காற்றில் யாரோ நடக்கிறார்கள்.


 


 


 


 சமகால தமிழ் நாவல்கள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக  மூன்று வாரங்களுக்கு முன்பு சாத்தூர் சென்றிருந்தேன். நாஞ்சில் நாடன், நான், கோணங்கி, கீரனூர் ஜாகிர்ராஜா ஆகிய நால்வரும் உரையாற்றினோம். நிகழ்ச்சி முடிந்து திசைக்கொருவராகப் பிரிந்த போது இரவே சென்னைக்கு கிளம்புவதற்கு பதிலாக குற்றாலம் வரை சென்று வந்தால் என்னவென்று தோன்றியது.  மருத்துவராக உள்ள என் அண்ணன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வாடகை காரில் பின்னிரவில் புறப்படுவது என்று முடிவு செய்து கொண்டோம்.பின்னிரவில் பயணம் துவங்குவது பல ஆண்டுகாலமாக எனக்குப் பழகிய விஷயம். பாதி தூக்கமும் பாதி விழிப்புமாக பயணம் செய்யலாம். அதே போல கடந்து போகும் நிலப்பரப்பின் விடிகாலை காட்சிகள் மிக அற்புதமாகயிருக்கும்.
பயணம் கிளம்பிய போது மணி இரண்டரையைத் தொட்டிருந்தது.


யாருமில்லாத சாலைகள், தனியே எரிந்து கொண்டிருக்கும் நியான் விளக்குகள், அடைத்து சாத்தப்பட்ட கடைகள், சுத்தம் செய்யப்படாத குப்பைகள், உறக்கத்தின் பெருங்கரத்தினுள் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தனர் மக்கள், நடமாட்டமில்லாத சாலைகள் வசீகரமானவை. அப்போது தான் அதன் இயல்பும் விஸ்தாரமும் கண்ணில் படுகிறது. இந்த சாலையில் தானா பகலில் இத்தனை நெருக்கடியிருக்கிறது என்ற யோசனையோடு கார் மெதுவாக சென்று கொண்டிருந்தது.


அன்று வானில் நட்சத்திரங்களும் குறைவு. காற்றும் அதிகமில்லை. முதன்மை சாலை வழியாக பயணம்  செய்ய வேண்டாம், கிராம சாலைகளின் வழியாகவே போகலாம் என்று சொன்னதால் பயணம் துவங்கிய சில நிமிசங்களில் பிரதான சாலையிலிருந்து துண்டிக்கபட்டு சீரற்ற கிராம சாலையில் கார் பயணம் செய்யத் துவங்கியது.


காரின் ஹெட் லைட் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சமேயில்லை. வேலிச்செடிகள் அந்த வெளிச்சத்தில் பச்சைபாம்புகள் போல அசைந்து கொண்டிருந்தன. பனைமரங்கள் அடர்ந்த வெளியது. பகலில் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் இருட்டு அத்தனையும் விழுங்கியிருந்தது. எதிரே வாகனம் வந்துவிடும் என்ற அச்சமில்லாத காரணத்தால் வண்டியின் ஒட்டுனர் சீராக ஒட்டிக் கொண்டு வந்தார்.


ஒவ்வொரு கிராமமாக கடந்து போகத் துவங்கினோம். பின்னிரவில் பார்க்கும் கிராம காட்சிகள் அபூர்வமானவை. பாதிக்கு மேல் எரியாத தெரு விளக்குகள், உறைந்து போயிருக்கும் காந்தி மற்றும் தேவர் சிலைகள்,  அடர்ந்த ஊதா அல்லது மஞ்சள் நிறம் பூசப்பட்ட சிறிய பெட்டிக்கடைகள், சிறியதும் பெரியதுமான வீடுகள், குளிர்பான விளம்பர பலகைகள், டெலிபோன் பூத்துகள், பேருந்து நிறுத்தங்கள், சினிமா போஸ்டர்கள், சாலையோரம் உள்ள சிறார்களுக்கான ஆங்கிலபள்ளிகள், கட்சி கொடிக்கம்பங்கள்,  என பெரும்பான்மை கிராமங்கள் ஒன்று போலவே இருந்தன.


முதலில் கண்ணில் பட்டது சாலையோரம் உறங்கும் மனிதர்கள் என எவரையும் காண முடியவில்லை என்பதே. பத்து வருசங்களுக்கு முன்புவரை இரவில் கிராமசாலைகளில் பயணம் செய்யும் போது கடைகளின் முன்பு, சிமெண்ட் பெஞ்சில், கோவில் திண்டுகளில் என   ஆங்காங்கே மனிதர்கள் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். அவர்கள் வீடு இல்லாதவர்கள் கிடையாது. மாறாக வீட்டினுள் உறங்குவதை விடவும் காற்றோட்டமாக வெளியில் உறங்க கூடியவர்கள்.தெருவில் பாயைப் போட்டு உறங்குபவர்கள், மடத்தில் உறங்குபவர்கள், கிணற்று மேட்டில் உள்ள குளிர்ச்சியில் சாய்ந்து உறங்குகின்றவர்கள் என்று பல்வேறு விதமான மக்கள் இருந்தார்கள். சில வயதான கிழவிகள், கிழவர்கள் சாப்பிடுவதற்கு தவிர வேறு ஒரு போதும் தன் வீட்டிற்கு போவது கிடையாது. அவர்கள் தாங்களாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு பகலிரவாக அங்கேயே கிடப்பார்கள்.


அப்படி வழியில் கண்ட கிராமம் எதிலும் ஒரு மனிதன் கூட சாலையோரத்திலோ, அடைக்கபட்ட கடைகளின் முன்போ உறங்கிய தடமேயில்லை. வாகன ஒட்டுனரிடம் அதை பற்றிகேட்ட போது அப்போ பயம் கிடையாது சார் இப்போ தனியா படுத்துகிடந்தா எவனாவது சங்கை அறுத்துட்டு போயிட்டா என்ன செய்றது என்றார்.  உண்மையில் அது மட்டும் காரணமில்லை. தொலைக்காட்சி பெட்டிகள் தான் ஆட்களை வீடுகளுக்குள் முடக்கியிருக்கிறது. உறங்கும் வரை டிவி பார்க்கும் வழக்கம் எல்லா வீடுகளிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது.


என் பால்யம் முழுவதிலும் நானே வெட்டவெளியில் தான் உறங்கியிருக்கிறேன். அது ஒரு தனித்த அனுபவம்.


வானை பார்த்தபடியே படுத்துகிடப்போம். நட்சத்திரங்கள் அருகில் வருவதும் விலகி போவதுமாக இருக்கும். திடீரென வானம் இருண்டு போகும். பின்நிலவு காலங்களில் உறங்குகின்றவர்கள் மீது பனிபோல வெண்ணிறமான வெளிச்சம் பொழிந்து கொண்டிருக்கும். காற்றின் வேகம் மாறிக் கொண்டேயிருப்பதால் யாரோ நடமாடுவது போன்ற சிறுசப்தம் எழும்பியபடி இருக்கும்.


அது போலவே பாதி தூக்கத்தில் கண்விழித்து பார்த்த போது இருள் நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருக்கும். திடீரென மழை பெய்ய துவங்கும். பாயை சுருட்டிக் கொண்டு வீட்டிற்கு போவார்கள். சிலரோ எப்படியும் மழை சில நிமிசத்தில் நின்று விடும் என்ற உறுதியான நம்பிக்கையோடு படுத்து கிடப்பார்கள்.


பின்னரவில் புதைந்திருந்த அந்த காட்சிகள் அநேகமாக மறைந்து போய்விட்டன என்று தான் தோன்றுகின்றது


அதுபோலவே கிராமங்களைக் கடந்து போகையில் கண்ட இரண்டாவது முக்கிய அம்சம். ஒரு ஊரில் கூட நாய்கள் குரைக்கவில்லை. இவ்வளவுக்கும் சில கிராமங்களில் இறங்கி நடந்த போதும் கூட நாயின் சுவடேயில்லை. ஒருவேளை நாய்களே இல்லையா ? இல்லை நாய்களும் மனிதர்களை போல உறக்கத்திற்கு பழகிவிட்டிருக்கின்றதா எனத் தெரியவில்லை. ஆனால் விடியும்வரையான பயணத்தில் ஒரு இடத்தில்  நாய் குரைப்பு கேட்கபடவேயில்லை.


மூன்றாவது கிராமங்களில் பொதுவாக மூணரை மணி நாலு மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவார்கள். பால் கறப்பது வீட்டுபணிகள் என்று வேலை துவங்கிவிடும். நாலு மணிக்கு பல வீதிகளில் இயக்கம் துவங்கிவிடும். ஆறு மணிக்கு பலரும் வேலைக்கு கிளம்பிவிடுவார்கள். எங்கள் பயணத்தில் நாலு மணியை நெருங்கிய போது ஒரு கிராமத்தில் கூட இயக்கமில்லை.


முக்கிய காரணம் பழைய கிராமங்களில் இரவு எட்டு மணிக்குள் அடங்கிவிடும். பத்து மணிக்கு யாராவது விருந்தினர்கள் வந்து சேர்ந்தால் அதுவே நடுஜாமத்தில் வந்தார்கள் என்று பேசிக் கொள்வார்கள். பனிரெண்டு மணியை கடந்து எப்போதாவது தந்தி கொண்டுவருகின்றவன் ஊருக்கு வந்து சேர்வான். அது துர்செய்தியாக தான் இருக்கும். ஆனால் இன்றுள்ள கிராமங்களில் ஊர் அடங்குவதற்கு குறைந்த பட்சம் பதினோறு மணியாகிறது. ஆனால் ஒரு மணி வரை யாராவது வருவதும் போவதுமாக தானிருக்கிறார்கள்.


விவசாயம் சார்ந்த வாழ்க்கை பெரிதும் கைவிடப்பட்ட சூழலில் அவர்களின் இயல்பான பழக்கங்களும் மாறிப்போய்விட்டன.


கிராமங்களின் பகலிரவுகளும் முழுமையாக டிவி பார்ப்பதற்கு ஒப்படைக்கபட்டுவிட்டன. அதனால் மக்கள் வீடுகளுக்குள் இருந்து பழகிவிட்டார்கள். நகரங்களை விடவும் கிராமங்களின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் குறித்து பேசுவதும் விவாதிப்பதும் கொண்டாடுவதும் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் தானோ என்னவோ ஒரு கிராமத்திலும் நாலு மணியாகியும் ஒரு மனிதன் கூட நடமாட காணவில்லை


அதே போல இன்னொரு முக்கிய விடுபடல். மாட்டுசாணி. உலர்ந்தும் பாதி நெகிழ்ந்தும் போன சாணங்கள் கிடக்காத தெருக்களே கிராமத்தில் கிடையாது. அதில் தார்சாலைகளில் கூட மாடுகள் நடந்து செல்கையில் கழிப்பதால் ஆங்காங்கே சாணம் சிதறிக்கிடக்கும். நாங்கள் கடந்த சாலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளும், தூக்கி எறியப்பட்ட வாட்டர்பாட்டில்களும், காய்ந்த சருகுகளையும் தவிர மாட்டுசாணம் எதையும் எங்கேயும் காணவேயில்லை.


பொதுவாக கிராமங்களில் உறக்கம்வராத ஒரு மனிதன் எப்போதும் இருப்பான். அவன் ஊரில் என்ன சப்தம் கேட்டாலும் அதற்கு எதிர்வினை தருவான். அல்லது எப்படி விடியும்வரை ஒரே இடத்திலிருப்பது என்று நடந்து கொண்டேயிருப்பான். அப்படியான மனிதர்கள் இன்றில்லை போலும்.


வீறிட்டு அழும் குழந்தைகளும், அதை சமாதானம் செய்ய தோளில் தோட்டபடியே நடக்கும் பெண்களும் கூட அரிதாகி போய்விட்டார்கள் போலும்.


நான் சிறுவனாக இருந்த போது  ஒரு நாள் எங்கள் ஊருக்கு முப்பது வயதை ஒத்த மனிதன் வந்துசேர்ந்தான். அவனை பார்த்த மாத்திரத்தில் வெளியூர்காரன் என்பது தெரிந்தது. உடனே அவன் யார் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று விசாரித்தார்கள். அவன் சும்மா வந்திருப்பதாக சொல்லி ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தான். ஒருவேளை திருடுவதற்கு நோட்டம் பார்க்க வந்திருக்கிறானோ என்ற பயத்தில் அவனை நிறுத்தி மறுபடியும் விசாரித்தார்கள்.


அவன் தயங்கி தயங்கி தான் ஒவ்வொரு ஊரிலும் சென்று தூங்கிப் பார்ப்பது வழக்கம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தூக்கமிருக்கிறது. அது ஒரு வகை. அப்படி இந்த ஊருக்கு எப்படிபட்ட தூக்கமிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்றான்.


வியப்பாக இருந்தது. ஒரு மனிதன் ஒவ்வொரு ஊராகப் போய் தூங்கி பார்ப்பது என்பதை அன்று வரை நாங்கள் கேள்விபட்டதேயில்லை. ஊர்க்கார்கள் அவனுக்கு சாப்பாடு போட்டு அவனை இரவு தங்குவதற்கு அனுமதித்தார்கள்.
அவன் எங்கே உறங்க போகிறான் என்று அவன் பின்னாடியே நாங்கள் சுற்றிவந்தோம். அவன் இதற்கென தனி இடம் எதையும் தேர்வு செய்யவில்லை.  அங்கிருந்த மடம் ஒன்றில் படுத்துக் கொண்டான்.


விடிகாலையில் அவனை சுற்றி ஊரே திரண்டிருந்தது.
ஒரு பெரியவர் எங்க ஊர் தூக்கம் எப்படியிருந்தது என்று கேட்டார். அவன் சிரித்துக் கொண்டே நீங்களும் நிம்மதியா தூங்கமாட்டேங்கிறீங்க. மத்தவங்களையும் நிம்மதியா தூங்க விடமாட்டேங்கிறீங்க. இந்த ஊர்ல ஒரே பேச்சு சப்தம். யாரோ ஒரு வீட்டில மூச்சிரைப்பு உள்ள மனுசன் இருக்கான். அவன் இடைவிடாம  இருமிக்கிட்டு இருக்கான். அதை மாதிரியே மூத்திரம் பெய்வதற்காக யாராவது ஒரு ஆள் மாறி மாறி நடந்துகிட்டே  இருக்காங்க அத்தோட விடிவெள்ளிக்கு முன்னாடி ஆள் நடமாட்டம் ஆரம்பமாகிருது. உங்க ஊர்ல எல்லாருக்கும் அரை தூக்கம் தான் என்று சொல்லி கிளம்பினான்.


அவன் சொன்னது அத்தனையும் உண்மை. எங்கள் கிராமங்களில் மல்லிகை தோட்டங்கள் அதிகம். நாலு மணிக்கு முன்பாகவே மல்லிகை பூ பறிக்க போய்விடுவார்கள். பாதி இருளோடு பூ பறிக்கும் பெண்களை கண்டிருக்கிறேன். வெக்கையான கிராமம் என்பதால் நீர்கடுப்பு பிடித்தவர்கள் அதிகம்.


ஒவ்வொரு ஊரும் ஒரு வகையான தூக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை அந்த மனிதனை போல நானும் இலக்கின்றி அலைந்து தூங்கி பார்த்து அறிந்து கொண்டிருக்கிறேன்.


அந்த மனிதனை போன்ற விசித்திர மனப்பாங்கு கொண்டவர்கள் இன்றில்லை. இந்த சம்பவத்தை எனது நெடுங்குருதி நாவலிலும் எழுதியிருக்கிறேன்.


கிராம சாலைகளுக்கே உரித்தான புளியமரங்களும் வேம்பும் அப்படியே இருக்கின்றன. கிணறுகள் பயன்பாடு அற்று போய்விட்டன. பின்னிரவு காற்று அப்படியே இருக்கிறது.


ஐந்து மணியை நெருங்கும்போது தென்காசி அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒரேயொரு டீக்கடை திறந்திருந்தது. அப்போது தான் அடுப்பை ஏற்றியிருந்தார்கள். பால் காயும்வரை காத்திருந்து தேநீர் குடித்தோம். சக்கரை போட வேண்டுமா  என்று கேட்டு கிராமத்து கடைக்காரர் தேநீர் போட்டு தந்தார். கிராமம் வரை சக்கரை நோய் பிரச்சனை வந்துவிட்டது தெளிவாக உணர முடிந்தது.  சக்கரையில்லாமல் டீ வேண்டும் என்று கேட்ட ஒருத்தரைக் கூட என் பால்யத்தில் கண்டதில்லை. அதிகமான சக்கரை போட்டு வேண்டும் என்று கேட்பவர்கள் இருந்தார்கள். சில கிராமங்களில் கருப்பட்டி காபியும் கிடைக்கும்.


தண்ணீர் வளமை உள்ள கிராமங்களின் வீடுகளும்வீதிகளும் ஒருவிதமாகவும் தண்ணீர் அற்றுப்போன கிராமங்கள் இன்னொரு விதத்திலும் இருப்பது தெளிவாக காண முடிந்தது.


குற்றாலத்தை நெருங்கி செல்லும்வரை அருவிச்சப்தம் கேட்கவேயில்லை. ஒருவேளை தண்ணீர்வரத்தேயில்லை போலும். எதற்கும் ஐந்தருவிக்கு முதலில் போய்விடலாம் என்று ஐந்தருவி பாதையில் பயணம் துவங்கினோம்.


மிக அழகான பாதையது. மாமரங்களும் தென்னையும் அருகாமையில் வீழ்ந்து கிடக்கும் மலையும், வயல்களும் கொண்ட பாதையது. ஐந்தருவியின் முன்னால் உள்ள சுங்கசாவடியில் வசூல் செய்பவர் நாற்காலியில் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தார். எங்கள் வண்டி சப்தம் கேட்டபோது அருகில் வந்து நின்று இயந்திரம் போல வசூல் செய்துவிட்டு மறுபடியும் அதே நிலையில் உறங்க துவங்கினார்


ஐந்தருவிக்கு போன போது யாருமேயில்லை. அருவியில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. கடைகள் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் வந்துசேரவில்லை. மின் விளக்கின் மஞ்சள் வெளிச்சம் தண்ணீரில் கரைந்து ஒடிக் கொண்டிருந்தது. காற்றில் தண்ணீர் சிதறிக்கொண்டிருந்தது.


யாருமே இல்லாமல் அருவியை காண்பது அபூர்வமானது. அன்று அது எங்களுக்கு வாய்த்திருந்தது. பொங்கிவழிந்து கொண்டிருந்தது அருவி. இதன் முன்பு பார்த்ததேயில்லை என்பது போல அருவியை பார்த்துக் கொண்டோம். அருவியை பார்க்கும் போது இயல்பாக முகத்தில் புன்னைகை தோன்றுகிறது. அதை என்னோடு வந்த எல்லோரது முகங்களிலும் பார்த்தேன். யாவரும் அருவியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.


ஆளுக்கு ஒரு அருவியில் குளிப்பது என்று இறங்கிய போது குளிர்ச்சி காலில் பட்டு கூச்சத்தை உண்டுபண்ணியது. வேகத்துடன் வீழ்ந்து கொண்டிருக்கும் அருவிக்குள் போய் நின்றேன். மித மிஞ்சிய குளிர்ச்சியும் வேகமுமாக தண்ணீர் உடலைத் துளையிட துவங்கியது. அருவியில் மட்டும் தான் உடல் நெகிழ்வடைவதை நாம் முழுமையாக உணரமுடியும். முறுக்கேறிய நூல் பிரிக்கபடுவது போல உடலில் ஏறியிருந்த இறுக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அருவி அவிழ்க்க துவங்கியது. பார்வையை மறைத்து விழும் தண்ணீரின் ஊடே நிழல் போல அசைவு தெரிகிறது.


அருவியின்  நூறு கைகள் உடலை புரட்டுகின்றன. ஒரு தாதியை போல அருவி நம்மை சுத்தம் செய்கிறது. உடல் குளிர்ச்சிக்கு பழகிய பிறகு அருவியை விட்டு வெளியே வர மனதேயில்லை. அருகில் குளித்துக் கொண்டிருந்த நண்பர் தன் வயதை மறந்து உரக்க சப்தமிட்டு கொண்டிருந்தார். அதுவும் அருவியின் மாயம் தான். யாரையும் உரக்க கத்த வைக்க கூடியது அருவி. எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு ஆயிரமாயிரம் மனிதர்கள் குளித்து சென்ற சுவடேயில்லை. அருவி ஒவ்வொரு நிமிசமும் புதிதானது. அதன் வேகம் புதிதானது.


கண்களை மூடிக் கொண்டேன். திடீரென அருவி புலி பாய்ந்து இரையை கவ்விக் கொண்டு போவது  போல மூர்க்கமான வேகத்திற்கு மாறியது. அருவியின் கைகளில் என்னை ஒப்படைத்துவிட்டேன். அது உடலின் நரம்பு வரை சிடுக்கு எடுத்துக் கொண்டிருந்தது. அருவிக்குள் நின்றபடியே வழிந்தோடும் தண்ணீரை குடித்தேன். நான் ஆதிமனிதன். அருவியின் தண்ணீரை அப்படியே நாக்கில் ஏந்தி குடிப்பவன் என்று மனது உவகையுடன் சொன்னது.


நான் சாய்ந்து கொண்டிருந்த பாறை அருவியின் சீற்றம் பழகி பழகி நெகிழ்வு கொண்டிருந்தது. அது ஒரு பாறையை போலவே தோன்றவில்லை. அருவியிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்து நின்றோம். எப்போதும் காணப்படும் குரங்களில் ஒன்றை கூட காணவில்லை என்று ஒரு நண்பர் சொல்லி சிரித்து கொண்டார்.


உலகில் நாங்கள் ஐந்து பேர்கள் மட்டுமே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அருவியை மாற்றிக் கொண்டு மறுபடியும் குளிக்க துவங்கினோம். காலின் அடியில் வழிந்தோடிக் கொண்டிருக்கும் தண்ணீர் நூறு கால்கள் உள்ள பூரான் போல வேகமாக போய்க் கொண்டிருந்தது. மலை எங்களை  உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது. வெளிச்சம் தெறிக்கும் தண்ணீரை கையில் ஏந்தி வீசினேன். என் கையிலிருந்த தண்ணீர் அருவித்தண்ணீரில் கலந்து போனது. தண்ணீரில் கலந்த தண்ணீர் போல என்ற தேவதச்சனின் கவிதை வரி நினைவிற்கு வந்தது.


ஆண்கள் பெண்கள் என்று தனித்து பிரித்துவிடப்பட்டிருந்த அடையாளங்களை மறந்து அருவியில் எங்கள் இஷ்டம் போல குளித்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே இரவின் கடைசி துளிகள் கரைந்து பகல் வெளிச்சம் கசிந்து வரத்துவங்கியிருந்தது.


அருவியை விட்டு வெளியே வந்து ஈரதுண்டுகளும் குளிர்ந்த உடலுமாக காற்றில் நின்று கொண்டிருந்தோம். இரவு பயணத்தின் அலுப்பை துடைத்து சுத்தம் செய்திருந்தது அருவி. 


அடுத்த அருவிக்கு போகலாம் என்று நாங்கள் புறப்படும் வரை வேறு ஒரு வாகனமோ வேறு மனிதரோ எதிரே வரவேயில்லை. எங்கிருந்தோ விட்டுவிட்டு குருவி கத்திக் கொண்டிருந்தது.


குற்றாலத்திற்கு செல்லும் போதெல்லாம் ஒரு நாளைக்கு ஆறு முறையிலிருந்து எட்டு முறை குளிப்பது வழக்கம். அவ்வளவு குளித்தும் ஆசை அடங்காது. அருவி நம்மை அழைத்துக் கொண்டேயிருக்கும். இதில் நள்ளிரவில் குளிப்பது தான் உயர் அனுபவம்.


குற்றாலத்தின் முக்கிய அருவிக்கு போன போது நூறு பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். சீசன் முடிந்து போயிருந்த காரணத்தால் அதிக கூட்டமில்லை. சீசனில் பல்லாயிரம் பேர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு இடிபட்டு குளித்து வருவதும் ஒரு அனுபவமே.


பிரதான அருவியில் குளித்தது இன்னொரு வகையாக இருந்தது. ஒரே மலையிலிருந்து வரும் அருவிகள் தான் என்றபோதும் இதன் வேகம் குளிர்ச்சி வேறுவிதமாகவே இருந்தது. குளித்துவிட்டு குற்றால நாதர் கோவிலின் பிரகாரத்தில் ஈரத்துண்டுடன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டோம். பரபரப்பான இயக்கம் உள்ள சாலையில் யாருமேயில்லை. சீசன் ஒய்ந்து போன நாட்கள் என்பதை அந்த காலை துல்லியமாக நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.


கோவிலில் வெளியே ஒரேயொரு குரங்கு தென்பட்டது. தேவாரப்பாடல்களின் சிடி ஒடிக்கொண்டிருந்தது. அருவியின் குளிர்ச்சியோடு சாந்தம் கொண்டிருந்த சிவனும் செண்பககுழல்வாய் மொழி அம்மையின் முகத்தில் கூட சிரிப்போடியிருந்தது. சிங்கன் சிங்கியும் வசந்தவல்லியும் நினைவிற்கு வந்தார்கள். அதே தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு புளியோதரை சாப்பிட்டபடியே புதிதாக வாங்கிய ரப்பர் பந்தை கையில் இறுக்கிபிடித்த சிறுவனாக இருந்த வயது நினைவில் கடந்து போனது. 


அடுத்த அருவிக்கு பயணம் துவங்கினோம். குளியல் சாப்பாடு குளியல் என்று தொடர்ந்தது நாள். பின்மதியத்தில் அதே வழியாக திரும்பிய போது வெயில் அடங்காத கிராமங்களை இன்னும் நெருக்கமாக காணமுடிந்தது.


இரவில் கண்டது போன்ற மயக்கம் இப்போது இல்லை. வெளிறிப்போன அலுமினிய நிற வானம். குண்டும் குழியுமான புழுதி பறக்கும் சாலைகள், கேபிள் டிவியின் டிஷ் ஆண்டனாக்கள், பெரும்பான்மை கிராமத்து மனிதர்கள் செல்போன் உபயோகம் செய்கிறார்கள். நாங்கள் கடந்து வந்த பாதையில் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவன் செல்போனில் பேசியபடியே நடந்து போய்க் கொண்டிருந்தான்.


மினி பஸ் மற்றும் டவுன்பஸ்கள் வழக்கம் போலவே கூட்டம் நிரம்பி வழிய சென்று கொண்டிருந்தது. ஊரிலே வேலை செய்கின்றவர்கள்  பத்து சதவீதம் மட்டுமே. மற்றவர்கள் வேலைக்காக அருகாமை நகரங்களுக்கு போய்வருகிறார்கள்.


எல்லா கிராமங்களிலும் விஜயகாந்தின் உருவப்படமும் கட்சி விளம்பரங்களும் காணப்படுகின்றன. மினரல்வாட்டர் பெட்டிகடைகளில் விற்கபடுகிறது. சில ஊர்களில் தேவர்சிலையை சுற்றி பாதுகாப்பிற்கு இரும்பு கூண்டுபோன்று அமைத்திருக்கிறார்கள். வெள்ளரிகாய் கொய்யாபழம் இலந்தைபழம் விற்கும் பெண்களில் ஒருவர் கூட இன்றில்லை. நகரங்களில் கிடைக்கும் பழங்கள் நாட்டுகாய்கறிகள் கூட அவை விளையும் கிராமங்களில்  உபயோகிக்க கிடைப்பதில்லை.


சுமைகளோடு பைக்கில் மனைவியை அழைத்து கொண்டு பயணம் செய்கின்றவர்கள் அதிகமிருப்பதை காணமுடிந்தது. எல்லா ஊர்களிலும் ஊரைவிலக்கிய தனியான வீடுகள், பேக்டரிகள் உருவாகியிருக்கின்றன. பெரும்பான்மையான நிலம் வெம்பரப்பாக நீண்டு கிடக்கின்றது. விவசாயம் சுருங்கிப்போய்விட்டது கண்கூடாக காணமுடிகிறதுமாலையான போதும் வெயில் அடங்கவில்லை. குடிதண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன். எல்லா ஊர்களிலும் தண்ணீர் குழாய்கள் போடப்பட்ருக்கின்றன. ஆனால் தினம் தோறும் தண்ணீர் கிடைப்பதில்லை என்றார் ஒட்டுனர்.


மெல்ல மாலை அடங்கிக் கொண்டிருந்தது. சூரியன் வானிலிருந்து மறைந்த போதும் வெளிச்சம் மட்டுப்படவில்லை. தொலைவில் ஒரு கிராமத்தின் மண்பாதை தெரிந்தது. யாரோ சிலர் அதில் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சாலையிலிருந்து விலகி உள்ளோடிய கிராமத்திற்கு போகின்றவர்களாக இருக்க கூடும். சுமைகளுடன் நடந்து கொண்டிருந்தார்கள். என்ன நம்பிக்கை இன்னும் கிராமத்தை இயக்கி கொண்டிருக்கிறது. 


பனையோலைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.  புழுதி உயர்ந்து கொண்டிருந்தது. பாதை தெரியவில்லை. அவர்கள் காற்றில் நடந்து போய்க்கொண்டிருப்பது போலவே தெரிந்தது.


ஏதோவொரு நாள் விசையேறிய காற்று இந்த கிராமங்கயும் தூக்கி கொண்டு போய்விடுமோ என்னவோ?


வழியில் ஒரு காட்டுகோவிலில் தனித்திருக்கும் கருப்பசாமியை கண்டேன். ஒட்டுனர் வருசத்துக்கு ஒரு முறை தான் இதுக்கு படையல் பொங்கல் எல்லாம். அது வரைக்கும் இதை யாரும் தேடி வர்றதில்லை. போற வர்றவங்களை பாத்துகிட்டே சாமியும் நின்னு கிட்டு இருக்கு என்றார்


நிஜம் கடவுள்களும் தன்னைத் தேடி வந்து உரையாட ஆள் வராதா என்று காத்துக் கொண்டுதான் இருக்கின்றன. கடவுளாக இருந்தாலும் அதற்கு படைக்கவும் பயப்படவும் ஒரு ஆள் வேண்டிதானே இருக்கிறது


அருவியிலிருந்து சுத்தமாக வெளியே வந்தவர்கள் ஊர் வந்து சேரும்போது செம்புழுதியும் கலைந்த தலையும் முகம் எங்கும் இறுக்கமாக வந்து சேந்தோம். அப்போது தான் தோன்றியது அன்று காலையிலிருந்து ஒருவர் கூட செல்போனில் அழைக்கவேயில்லை.


அருவியை விட அதுதான் ஆச்சரியமாக இருந்தது.


இரவு சென்னை ரயிலைப் பிடிக்க காத்துக் கொண்டிருந்தேன். ரயில்வெளிச்சம் தொலைவில் தெரிந்தது. செல்போன் அடிக்க துவங்கியது. பேசத் துவங்கினேன். இனி எப்போதாது தான் இதுபோன்று யாருமில்லாத அருவியும் செல்போன் ஒலிக்காத நாளும் கிடைக்கும் என்று தோன்றியது.


சென்னை வந்து இறங்கிய போது அந்த சிந்தனையும் இல்லை. அருவிப்பயணம் பகலிரவு காட்சிகள் யாவும் ஏதோ கனவில் வந்தவை போலிருந்தன. அதுவும் ஒன்றிரண்டு நாட்களும் தான். அப்புறம் பரபரப்பான இயக்கம்.செல்போன் அழைப்புகள், சந்திப்புகள், அடுத்த பயணத்திற்கான திட்டமிடல். நகர சாலைகளில் காத்திருத்தல், வீடு திரும்புதல். ஒட்டம். உறக்கம். விழிப்பு. ஒட்டம்.


உடலில் படிந்து கொண்டேயிருக்கின்றன எண்ணிக்கையற்ற கசடுகள், எண்ணிக்கையற்ற நினைவுகள். எங்கோ தொலைவில் ஒரு அருவி தன்னியல்பில் விழுந்து கொண்டேயிருக்கிறது.


*** 

0Shares
0