மார்க் சாகலின் (Mark Chagal) ஓவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் பார்த்திருக்கிறேன். மூல ஓவியங்களை நேரில் காணுவது பரவசமூட்டக்கூடியது. அதன் புகைப்படங்களையும் நகல் பிரதிகளையும் கண்டிருந்த போதும் அசல் ஒவியம் தரும் மகிழ்ச்சியும் வியப்பும் அலாதியானது. அப்படித் தான் சாகலின் ஓவியத்தின் முன்பு வியந்து போய் நின்றிருந்தேன். மறக்கமுடியாத அனுபவமது.
சமீபத்தில் மார்க் சாகலின் ஓவியங்களைக் கொண்ட விரிவான நூல் ஒன்றை வாசித்தேன். ஓவியரைப் புரிந்து கொள்வதற்கு அவரது வாழ்க்கையும் பார்வைகளும் முக்கியமாகிறது.

மார்க் சாகல் பெலாரசிய நகரமான வைடெப்ஸ் என்ற ஊரில் பிறந்தவர். அவர் ஊரின் நினைவுகளைக் கனவுகளாக மாற்றுகிறார்.
ஊர் என்பது ஒரு கனவு வெளி. அங்கே வசிக்கும் மனிதர்களும் விலங்குகளும் கனவின் தோற்றங்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.
பறத்தலை மிகவும் விரும்பிய சாகல் சந்தோஷத்தின் உச்சத்தில் தானும் காதலியும் பறப்பதாக ஓவியம் வரைந்திருக்கிறார். உடல்கள் பூமியில் காலூன்றி இருக்கும்வரை தான் அன்றாடப் பிரச்சனைகள் இருக்கும் அவை பறக்கத் துவங்கிவிட்டால் நெருக்கடிகள் யாவும் விலகிப் போய்விடும் என்று நினைத்தார் சாகல்.
அவர் பிறந்த போது அவரது ஊரில் பெரிய தீவிபத்து நடந்தது. தீயின் நடுவில் அவரது வீடும் சிக்கிக் கொண்டது. நெருப்பின் ஊடாகத் தான் அவர் பிறந்தார். ஆகவே நெருப்பை அவர் வாழ்நாள் முழுவதும் நேசித்தார். நெருப்பு இணையற்ற அழகும் வண்ணமும் கொண்டது என்று குறிப்பிடுகிறார்.
சேவல்கள் மற்றும் ஆடுகள் மீது அவருக்குத் தனிப்ரியம். அவற்றைக் குறியீடுகளாக்கி வரைந்திருக்கிறார். இது போலவே பூக்களை வரைவதிலும் அவருக்கு அலாதியான விருப்பமிருந்தது. இசையும் நடனமும் நிரம்பிய தனது பால்ய காலத்தை நினைவு கொள்ளும் மார்க் அந்த இசையை நடனத்தைத் தனது ஓவியத்தில் இடம்பெயரச் செய்திருப்பதாகச் சொல்கிறார். அதனால் தான் அவரது ஓவியத்தில் உருவங்கள் தலைகீழாகத் தோற்றம் தருகிறார்கள். காற்றில் இலை பறப்பது போலப் பறக்கிறார்கள்.

அவரது வீட்டிலே இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். ஆகவே சிறுவயது முதலே அவர் வயலின் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். மார்க்கின் காதலி பெல்லா. அவள் கைநிறைய மலர்களுடன் தான் அவரைக் காண வருவாள். அவளே ஒரு விநோத மலர் என்று மார்க் குறிப்பிடுகிறார்.
பெல்லா ரோசன்பீல்ட், வைடெப்ஸ்க் நகைக்கடைக்காரரின் மகள். சாகல் 1915 இல் அவளை மணந்தார். 1916 இல், அவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள் ஐடா, மார்க் மற்றும் பெல்லாவின் காதலை கொண்டாடும் அவரது ஒவியங்கள் தனித்துவமிக்கதாக இருக்கின்றன.
அவரது பிறந்த நாளின் போது கேக் மீது நிறைய மலர்களை அலங்காரம் செய்திருந்தார் பெல்லா. பூக்களின் வண்ண நிறத்தில் மயங்கி அதை உடனே வரையத்துவங்கிவிட்டார் சாகல்.
பிரான்சிலிருந்த நாட்களிலும் அவர் நீலவானத்தையும் மலர்களையுமே நிறைய வரைந்திருக்கிறார். ஓவியம் வரைபவருக்கு ஐந்து விரல்கள் போதாது. ஏழு விரல்கள் வேண்டும் என்று கூறிய மார்க் தனது ஓவியம் ஒன்றில் தன்னை ஏழு விரல்களுடன் வரைந்திருக்கிறார்.

இயல்புலகத்தைத் தனது கற்பனையின் மூலம் பறக்கும் விநோத உலகமாக மாற்றினார் சாகல். ஆகவே அவரது ஓவியத்தில் மனிதர்கள் இடங்கள் விலங்குகள் யாவும் பறக்கிறார்கள். மிதக்கிறார்கள். தலைகீழ் தோற்றம் கொள்கிறார்கள். வண்ணங்கள் என்பது ஒருவகைச் சங்கீதம். அதை முறையாக இசைக்கும் போது அதிசயங்கள் உருவாகும் என்கிறார் மார்க்
சர்க்கஸ் மீது பெரு விருப்பம் கொண்ட மார்க் தனது மகளை அழைத்துக் கொண்டு அடிக்கடி சர்க்கஸ் காணச் செல்வார். அவருக்கெனத் தனி இருக்கைகள் வழங்கப்பட்டன. அதில் அமர்ந்தபடியே சர்க்கஸ் கலைஞர்களை ரசிப்பார். அந்தக் கலைஞர்களைத் தனது கற்பனையின் மூலம் விந்தையான கலைஞர்களாக உருமாற்றியிருக்கிறார் மார்க்
மார்க் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைத் தனது தாத்தா பாட்டிகளுடன் கழித்தார். ஆரம்பக்கல்வி யூதமுறைப்படி வீட்டிலே அளிக்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டு முதல் வைடெப்ஸ் கலைஞரான யூடெல் பென்னுடன் ஓவியம் பயின்றார், பென் தனக்கான சொந்த நுண்கலைப் பள்ளியைக் கொண்டிருந்தார். 1911ம் ஆண்டு மார்க் பாரிஸுக்கு படிப்பதற்காகச் சென்றார். இதற்கு அரசின் உதவித்தொகை கிடைத்தது,
பாரீஸில் அவர் ஐரோப்பியக் கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் புதுமையான படைப்புகளை ஆழ்ந்து அறிந்து கொண்டார். பாரீஸ நகரத்தை தீவிரமாகக் காதலித்தார், அவர் பாரீஸை இரண்டாவது வைடெப்ஸ்க் என்றே அழைத்தார்.. இந்தக் காலகட்டத்தில், அவரது ஓவியங்களில் பிரகாசமும் தனித்துவமும் இருந்தபோதிலும், பிக்காசோவின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது.
செகல் தனது சொந்த ஊரைப்பிரிந்து போகையில் தனது வீடும் தன்னோடு சேர்ந்து பறந்து வருவது போலவே உணர்ந்தார். அப்படி ஒரு சித்திரமும் வரைந்திருக்கிறார்.

ரஷ்யப்புரட்சிக்குப் பின்பு நாடு திரும்பிய மார்க் சாகல் இளம் ஓவியர்களைப் பயிற்றுவிக்கும் வைடெப்ஸ் கலைக் கல்லூரியை நிறுவினார்.. அவரிடம் நிறைய இளைஞர்கள் ஒவியம் பயின்றனர்.
சந்தோஷமே ஓவியத்தின் மூலப்பொருள் என்று அந்த மாணவர்களிடம் தெரிவித்தார் ஷாகல். ஒரு மாணவன் இல்லை துயரமும் வேதனையுமே ஒவியத்தின் ஆதாரப்பொருள் என்றான். உண்மை. ஆனால் அதைச் சந்தோஷத்தின் வழியே கடந்து செல்ல முடியும். இரண்டும் ஓவியத்தில் எப்படி இடம்பெறுகிறது என்பது முக்கியம் என்றார் மார்க்
சகலின் ஓவியங்கள் அவரது சிறுவயது நாட்களின் நினைவுகளுடன் வைடெப்ஸ் நகரில் வசித்த யூதர்களின் வாழ்க்கையினையும் விவரிக்கிறது. முதலாம் உலகப் போருக்கு முன்பு, அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், பாரிஸ் மற்றும் பெர்லின் இடையே மாறி மாறிப் பயணம் செய்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் கிழக்கு ஐரோப்பிய யூத நாட்டுப்புற கலாச்சாரம் குறித்த தனது கருத்தின் அடிப்படையில் தனது சொந்த பாணியை உருவாக்கினார்.1937 இல், சாகல் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றார்.

1941 ஆம் ஆண்டில், நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் நிர்வாகம் சாகலை நாஜி கட்டுப்பாட்டில் உள்ள பிரான்சிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்ல அழைத்தது ஆனால் அவருக்கு விருப்பமில்லை. அமெரிக்காவில் ஆடு மாடுகள் இருக்கிறதா என்று நண்பர்களிடம் விசாரித்தார். பசுமாடுகளும் இருக்கின்றன என்றார்கள். உடனே அவர் ர் மரங்களும் பச்சை புல் வெளியும் இருக்கிறதா என்று கேட்டார் எல்லாமும் இருக்கிறது என்ற பிறகே அவர் அமெரிக்கா சென்றார். விநோதமான கேள்விகளாகத் தோன்றினாலும் அமெரிக்கா ஒரு தொழில் நகரங்கள் நிரம்பிய உலகம் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பதைத் தான் இது காட்டுகிறது. அது போலவே ஆடு மாடுகள் புல்வெளி இல்லாத வாழ்க்கையை அவரால் வரைய இயலாது என்பதையும் சுட்டுகிறது
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது பறப்பது போல உணருகிறான். அது தான் என் ஓவியத்திலும் வெளிப்படுகிறது என்கிறார் சாகல். பறத்தல் நம்மைப் பிரபஞ்சத்துடன் ஒன்றிணைக்கிறது .அவரது ஓவியங்கள் அனைத்தும் விசித்திரத்தால் நிரம்பியுள்ளன, பெல்லாவுடனான சாகலின் காதல் அவரது ஓவியங்களின் முக்கியக் கருப்பொருளாக விளங்குகிறது

கனவு காணுகிறவர்களுக்கு மட்டுமே எனது ஓவியத்தைப் புரிந்து கொள்ள முடியும். இயற்கையை நகலெடுப்பது எனது வேலையில்லை. என்று மார்க் செகல் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்
செகல் பால்யகாலத்திலிருந்து வெளியேறவேயில்லை. அவர் நித்யமான குழந்தைப்பருவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்கிறார் கலைவிமர்சகர் செலெஸ்னெவ்: அது உண்மை என்பதையே அவரது ஓவியங்கள் நிரூபிக்கின்றன
••
,