ஒண்டிக்கட்டை —மாக்ஸிம் கார்க்கி
தமிழில் பாஸ்கரன்
ஏழைகளைப் புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள்.
நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு கொண்டிருந்தது. அவளது உதடுகள் இறுக்கமாக மூடியிருந்தன. அதன் ஓரங்களில் ஒரு நெளிவு அவளது வாயின் இருபுறங்களிலும் வேதனை ரேகைகள் படர்ந்திருந்தன.
அதிகமாக அழுததனாலும் பல இரவுகள் கண் விழித்ததனாலும் கண் இமைகள் கனத்துத் தொங்கிக் கொண்டிருந்தன.
அசையாமல் அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். நான் சற்று அப்பால் இருந்து, அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவனருகில் நான் நெருங்கியபோதும் கூட அவள் அசையவில்லை. மங்கலான கண்களால் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு, ஒருவித சலனமுமின்றி பார்வை கீழ் நோக்கியது. ஆசையோ, கிளர்ச்சியோ இன்றி, நான் கூறும் வார்த்தைகள் அவள் மனத்தில் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை எழுப்புமோ என்ற எண்ணம் எதுவுமே அவளிடம் காணப்படவில்லை.
நான் அவளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, “புதைக்கப்பட்டிருப்பது யார்?” என்று கேட்பேன்.
“என் மகன்!” என்று அமைதியாகக் கூறினாள்.
“பெரிய பையனோ?”
“பனிரெண்டு வயது இருக்கும்!”
“அவன் எப்பொழுது இறந்தான்?”
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்!”
அவள் பெரு மூச்சுவிட்டவாறு முன்னால் தொங்கிய மயிர்ச்சுருளை சால்வைக்குள் தள்ளிட்டாள். அன்று வெய்யில் கடுமையாக இருந்தது இறந்தவர்கள் சயனித்திருக்கும் அந்த உலகிலே உக்கிரமிக்க சூரியன் ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கல்லறை மேடுகளில் அங்குமிங்கும் முளைத்திருந்த புற்கள் உஷ்ணத்தாலும் புழுதியாலும் நிறம் மங்கி காணப்பட்டன. கல்லறை மேடுகளுக்கு மத்தியிலும் செடிகள் முளைத்திருந்தன. ஆனால், அவைகளும் உயிரற்றதைப்போல அசைவற்று நின்றன.
அந்தப் பையனின் கல்லறை மேட்டைப் பார்த்து தலையை அசைத்தபடியே, “அவன் எப்படி இறந்தான்?” என்று கேட்டேன்.
“குதிரைகளால் மிதிக்கப்பட்டு இறந்தான்!” என்று சுருக்கம் விழுந்த தனது கரத்தை நீட்டி, அந்த மோட்டைத் தொட்டுக் கொண்டே சுருக்கமாகப் பதில் கூறினாள்.
“அது எப்படி நடந்தது?”
நான் இங்கிதக் குறைவாக நடந்து கொள்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவளின் உணர்வற்ற தன்மையைக் கண்டு எனக்கு எரிச்சலாகவும், புதிராகவும் பட்டது. அவளது கண்களில் கண்ணீரைப்பார்க்க வேண்டும் என்று ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஆசை எனக்கேற்பட்டது. அவளது அசட்டையில் இயற்கைக்கு மாறாக ஏதோ ஒரு தன்மை காணப்பட்டது. ஆனால், அது நடிப்பல்ல என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
எனது கேள்வி அவளது கண்களை மீண்டும் என்னை நோக்கி உயர்த்தச் செய்தது. அவள் மௌனமாக, தலை முதல் கால்வரை என்னைப் பார்வையிட்டாள். பெரூமூச்செறிந்தவாறு வருத்தத்துடன் கம்மலான தொனியில் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்:
“அது நடந்தது. இப்படித்தான்! திருட்டுக் குற்றத்திற்காக அவன் தந்தை, ஒன்றரை ஆண்டு சிறையிலிருந்தார். அந்தக் காலத்தில் நாங்கள் சேகரித்து வைத்திருந்த பணம் முழுவதையும் சாப்பிட்டுத் தீர்த்துவிட்டோம். நாங்கள் சேர்த்து வைத்திருந்தது அப்படியொன்றும் அதிகமல்ல.
“என் கணவன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வருவதற்குள் வீட்டில் விறகு கூட இல்லாமல் திண்டாட்டமாகி விட்டது. விறகுக்குக் பதிலாக குப்பைகளையும், வேர்களையும் போட்டு எரித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு தோட்டக்காரன் அவற்றை வண்டி நிறையக் கொண்டு வந்து கொடுத்தான். அவற்றை எல்லாம் காயவைத்து அடுப்பெரித்துக் கொண்டிருந்தேன். அதனால் அடுப்பு புகைந்தது; உணவின் ருசியும் கெட்டிருந்தது.
என் மகன் கொலூஷா பள்ளிக்கூடம் போயிருந்தான். அவன் மிகவும் நல்லவன்; சிக்கனமானவன். பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது வழியில் கிடக்கும் குச்சிகளையும், கட்டைகளையும் பொறுக்கிக் கொண்டு வருவான். அப்பொழுது வசந்த காலம்! பனி உருகிக் கொண்டிருந்தது. கொலூஷாவுக்கு பூட்ஸ்களைத் தவிர வேறெதுவும் கிடையாது. வீட்டிற்கு வந்து பூட்ஸ்களை அவன் கழற்றி விட்டானானால் அவனது பாதங்களெல்லாம் செக்கச் செவேலென்றிருக்கும்
அந்தச் சமயத்தில்தான், அவன் தந்தையைச் சிறையிலிருந்து விடுதலை செய்து ஒரு வண்டியில் கொண்டு வந்து வீட்டில் விட்டனர். சிறைக்குள் உதைபட்டிருந்தார். என்னைப் பார்த்தபடியே கீழே படுத்திருந்தார். அவர் முகத்தில் குயுக்தியான புன்னகை நெளிந்து கொண்டிருந்தது. நான் குனிந்து அவரைப் பார்த்தவாறு, ‘நீ தானே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தாய். இப்பொழுது என்னால் எப்படி உனக்கு சோறு போட முடியும்? உன்னைத் தூக்கி குளம் குட்டையில் போட்டுவிட வேண்டியதுதான். ஆமாம் அப்படித்தான் உன்னைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.’ ஆனால், அவரைப் பார்த்தவுடன் கொலூஷா அழுது புலம்பினான். முகம் வெளுத்து, கண்ணீர் தாரையாகக் கொட்டியது.
“அம்மா அப்பாவுக்கு என்ன உடம்பு?” என்று என்னைக் கேட்டான் கொலூஷா. “அவர் காலம் சுகமாக கழிந்துவிட்டது!” என்று நான் சொன்னேன். அப்பொழுதிலிருந்து நிலைமை, மேலும் மோசமாக ஆகத் தொடங்கியது. நான் படாத பாடுபட்டு உழைத்தேன். ஆனால், எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் கூட ஒரு நாளைக்கு இருபது கோபெக்குகளுக்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை. சில நாட்களில் அதுவும் கூடக் கிடைக்காது. அந்த நிலைமை மரணத்தை விடக் கொடியதாக இருந்தது. சில சமயங்களில் நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட எண்ணியது உண்டு. இதையெல்லாம் கண்ட கொலூஷா ரொம்பவும் மனம் வெதும்பிப் போனான்.
ஒருசமயம், இனிமேல் என்னால் இவற்றையெல்லாம் சகிக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டபோது ‘என் வாழ்க்கை எவ்வளவு சாபக்கேடானது நான் இறந்து விட்டால், அல்லது உங்களில் யாராவது இறந்துவிட்டால்’- என்று கொலூஷாவையும் அவன் தந்தையையும் பார்த்துக் கூறினேன். ‘நான் சீக்கிரம் போய் விடுகிறேன். என்னைத் திட்டாதே. கொஞ்சம் பொறு!’ என்று கூறுவதைப் போல அவன் தந்தை என்னைப் பார்த்து தலையாட்டினார். ஆனால், கொலூஷாவோ என்னை உற்றுப் பார்த்தான். பின்னர், வீட்டை விட்டு வெளியே போய்விட்டான்.
அவன் வெளியே சென்றவுடன் நான் கூறிய வார்த்தைகளை எண்ணி என்னையே நான் நொந்து கொண்டேன்; ஆனால் காலம் கடந்துவிட்டது! ஆமாம், காலம் ரொம்பவும் தாழ்ந்துவிட்டது! ஒரு மணிநேரம் கூட ஆகவில்லை.
ஒரு போலீஸ்காரன், வண்டியில் வந்தான். அவன். ‘நீதான் கோஷ்பாஷா ஷிஷ்கினாவா?’ என்று கேட்டான். என் மனம் பதறிவிட்டது. ‘உன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரச் சொன்னார்கள். உன் மகன்மீது அனூக்கின் என்ற வியாபாரியின் குதிரைகள் ஏறி விட்டன.’ என்று கூறினான் அந்த போலீஸ்காரன். நான் உடனே வண்டியில் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டேன். நெருப்பின்மீது நடப்ப வனைப் போல நான் துடிதுடித்துப் போனேன். ‘ஏ, மோசக்காரியே! நீ என்ன செய்து விட்டாய்!’ என்று என் உள்ளம் இடித்துரைத்தது.
நான் ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தேன். கொலூஷாவுக்கு உடம்பு பூராவும் கட்டுகள் போடப்பட்டுப் படுத்திருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் சிரித்தான் … அவன் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது….அவன் முணுமுணுத்தான். ‘என்னை மன்னித்துக் கொள் அம்மா, போலீஸ்காரன் பணத்தை எடுத்துக் கொண்டான்’ என்றான்.
‘எந்தப் பணத்தைப் பற்றி நீ கூறுகிறாய் கொலூஷா?’ என்று கேட்டேன்.
‘தெருவில் ஜனங்கள் எனக்குப் போட்டார்களே அந்தப் பணம்தான்! ஆமாம் அனூக்கினும் கூட கொடுத்தார்!’ என்றான்.
‘அவர்கள் எதற்காக உனக்குப் பணம் கொடுத்தார்கள்?’ என்று கேட்டேன்.
‘இதற்காகத்தான்’ என்று கூறியவாறே மெதுவாக முனங்கினான். அவனது கண்கள் அகல விரிந்தன.
‘கொலூஷா! வழியில் குதிரைகள் வந்ததை நீ எப்படியடா பார்க்காமலிருந்தாய்?’ என்று கேட்டேன்.
அவன் தெளிவாகவும், ஒளிக்காமலும் கூறினான்: ‘நான் குதிரைகளைப் பார்த்தேன் அம்மா; ஆனால், எழுந்து அப்பால் போக நான் விரும்பவில்லை. ஏன் தெரியுமா? குதிரைகள் என் மீதேறினால் ஜனங்கள் பணம் தருவார்கள் என்று நான் நினைத்தேன். அதைப் போல தரவும் செய்தார்கள்!’
அப்படித்தான் அவன் கூறினான். பின்னர் எல்லாம் எனக்கு நன்றாக விளங்கிவிட்டது எனது செல்வம் என்ன செய்திருக்கிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், காலம் ரொம்பவும் தாழ்ந்துவிட்டது அடுத்த நாள் காலையில் அவன் செத்து விட்டான். சாகும் வரை நல்ல நினைவோடு இருந்தான்.
கடைசியாக அவன், ‘அப்பாவுக்கு அதை வாங்கிக் கொடு இதை வாங்கிக் கொடு. உனக்கும் கூட ஏதாவது வாங்கிக் கொள்’ என்று ஏராளமாக பணம் இருப்பதைப் போலக் கூறினான்.
உண்மையில் நாற்பத்திஏழு ரூபிள்கள் அவனிடம் இருக்கத்தான் செய்தன. நான் வியாபாரி அனூக்கின்னிடம் சென்றேன். ஆனால் அவனோ எனக்கு ஐந்து ரூபிள்தான் கொடுத்தான்; அதுவும் அழுது வடிந்து கொண்டு ‘உன் மகன் வேண்டுமென்றேதான் குதிரைகளுக்கடியில் வந்து விழுந்தான். அங்கிருந்த ஜனங்கள்தான் பார்த்தார்களே, பின் நீ ஏன் பிச்சையெடுத்துக் கொண்டு திரிகிறாய்?’ என்று அந்த வியாபாரி கூறினான். அதற்குப் பிறகு நான் அவனிடம் செல்லவே இல்லை.”
அவள் பேசுவதை நிறுத்தினாள், மீண்டும் முன்னைப் போலவே சாரமற்றும், அசட்டையோடும் காணப்பட்டாள்.
கல்லறை அமைதியாக இருந்தது. அந்த சிலுவைகள், மரங்கள், மண் மேடுகள் அந்தக் கல்லறை மேட்டுக்கருகே சோகமே உருவாகி உணர்வற்றுக் கிடந்த அந்த மாது இவைகளெல்லாமே மரணத்தைப் பற்றியும் மனித ஜீவன்களின் கஷ்டங்களைப் பற்றியும் என்னைச் சிந்திக்கத் தூண்டிவிட்டன.
ஆனால், வானத்திலோ மேகங்களைக் காணவில்லை. வெப்பத்தினால் பூமியெல்லாம் தகித்துக் கொண்டிருந்தது.
என்னுடைய பையிலிருந்து சில நாணயங்களை எடுத்து துரதிருஷ்டவசத்தால் கொல்லப்பட்டு, ஆனாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணிடம் நீட்டினேன்.
அவள் தலையையாட்டியபடியே மெதுவான குரலில் “இளைஞனே நீ கஷ்டப்பட வேண்டாம். இன்றைக்குத் தேவையான பணம் என்னிடம் இருக்கின்றது. அதற்கு மேல் எனக்கு வேண்டியதில்லை. நான் ஒண்டிக்கட்டைதானே! இந்த உலகத்தில் நான் ஒண்டிக் கட்டைதானே” என்று கூறினாள்.
அவள் பெருமூச்சு விட்டாள். மறுபடியும் அவளது உதடுகள் துக்கத்தினால் நெளிந்தபடி இறுக்கமாக மூடிக் கொண்டன.
**