத்தோ மட்டும் முடிவு செய்யப்படுவதில்லை. தனது காலத்தில் குறைவாகப் படிக்கபட்டவர்கள் பிற்காலத்தில் வெகுவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். அதே நேரம் ஒரு காலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அடுத்தத் தலைமுறையில் தனது மதிப்பை இழந்தும் விடுகிறார்கள்.
எடெல்ஸ்டீன் தான் மறக்கப்பட்டுவிடுவோமோ என்று வெறுமனே அஞ்சவில்லை யித்திஷ் படைப்புகளை நினைவில் கொள்ளும் திறன் கொண்ட உலகம் மறைந்து வருவதற்காகவே அஞ்சுகிறார்.
அவரைப் பொருத்தவரை மொழிபெயர்ப்பு என்பது மறுபிறவி போன்றது.
ஆஸ்ட்ரோவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதால் புதிய வாசகர்களை மட்டும் பெறவில்லை. அவர் ஓர் மறுவாழ்வைப் பெற்றிருக்கிறார். ஆங்கிலம் அவரை மற்றொரு கலாச்சார உலகிற்குள் நுழைய அனுமதித்துக் கொண்டாடச் செய்கிறது
ஆஸ்ட்ரோவர் படைப்புகள் “யித்திஷ் இலக்கியம்” என்பதைத் தாண்டி சர்வதேச இலக்கியமாக மாறுகிறது. எடெல்ஸ்டீனும் அதே மாற்றத்தை விரும்புகிறார். அந்த ஆசை தவறானதில்லை.
அவரது மனதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
யித்திஷ் மொழியில் எழுதப்பட்ட ஒரு கதை, தன்னை உருவாக்கிய மொழியை விட்டு வெளியேறும்போது, உண்மையில் என்னவாக எஞ்சி நிற்கிறது?
மொழிபெயர்ப்பில் ஒருவேளை கதைக்கரு முழுமையாக வெளிப்பட்டிருக்கலாம். கதாபாத்திரம் கூட உயிரோடு வந்திருக்க முடியும். ஆனால் அந்தக் கதை நிகழும் யித்திஷ் வாழ்க்கை, அதற்கே உரித்தான நகைச்சுவை. வசவுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், கடந்தகால வரலாற்றைக் கைவிட்டுவிடுமா. இன்னொரு மொழியில் அவை சரியாக உணர்ந்து கொள்ளப்படுமா.
அவரால் அதனை முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் எல்லை கடக்க வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்.
யித்திஷ் கவிதைகளுக்கு வாசகப் பரப்பு குறைந்து வரும் இவ்வுலகில், அவர் ஏன் தொடர்ந்து யித்திஷ் கவிதைகளை எழுதி வருகிறார்.
ஒரு மொழியில் கவிதை வாசிப்பு குறைந்து வருவது கவலையளிக்கக் கூடியது.
குறைவான வாசகர்களுக்காகப் பிடிவாதமாக எழுதும் எடெல்ஸ்டீன்களின் நிலை இனி என்னவாகும் எனச் சிந்தியா எழுப்பும் கேள்வி முக்கியமானது. இக்கதை யித்திஷ் மொழிக்கு மட்டுமில்லை.. எந்த மொழியின் இலக்கியச் சூழலுக்கும் பொருத்தமானதே.
**