உப்பின் குரல்

குஜராத்தின் கட்ச் பாலைவனப்பகுதியில் எப்படி உப்பு விளைவிக்கபடுகிறது என்பதைப் பற்றிய ஆவணப்படம். ஃபரிதா பச்சாவின் மை நேம் இஸ் சால்ட். மிகச்சிறந்த ஒளிப்பதிவு. ஆவணமாக்கம் எனப் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லிட்டில் ரான் ஆஃப் கட்ச் என அழைக்கபடும் இந்தப் பாலைவனப் பகுதி உப்புக் கனிமங்கள் கொண்ட சதுப்பு நிலமாகும். மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் நிரம்புகிறது.. அக்டோபரில் தண்ணீர் வடிந்த பிறகு, உப்பு விளைவிக்கும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இங்கே தற்காலிகமாகக் குடியேறுகிறார்கள்.

கிணறு தோண்டி அதில் சுரக்கும் உப்புத் தண்ணீரை டீசல் பம்பினைப் பயன்படுத்தி வெளியேற்றி தாங்கள் உருவாக்கி வைத்துள்ள உப்புவயலில் செலுத்துகிறார்கள். பின்பு சூரிய வெப்பத்தால் தண்ணீர் தானே ஆவியாகி உப்பு படிகங்களாக மாறும் வரை காத்திருக்கிறார்கள்.

அப்படி உப்பு விளைவிப்பதற்காகச் சனபாய் குடும்பம் தங்கள் துருப்பிடித்த டிராக்டரில் வந்து சேருவதில் படம் துவங்குகிறது.

அவர்கள் பாலைவனத்தில் தற்காலிகமான குடியிருப்பை உருவாக்குகிறார்கள். மின் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உப்பு கலந்த களிமண் நிலத்தில் மரபான முறையில் கிணறு தோண்டுகிறார்கள். டீசல் இயந்திரத்தின் மூலம் கிணற்றிலுள்ள உப்புத் தண்ணீரை வெளியே எடுக்கிறார்கள். உப்பு வயலில் தண்ணீரைப் பாய்ச்சுகிறார்கள். உப்பு விளையத் துவங்குகிறது.

சனபாய் போல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த உப்பு விளைவிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள். பராம்பரியமாக உப்பு விளைக்கும் கலையை அறிந்தவர்கள். அவர்கள் ஆணும் பெண்ணுமாக இணைந்து உழைக்கும் விதம். தற்காலிக குடியிருப்பில் சிறுவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் பருவகால மாற்றத்தால் ஏற்படும் சிரமங்கள் எனப் பாலைவன வாழ்வினை ஆவணப்படம் உண்மையாக விவரிக்கிறது.

சனபாயின் இரண்டு பிள்ளைகள் தினமும் காலை 11 மணிக்கு, உப்பு வயலில் வேலை முடிந்ததும் பள்ளிக்குச் சைக்கிளில் செல்கிறார்கள். அந்தப் பாலைவனத்தில் அவர்களுடன் விளையாட வேறு யாருமில்லை. ஆகவே காகித பூக்களைச் செய்கிறார்கள். கதை பேசுகிறார்கள்.

சனபாய் குடும்பம் தொலைவில் வசிக்கும் இன்னொரு குடும்பத்துடன் கண்ணாடி சில்லில் சூரிய ஒளியினை ஒளிரச் செய்வதன் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். சனபாயின் மனைவி தேவுபென் விறகு வெட்டுவதற்காக வெகு தொலைவு நடந்து செல்கிறார். வாரத்திற்கு ஒரு முறை வரும் ஒரு தனியார் டேங்கரிலிருந்து குடும்பத்திற்கான குடிதண்ணீரை வாங்குகிறார்கள். அங்கே செல்போன் வேலை செய்கிறது ஆனால் சிக்னல் கிடைப்பது எளிதாகயில்லை.

உப்பு விளைவிப்பதற்கு முன்பாகவே சனபாய் ஒரு பெரிய தொகையை உப்பு வியாபாரியிடமிருந்து முன்பணமாக வாங்கியிருக்கிறார்.. டீசல் பம்பிற்குத் தேவையான டீசல் வாங்கவும் அவருக்குப் பணம் தேவை. மற்றும் குடும்பத்தோடு பாலைவனத்தில் வசிக்கத் தேவையான உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். எட்டு மாத காலப் பாலைவன வாழ்க்கை எதிர்பாராத சிரமங்களைக் கொண்டது.

யாருமற்ற பாலைவனத்தினுள் டீசல் இயந்திரம் ஒடும் விநோத சப்தம். தொலைவில் வரும் வாகனத்தின் நகர்வு. இரவு வானில் மின்னும் நட்சத்திரங்கள். சனபாயின் காத்திருப்பு, பாலைவன மேகங்கள். சனபாய் குடும்பத்தின் சமய நம்பிக்கைகள், விளைந்த உப்பை அவர் பரிசோதிக்கும் விதம் என இந்த ஆவணப்படம் ஒளிரும் தருணங்களைக் கொண்டிருக்கிறது

ஏப்ரல் மாதத்தில், உப்பு வியாபாரி தனது ஆளை உப்பைப் பரிசோதிக்க அனுப்புகிறார். அவர் உப்பினை பரிசோதனை செய்துவிட்டு அதன் தரம் சரியில்லை என்கிறார். ஆகவே சனபாய் ஒப்புக்கொண்ட விலை கிடைக்காமல் போகிறது. சனபாயிற்கு வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு இதை விடச் சிறந்த உப்பை விளைவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். எட்டு மாதகால உழைப்பிற்குப் பின்பு அவர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி புறப்படுகிறார்கள். அடுத்த ஆண்டுத் திரும்ப வந்து எடுத்துக் கொள்வதற்காகத் தங்கள் டீசல் இயந்திரத்தை, கருவிகளைப் புதைத்துவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதே வாழ்க்கை தொடர்கிறது.

உப்பு விளைவிப்பவர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக உணர வைத்த விதத்தில் இந்த ஆவணப்படம் முக்கியமானது.

0Shares
0