பொம்போலினியின் சிரிப்பு

1969ம் ஆண்டு வெளியான The Secret of Santa Vittoria படத்தை நேற்றிரவு பார்த்தேன். Stanley Kramer இயக்கியது, ஆன்டனி குயின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராபர்ட் கிரக்டன் நாவலை படமாக்கியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகள் குறித்து நிறையத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன, இப்படமும் உலகப்போரில் முசோலினியின் வீழ்ச்சி ஒரு சிறுநகரை எப்படிப் பாதிக்கிறது என்பதையே களமாகக் கொண்டிருக்கிறது,

சாண்டா விட்டோரியா வட இத்தாலியில் உள்ள சிறிய ஊர். ஒயின் தயாரிப்புக்குப் புகழ்பெற்றது. அங்கே சிறியதொரு ஒயின் விற்பனையகம் நடத்துகிறாள் ரோசா. இவள் பொம்போலினியின் மனைவி. காலை முதல் இரவு வரை குடிப்பது, வெட்டியாக ஊர்சுற்றி வம்பு செய்வது என அலையும் பொம்போலினி என்ற கதாபாத்திரமாக ஆன்டனி குயின் நடித்திருக்கிறார்.

பொம்போலினியை அவரது மனைவி கடுமையாகத் திட்டுகிறாள், உருப்படாத ஆள் எனக் கட்டையால் அடித்துத் துரத்துகிறாள். பொம்போலினி அதைக் கண்டுகொள்ளாமல் தனது குடிகார நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைப் போக்குகிறார்,

படத்தின் துவக்கமே முசோலினி வீழ்ச்சி அடைந்துவிட்டார் என்பதில் தான் துவங்குகிறது. இந்தத் தகவலை பேபியோ என்ற இளைஞன் ஊருக்குக் கொண்டு வருகிறான்.

அதைக்கேட்டு ஊர்மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள், அதுவரை தங்களை நிர்வாகம் செய்து வந்த பாசிஸ்ட் அதிகாரியாக இருந்தவனைத் துரத்தி உதைக்கிறார்கள், இந்தச் சந்தோஷத்தை கொண்டாட தனது நண்பர்களுக்கு மது விருந்து தருகிறார் பொம்போலினி, ஆனால் ரோசா அவர்களை அவமானப்படுத்தி அடித்துத் துரத்திவிடுகிறாள்

இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உயரமான தண்ணீர் தொட்டியில் ஏறி நாடகம் ஆடுகிறார் பொம்போலினி, அவரைப் பேபியோ காப்பாற்றுகிறான்.

எதிர்பாராத விதமாகக் குடிகார பொம்போலினி அந்த ஊரின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்படுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகள் தான் படத்தின் மையக்கதை. வேடிக்கையும் விளையாட்டுதனமும் கொண்ட ஆன்டனி குயின் கதபாத்திரம் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. குறிப்பாகப் பொம்போலினியின் சிரிப்பு காட்சிக்குக் காட்சி மாறுபடுகிறது. படம் முடிந்த பிறகும் அந்தச் சிரிப்பு நம் மனதில் அப்படியே தங்கிவிடுகிறது.

தன்னை அவமதிக்கும் மனைவியிடம் அவர் அடங்கி ஒடுங்கிப் போவதும், அதிகாரம் கைக்கு வந்தபிறகு அவர் நடந்து கொள்ளும் விதமும், தன் மகள் பேபியோவை காதலிக்கிறாள் என அறிந்தவுடன் மனைவியோடு போடும் சண்டையும், ஜெர்மனிய ராணுவ அதிகாரியின் நடந்து கொள்ளும் பணிவும், மிரட்டல், உயிர் பயம் எதையும் கண்டுகொள்ளாமல் ஊருக்காகப் போராடும் தைரியமும் எனப் பொம்போலினி மறக்கமுடியாத கதாபாத்திரமாக உருவாக்கபட்டிருக்கிறார்

குடிகாரன், பயந்து போன ஆள் என அறிமுகம் ஆகும் பொம்போலினி திடீரென ஊர்மக்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்டி வாழ்த்தொலி முழங்கியதும் தலைவனாக உருமாறுகிறார், இந்தக் காட்சி அங்கீகாரமும் அதிகாரமும் ஒருவனின் ஆளுமையை எப்படி உருமாற்றிவிடும் என்பதற்குச் சரியான உதாரணம்.

அதிகாரம் கையில் கிடைத்தவுடன் கோமாளி தன்னைப் புத்திசாலிதனமான தலைவனாகக் காட்டிக் கொள்கிறான், ஆனால் நிச்சயம் அவனுக்குள்ளிருக்கும் கோமாளித்தனம் போய்விடாது, ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும் என்கிறாள் பொம்போலினியின் மனைவி ரோசா. தனது கோமாளித்தனத்தைக் கொண்டே பொம்போலினி எப்படி வெற்றிப் பெறுகிறான் எனக் காட்சிப்படுத்தபட்டிருப்பதே படத்தின் தனித்துவம்

மனசாட்சி தான் பொம்போலினியின் பிரச்சனை, அதை அவன் சமாளிக்கும் விதம், அதே நேரம் தனது மகளைப் பேபியோ காதலிக்கிறான் என அறிந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு, மனைவியிடம் கோவித்துக் கொள்வதும், அவளது காதலை அறிந்து நெகிழ்ந்து போவதும் என முழுமையான ஒரு கதபாத்திரமாக உருவாக்கபட்டுள்ளான் பொம்போலினி

ஜெர்மனிய ராணுவம் நகரைக் கைப்பற்ற போகிறது என்பதில் அடுத்த நிலைக்கு வளர்க்கிறது கதை

சாண்டர் விட்டோரியாவின் ஒயின் பற்றி அறிந்த ஜெர்மன் ராணுவம் அதைக் கைப்பற்ற ஒரு ராணுவப் பிரிவை அனுப்பி வைக்கிறது, பத்து லட்சத்திற்கும் மேலான பாட்டில்கள் கொண்ட ஒயின் சேமிப்பை ஜெர்மன் ராணுவம் கொள்ளையடித்துப் போய்விடக்கூடாது என்பதற்காக ஆன்டனி குயினும் ஊர் மக்களும சேர்ந்து ஒரு ரகசியத் திட்டம் போடுகிறார்கள்,

அதைத் தந்திரமாக நிறைவேற்றுகிறார்கள், குறிப்பிட்ட நாளில் ஜெர்மனிய ராணுவம் உள்ளே நுழைகிறது. அதை எப்படித் தந்திரமாகச் சமாளித்துத் தங்க வைத்து ஏமாற்றுகிறார். கடைசியில் உண்மை தெரிந்து ஜெர்மன் ராணுவம் ஊரையே அடித்துச் சித்ரவதை செய்கிறது, யாரும் ஒயின் எங்கே ஒளிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டிக் கொடுக்கவேயில்லை. முடிவில் ஜெர்மன் ராணுவம் தோற்று வெளியேறிப் போகிறது,  ஊரே சந்தோஷத்தில் ஆடிப்பாடுகிறது.

இது போன்ற படங்களின் பலமே திரைக்கதை அமைப்பு தான், மூன்று சரடுகளைக் கொண்டு இந்தத் திரைக்கதை உருவாக்கபட்டிருக்கிறது, ஒன்று பேபியோ ஆஞ்சலா காதல். இரண்டாவது ஆன்டனி குயின் அவரது மனைவி, புதிய மேயர் பதவி குறித்தது, மூன்றாவது பெண் மருத்துவர் மலாடெஸ்டாவிற்கும் தூபாவிற்குமான உறவு. ஒன்றையொன்று இடைவெட்டிச் செல்லும் திரைக்கதையின் மையமுடிச்சாக ஜெர்மன் ராணுவத்தின் வருகையும் அதைத் தொடர்ந்த விளைவுகளும் இடம்பெறுகின்றன. ஜெர்மன் ராணுவம் எப்படி ஒளித்து வைக்கப்பட்ட ஒயின் போத்தல்களைக் கண்டுபிடிக்கப் போகிறது என்ற பதைபதைப்பை கடைசிக் காட்சி வரை நீடித்திருப்பது திரைக்கதையின் வெற்றி‘

பிரதான கதபாத்திரங்களைப் போலவே தனித்துவமிக்கச் சிறு கதாபாத்திரங்களை உருவாக்குவதும் சிறந்த திரைக்கதைக்கு அவசியம், இப்படத்தில் இடம்பெற்றுள்ள உப கதாபாத்திரங்கள் அழகாக வடிவமைக்கபட்டிருக்கிறார்கள், குறிப்பாக ஒயின் காப்பறையின் பொறுப்பாளர். கவுன்சிலில் இடம் பெற்ற மந்திரிகள். பாசிஸ்ட் அதிகாரி.

படத்தில் ரோசாவாக நடித்த Anna Magnani க்கு ஆன்டனி குயினைப் பிடிக்கவேயில்லை, படப்பிடிப்பு முழுவதும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார்கள், ஆன்டனி குயினை உதைக்க வேண்டும் என்ற ஒரு காட்சியில் நிஜமாகவே அவரை எட்டி உதைத்துக் கொண்டு தனது காலை முறித்துக் கொண்டார் அன்னா.

பெலினி, விஸ்காண்டி போன்ற பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் Giuseppe Rotunno இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார். ஜெர்மன் ராணுவம் ஊருக்குள் நுழையும் காட்சி, ஒயின் பாட்டில்களை மக்கள் கொண்டு செல்லும் காட்சி. ஊர்மக்களின் ஒன்று சேர்ந்த நடனம் எனக் கவித்துவமான காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்

Judgment at Nuremberg, It’s a Mad, Mad, Mad, Mad World . Guess Who’s Coming to Dinner போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஸ்டான்லி கிராமர். கதையை விவரித்துச் செல்வதுடன் இத்தாலியர்களின் இயல்பு, பழக்கவழக்கங்கள், அவர்களின் மனஉறுதி, போராடும் தன்மை என நுட்பமாகக் காட்சிகளை உருவாக்கியிருப்பதும், மாறுபட்ட காட்சிக்கோணங்கள், நேர்த்தியான படத்தொகுப்பு, தேர்ந்த இசை எனக் கச்சிதமாகப் படத்தை உருவாக்கியதில் ஸ்டான்லி கிராமர் தேர்ந்த இயக்குனர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார்

ஜோர்பா தி கிரேக் படத்தில் ஜோர்பாவாக ஆன்டனி குயின் சிறப்பாக நடித்திருப்பார். இப்படத்தில் வரும் பொம்பிலோனியும் ஜோர்பா வகை மனிதனே. ஆன்டனி குயின் குத்துசண்டை வீரராகத் தனது வாழ்க்கையைத் துவக்கியவர், ஆகவே அவரது உடற்கட்டும், நடையும் கைகளை வீசி பேசுவதும் அத்தனை அழகாக இருக்கும். மார்லன் பிராண்டாவோடு அவர் நடித்த Viva Zapata! படத்தைப் பாருங்கள், மார்லன் பிராண்டாவிற்குச் சவால் விடும் நடிப்பு .

பெலினியின் La strada . ஒவியர் பால் காகின் கதாபாத்திரமாக நடித்த Lust for Life. நோபல் பரிசு பெற்ற நாவலான பாராபாஸ் திரைப்படமாக எடுக்கபட்ட போது பாரபாஸாக நடித்தவர் ஆன்டனி குயின். உமர் முக்தார் அவரது நடிப்பின் உச்சம்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் சிசில் பி டிமிலியின் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொண்டவர் என்பதால் இவருக்கு ஹாலிவுட்டில் எளிதாக அங்கீகாரம் கிடைத்துவிட்டது என அன்றைய பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன. குயினின் திரைவாழ்வில் The Secret of Santa Vittoria முக்கியமான திரைப்படம்

முசோலினியின் மேற்கோள் ஒன்றை சுவரில் பெரிதாக எழுதிப்போட்டிருக்கிறார்கள் .புதிதாக பதவி ஏற்ற பொம்போலினி அதில் ஒருவரியை நீக்கிவிட்டு தனது பெயரை போட்டுக் கொள்கிறான். அதிகாரம் என்பது இவ்வளவு தான் என எத்தனை அழகாக சொல்லிவிடுகிறார்கள் பாருங்கள்.

•••

0Shares
0