தோக்கியோ சுவடுகள் 2

தோக்கியோவில் இருந்து ஒரு மணி நேரப்பயணத்தில் உள்ளது காமகுரா, அங்கே பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று வெட்டவெளியில் அமைக்கபட்டிருக்கிறது, 13.35 மீட்டர் உயரமுள்ள வெண்கல புத்தரின் சிலையது, (Kamakura Daibutsu) ஜப்பானின் தேசிய அடையாளங்களில் ஒன்று அந்தப் புத்தர், 1252ம் ஆண்டு அதைச் செய்திருக்கிறார்கள்,

ஜப்பானில் உள்ள இரண்டாவது பெரிய புத்தர் சிலை இதுவே, முதற்சிலை நாராவில் உள்ளது, ஆகவே பிரம்மாண்டமான புத்தனைக் காண்பதில் இருந்து பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்து கொண்டு வெளியே வந்தபோது வெயில் வந்திருந்தது

இது போன்ற குளிர்நகரங்களில் வெயில் தரும் உற்சாகத்திற்கு இணையே கிடையாது, கையில் வெயிலை அள்ளி குடிக்க வேண்டும் போலிருந்தது,

அமித புத்தனைக் காண்பதற்காகப் பயணம் செய்யத்துவங்கினோம்,எங்களுடன் பாலு வந்திருந்தார், இந்தச் சிலை ஒருகாலத்தில் மரத்தில் செய்யப்பட்டிருந்தது, பின்பு அது சிதைந்துவிடவே வெண்கலத்தில் புதிய சிலை செய்யப்பட்டது என்ற தகவல்களை வாசித்தபடியே வந்தேன்,

பிரம்மாண்டமான அந்தப் புத்தர்சிலையைக் காண்பது அரியதொரு அனுபவம், புத்தரின் சாந்தம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது, அமர்ந்த கோலத்தில் புத்தரின் கண்கள் தாழ்ந்திருக்கின்றன, அந்தக் குனிந்த புருவமும் மூக்கும், நெற்றியும் பார்க்க பார்க்க மனது விம்முகிறது,

மகாபுத்தனைப் பார்த்தபடியே மெய்மறந்து நின்றிருந்தேன், அப்போது ஒரு தமிழ்குரல் நீங்கள் சென்னையா எனக்கேட்டது,

ஒரு பெண் அருகில் வந்து என்னிடம் கேட்டார்,

ஆமாம் என்றேன்,

அவரது கணவர் என்னைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தானே, நான் உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்றார்,

அவர் துபாயில் வசிப்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்க்க வந்திருக்கிறார், ஒரு பழைய நண்பரை இப்படியான இடத்தில் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது,

அந்த இடத்தில் நாங்கள் மட்டும் தான் உரத்து பேசிக் கொண்டிருந்தோம், மற்றப் பயணிகள் அமைதியாகப் புத்தனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள், இது ஜப்பான் என நினைவுக்கு வந்தவுடன் நாங்களும் அமைதியானோம்,

பிரம்மாண்டமான அந்தப் புத்தன் சிலையின் உட்பகுதியைக் காண்பதற்கு வழி அமைத்திருக்கிறார்கள், உள்ளுக்குள் வெற்றிடம், அதன்வழியே புத்தனை காண்பது ஒரு ஆன்மீக அனுபவம், நமக்குள் இருக்கும் புத்தனை நாம் அடையாளம் கண்டு கொள்ளும் வழியது

சிலையை விட்டு அகல மனதே வரவில்லை, பார்க்க பார்க்க மனம் களிப்படைகிறது, சொல்லற்ற இன்பமது, ஒரு மணிநேரம் அந்தச் சிலையைப் பார்த்தபடியே நின்றிருந்தேன், இளவெயில் ஒளிரத் துவங்கியது, அந்த வெளிச்சத்தில் புத்தனை காண்பது பேரனுபவம், புத்தனின் உதட்டில் உறைந்து போன புன்னகை, திறந்த வெளியில் மழையும் வெயிலும் பனியும் கண்ட புத்தனின் தோற்றம் ஏதோதோ இனம் புரியாத இன்பங்களை அளிப்பதாக இருந்தது

மகாபுத்தனை விட்டு அகலமனமின்றி விலகி அருகாமையில் உள்ள மூங்கில் வனத்தை நோக்கி நடந்தோம், அங்கே புத்த துறவிகளின் சிலைகள் காணப்பட்டன

வளாகத்திலிருந்த கடையில் ஜப்பானிய தேநீர் குடித்துவிட்டுக் கருணை தேவதையின் கோவில் ஒன்றை காணச்சென்றேன்

Hasedera temple மலையின் உயரத்தில் இருக்கிறது, சுற்றிலும் அழகிய தோட்டம், மலர்கள் பூக்கின்ற காலத்தில் இந்தக் கோவில் அற்புதமாக இருக்கும் என்றார்கள், படியேறி கருணைதெய்வத்தினைக் காணச்சென்றபோது 90 வயது பெண் ஒருவர் திடமாகப் படியேறி முன்னால் சென்று கொண்டிருந்தார், அந்த நடையில் தளர்ச்சியில்லை,

ஜப்பானில் முதியவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள், பொது இடங்களில் பதின்வயதினரைக் காண்பது அரிது, கர்ப்பிணி பெண்களை வெளியில் காணவே முடியாது, எனது பயணத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணைக் கூடக் காணமுடியவில்லை, முதியவர்கள் தனியே பயணம் செய்கிறார்கள், பாதுகாப்பு விஷயத்தில் ஜப்பானுக்கு இணை எதுவுமில்லை, திருட்டுப் பயம் கிடையாது, வன்முறை, வழிப்பறிக் கிடையாது, எந்த இரவிலும் தனியாகப் பயணம் செய்யலாம்,

ஜப்பானின் முக்கியப் பிரச்சனை தற்கொலை, மனவெறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வாரம் திங்கள்கிழமை அலுவலகம் கிளம்பும் காலை எட்டு மணி அளவில் யாரோ ஒருவன் மின்சார ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுவிடுகிறான்,

இதன் காரணமாக ரயில் போக்குவரத்துப் பாதிக்கபடுகிறது, தனது இறப்பின் வழியே அர்த்தமற்ற இந்த நகர வாழ்க்கையைச் சற்று நேரம் நிறுத்திவைத்த சந்தோஷம் இறந்த மனிதனுக்குக் கிடைக்கிறது என்கிறார்கள்,

ஜப்பானியர்கள் தனிமையை விரும்புகிறார்கள், அரிதாகவே இரண்டு பேர் பேசிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது, இளம் பெண்கள் தான் பொதுஇடங்களில் ஒன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், மற்றவர்கள் தனிமனிதர்களாகவே உணருகிறார்கள், ஜப்பானில் தற்கொலையும் பண்பாட்டின் ஒரு அங்கமாகவே அறியப்படுகிறது,

உலகிலே அதிக அளவு கற்பனையான ராட்சச உருவங்களை உருவாக்கியவர்கள் ஜப்பானியர்களே, காட்சிலா துவங்கி மாங்கா வரை விநோத மிருகங்கள் அதிகம் இடம்பெறுகின்றன, இது அவர்களின் அடக்கபட்ட மனதின் வெளிப்பாடு என்கிறார்கள்,

ஜப்பானியர்களின் வரலாற்றை வாசிக்கும் போது அவர்களிடம் காணப்பட்ட வன்முறையும் வெறியாட்டமும் நம்மைப் பயங்க கொள்ளவைக்கிறது, அதே ஜப்பான் இரண்டாவது உலக யுத்தத்தில் அணுகுண்டு வீச்சின் காரணமாக ஒன்றரை லட்சம் மனிதர்கள் இறந்து போய்ப் பலத்த அடி வாங்கி இனிமேல் எழவே முடியாது என நினைத்து ஒதுக்கபட்டது,

இந்த எழுபது ஆண்டுகளில் ஜப்பான் அடைந்துள்ள வளர்ச்சியும் மனநிலை மாற்றங்களும் வியப்பூட்டக்கூடியவை, ஜப்பானியர்கள் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டார்கள், விஞ்ஞானத்தில் பல உயர்சாதனைகளை உருவாக்கினார்கள், இது எனது தேசம், இதன் முன்னேற்றத்திற்காக நான் அயராமல் பாடுபடுவேன் என ஒவ்வொரு ஜப்பானியமும் தன்னைத் தேசத்துடன் இணைத்துக் கொண்டதே இதற்கான காரணம்,

ஜப்பானின் பண்பாடு நூற்றாண்டுகளாகத் தனித்துவமிக்கதாக, நீண்ட மரபு கொண்டதாக இருக்கிறது, இயற்கையை வழிகாட்டும் சமயமாகக் கொண்டிருப்பதும், பௌத்த அறங்களை வாழ்வில் கடைபிடிப்பதும் இதற்கான முக்கியக் காரணம்,

அதே நேரம் தங்களை அணுகுண்டு வீசி அழிந்த அமெரிக்காவை இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் தங்களின் ஆதர்ச நாடாகக் கருதுவது புரிந்து கொள்ளமுடியாத முரண்,

பொருளாதார வெற்றி மட்டும் வாழ்க்கையில்லை, ஆன்மீக விடுதலையும், சுதந்திரமும் சந்தோஷமும் கொண்ட குடும்ப வாழ்க்கை முக்கியமானது என்பதை ஜப்பானியர் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள், அங்கே குடும்பம் மிக முக்கியமானது, குறிப்பாகப் பெண்களின் சுதந்திரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, பெரும்பான்மை வணிகநிறுவனங்கள் பெண்களால் தான் நடத்தப்படுகின்றன, குடும்பப் பணிகளை ஆண்களும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும், குறிப்பாகக் குழந்தைகளை வார இறுதிநாட்களில் கவனித்துக் கொள்வது, வெளி இடங்களுக்கு அழைத்துப்போய் விளையாட்டு விட்டு வர வேண்டியது ஆண்களின் வேலை,

காய்கறி, பழங்கள் விற்கும் அங்காடிக்குச் சென்றிருந்தேன், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க வந்தவர்களில் எண்பது சதவீதம் ஆண்கள், கத்தரிக்காய் ஒன்று வாங்கினால் ஒரு குடும்பம் சாப்பிட்டுவிடலாம் அவ்வளவு பெரியது, இது போலக் கேரட் ஒன்று அரைக்கிலோ உள்ளது, முள்ளங்கியை கையில் தூக்கமுடியவில்லை, இப்போது தான் பறித்து வந்த்து போன்ற பசுமையான காய்கறிகள், அத்தனையும் ஒட்டுரகங்கள்,

மீன் தான் ஜப்பானியர்களின் பிரதான உணவு, வெறும் சாதமும், மீனும், அவித்த காய்கறிகளும் மாட்டு இறைச்சியும் அரிசியில் செய்த தின்பண்டங்களும், இனிப்பு வகைகளும் அவர்களுக்கு விருப்பமான உணவுகள், சாப்பிடும் போது ஒரு பருக்கையைக் கூட அவர்கள் வீண் அடிப்பதில்லை, தண்ணீர் குடிப்பதும் இல்லை, பழச்சாறோ, தேநீரோ குடிக்கிறார்கள்,

பௌத்த ஆலயங்களில் ஊதுவத்தி கொளுத்தி வைத்து வழிபடுகிறார்கள், இதற்காக விதவிதமான வாசனைகளில் ஊதுவத்திகள் விற்கப்படுகின்றன

ஹசதேரா கோவிலில் இருந்து வெளியே வந்தபோது ஒதாங்கோ என்ற இனிப்பு வகையைச் சாப்பிட வாங்கித் தந்தார்கள், அது நம் ஊரில் உள்ள வெல்லக்கொழுக்கட்டை போன்றிருந்தது, பண்டைய இந்தியா எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள ஜப்பானைக் கவனிக்க வேண்டும், இந்தியாவின் பண்பாட்டு அம்சங்களில் பல ஜப்பானில் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது, அதன் ஒரு அம்சமாகவே இந்த உணவைக் கண்டேன்

ஜப்பானில் சாலைகள் மூன்று அடுக்கு கொண்டவை, ஒன்று ஹைவே எனப்படும் நெடும்சாலைகள், மற்றது ரயில் போக்குவரத்திற்கானது, அடுத்தது நகரத்தின் உள்செல்லும் சாலைகள், ஆகவே ஹைவேயில் செல்லும் போது நமக்குத் தென்படும் நகரக் காட்சிகள் வேறுவிதமானவை, சைக்கிள் வைத்திருக்காத குடும்பங்களே கிடையாது, கார் டிரைவர் வைத்திருப்பது ஆடம்பரத்தின் அடையாளம், ரயில் போக்குவரத்து தான் அதிகம் பயன்படுத்தபடுகிறது. வேலைக்காரர்கள் என்பதே கிடையாது, அவரவர் வீட்டு வேலையை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்,

ஜப்பானிய இலக்கியத்தில் இன்று சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படுகிறவர் முரகாமி, அவரது புத்தகங்கள் வெளியாகும் நாளில் அதை வாங்க மக்கள் கடை முன்பாக வரிசையில் நிற்பார்களாம், நான் முரகாமியின் முக்கியப் படைப்புகளை வாசித்திருக்கிறேன், முக்கியமான எழுத்தாளர் அவர்

பௌத்த ஆலயங்களைப் பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்பினேன், முதல்நாள் மாலை என்பதால் நண்பர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து, முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள், இலக்கியம், இன்றைய தமிழகத்தின் நிலை, வரலாறு, பண்பாடு என இரவு ஒன்பது வரை பேச்சு நீண்டு போனது, ஜப்பானிய இலக்கியங்கள் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருந்தேன், இரவு உறங்கச் செல்லும் போது மணி ஒன்றரை ஆகியிருந்தது.

படுக்கையில் கண்ணை மூடிக் கிடந்த போது மனதில் மகாபுத்தனின் முகம் எழுந்து வரத்துவங்கியது, அந்தச் சாந்தம், புன்னகையை மனதில் பரவ விட்டபடி இந்த இனிமையான நாளை சாத்தியமாக்கிய நண்பர்களுக்கு மனதிற்குள் நன்றி தெரிவித்தபடியே புத்தனின் காலடியில் கிடக்கும் இலை ஒன்றை போல என்னை உணர்ந்தேன்,

வெளியே குளிர் புகை போலப் பரவி நீண்டு கொண்டிருந்தது

•••

0Shares
0