இயக்குனரின் நாற்காலி

கிறிஸ்தோபர் பிளம்மர் கனடாவின் மிகச்சிறந்த நாடக நடிகர், இவர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை, திரையுலகிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் ,

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத்துறையில் உள்ள பிளம்மர் தி லாஸ்ட் ஸ்டேஷன் திரைப்படத்தில் லியோ டால்ஸ்டாயாக அற்புதமாக நடித்திருக்கிறார்,

இவர் நடித்த Man in the Chair நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த Feel Good Movie  என்பேன். Michael Schroeder இப்படத்தை இயக்கியுள்ளார்

சினிமாவிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த கலைஞர்களையும் அவர்களின் புறக்கணிக்கபட்ட வாழ்க்கை நிலையினையும் ஆதங்கத்துடன் விவரிக்கிறது இப்படம்,

வெற்றி மட்டும் தான் ஹாலிவுட்டின் ஒரே இலக்கு, வெற்றிக்குத் துணையிருப்பவர்கள் எவரும் கண்டுகொள்ளப்படுவதில்லை, எத்தனையோ சாதனையாளர்கள் காலமாற்றத்தில் கண்டுகொள்ளப்படாமல் ஒதுங்கிப் போய்விட்டார்கள், திரையுலகின் மூத்தகலைஞர்கள்  இன்று எப்படி வாழ்கிறார்கள் என்பதை இப்படம் சிறப்பாகப் பேசுகிறது

பிளாஷ், ஹாலிவுட் சினிமாவில் ஆர்சன் வெல்ஸ் உடன் பணியாற்றிய ஒரு gaffer. ஒளிப்பதிவிற்கான விளக்குகளைக் கவனித்துக் கொள்வது, ஒளிப்பதிவிற்கு உறுதுணை செய்யும் மின்சாதனங்களை இயக்குவது போன்ற பணியது.

சிட்டிசன் கேன் படத்தில் பணியாற்றிய போது ஒருமுறை படப்பிடிப்பில் திடீரெனை பிளாஷ் அடித்துவிட்ட காரணத்தால் அவரது பெயரை பிளாஷ் என மாற்றுகிறார் ஆர்சன் வெல்ஸ்,

பல்வேறு முக்கியத் திரைப்படங்களில் பணியாற்றிவிட்டு ஒய்வு பெற்ற பிளாஷின் ஒரே பொழுதுபோக்கு நாள் முழுவதும் குடிப்பதும், திரையரங்கிற்குப் போய் பழைய திரைப்படங்களை காண்பதுமே,

ஒவ்வொரு காட்சியைக் காணும்போது பழைய நினைவுகள் அவருக்குள் பீறிடுகின்றன, படத்தின் வசனங்களை அவர் கூடவே சொல்லுகிறார்,

அந்தக் காலத்து இயக்குனர்களைப் போல தனித்துவமிக்க அழகியலோடு, அர்ப்பணிப்பு உணர்வுவோடு படம் எடுப்பவர்கள் இப்போது குறைந்துவிட்டார்கள் எனத் திட்டுகிறார்,

முதுமையில் தனியாக வாழும் பிளாஷ் ஒருநாள் ‘ Touch of Evil படத்தைக் காணச்செல்கிறார், படத்தில் இடம்பெற்ற காட்சிகளை போற்றி பாராட்டுகிறார், அதை கேமரூன் என்ற பதின்வயதுப் பையன் வியப்போடு பார்த்த படியிருக்கிறான்

திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆபரேட்டர் அறையில் தீப்பற்றிக் கொண்டுவிடுகிறது, அதை ஒடிப்போய் அணைக்கிறார் பிளாஷ், கேமரூன் அவரைப்பின்தொடர்ந்து சென்று பிளாஷ் எங்கே தங்கியிருக்கிறார் என அறிந்து கொள்கிறான்

தானும் ஒரு சினிமா எடுக்க வேண்டும் என கேமரூன் ஆசைப்படுகிறான்,

ஒருநாள் அவனும் நண்பனும் விளையாட்டாக ஒரு பழைய காரைத் திருடிவிடுகிறார்கள், அதற்காக பிடிபட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பபடுகிறார்கள், அப்பா இல்லாத கேமரூனை அவனது அம்மா, சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியே கொண்டுவருகிறாள்,

கேமரூனுக்கு வீட்டில் இருக்கப்பிடிக்கவில்லை, காரணம் அவனது தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது, இதற்கிடையில் மாணவர்களுக்கான சினிமா எடுக்கும் போட்டி ஒன்றினைப் பற்றி அறிந்து கொண்ட கேமரூன் தான் அதில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறான்,

அந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் திரைப்படப்பள்ளியில் படிக்க உதவித்தொகை கிடைக்கும், இதற்காக ஒரு படம் எடுக்க வேண்டும் என தனது நண்பனை ஒன்று சேர்த்துக் கொண்டு பிளாஷைச் சந்தித்து உதவிகேட்கிறான்,

தான் சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்வதாகச் சொல்லும் பிளாஷ் அவனுடன் இணைந்து பணியாற்ற விருப்பமில்லை என விரட்டிவிடுகிறார், ஆனால் கேமரூன் அவரை விட்டுவிடவில்லை, தினமும் பின்தொடர்கிறான், திட்டுவாங்குகிறான்,

ஒருநாள் அவருக்குப் பிடித்தமான ஹவானா சுருட்டை வாங்கிவந்து பரிசாகத் தருகிறான், இப்படியாக அவருடன் பேசிப்பேசி தனது சினிமா எடுக்கும் முயற்சிக்கும் ஒத்துழைப்பு தர வைக்கிறான், அவனிடம் கதையில்லாத காரணத்தால் தனது நண்பர் ஒருவரை எழுத்தாளராக வைத்துக் கொளளலாம் என அழைத்துப் போகிறார் பிளாஷ்,

இருவரும் ரோமன் ஹாலிடே போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய Mickey Hopkins யை காணச் செல்கிறார்கள், நோயுடன் போராடியபடி தனித்து வாழும் மிக்கி தன்னைத் தேடி பழைய நண்பன் வந்துள்ளதை கண்டு வியந்து வரவேற்கிறார்,

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு மீண்டும் ஒரு சினிமா வாய்ப்பு வந்துள்ளது  குறித்து சந்தோஷம் கொள்கிறார், ஆனால் அவரால் தனது டைப்ரைட்டரில் ஒரு வரி அடிக்க முடியவில்லை, மனது சந்தோஷத்தில் மீண்டும் வேலை செய்யத் துடிக்கிறது, உடல் ஒத்துழைப்பு செய்ய மறுக்கிறது, அவரிடம் என்ன கதை என யோசித்து வைக்கும்படியாகச் சொல்லிப்போகிறார் பிளாஷ்,

மிக்கி போன்ற பெரும்வெற்றியாளர் கூட  குடும்பத்தினரால் துரத்தப்பட்டு முறையான மருத்துவ பராமரிப்பு இன்றி தனிமையில் வாடுவதை அறிந்த கேமரூன் அமெரிக்காவில் முதியோர்களுக்கான மருத்துவ உதவிகள் சரியாகக் கிடைக்கிறதா என்பதை மையமாகக் கொண்ட ஒரு படத்தை எடுக்க நினைக்கிறான்,

இதற்கு ஒத்துழைப்பு தருவதற்காக தன்னோடு ஹாலிவுட்டில் பணியாற்றிய பழைய திரைப்பட கலைஞர்கள் அனைவரையும் ஒன்று சேர்கிறார் பிளாஷ்,

தங்களை புறக்கணித்துவிட்டார்கள் என்ற கவலையுடன் ஒதுங்கி வாழ்ந்த மூத்த திரைக்கலைஞர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை ஒரு படம் எடுக்க ஒன்று சேருகிறார்கள்,

பிளாஷின் உதவியோடு கேமரூன் சினிமாவின் நுட்பங்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ளத் துவஙகுகிறான், அப்போது இயக்குனரின் நாற்காலி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதைப்பற்றி பிளாஷ் அற்புதமாக விளக்குகிறார்

ஒரு இடத்தில் அமெரிக்க எப்படிப்பட்டது என்பதை கேமரூனுக்கு விளக்குகிறார் பிளாஷ், அற்புதமான உரையாடல் அது

This country’s famous for shittin’ on their elderly. God help you if you don’t have family… America’s all about the young, the beautiful, the “Winner”! Ya’ know, kid, in Europe, Asia, and especially Africa, the elderly are truly respected and they’re almost TREASURED by the young people. Not here, though. Oh, no… We live in a throw-away society. If it breaks, throw it away. If a new one pops up, throw the old one away. If your puppy grows up to be a pain-in-the-ass dog, dump it. Someone will kill it. If your marriage isn’t working, hey, divorce, throw it away, marry someone else. If you get sick of them, throw them away, too.

படத்தினைத் தயாரிப்பதற்காக பணம் வேண்டும் என்பதற்காக தனது மனைவியை கள்ளக்காதல் புரிந்து தன்னைவிட்டு இழுத்துக் கொண்டு ஒடிய தயாரிப்பாளரான டெய்லரிடம் போய் தனக்காக கேமரூனுக்கு உதவி செய்யும்படி கேட்கிறார்,

அப்போது தனது திரைப்படங்களைப் பற்றி டெய்லர் பெருமைபேசும் போது ஆத்திரமான பிளாஷ் சொல்லும் வசனமிது

Don’t confuse activity with achievement. I’ve seen those pieces of shit, those celluloid abortions that you call movies.

தன்னை ஏமாற்றிய மனிதனிடம் உதவியைப் பெற்று கேமரூனுக்காக படம் எடுக்க உதவுகிறார் பிளாஷ், படம் துவங்கப்போகிறது என தீவிரமாக வேலைகளை கவனிக்கிறான் கேமரூன்,

இதற்கிடையில் பிளாஷ் ஒருநாள் மிதமிஞ்சி குடித்துவிட்டு ஏதோ சின்னப்பையன் விளையாட்டுக்கு சினிமா எடுக்க முயற்சிக்கிறான், இதற்கெல்லாம் நாம் உதவி செய்யக்கூடாது என மறுத்து கூச்சலிடுகிறான், இதனால் ஆத்திரமாக கேமரூன் கோவித்துக் கொண்டுபோய் விடுகிறான்

மறுநாள் தனது நிலையை உணர்ந்த பிளாஷ், கேமரூனைத் தேடி போய் போதையில் உளறிவிட்டதாக கூறி மீண்டும் அவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான், படப்பிடிப்பு துவங்குகிறது, ஒரு மாணவனுக்காக வயதானவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து உதவிசெய்கிறார்கள்,

படப்பிடிப்பை நிறைவு செய்யும் போது ஏதோ ஒன்று படத்தில் குறைவதாக இருப்பதாக உணர்கிறான் கேமரூன், முடிவில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்றினை நேரில் பார்வையிடுகிறான், அதுவே படத்தின் இறுதிக்காட்சியாகிறது

முடிவில் பிளாஷ் இறந்து போகிறான், படம் திரையிடப்படுகிறது, கண்கள் கலங்க அனைவரும் அதை ரசிக்கிறார்கள், பெருமையோடு கேமரூனை கட்டிக் கொள்கிறார்கள், கேமரூன் திரைப்படப்பள்ளியில் சேர்ந்து சினிமா கற்கத் துவங்குகிறான்,

It’s not the strength, but the duration of great sentiments that makes great men. என கேமரூன் கூறுவதுடன் படம் நிறைவுபெறுகிறது

இந்தப்படம் கறுப்புவெள்ளையுகத்து சினிமா கலைஞர்கள் இன்று எப்படியிருக்கிறார்கள் என்பதை மறுபரிசீலனை செய்கிறது, இன்னொரு தளத்தில் ஒரு மாணவனுக்காக வயதானவர்கள் ஒன்று சேர்ந்து எப்படி உதவுகிறார்கள் என்ற உணர்ச்சிபூர்வமான உறவை விவரிக்கிறது,

மூன்றாவதாக பிளாஷைத் தனது குருவைப் போல உணரும் கேமரூன் அவரிடமிருந்து எப்படி சினிமாவைக் கற்றுக் கொள்கிறான் என்பதை படம் நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது, கவித்துவமான வசனங்களும் தேர்ந்த இசையும் படத்திற்கு மிகுந்த உறுதுணையாக உள்ளன,

ஆர்சன் வெல்ஸ் உடன் இணைந்து பிளம்மர் சில திரைப்படங்களில் நடித்தவர் என்பதால் இது அவரது உண்மைக்கதை என்பது போன்ற சாயல்  கொண்டிருக்கிறது, படத்தில் பிளம்மரின் நடிப்பு மிகச்சிறப்பாக உள்ளது, போதையில் அவர் நடந்து கொள்ளும் விதம், இயலாமை, கோபம், ஆத்திரம், தான் ஒருவனை வளர்த்துவிடப்போகிறோம் என்ற பொறுப்புணர்ச்சி என பிளம்மர் காட்சிக்குக் காட்சி ஜொலிக்கிறார். இப்படத்திற்காக Palm Beach International Film Festival நிகழ்வில் அவருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கிறது.

கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களை அரங்கில் காணும்போது அதற்கு பிளாஷ் அடிக்கும் கமெண்டுகள் வேடிக்கையாக உள்ளன, சினிமா வெறும் பொழுதுபோக்கிற்கானதில்லை, அது ஒரு உன்னதமான கலை, வாழ்க்கைக்கு நெருக்கமாக, உண்மையாக அது உருவாக்கபட வேண்டும் என கேமரூன் முயற்சிப்பது இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டுதல் போலவே உள்ளது.

•••

0Shares
0