கடற்கரைக் காற்று

மலையாள எழுத்தாளர் சி.வி. பாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்தமான சிறந்த திரைப்படங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அது சினிமாவின் இடங்கள் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் ஸ்ரீபதிபத்மநாபா. சுவாரஸ்யமான புத்தகம். அதில் வரும் ஒரு கட்டுரையின் சிறுபகுதியை மீள்பிரசுரம் செய்கிறேன்

••

கடற்கரைக் காற்று

சி.வி. பாலகிருஷ்ணன்

தமிழில்:  ஸ்ரீபதிபத்மநாபா

••

ஒரு பத்திரிகையாளர் நடிகை ஷீலாவிடம் செம்மீன் படத்தின் கருத்தம்மா கதாபாத்திரத்தைக் குறித்துக் கேட்டார். ஷீலா இவ்வாறு பதில் சொன்னார்: ”அது கருத்தம்மாவின் படமில்லையே. செம்பன்குஞ்சுவின் படமில்லையா?”

நிஜம்தான். நுணுக்கமாகப் பார்க்கையில் செம்மீன் செம்பன்குஞ்சுவின் கதைதான். எளிய மனமுடைய ஒரு மீனவனின் வாழ்க்கை, பேராசைகள் மூலம் எப்படி இருளடைந்துபோனது என்பதைத்தான் அந்தப் படம் விவரிக்கிறது. கருத்தம்மாவோ பரீக்குட்டியோ பழனியோ எதிரிடும் துயரங்களைவிட தீவிரமானவை செம்பன்குஞ்சுவின் துயரங்கள். மலையாள சினிமாவில் நாம் கேட்டதிலேயே மிகவும் இதயத்தைத் தொடும் அழுகை, பைத்தியம் பிடித்து கடற்கரையில் அலைந்து திரியும் அந்தக் கையறுநிலைக் கிழவனின் அழுகைதான்.

செம்பன்குஞ்சு என்னும் பாத்திரப்படைப்புதான் செம்மீனை உலகளாவியதாக மாற்றுகிறது; கருத்தம்மா மற்றும் பரீக்குட்டியின் காதலினால் அல்ல. கருத்தம்மாவும் பரீக்குட்டியும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று வெளிநாட்டுப் பார்வையாளர்கள் கேட்டதாய்ச் சொல்கிறார்கள். அவர்களுக்கு அது புரியாதுதான். ஆழக்கடலில் மீன்பிடிக்கப் போன மீனவனின் பாதுகாப்பு, கரையிலிருக்கும் பெண்ணின் கற்பில்தான் இருக்கிறது என்னும் நம்பிக்கை அவர்களைப் பொறுத்தவரை அபத்தமான ஒன்றுதான். அவர்களுக்கு மனதைத் தொடும் அனுபவம் செம்பன்குஞ்சு செய்த பாவமும் அதன்மூலம் அவன் அடையும் தவிர்க்கமுடியாத துயரமும்தான்.

செம்பன்குஞ்சு தன் சொந்தப் படகில் மீன்பிடித்து முதன்முதலாக கரையை நெருங்கும் காட்சி திரைப்படமொழியின் உச்சபட்ச சாத்தியத்தின் சாட்சியாகிறது. படகு நிறைய மீன்களுடன் கரையை நெருங்கி வருகிற செம்பன்குஞ்சுவின் கண்களில் ஒரு அந்நிய பாவத்தைத்தான் நாம் காண்கிறோம். ரொக்கமாக நல்ல விலை கிடைக்காமல் மீன் தரமாட்டேன் என்று படகும் வலையும் வாங்க உதவி செய்த பரீக்குட்டியிடமே கறாராகச் சொல்கிற அவனுக்கு மனிதத்தன்மையே அந்நியம்தானென்பதை அவன் முகமே அறிவிக்கிறது. மீனுக்காக வந்த தன் மகள் பஞ்சமியை ஆவேசத்துடன் அவன் தள்ளி விலக்குகிறான். அப்போதே அவன் பைத்தியமாகிவிட்டான். கடற்கரைக் காற்றும் உறுமும் பெருங்கடலும் அதற்கு சாட்சியாகின்றன. அற்புதமான காட்சி அது. பல வருடங்கள் கழிந்தும் என் மனதில் அது மறையாமல் இருக்கிறது.

பதேர் பாஞ்சாலி’யில் கடைசி கட்டத்தில் இப்படியொரு காட்சி: மழை. சேப்பங்கிழங்கு செடியின் பெரிய இலையொன்றை தலைக்கு மேல் பிடித்தபடி சர்போஜயா மழையில் நடந்து வருகிறாள். குளத்துக்கு அருகேயுள்ள வழியில் ஒரு தேங்காய் விழுந்து கிடப்பது சர்போஜயாவின் கண்களில் படுகிறது. அதன் முன் நின்று படபடப்புடன் சுற்றிலும் பார்க்கிறாள். யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்தியபிறகு சர்போஜயா சட்டெனக் குனிந்து தேங்காயை எடுத்து சேலையால் அதை மறைத்துப் பிடித்து வீட்டை நோக்கி அவசரமாக நடக்கிறாள்.

பிபூதிபூஷன் பந்தோபாத்யாவின் நாவலிலிருந்து சத்யஜித்ரே அப்படியே எடுத்துக்கொண்ட காட்சியில்லை இது. நாவலின் பல விவரணைகளையும் அம்சங்களையும் திரைக்கதை அமைக்கும்போது விலக்கிவிட்ட ரே அவசியமென்று கருதிய சில நுணுக்கமான சித்தரிப்புகளை சேர்க்கவும் செய்தார். சர்போஜயாவின் இயலாமையை வெளிப்படுத்த ரே படமாக்கிய மிகச்சரளமான குறுங்காட்சியான இதுவும் அவைகளில் ஒன்று.

ஹரிஹரின் குடும்பத்துக்கு கொய்யாமரங்களும் பேரீச்சைகளும் மாமரங்களும் தென்னைகளும் கொண்ட ஒரு தோப்பு இருந்தது. அது கைநழுவிப் போகக் காரணமாயிருந்தது முன்னூறு ரூபாய் கடன்தான். இழந்துவிட்ட தோப்பை நினைத்து சர்போஜயாவுக்கு பெரும் வருத்தம் உண்டு. ஒரு காலத்தில் கூடைகூடையாக மாம்பழங்களும் தேங்காயும் கொய்யாப்பழங்களும் அவள் கண்முன்னாலேதானே கொண்டுபோகப்பட்டன. துர்கா ஒரு கொய்யாவைப் பறித்தாலே ஷிஜோபாவு கூவத்துவங்கிவிடுவாள்.

‘பதேர் பாஞ்சாலி’ துவங்குவதே கொய்யாப்பழம் பறித்த ஆறுவயது துர்காவை நோக்கி ஷிஜோபாவு சத்தமிடுவதிலிருந்துதான். துர்கா ஓடிவிடுகிறாள். பல வருடங்களுக்குப் பிறகு ஷிஜோபாவுவின் வீட்டிலிருந்து ஒரு நெக்லஸ் திருடுபோகும்போது துர்கா குற்றச்சாட்டுக்கு ஆளாவது தோப்பில் நடத்திய இந்தச் சிறு திருட்டுகளின் பின்னணியில்தான். ஷிஜோபாவு விசாரிப்பதற்காக துர்காவைப் பிடிக்கும்போது அவளுடைய கையில் என்னவோ இருக்கிறது. ஆவேசப்பட்டு அடிக்கக் கையை ஓங்கும் ஷிஹோ அத்தையின் பிடியிலிருந்து துர்காவை விலக்கும் சர்போஜயா அவளின் கைப்பிடிக்குள் என்னவென்று பார்க்கிறாள். உலர்ந்துபோன பழங்கள் மட்டுமே. அவை தன்னுடைய தோப்பிலிருந்து திருடப்பட்டவை என்று ஷிஜோபாவு கூறும்போது சர்போஜயா கேட்கிறாள்: எல்லாப் பழத்திலும் பேரெழுதி வைத்திருக்கிறதா என்ன? குழந்தைதானே அவள். கொஞ்சம் பழங்களை எடுத்ததை பெரிய விஷயமாக்க வேண்டுமா?

தொடர்ந்து ஷிஜோபாவு சொல்கிற அவச்சொற்கள் சர்போஜயாவை இடிபோல் தாக்குகின்றன. அவள் கோபத்தால் மூச்சு வாங்குகிறாள். பின்னணியில் துடியின் ஓசை உயரும்போது அவள் துர்காவின் முடியைப் பிடித்து இழுக்கிறாள். வயதான பிஷியாலும் அவளைத் தடுக்க முடியவில்லை. வராந்தாவில் நின்று அபு தன் அம்மாவின் கோபாவேசத்தைப் பார்க்கிறான். வலியால் துடிக்கின்ற துர்காவை வெளியே தள்ளி கதவைச் சாத்துகிறாள் சர்போஜயா. பிறகு துக்கத்துடன் அமைதியாய் விம்மி வெடிக்கும் சரபோஜயாவை நாம் பார்க்கிறோம். பிஷி கீழே உட்கார்ந்து சிதறிக்கிடக்கும் விளையாட்டு சாமான்களைப் பொறுக்கி எடுத்து துர்காவின் பெட்டியில் இடுகிறாள்.

பல காட்சிகள் கடந்தபிறகுதான் முன்னே குறிப்பிட்ட மழைக்காட்சி வருகிறது. மழையில் சேப்பஞ்செடியின் இலையை தலைக்குமேல் பிடித்தபடி சர்போஜயா வருகிறாள். கடுமையான வறுமையிலும் மிகுந்த சுயமரியாதையைப் பேணும் சர்போஜயா சுற்றுமுற்றும் பார்த்து நிலத்தில் விழுந்து கிடக்கும் தேங்காயை எடுத்து சேலைத் தலைப்பால் மறைத்துப் பிடித்து வீட்டுக்கு விரைந்து நடப்பதைப் பார்க்கையில், ஒரு நிமிடம், நம் நெஞ்சம் பதறுகிறது.

நன்றி :

சினிமாவின் இடங்கள்

சி.வி. பாலகிருஷ்ணன்

0Shares
0