தோக்கியோ சுவடுகள் 1

இலவம்பஞ்சு பறப்பது போலக் காற்றில் பனி விழுந்து கொண்டிருந்தது. மூன்று அடுக்கு குளிராடைகளைத் தாண்டி குளிர் உடலை நடுக்கிக் கொண்டிருந்தது, கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடியே பனிப்பொழிவை பார்த்துக் கொண்டிருந்தேன், சகுரா எனப்படும் பூக்கள் மலர்கிற காலத்தில் ஜப்பானைக் காண வேண்டும், அது பேரழகானது என்றார்கள், அன்று பனி, வானெங்குமிருந்து பூக்கள் உதிர்வதைப் போலவே இருந்தது

கரிசலின் வெயில் குடித்து வளர்ந்த சிறுவன் நான், இது போன்ற பனிப்பொழிவைக் காண்பது எனக்கெல்லாம் புது அனுபவம், வெளிநாட்டுப் பயணத்தில் ஒன்றிரண்டு முறை கடுமையான பனிப்பொழிவுகளைக் கண்டிருக்கிறேன் என்றாலும் ஜப்பானில் பனிபெய்வது உற்சாகம் தரும் அனுபவமாகவே இருந்தது. பனியை பார்த்தபடியே இருந்தேன்,

ஆகாசத்திலிருந்து உப்பு உதிர்வது போல ஆரம்பித்து மெல்ல அது உருமாறி வெண்ணிற மலர்கள் காற்றில் பறப்பது போலப் பனி விழுந்து கொண்டிருந்தது, பனி பெய்யப்போவதை பற்றிக் காலையில் இருந்தே வானிலை முன்னறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள், அதை வரவேற்ற மக்கள் ஆசையாகக் காத்திருந்தார்கள், குளிர்காற்றுடன் வானிலை மூட்டமாகத் தென்பட்டது, விட்டுவிட்டு மழையும் குளிருமாக மைனஸ் இரண்டு டிகிரியில் இருந்தது

உவேனா என்ற இடத்தில் உள்ள தோக்கியோ நேஷனல் ம்யூசியம் காண்பதற்காகச் சென்றிருந்தேன், வழி முழுவதும் பனிபெய்யத் துவங்கியது, பாதைகளில் பனி விழுந்து நடப்பதற்கு வழுக்கியது, குளிர் தாளமுடியாமல் ஒடினேன், எங்களுடன் வந்திருந்த சதீஷின் மகன் பனியை கையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்,

என் கண்முன்னே காய்ந்த மரங்களில் பனி விழுந்து வெண்ணிற உறை போர்த்தியது போல உருமாறத் துவங்கியது, யுகிகுனி என்று ஜப்பானைச் சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கவாபதா, அதாவது பனியின் தேசம் என்று பொருள்,

பருவகாலங்களைக் கொண்டாடுவது ஜப்பானியர்களின் மரபு, ஜென் கவிஞர் பாஷோவில் துவங்கி இன்று வரை பருவமாறுதல்களை வியந்து எழுதாத எழுத்தாளர்களேயில்லை, ஜப்பானிய மக்களும் பருவமாற்றத்திற்கு ஏற்றபடியே தான் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

ஜப்பானில் நான் கண்ட முதல் அம்சம், அமைதி.

பொது இடங்களில் யாரும் உரத்து பேசிக் கொள்வதில்லை, ஆரவாரம் இல்லை, அமைதியாக, நிழல்கள் நடந்து செல்வது போலக் கடந்து போகிறார்கள், சாலைகள், வீடு, பணியிடம் எங்கும் பேரமைதி நிலவுகிறது, எதிலும் பதற்றமில்லை, நெருக்கடியான ரயில்பயணத்திலும் கூடப் புத்தகம் படித்தபடியோ, இசை கேட்டபடியோ தான் வருகிறார்கள், வெட்டி அரட்டை அடிப்பது, அரசியல் பேசுவது, எச்சில் துப்புவது என ஒரு மனிதனை கூடக் காணமுடியவில்லை,

தொழில்நுட்பத்தில் உச்சத்தைத் தொட்ட ஒரு நாட்டில் மரபும், பண்பாடும் அழுத்தமாகப் பின்பற்றப்பட்டு வருவது சந்தோஷம் அளிக்கிறது,

நன்றி தெரிவித்தலை தங்களின் வாழ்க்கை முறையாகவே ஜப்பானியர்கள் கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு சிறு செயலுக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள், யார் என்ன உதவி கேட்டாலும் ஒடிவந்து செய்கிறார்கள்,

பொதுஇடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, அடுத்தவரை இடிக்காமல், தள்ளாமல் நடப்பது, வரிசையில் அமைதியாகக் காத்து நிற்பது, இனிமையாகப் பேசுவது, பரஸ்பர மரியாதை, அன்புகாட்டல், தேசப்பற்று, மொழிப்பற்று என அவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது,

எதையும் திட்டமிட்டு முறையாக, கலையுணர்ச்சியுடன் செய்கிறார்கள், எரிமலையின் அடியில் வாழ்கின்ற போதும் அவர்களிடம் பயமேயில்லை, சுனாமியும் நிலநடுக்கமும் அவர்களுக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பை தான் அதிகரித்திருக்கிறது,

தோக்கியோ நகரில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன், Yaesu Book Center என்ற எட்டுமாடிக் கடையது, ஜப்பானில் சிறுவர் முதல் கிழவர் வரை அத்தனை பேரும் காமிக்ஸ் எனப்படும் படக்கதை வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள், ஏழாவது தளத்தில் ஆங்கிலப்புத்தகங்கள் கிடைக்கின்றன, மற்ற அத்தனை தளங்களிலும் ஜப்பானியப் புத்தகங்கள்,

ஜப்பானிய புத்தகங்கள் நமது புத்தகங்களுக்கு நேர்மாறானது, நமது கடைசிப்பக்கம் தான் அவர்களின் முதல்பக்கம், கடைசியில் இருந்து முதல் நோக்கி படித்துக் கொண்டு வருவார்கள், ஆகவே அவர்களின் பக்க எண்வரிசையும் அப்படியே உருவாக்கபட்டிருக்கும், அச்சு அமைப்பில் மிகவும் நேர்த்தியானவை, ஆனால் விலை மிகவும் அதிகம், 240 பக்க நாவலின் விலை சராசரியாக இரண்டாயிரம் ரூபாய், ஆனால் அதை ஆசையோடு வாங்கிப்போகிறார்கள்,

Manga comics எனப்படும் சித்திரக்கதைகள் அவர்களுக்கு விருப்பமானது, இந்தவகைக் காமிக்ஸில் புத்தரின் வாழ்க்கையில் இருந்து காமசூத்ரா வரை கிடைக்கிறது. போர்னோகிராபி படங்கள், காமிக்ஸ் புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன, இதற்கென ஒரு தளம் முழுவதும் ஒதுக்கபட்டிருக்கிறது, இதுபோலவே இசை கேட்பதில் ஜப்பானியர்கள் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள், ஜாஸ் இசை விரும்பி கேட்கப்படுகிறது. விதவிதமான முகமூடிகள், சிகை அலங்காரங்கள், உடை அலங்காரங்களை இளைஞர்கள் விரும்பி அணிகிறார்கள்,

ஜப்பானின் இரவு வாழ்க்கை குடியும் இசையும் ஒன்று கலந்தது, எவ்வளவு குடித்தாலும் ஒருவர் கூட உளறுவதில்லை மற்றவரிடம் தவறாக ஒரு சொல் பேசுவது கிடையாது, பொது இடங்களில் குடித்து மயங்கி கிடப்பவன் கூட இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் கிடக்கிறான்,

ஜப்பானின் இன்றைய வாழ்க்கை முறை பலவிஷயங்களில் அமெரிக்காவை பின்பற்றுகிறது என்றாலும் தனிமனிதர்களின் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விஷயங்களில் அது தனது மரபை கைவிடவேயில்லை

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஜப்பான் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். ஜென் கதைகளும் ஹைகூ கவிதைகளும் ukiyo-e ஒவியங்களும், குழலிசையும் , கவாபதா துவங்கி முரகாமி வரையான எழுத்தாளர்களும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள், ஜப்பானை எனது ஆதர்சங்களில் ஒன்றாகவே எப்போதும் நினைத்து வருகிறேன்,

தோக்கியோவில் முழுமதி அறக்கட்டளையை நடத்தி வரும் நண்பர்கள் அருள், செந்தில், வேல்முருகன், துரைப்பாண்டி, பாலு, சதீஷ், ஆகியோர் அழைப்பை ஏற்று ஜப்பான் சென்று வர சந்தர்ப்பம் கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், என் மனைவியுடன் பயணம் செல்வது என முடிவு செய்து கொண்டேன்.

ஜப்பானில் வசிக்கும் தமிழர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்குள் இருக்ககூடும். இதில் எண்பது சதவீதம் பேர் தோக்கியோவில் வசிக்கிறார்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்கள் எண்ணிக்கை வெகுகுறைவாகவே இருந்திருக்கிறது,

மென்பொருள் மற்றும் கனரகஇயந்திர வேலைகள், வங்கி, மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணிகள் காரணமாக இன்று நிறையத் தமிழர்கள் ஜப்பானில் பணியாற்றுகிறார்கள். அவர்களை ஒன்றிணைப்பது தமிழ் மொழியும் அதன் பண்பாட்டு தளமும் தான்,

முழுமதி அறக்கட்டளை என்பது ஜப்பானில் வசிக்கிற இளைஞர்கள் உருவாக்கிய அமைப்பு, இதன் நோக்கம் தமிழகத்தில் உள்ள பின்தங்கிய பள்ளிகளை மேம்படுத்துவது, கல்வி உதவி கோரும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது, இயற்கை விவசாயம் சார்ந்த விவசாயிகளுக்கு உதவி செய்வது, கிராமப்புறங்களில் மருத்துவமுகாம்களை நடத்துவது எனச் செயல்பட்டு வருகிறார்கள்,

இவர்களை ஒன்றிணைக்கும் புள்ளி ஈழத்தமிழர்கள் மீது இவர்கள் கொண்டுள்ள பிடிப்பும் அக்கறையும் ஆகும்,

ஈழத்தில் நடைபெற்ற போர்கொடுமைகளைக் கண்டித்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள், அயல்நாட்டில் வாழ்ந்தபடியே தமிழ்நாட்டின் நலத்தோடும் ஈழத்தமிழர் நலனிற்காகவும் அர்பணிப்புடன் செயல்பட்டுவருகிறார்கள்

அவர்களின் பொங்கல் விழா கொண்டாட்டம் என்பது தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடும் நிகழ்வு, இதற்குச் சிறப்பு விருந்தினராக நான் அழைக்கபட்டிருந்தேன்,

இருநூறு குடும்பங்கள் கலந்து கொண்ட இந்த விழா தோக்கியோவில் உள்ள ஒரு பள்ளி அரங்கில் நடைபெற்றது, அயல்நாட்டில் இத்தனை தமிழர்கள் ஒன்றுகூடி பொங்கலை கொண்டாடி மகிழ்வது சந்தோஷமாக இருந்தது. இந்த நிகழ்வில் எனது உரையும், கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது,

அத்துடன் அடுத்தச் சில நாட்களில் நண்பர்களுடன் இலக்கிய உரையாடல்கள், சுற்றுப்பயணம், கலைக்கூடங்களைக் காண்பது எனப் பகல் இரவாக அலைந்து கொண்டேயிருந்தேன்,

ஜனவரி 30ம் தேதி இரவு விமானத்தில் சென்னையில் இருந்து தோக்கியோ கிளம்பும் போது சென்னை விமானநிலையத்தில் ஏடிசியாகப் பணியாற்றும் நண்பர் மணிமாறன் விமானநிலையத்திற்கு வந்திருந்தார்

மணிமாறன் ஒரு அற்புதமான மனிதர், தேர்ந்த இலக்கிய வாசகர், அவரது துணைவியார் ஒரு சித்தமருத்துவர், நல்ல இலக்கியங்களைத் தேடிவாசிப்பதுடன் எழுத்தாளர்களை நேசிப்பது அவரது இயல்பு, எனது பயணம் பற்றிச் சொன்னவுடன் தானே உடன் வந்திருந்து எங்கள் விமானம் கிளம்பும் வரை உடனிருந்தார்,

இரவு விமானத்தில் சிங்கப்பூர், அது காலை ஆறுமணிக்கு சிங்கப்பூரை அடைந்த்து, பின்பு அங்கிருந்து தோக்கியோ, அது ஏழு மணி நேரப்பயணம், மாலை ஆறு மணிக்கு தோக்கியோவை அடைந்தோம்

ஜப்பானுக்குச் செல்லும் விமானத்தில் தரப்படும் உணவு பெரிதும் ஜப்பானிய முறையில் தயாரிக்கபட்டது, அதைச் சாப்பிடுவது எனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால் இந்திய உணவு வேண்டும் எனக் கேட்டிருந்தேன், முட்டைக்கோஸ் இலைகளும், ஒரு துண்டு ரொட்டியும், வெண்ணையும், ஒரு கப் தயிரும், வேகவைத்த உருளைகிழங்கும், சாதமும் தந்தார்கள், சுவையேயில்லை, சூடாக இருக்கிறது என்பதால் மட்டுமே அதைச் சாப்பிட்டேன்,

விமானத்தில் இரண்டுமணி நேரம் படித்துக் கொண்டுவந்தேன், கெஞ்சிக்கதை (Tale of genji) என்ற முரசாக்கி சீமாட்டியின் நாவல், 11ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது, இதையே உலகின் முதல்நாவல் என்கிறார்கள், இளவரசன் கெஞ்சியின் காதல்கதைகளை விவரிக்கிறது நாவல்,

காலத்தின் பின்னால் சென்று ஜப்பானை காண்பது மனதில் ஏதேதோ கற்பனைகளை உருவாக்கியது, நாவலை மூடி வைத்துவிட்டு வெளியே தெரியும் மேக்க்கூட்டங்களை வேடிக்கை பார்த்தபடியே வந்தேன், விமானத்தில் என்னால் உறங்கமுடியாது, ஆகவே யோசனைகள் கிளைவிட்டபடியே இருந்தன

எழுத்தின் வழியே ஒரு நாடும் அதன் இலக்கியங்களும் நமக்கு அறிமுகம் ஆகும் போது அது தரும் எழுச்சி ஒரு விதமானது என்றால் நேரில் அதைக்காண்கையில் அடையும் உணர்ச்சி இன்னொரு விதமானது, அதற்காகவே ஜப்பானை எதிர்கொள்ளத்துடித்துக் கொண்டிருந்தேன்,

விமானத்தில் குளிர்காலம் என்பதால் எதிர்பாராமல் தும்மலும் இருமலும் வந்துவிடும், அது அடுத்தவர்களைப் பாதிக்க்கூடாது என ஜப்பானியர் பலரும் காகித முககவசம் அணிந்திருக்கிறார்கள், நம்மவர்கள் தான் அடுத்தவரைப் பற்றிக் கவலையின்றி வெடித்துத் தும்மி உறங்கும் பயணிகளைக் கூட எழுப்பிவிட்டுவிடுகிறார்கள்,

நேரத்தை கடத்துவதற்காக உலகத்திரைப்படங்களில் எதையாவது ஒன்றை காணலாம் என Mr. Go என்ற கொரிய சீன கூட்டுதயாரிப்பில் உருவான படத்தைக் காணத்துவங்கினேன், பேஸ்பால் விளையாடும் கொரில்லா ஒன்றைப்பற்றியது, சர்க்கஸில் இருந்த அந்தக் கொரில்லாவிற்குப் பேஸ்பால் விளையாட கற்றுதருகிறாள் அதன் பயிற்சியாளர், சர்க்கஸ் பொருளாதாரச் சிரமத்திற்கு உள்ளாகவே அந்தக் கொரில்லாவை வைத்து ஒரு போட்டி விளையாட்டு நடத்த திட்டமிடுகிறார்கள், கொரில்லா அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் பற்றிய படம்,

கொரில்லா மொழி கற்றுக் கொள்வதைப்பற்றிப் படத்தில் ஒரு காட்சி வருகிறது, அதைப்பார்த்துக் கொண்டிருந்த போது Koko: A Talking Gorilla படம் நினைவுக்கு வந்த்து, உடனே மனம் கொரில்லாவை பற்றி யோசிக்கத் துவங்கி படத்திலிருந்து நழுவிப்போய்விட்டது,

ஜப்பானிய ஒவியர்கள் நேரில் புலியை காண்பதற்கு முன்பாகவே அதை ஒவியமாக வரைந்துவிட்டார்கள் என்று வாசித்திருக்கிறேன், ஒரு விலங்கை கற்பனையாக உள்வாங்கிக் கொண்டு வரைவது சவால், தோக்கியோ ம்யூசியத்தில் அப்படி ஒரு மயில் ஒவியம் ஒன்றை கண்டேன், அந்த மயில் நாம் கண்டறிந்துள்ள மயிலைப் போன்றதாகயில்லை, கழுத்து வழக்கத்தை விடச் சிறியதாக, வளைந்து ஒருச்சாய்ந்து இருப்பதாக வரையப்பட்டிருந்தது, தோகையின் விரிப்புப் பெரியதாக இருந்தது

அந்த ஒவியம் எந்த நூற்றாண்டினைச் சேர்ந்த ஒன்று எனப்பார்த்தேன், 11ம் நூற்றாண்டு ஒவியமது, பௌத்தம் வழியாகவே மயில் ஜப்பானியர்களுக்கு அறிமுகமாகியிருக்கிறது, குறிப்பாக மயிலை காதலின் சின்னமாக, தூய இதயத்தின் அடையாளமாகவே கருதுகிறார்கள், அதனால் படுக்கை அறையில் மயிலின் ஒவியத்தை வைத்துக் கொள்வதற்கு விரும்பியிருக்கிறார்கள், மயில்தோகையில் உள்ள நூறு கண்களைக் கருணையின் வடிவமாகவே கருதுகிறார்கள், ஜப்பானியர்களுக்கு மயில் கருணைதெய்வத்தின் வடிவம்,

ஜப்பானியர்கள் தங்களுக்கென ஒரு அகப்பார்வையை, அறத்தை, வாழ்வியல்முறையைக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் அழகியல் தேநீர் அருந்துவதில் துவங்கி இறுதிசடங்குகள் வரை நுட்பமாக இருக்கிறது,

ஜப்பான் அதிகம் மலைகளும், காடுகளும் கொண்ட பெரிய தீவு, உலகில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகரங்களில் ஒன்று தோக்கியோ, நோரிதா, ஹனைதா என இரண்டு விமானநிலையங்கள் இருக்கின்றன, நான் நோரிதாவில் வந்து இறங்கினேன்

விமானநிலைய குடியுரிமை சோதனைகளை முடித்து வெளியே வந்த போது நண்பர் துரைப்பாண்டியும் அவரது துணைவியாரும் மகளும் எங்களை வரவேற்க காத்திருந்தார்கள்,

இந்த நகரினை டோக்கியோ என அழைப்பதா, இல்லை இதன் பெயர் தோக்கியோவா எனக்கேட்டபோது துரைப்பாண்டி சொன்னார்

ஜப்பானிய மொழியில் டா உச்சரிப்புக் கிடையாது, ஆகவே தோக்கியோ என்றே அழைக்க வேண்டும்

விமானநிலையத்தில் உள்ள ஸ்டார்பக்ஸ் காபி கடை ஒன்றில் அமெரிக்கக் காபி ஒன்றினை குடித்துவிட்டு வெளியே வந்த போது குளிர்காற்று உடலை நடுங்கச் செய்தது, என் மனைவி பயணத்தில் களைப்படைந்து போயிருந்தார்

போதுமான குளிராடைகளை அணிந்து வந்திருக்கவில்லை என்பதால் காரை நோக்கி ஒடினோம், காரில் வெதுவெதுப்பான சூடு, பயணம் இதமாக இருந்தது, நோரிதா விமானநிலையம் தோக்கியோவில் இருந்து ஒன்றரை மணிநேர தூரத்திலிருக்கிறது, ஆகவே இரவு வெளிச்சத்தின் ஊடாக மின்னும் நகர அழகை ரசித்தபடியே அருளின் வீட்டிற்குச் சென்றோம்,

எனக்காக விடுதியில் அறை எடுக்க வேண்டாம், நண்பர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்கிறேன் எனச் சொல்லியிருந்தேன், அதனால் அருள் வீட்டில் நான்கு நாள், செந்தில் வீட்டில் இரண்டு நாள், பாலு வீட்டில் ஒரு நாள், மாறிக் கொண்டேயிருந்தேன்,

ஜப்பானில் வீடுகள் மிகச்சிறியவை, அடக்கமானவை, அடுக்குமாடி குடியிருப்பின் 14வது தளத்தில் அருளின் வீடு, அவ்வளவு உயரத்தில் இருந்து நகரை வேடிக்கை பார்ப்பது அற்புதமாக இருந்தது.

அருள் எம்ஐடி மாணவர், கனரகதொழிற்சாலையில் பணியாற்றுகிறார், அவரது வீட்டில் வேல்முருகனையும், அவரது மனைவி சிந்துவையும் சந்தித்தேன்,

சிலரை பார்த்தவுடனே பல ஆண்டுகள் பழகியது போன்ற நெருக்கம் உருவாகிவிடும், அப்படியான ஒரு மனிதர் வேல்முருகன், அவரது மனைவி சிந்து அற்புதமான பெண், அக்கறையுடன் அவர் எங்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்தார், சிந்து பேசும்போது எனது தங்கைகளில் ஒருத்தியை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார், அதே சிரிப்பு, அக்கறை, சொந்த சகோதரனின் வீட்டிற்கு வந்திருப்பது போன்ற நெருக்கம் தருவதாக இருந்தது அந்த வரவேற்பு,

சூடான காபியும் தோசையும் எங்களும் தந்து உபசரித்த சிந்து என் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது நண்பர்கள் செந்தில், சுந்தர், முத்து, துரைப்பாண்டியுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், செந்தில் இணையத்தின் வழியே அறிமுகமானவர், தீவிரமான இலக்கியவாசிப்புப் பழக்கம் கொண்டவர், மன்னார்குடியை சேர்ந்தவர், அவர் தான் எனது பயணத்தின் முக்கியக் காரணிகளில் ஒருவராக இருந்தார்,

சுந்தர் Larsen & Toubro நிறுவன பணிக்காக கடந்த ஒரு வருஷமாக தோக்கியோவில் வசிப்பவர், எங்களின் பேச்சு இலக்கியம், தமிழ்சினிமா, இணையம், சென்னை புத்தகக் கண்காட்சி என நீண்டு சென்றது, இரவு பனிரெண்டரை மணிக்கு உறங்கச் சென்றேன், வெளியே குளிர் மைனஸ் ஒன்றாக இருந்தது, பயண அசதியும், களைப்புமாக உறங்கி எழுந்த போது கண்ணாடி ஜன்னல்களில் குளிர்படிந்திருந்தது,

விடுமுறை நாள் என்பதால் வீதிகளில் ஆள்நடமாட்டமேயில்லை, நம்மைப் போலவே சூரியனை வழிபடும் நாடு ஜப்பான், ஆகவே ஜப்பானிய சூரிய உதயத்தைக் காண ஆசைப்பட்டேன், அன்று சூரிய வெளிச்சத்தைக் காணமுடியவில்லை, ஒரே பனிமூட்டம்,

அருள் வீட்டிலிருந்து ப்யூஜி மலையைக் காணமுடியும், அன்று பனிமூட்டமாக இருந்த காரணத்தால் ப்யூஜி தென்படவில்லை, ஆனாலும் அதன் விளிம்புகள் கண்ணில்பட்டன, அதை வேடிக்கை பார்த்தபடியே காபி குடித்துக் கொண்டிருந்தேன், இந்தப் பயணத்தில் ஜப்பானின் முக்கியமான கலைக்கூடங்கள், ஹிரோஷிமா நினைவிடம், அருங்காட்சியகங்கள், பௌத்த ஷிண்டோ கோவில்கள், பாஷோ, ஒசு நினைவிடங்கள், எனக் காண வேண்டிய பட்டியல் நீண்டதாக இருந்தது

இதை முறைப்படுத்தி எப்போது எங்கே போகப்போகிறோம் என்பதை ஒழுங்கு செய்து கொண்டுவிட்டு, முதல் இடமாகக் காமகுராவில் உள்ள புத்தர் சிலையைக் காண்பது என முடிவு செய்து கொண்டேன்.

•••

0Shares
0