ஆக்டோபஸின் தோழன்

My Octopus Teacher என்ற ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இந்தப் படம் கிரக் ஃபாஸ்டர் என்று ஆழ்கடல் ஆய்வாளர் தனது கடலடி அனுபவத்தில் சந்தித்த ஒரு ஆக்டோபஸோடு எப்படி நெருங்கிப் பழகினார் என்பதை மிகச்சிறப்பாக விவரிக்கிறது.

ஃபாஸ்டரோடு நாமும் கடலின் அடியில் பயணிக்கத் துவங்குகிறோம். ஃபாஸ்டரின் குரலில் தான் படம் துவங்குகிறது. அவரது கடந்தகால அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. ஒரு காலத்தில் ஆப்ரிக்கா வேட்டை பழங்குடிகளுடன் பழகி அவர்கள் எவ்வாறு விலங்குகளின் சுவடுகளின் வழியே அதன் இயக்கத்தைக் கண்டறிகிறார்கள் என்று ஆவணப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்த படப்பிடிப்பு எடிட்டிங் என்று யந்திரமயமான வாழ்க்கை சோர்வு அளிக்கவே அதிலிருந்து விடுபடுவதற்காகக் கடலடியில் நீந்த ஆரம்பித்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டில், ஃபாஸ்டர் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு அருகிலுள்ள ஃபால்ஸ் பேவின் குளிர்ந்த கடலடியில் நீந்த ஆரம்பிக்கிறார். ஒன்பது டிகிரி குளிரல் உடல் விறைத்துப் போய்விடுகிறது. ஆனால் தொடர்ந்து நீந்தி உடலை அந்தக் குளிருக்குப் பழக்க படுத்துகிறார். சில நாட்களில் உடல் அந்தக் குளிரை ஏற்றுக் கொண்டுவிடுகிறார். நீர் வாழ் உயிரினம் போலவே அவர் கடலடியில் நீந்துகிறார். அங்கே அவர் காணும் உலகம் வேறுவிதமானது. புற உலகின் நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு மாய உலகம் ஒன்றினுள் பயணிப்பது போலவே உணருகிறார்.

இந்தக் கடற்பகுதியின் அடியில் பெரிய வனம் போல விரிந்து காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒற்றை ஆளாகக் கடலில் குதித்து இந்தக் கடலடி வனத்தினுள் நீந்தியலைகிறார். அத்துடன் தனது கடலடி அனுபவங்களை ஆவணப்படுத்தவும் துவங்குகிறார்.

முன்பு ஏற்பட்டிருந்த மனச்சோர்வு தற்போது முழுமையாக அகன்றுவிட்டது. புதிய தேடலில் அவர் கேமிராவுடன் கடலுக்குள் நீந்தியலைகிறார்

ஒரு நாள் தற்செயலாக ஒரு ஆக்டோபஸ் ஒன்றைக் காணுகிறார். அது பயத்தில் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதைப் பின்தொடர்ந்து போகிறார். பயத்தில் அந்த ஆக்டோபஸ் ஒடி மறைந்துவிட்டது.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அந்த இளம் ஆக்டோபஸை தேடி அலைகிறார். அதன் மறைவிடத்தைக் கண்டறிந்து மெல்லப் பழக ஆரம்பிக்கிறார். அதன் நம்பிக்கையைப் பெறுவது எளிதாகயில்லை. கேமிராவை மட்டும் தனித்து வைத்துவிட்டு அவர் விலகி வெளியேறி விடுகிறார். ஆக்டோபஸ் கேமிராவை தொடுகிறது விளையாடுகிறது.

தொடர்ந்து ஆக்டோபஸை நெருங்கிச் சென்று அத்தோடு நெருக்கமாகிறார். அத்துடன் ஒரு பிணைப்பை உருவாக்குகிறார்

ஆக்டோபஸ் பயம் கலைந்து அவருடன் விளையாட ஆரம்பிக்கிறது. அவரது வெற்றுடம்பில் ஊர்ந்து போகிறது. அவர் கைகளில் தவழுகிறது. அவரிடமிருந்து சிறிய எதிர்ப்புணர்வு கூட வெளிப்படுவதில்லை. ஆகவே ஆக்டோபஸ் அவரை முழுமையாக நம்புகிறது.

ஃபாஸ்டர் ஆக்டோபஸுடன் கொள்ளும் நெருக்கத்தை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஒரு தாக்குதலில், ஆக்டோபஸ் தனது கைகளில் ஒன்றை இழக்கிறது. அதன் பிறகு அதைக் காணமுடியவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது கையை அது மீண்டும் உருவாக்கிக் கொள்கிறது. இந்த ஆக்டோபஸின் வாழ்க்கையை நெருங்கி ஆவணப்படுத்தியிருக்கும் பாஸ்டர் அதன் ஒரே நண்பனாகத் தன்னைக் கருதுகிறார்.. இயற்கையின் விநோதங்களில் ஒன்றாகவே இதைக் கருதவேண்டும். தன் மகனின் எதிர்காலம் குறித்துப் படத்தின் துவக்கத்தில் ஃபாஸ்டர் கவலை கொள்கிறார். ஆனால் இந்தக் கவலை பின்னால் போய் ஆக்டோபஸ் அவரது மகனைப் போன்ற உறவாக மாறிவிடுகிறது. அந்த நெருக்கம் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றம் சொந்த மகனுடன் ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது

ஆக்டோபஸ் குறித்து நமக்குள் இருக்கும் அச்சத்தை இந்தப்படம் விலக்குகிறது. ஆக்டோபஸின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஃபாஸ்டர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் கடலடியில் செயல்படுகிறார் என்பது வியப்பளிக்கிறது.

நாம் அறியாத இன்னொரு உலகம் நம்மைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இயற்கையின் பேரழகினை நாம் உணரவேயில்லை. இந்தப் படத்தை இன்றைய லாக்டவுன் காலத்தில் காணும் போது நமது புறநெருக்கடிகள். துயரச் செய்திகள் யாவையும் மறந்து நாமும் ஃபாஸ்டருடன் கடலுக்குள் செல்கிறோம். ஆக்டோபஸின் தோழனாக மாறுகிறோம்

கிரக் ஃபாஸ்டரின் மனைவி சுவாதி தியாகராஜன் சென்னையைச் சேர்ந்தவர்.. சுற்றுச்சூழல் ஆய்வாளர். அவரும் பாஸ்டரும் இணைந்தே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களையும் காடுகளையும் பாதுகாக்கும் முயற்சியில் கடைசிக் காட்சியில் ஒரு குழுவினர்கள் கடலில் நீந்துகிறார்கள். அவர்களோடு நாமும் வேறு உலகை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறோம்

••

.

0Shares
0