கொற்கையில் கடல் இல்லை

கொற்கைக்குப் போய் கொண்டிருந்தோம், என்னுடன் வந்து கொண்டிருந்த நண்பர் துளசிதாசன் கேட்டார்

கொற்கையை நெருங்கிவிட்டோம் ஆனால் கடல் சப்தம் கேட்கவேயில்லையே

அங்கே கடல் இல்லையே என்றேன்

அது எப்படி, கொற்கை முத்துக்குப் பேர் போன கடற்துறைமுகம், அங்கே கடல் எப்படி இல்லாமல் போய்விட்டது என்று கேட்டார்

கடல் பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்று சொன்னேன்,

கொற்கை என்ற பெயரைக்கேட்டவுடன் நம்மில் பலருக்கும் பழமையான துறைமுகமும் கடலும் தான் நினைவிற்கு வருகின்றன, ஆனால் இன்றுள்ள கொற்கையில் கடல் கிடையாது.

மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை’ என்கிறது  அகநானூறு. ‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’என்கிறது சிலப்பதிகாரம்.

பாண்டிய மன்னர்களின் வளமைக்குக் காரணம் கொற்கை துறைமுகம் அவர்கள் வசம் இருந்ததே என்பதையே கண்ணகி சிலப்பதிகாரத்தில் சுட்டிக்காட்டுகிறாள்

சங்க இலக்கியங்கள் கொற்கையின் சிறப்பைப் பாடுகின்றன. ஒரு காலத்தில் பெரிய துறைமுக நகரமாக இருந்த கொற்கை இன்று ஒரு சிற்றூராக சுருங்கியிருக்கிறது, இதற்கு நேர் எதிராக ஒரு காலத்தில் சிறிய கிராமமாக இருந்த சென்னை இன்று பெருநகரமாக வளர்ந்து விஸ்வரூபமெடுத்து நிற்கிறது, காலமாற்றத்தின் விநோதம் இது தான் போலும், இப்படி காலச்சூறாவளியில் சிக்கி எத்தனையோ நகரங்கள் காணாமல் போய்விட்டன, சில ஊர்கள் கடந்தகால நினைவின் மிச்சத்துடன் அடையாளமற்று போயிருக்கின்றன,

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கொற்கைக்கு போயிருக்கிறேன், சென்ற வாரம் மறுமுறை போகையில் ஒரு நூற்றாண்டு இடைவெளியானது போல ஊரே மாறியிருந்தது.

கொற்கை, இன்று கடலில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் தள்ளிருக்கிறது, கடல் உள்வாங்கி போய்விட்டதே காரணம் என்கிறார்கள், பழைய கொற்கை கடலின் அருகில் இருந்திருக்க கூடும், இன்றுள்ள கொற்கை தான் பழைய கொற்கையா என்பது குறித்து முழுமையான ஆய்வுகள் இன்னமும் நடத்தப்படவில்லை,  கொற்கையின் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் தான் ஆதிச்சநல்லூர் உள்ளது, அது மிகவும் புராதனமான புதைமேடு,

கால்டுவெல் பாதிரியார் இந்த பகுதியில் சமய தொண்டு ஆற்றிய காலத்தில் கொற்கையை ஆய்வு செய்து அங்கு கிடைத்த பழமையான முதுமக்கள் தாழியை கண்டறிந்திருக்கிறார்.

வானில் வெளிறிய மேகங்களுடன் சூரியன் தணிந்திருந்தது, சிறிய மண்சாலையில் சென்று கொண்டிருந்தோம்

கொற்கை தான் கபாடபுரமா என்று கேட்டேன்

சங்க இலக்கியம் குறிப்பிடும் கபாடபுரம் இதுவல்ல என்றே தோன்றுகிறது என்றார்  சிந்துசமவெளி ஆய்வாளரும் நண்பருமான பாலகிருஷ்ணன்.

இந்த ஊரை கபாடபுரம் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள், ஆனால் நான் இதைக் கபாடபுரம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன், பாகிஸ்தானில் கொற்கை என்ற பெயரில் ஒரு ஊர் இருக்கிறது, கொற்கை என்பது முக்கியமான தமிழ் அடையாளம் நாம் இணைந்து ஒரு பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் வரை சென்று அந்த கொற்கையை பார்த்து  வருவோம் என்று கூறினார்

இன்றைய கொற்கையில் பழமையான வரலாற்று சின்னங்கள் எதுவுமில்லை, அங்கேயிருப்பது ஒரேயொரு வன்னிமரம், இரண்டாயிரம் வருஷப் பழமையான மரம் என்று சொல்கிறார்கள்,.  முறிந்து தரையில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது, அதன் முன்பாக நடுகல் சிற்பம் ஒன்று காணப்படுகிறது, அதையொட்டி ஒரு சமண சிற்பம் ஒன்று இருந்ததாக கூறுகிறார்கள், அது சமணபிரதிமையில்லை புத்தரின் சிற்பம் என்று ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். உண்மை எதுவென தெரியவில்லை

கொற்கைக்குப் போவதற்கு தூத்துக்குடியில் இருந்து திருசெந்தூர் சாலையில் பயணிக்க வேண்டும். 25 கிலோமீட்டரில் ஏரலுக்கு முன்பாக ஒரு சிறிய சாலை வடக்கு நோக்கி திரும்புகிறது, அந்தச் சாலையில் பயணித்தால் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு மூன்று கிலோ மீட்டர்கள் கிழக்கிலும், உமரிக்காடு கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர்கள் வடக்கிலும் கொற்கை அமைந்துள்ளது,

குண்டும் குழியுமான சிறிய சாலை, பள்ளி செல்லும் சிறுமிகள் சாலையில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள், வெளியாட்களை கண்டவுடன் ஆசையுடன் கையசைத்து சிரிக்கிறார்கள், கொற்கை அமைதியான ஊர், அருகில் உள்ள புன்னைக்காயலில் கடல் உள்ளது, புன்னைகாயலில் இருந்து கொற்கை வரும் சாலை மிகவும் அழகான ஒன்று,

வளர்ச்சியடையாத சிறிய கிராமத்தின் இயல்பு அப்படியே கொற்கையில் உள்ளது, ஊரின் நுழைவாயிலில் காணப்பட்ட வன்னிமரத்தைப் பார்வையிட்டேன், என்னுடன் நண்பர்கள் துளசிதாசன், மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் வந்திருந்தார்கள், மூவருமாக இறங்கி அந்த மரத்தின் அருகே சென்றோம், மரங்களைப் பாதுகாக்க அதை புனிதமாக்கிவிடுவது எளிய வழி, இங்கேயும் அது தான் நடந்திருக்கிறது, வன்னிமரத்தை கடவுளாக்கி வழிபடுகிறார்கள், செருப்பு போட்டுக் கொண்டு அருகில் போக்க்கூடாது என்று ஒரு பெண்மணி சொன்னார்,

நாங்கள் மரத்தின் அருகில் சென்று அதைத் தொட்டுபார்த்தோம், மிகப்பழமையான மரம், கொற்கையில்  நடந்த சகல மாற்றங்களுக்கும் அந்த ஒற்றை மரம் தான் சாட்சி, எவ்வளவோ மனிதர்களை, வாழ்க்கை மாற்றங்களை அந்த மரம் கண்டிருக்ககூடும்,  மரத்தின் பட்டைகளை உடைக்கமுடியவில்லை, அவ்வளவு கடினமேறியிருக்கிறது,

இந்த மரம் எங்களுக்கு சாமி சார், அங்கே பாருங்க ஐந்து தலை நாகம் போல ஒரு உருவம் இருக்கிறது என்று ஒரு  பெண் சுட்டிக்காட்டினார்,

உண்மையில் பட்டு போன மரம் துளிர்க்க துவங்கி இயற்கையில் நாகப்படம் போன்ற அமைப்பு உருவாகியிருக்கிறது, மரத்தின் முன்னால் ஒரு பலிச்சிற்பம் காணப்படுகிறது, கல்லால் ஆன சிறிய விளக்குமாடம் ஒன்றுள்ளது.

கொற்கையில் எங்கே தோண்டினாலும் கடற்சிப்பிகள், சங்குகள் கிடைக்கின்றன,  ஒரு காலத்தில் இங்கே சங்கில் அலங்காரப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்க கூடும் என்கிறார்கள், அக்கசாலை எனப்படும் பண்டைய நாணயச்சாலை, அங்கேயிருந்திருக்கிறது, அக்கசாலை ஈசுவரமுடையார் என்றொரு கோவில் வாழைத்தோப்பு ஒன்றினுள் இடிபாடுகளுடன்  காணப்படுகிறது

முன்பு நான் போயிருந்த போது முகப்பில் ஒரு ஆர்ச்  இருந்தது, அதில் “பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயம்” என்று எழுதப்பட்டிருந்த்து, தற்போது அந்த ஆர்ச் உடைந்து போய் வாழை தோப்பினுள் விழுந்துகிடக்கிறது, இக்கோவிலின் சுற்றுசுவர்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன, இந்த கல்வெட்டுகள் கோவிலுக்கு அளிக்கபட்ட தானத்தைப் பற்றி கூறுகின்றன,

கொற்கை கடற்கரை அருகே இருந்த போதும் வளமையான பூமியாகவே உள்ளது, இங்கே நெல், வாழை, வெற்றிலை ஆகியவை பயிரிடப்படுகின்றன. கொற்கையை நோக்கி வரும் வழியில் சேந்தமங்கலம், மாறமங்கலம், மங்கலகுறிச்சி என்று பாண்டிய மன்னர்கள் தானம் வழங்கிய மங்கள கிராமங்கள் வரிசையாக உள்ளன,

பாண்டிய மன்னர்களின் நினைவுகளை சுமந்த ஊர்கள் கொற்கையை சுற்றிலும் காணப்படுகின்றன, அக்காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் மூவருக்கும் இரண்டு தலைநகரங்கள் இருந்தன. சேரருக்கு வஞ்சி, மற்றும்  முசிறி, சோழருக்கு உறையூர், மற்றும பூம்புகார், பாண்டியர்களுக்கு கொற்கை மற்றும், மதுரை. இந்த இரண்டு தலைநகர்களில் ஒன்று நிர்வாகத்திற்கும் மற்றொன்று வணிக மையமாகவும் இருந்திருக்கின்றன

கொற்கை பாண்டியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த துறைமுகமாகும், இங்கே நாணயங்கள் அடிக்கபட்டிருக்கின்றன, நாணயம் அடிக்குமிடம் தான் அக்கசாலை எனப்படுகிறது, இன்றும் கொல்லர்கள் அதிகம் இப்பகுதியில் வாழ்கிறார்கள்,  இந்தபகுதியில் கண்டெடுக்கபட்ட செப்புகாசுகளில் வெற்றிவேல்செழியன் என்ற வட்டெழுத்துகள் காணப்படுகின்றன

கொற்கையில் பழமையான கோவில் ஒன்று காணப்படுகிறது, அது கண்ணகி கோவில் என்று கருதப்படுகிறது, கொற்கையை சுற்றிய ஊர்களில் கண்ணகி என்று பெயரிடப்படுவதும் அதிகம் காணப்படுகிறது,  இந்த கோவிலில் பூஜை வைப்பவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது இது வெற்றிவேல் அம்மன் என்றும் பாண்டியர் காலத்து கோவில் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்,  சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வெற்றிசெழியன் எனும் பாண்டியன் இக்கோவிலை கட்டியிருக்கலாம் என்று அவர் கூறினார்

தனது பாண்டிய இனத்திற்கு அவப்பெயர் தேடித்தந்த கொல்லர்கள் இனத்தை கொல்ல முடிவு செய்த  வெற்றிச்செழியன்  ஆயிரம் கொல்லர்களை தேடி கண்ணகி கோவிலின் முன்பு கழுவேற்றம் செய்தான் என்றொரு கர்ணபரம்பரை கதையொன்றும் இந்தப் பகுதியில் கூறப்பட்டுவருகிறது

கொற்கையில் கன்னிமார்குட்டம் எனப்படும் சிறிய நீர்தேக்கம் ஒன்றும் காணப்படுகிறது, அது மன்னர்கள் குளிக்க பயன்படுத்தியது என்று கூறினார் உள்ளுர் விவசாயி

கொற்கையில் கண்டு எடுக்கபட்ட வெண்சங்குகள் பலரது வீடுகளிலும் காணப்படுகின்றன, அகழ்வாய்வு மேற்கொண்டவர்களும் சங்குவளையல்களை நிறைய சேகரித்திருக்கிறார்கள், இந்த பகுதியில் காணப்படும் உறைகிணறுகள் இது ஒரு துறைமுக நகரமாக இருந்த்திற்கு சாட்சியாக உள்ளது

கொற்கை முத்துகள் கிரேக்கத்திலும் யவனத்திலும் மிகுந்தபுகழ்பெற்றிருந்தன, இப்போதுள்ள குளம் முந்திய காலத்தில் பெரிய இடுகாடாக இருந்திருக்கிறது என்றும் அங்கே தோண்டுகையில் முதுமக்கள் தாழி கிடைக்கின்றன என்றும் உள்ளுர்வாசிகள் கூறினார்கள்

முந்தைய காலங்களில் தாமிரபரணி ஆறு வடக்கே ஒடியுள்ளது, இப்போது அது திசைமாறி ஏரலுக்கு தெற்கே ஒடுகிறது, ஏரலுக்கு வடக்கே நட்டாத்தியம்மன் கோவில் என்றொரு பழமையான கோவில் காணப்படுகிறது,  நடு ஆற்றுக்குள் அமைந்த கோவிலே நட்டாத்தியம்மன் கோவில். ஆகவே ஆற்றின் ஒட்டம் திசைமாறியிருப்பதை இது தெளிவுபடுத்துகிறது

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ள்ஸ், பிளினி போன்ற பயணிகளின் குறிப்புகளில் அறியமுடிகிறது, திசையாயிரத்து ஐநூற்றுவர் என்ற வணிக்குழு முத்துவணிகத்தில் சிறப்பு பெற்றிருந்திருக்கிறார்கள்,

முன்பு கொற்கையில் ஒரு அகழ்வாய்வு காப்பகம் ஒன்று செயல்பட்டுவந்தது, அதை தற்போது திருநெல்வேலிக்கு மாற்றிருக்கிறார்கள், திருநெல்வேலி பாளையஙகோட்டையில் உள்ள அரசு ம்யூசியம் அரிய சிற்பங்களும் அகழ்வாய்வு பொருட்களும் கொண்டது, அது அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று

கொற்கையின் பழமையை அறிந்து கொள்வதற்காக தொல்பொருள் ஆய்வுத்துறையினர்  பனிரெண்டு இடங்களில் அகழ்வாய்வுப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள், இங்கே கண்டறியப்பட்ட பானையோட்டில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு. 785 முதல் 95 ஆண்டுகள் கூடவோ குறைவாகவோ இருக்ககூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய கண்டுபிடிப்பாகும்

இன்றைய கொற்கையில் கடல் இல்லை, ஆனால் அதன் நினைவுகளில் அலைகள் புரண்டு கொண்டுதானிருக்கின்றன, அதன் வெளிப்பாடோ என்னவோ கடற்பறவைகள் இன்றும் கொற்கை மரங்களுக்கு வந்து நின்று கடந்து போகின்றன, இன்றளவும் இயற்கை, கொற்கையின் மகத்துவத்தை பசுமையாக நினைவில் வைத்திருக்கிறது போலும்.

••••

பயணவழியில் சங்க இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாற்றுபடையை படித்துக் கொண்டு வந்தேன், நத்தத்தனார் என்னும் கவிஞரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை. இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னன் நல்லியக்கோடனின் புகழ்பாடுகின்றன இக்கவிதைகள், நல்லியக்கோடனை கண்டு பரிசு பெற்ற ஒரு பாணன் இன்னொரு பாணனுக்கு சொல்வது போல பாடல் அமைக்கபட்டுள்ளது

இப்பாடலில் வறுமையில் வாடிய ஒரு பாணன், வள்ளல் நல்லியங்கோடனை காணச்செல்கிறான், அந்த வறுமை எப்படியிருந்தது என்பதை சுட்டிகாட்டி எழுதப்பட்ட கவிதை வரிகள் மனதைச் சுடுவதாக அமைந்துள்ளன

நல்லியங்கோடனைக் காணுமுன் இருந்த வறுமைநிலை எப்படியிருந்தது என்பதைக் கூறும் கவிதை வரிகளை பாருங்கள்

…….  இந்நாள்

திறவாக் கண்ண சாய் செவிக் குருளை

கறவாப் பால் முலை கவர்தல் நோனாது

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் [130-132]

அதாவது  இப்போது தான் பிறந்து இன்னமும் கண்விழிக்காத வளைந்த காதுகளை உடைய நாய்குட்டி பால் அருந்துவதற்காக தாயின் மடியில் முட்டும் போது குட்டிக்கு பால்புகட்டுவதற்கு கூட பால் இல்லாமல் வற்றிப்போன முலையுடையதாக  அடுக்களையில் படுத்துக்கிடக்கிறது இருக்கிறது குட்டியை ஈன்ற தாய் நாய் என்ற காட்சி முன்வைக்கபடுகிறது

வறுமை மனிதர்களை மட்டுமில்லை, அவர்களுடன் இணைந்து வாழும் நாயினையும் பட்டினியாகவே போட்டிருக்கிறது, பட்டினியிலும் நாய் குட்டிகளை ஈன்றுகிறது, ஆனால் குட்டிக்குப் பால் தர தன்னிடம் பால் இல்லை என்ற வலியில் அது குரைக்கிறது, அந்த குரைப்பொலி வறுமையின் சூடு நிரம்பியது.  நாயே இந்த நிலையில் இருக்கிறது என்றால் வீட்டில் வாழும் மனிதர்கள் எப்படியிருந்திருப்பார்கள், அந்த வரிகளை படிக்கையில் மனது துவண்டுவிடுகிறது

காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த

பூழி பூத்த புழல் காளாம்பி

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்

வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்

அழி பசி வருத்தம் வீட………… [133-140]

அதாவது அடுப்படியின் கூரை இற்றுவீழ்ந்து கிடக்கின்றன, கரையான் பற்றிய சுவர்களில் காளான் முளைத்திருக்கின்றன, பசியால் வருந்தி ஒடுங்கிய வயிறு கொண்ட பாணனின் மனைவி மெலிந்த கைகளை கொண்டிருக்கிறாள்,  அவள் பிறர் அறியாமல் தனது கூர்மையான நகத்தினால் கிள்ளிய குப்பைக்கீரையை உப்பின்றி வேகவைத்து அதை ஊரார் பார்த்துவிட்டால் அவமானமாகிவிடுமே என்று நினைத்து வாசல்கதவை அடைத்து தனது சுற்றத்துடன் சேர்ந்து உண்ணும் கொடிய பசிய துன்பம் அந்த வீட்டில் நிலவியது என்கிறது இப்பாடல்

வான்கோ The Potato Eaters என்றொரு ஒவியம் தீட்டியிருக்கிறார், சுரங்கத் தொழிலாளர்கள் வீட்டில் உருளைக்கிழங்கை சாப்பிடும் காட்சியது, அந்த ஒவியம் மிகவும் பிரபலமான ஒன்று, அந்த ஒவியத்தினை காண்கையில் ஏற்படும் அதிர்ச்சி, மனக்கொந்தளிப்பு போல பத்து மடங்கு இந்த கவிதையை வாசிக்கையில் ஏற்படுகிறது,

கடந்த காலத் தமிழகம் இனிமையும் வளமையும் மட்டும் கொண்டதில்லை, ஒரு பகுதியில் செழுமை இருந்தால் இன்னொரு பகுதியில் இப்படி மடிவற்றிப்போன நாய் குரைக்கும் வறுமையும் காணப்பட்டிருக்கிறது,

இந்த கவிதையில் வரும் அந்த நாயின் படிமம் ஒரு போதும் மறக்கமுடியாதது, ஒரு கணம் உங்கள் கண்களை மூடி நினைத்துபாருங்கள், அந்த நாயின் தோற்றம் நெருப்பின் சுடர் போல மினுங்குகிறது, தனது மடியில் பால் தேடி முட்டும் கண்விழிக்காத நாய்குட்டியை பார்த்தபடி வேதனையில் குரைக்கும் நாயின் குரைப்பொலி நம் மனசாட்சியை உலுக்க கூடியது, அது நாயின் குரல் மட்டுமில்லை என்றென்றும தொடரும் மானுட அவலத்தின் குரல்.

•••

0Shares
0