ஒரு ஆளால் எத்தனை பேரை நினைவில் வைத்திருக்க முடியும். நான்கு பேர் சந்தித்து கொள்ளும் போது நினைவில் நானுறு பேர் பகிர்ந்து கொள்ளப்படுகிறார்கள் என்பார்கள். நினைவு கொள்ளுதல் நாம் விரும்பி உருவாவதை விட நடப்பின் வழியாக தானே உருக் கொள்வது தான் அதிகமாக ஏற்படுகிறது. சிறுவர்கள் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடுகிறார்கள். பலநாட்கள் எனது பையன் நேற்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தூங்கி எழுந்து கேட்டிருக்கிறான்.
ஒவ்வொரு வகுப்பாக என்னோடு படித்தவர்களின் பெயர்கள் முகங்களை நினைவில் கொண்டுவர முயற்சித்தேன். ஐந்து வகுப்புவரை படித்தவர்களின் ஒன்றிரண்டு பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. கல்லூரியில் படித்தவர்கள் ஒரளவு நினைவில் இருக்கிறார்கள். ஆனால் முகம் நினைவிற்கு வரவில்லை.
என்னோடு படிக்காத ஆனால் அதே தெருவில் வசித்த பெரிய பையன்கள் அருகாமை வீட்டுகாரர்கள். விடுமுறைக்கு ஊருக்கு வந்த நண்பர்கள், வழி பயணத்தில் சந்தித்தவர்கள் என யாவரும் நினைவில் அப்படியே இருக்கிறார்கள்.
தினகரன் என்ற பையன் ஒரேயொரு தரம் பம்பாயில் இருந்து எங்கள் கிராமத்திற்கு விடுமுறைக்கு வந்திருந்தான். அவனது தாத்தா பாட்டி வீடு நடுத்தெருவில் இருந்தது. அப்போது எனக்கு பனிரெண்டு வயதிருக்க கூடும். அந்த பையனோடு ஒரு வாரம் பழகியிருப்பேன் அவ்வளவே, ஆனால் அவனது முகம். அவன் அணிந்திருந்த காலணி மற்றும் டவுசர் சட்டை அப்படியே மனதில் அழியாமல் இருக்கிறது.
அவன் தினசரி மாலைநேரம் விளையாட வருவதற்கு முன்பு முகம்கழுவி பவுடர் போட்டுக் கொண்டுவருவான். அது ரெமி பவுடர். வாசனையாக இருக்கும், தலையை அழகாக சீவியிருப்பான். கவனமாக தலைசீவும் சிறுவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். இவன் அந்த ரகம். அவனது நடை, பேச்சு, சிரிப்பு அத்தனையிலும் பாந்தமிருந்தது.
எங்கள் ஊரில் விமானத்தை அருகில் பார்த்தவர்கள் குறைவு. தினகரன் விமானத்தை அருகில் பார்த்திருக்கிறான். அதை பற்றி அவனால் விளக்கமாக சொல்லவும் முடிந்தது. தினகரன் கப்பலில் போயிருக்கிறான். தினகரன் ஊரில் நிறைய சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. தினகரன் சொந்தமாக ஒரு பர்ஸ் வைத்திருக்கிறான். இப்படி ஒரு நாளைக்குள் நிறைய அவனை பற்றி தெரிந்து கொண்டேன். சாக்லேட்டை சுவைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவன் அவனே.
அதுவரை நாங்கள் கடையில் சாக்லேட் வாங்கி பேப்பரை பிரித்த மறுநிமிசம் கடமுடவென மென்று தின்றுவிடுவோம். அவன் அப்படியில்லை. சாக்லெட்டை பிரித்து நாவில் வைத்து மெல்லச் சப்பி அதன் ருசி நாக்கெங்கும் படரவிட்டு அந்த தித்திப்பை உணர்ந்தபடியே சாப்பிடுவான். அப்படி சாப்பிட எனக்கு பொறுமை கிடையாது. அதை விட அப்படிச் செய்வது சாக்லெட்டை அவமானப்படுத்துவது என்று வேறு நினைப்பு.
அவன் பம்பாயில் இருந்து ஒரு ரப்பர்பாலும், மவுத் ஆர்கனும் வாங்கி வந்திருந்தான். இரண்டு அவன் டவுசர் பாக்கெட்டிலே இருக்கும். அவன் உரக்க கத்தி கோபபட்டு நான் கண்டதேயில்லை. இரண்டு மணிநேரம் விளையாடி முடிந்து வீடு திரும்பும் போது அவன் தலைமயிரில் ஒன்று கூட கலைந்திருக்காது. உடலில் சிறு தூசி ஒட்டியிருக்காது. குளித்து திரும்பியவனின் புத்துணர்ச்சி போலவே இருக்கும் அது எப்படி என்று எங்களுக்கு புரியவேயில்லை. அவன் அறியாமல் ஒன்றிரண்டு ஹிந்திவார்த்தைகள் பேசும் போது வந்துவிடும் அதற்காக அவனை கேலி செய்வோம். அவனுக்கு மரம் ஏற தெரியாது. நீச்சல் தெரியாது. எங்களை வேடிக்கை பார்த்தபடியே இருப்பான்.
ஒரு வார காலம் முடிந்து அவன் பாம்பே போகக் கிளம்பிய நாளில் எங்களிடம் வந்து அடுத்தவருசம் ஊருக்கு வருகிறேன். விளையாடலாம் என்றான். அவன் ஊருக்குபோகும்போது ரப்பர் பந்தை எங்களிடம் தந்துவிட்டு போவான் என்று எதிர்பார்த்தேன். அவன் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதால் அவன் போனால் நமக்கென்ன என்று கொஞ்சம் கோபமாக இருந்ததேன்
அதன்பிறகு அவன் எங்கள் ஊருக்கு வரவேயில்லை. ஏன் வரவில்லை. என்ன ஆனது என்று நாங்களும் விசாரிக்கவில்லை. தினகரினின் தாத்தா செத்து போன போது அவன் வருவான் என்று எதிர்பார்தோம். அப்போதும் அவனது அம்மா அப்பா மட்டுமே வந்திருந்தார்கள். பனிரெண்டு வயதில் ஐந்து நாட்கள் பழகிய ஒருவனின் முகம் ஏன் இன்று வரை மறந்து போகாமல் அப்படியே இருக்கிறது.
தினகரன் இன்று எப்படியிருப்பான். என்ன செய்து கொண்டிருப்பான். அவன் நினைவில் நான் இருப்பேனா? ஒருவேளை அவனைச் சந்திக்க நேர்ந்தால் கூட என் மனதில் உள்ள சிறுவனாக அவன் இருக்கமாட்டான் இல்லையா. ஏன் இவனை மனது இத்தனை வருசமாக நினைவில் தேக்கிவைத்து கொண்டேயிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளாக மறக்கவே முடியாத நூறு பேரை கொண்டிருக்கிறான். அவர்களில் பலரை மறுபடி பார்க்காமலே கூட போயிருக்க கூடும். ஆனால் நினைவில் அவர்கள் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.
சிறுவயதில் பார்த்த பலரது பெயர்கள் நினைவில் இருக்கின்றன முகம் மறந்து போய்விட்டது. சமகாலத்தில் சந்திக்கின்ற பலரது முகம் நினைவில் இருக்கிறது. பெயர் மறந்து போய்விட்டிருக்கிறது. சந்திக்கவே இயலாத சென்றநூற்றாண்டின் எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், சாகசபயணிகள் ரொம்பவும் தெரிந்த அடுத்த வீட்டுகாரரை போல நினைவில் இருக்கிறார்கள்.
சிறுவயதில் எங்கள் ஊரில் இருந்த தபால்காரரை எனக்கு பிடிக்கும்.அவரது நினைவில் மொத்த ஊரும் அதன் மனிதர்களும் இருந்தார்கள். யார் வீட்டிற்கு யார் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எந்த வழியில் உறவு என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பார். . இறந்து போனவர்களை கூட அவர் மறப்பதேயில்லை. முகவரி தேடி அலைபவர்கள் அவரிடம் சென்றால் துல்லியமாக சொல்லி அனுப்பி வைப்பார்.
இதை விட ஊருக்குள் பாத்திரம் விற்க வருபவன், ஈயம்பூசுகின்றவன், ஐஸ்விற்பவன், ஜோசியக்காரன், குறவர்கள், சாணை பிடிக்க வருபவன், பானை விற்பவன் என அத்தனை பேரின் பெயர் ஊரை தெரிந்து வைத்திருப்பார். யார் எந்த நாளில் எத்தனை மணிக்கு வந்தார்கள் என்பது துல்லியமாக நினைவில் இருக்கும். அவரைப் போல நினைவாற்றல் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இவ்வளவு நினைவில் வைத்திருந்த தபால்காரரின் ஒரே மறதி தனது சைக்கிளை எங்கே வைத்தேன் என்பது மட்டுமே. தினமும் அதை எங்காவது நிறுத்திவிட்டு தேடி அலைவதைக் கண்டிருக்கிறேன்.
எனக்கு உலக இலக்கியங்கள், மகாபாரதம், நகரங்கள், எழுத்தாளர்கள், திரைப்பட விபரங்கள், சென்றுவந்த இடங்கள், ஆட்கள் யாவும் நினைவில் இருக்கிறார்கள். ஆனால் எனது வங்கி கணக்கு எண், பள்ளி இறுதி படித்த வருசம், கிராமத்தில் உள்ள வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் எதுவும் நினைவில் நிற்காது. பலநேரங்களில் விண்ணப்பங்களை தவறாகவே பூர்த்திசெய்து கொடுத்து விழித்திருக்கிறேன்.
ஆண்களை விட பெண்களே அதிகம் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பத்து வருசத்தின் முன்பாக ஒரு திருமண வீட்டில் அருகாமையில் இருந்த பெண் என்ன நிறத்தில் புடவை கட்டியிருந்தாôள் என்ன நகை அணிந்திருந்தாள். சாப்பாட்டில் என்ன கூட்டு செய்திருந்தார்கள் யார் யார் வந்திருந்தார்கள் என்று பெண்கள் பலருக்கும் எளிதாக நினைவில் இருக்கிறது. அது தான் பலமும் பலவீனமும் போலும்.
மறப்பது என்பது பலநேரங்களில் தேவையான ஒன்றாக உள்ளது. எத்தனையோ நிகழ்வுகளை. கசப்பான அனுபவங்களை மறந்து போகிறேன் என்பதை நினைத்து நிறைய நேரங்களில் பெருமையாக இருக்கிறது. அதே நேரம் நினைவில் வைத்துக் கொண்டதை அசைபோடுவதும் மறுபார்வை கொள்வதும் அடிக்கடி தேவைப்படவும் செய்கிறது.
நாம் யார் யார் நினைவில் எப்படியிருக்கிறோம். என்னவாக நம்மை நினைவு வைத்து கொண்டிருக்கிறார்கள். யோசித்தால் வியப்பாகவே இருக்கிறது.
சந்தித்த மனிதர்களை விடவும் சந்திக்காத மனிதர்களும் நம் நினைவில் நிரம்பியே இருக்கிறார்கள். அவர்கள் யார்வழியோ கேட்டோ திரையில் பார்த்தோ அறிந்தவர்கள். அவர்கள் ஏன் நம் கூடவே இருக்கிறார்கள்.
நாடோடி மன்னன் திரைப்படத்தில் தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் வரும். அதில் பருத்த தொப்பையுடன் ஒரு சிறைக்காவலாளி இடம் பெற்றிருப்பார். அவர் பலநாட்கள் என் கனவில் வந்திருக்கிறார். அவர் பெயர் கூட இன்றுவரை எனக்கு தெரியாது. ஒரு முறை அவர் என் கனவில் வந்து எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டது நினைவில் இருக்கிறது. என்ன பாசம். எதற்காக அவர் என்னை தேடி கனவில் வருகிறார்.
டால்ஸ்டாய் தன்னை இரண்டு மாத குழந்தையாக வீட்டிலிருந்து சாரட்டில் வெளியே அழைத்து போன போது அடித்த காற்று தன் உடலை என்னசெய்தது என்று எழுதியிருக்கிறார். அவ்வளவு துல்லியமான நினைவுகள்.
எனது பள்ளிவயதில் இன்ஸ்பெக்ஷன் வந்த ஒரு கல்வி அதிகாரியை சமீபத்தில் ஒரு நாள் தற்செயலாக சந்தித்தேன். அவரது பெயர் கூட நினைவில் இருந்தது. நீங்கள் அவர்தானே என்று கேட்ட போது அவர் ஆச்சரியத்துடன் எப்படி உங்களுக்கு இது நினைவில் இருக்கிறது என்று கேட்டார்.
அன்று நீங்கள் மதிய உணவிற்கு பிறகு சிசர்ஸ் சிகரெட் பிடித்தீர்கள் என்று சொன்னபோது அந்த முதியவர் சிரித்தபடியே எனக்கு நீங்க சொல்ற பள்ளிக்கூடத்துக்கு வந்துருக்கேனு மட்டும் தான் ஞாபகமிருக்கு. வேற எல்லாம் மறந்து போச்சு என்றார்.
அவர் சொல்வது சரிதான். ஒரேயொரு வருசம் அவர் கல்வி அதிகாரியாக எங்கள் பள்ளியை சோதனை செய்ய வந்திருந்தார். அதை ஏன் நான் நினைவில் வைத்து கொண்டிருக்கிறேன். அவர் வருவதற்காக என்னோடு படித்த மாணவிகள் பள்ளியின் முன்னால் கோலம் போட்டார்கள். பள்ளி முதன்முறையாக கோலமிடப்பட்டிருப்பதை காண்பது சந்தோஷமாக இருந்தது. அது தான் காரணமா?, இல்லை அவர் வரும் அன்று வகுப்பில் கலர்காகிதங்கள் ஒட்டி அலங்காரம் செய்திருந்தோம் அது காரணமா?, இல்லை அவரது மதிய உணவிற்காக மட்டன் பிரியாணி, சுக்கா வறுவல் முட்டை, நண்டு. மீன் வறுவலும் வாங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஆள் உயர பெரிய கேரியரை ப்யூன் முந்திய தினம் துடைத்து பளபளவென மாற்றி கொண்டிருப்பதை கண்டது காரணமா? , தெரியவில்லை. ஆனால் அவர் நினைவில் தங்கியிருக்கிறார் . அதன்பிறகு பள்ளியை விஜயம் செய்தவர்கள் நினைவில் நிற்கவேயில்லை.
இப்படி ரத்தக்கண்ணீர் படம் பார்க்க போன போது இடைவேளையில் ஒசியில் முறுக்குதந்த அண்ணாச்சி, தாத்தா இறந்த போது மயானத்தில் மொட்டை அடித்த நாவிதன், யானையின் மீது ஏற்றி உட்கார வைத்த யானைப்பாகன், என் சைக்கிள் மீது மோதி விழுந்த ஐஸ்கம்பெனி ஆள், ரயில் நிலைய கவுண்டரின் வழியே முகம் பார்த்த டிக்கெட் கொடுக்கும் பெண், மூத்திரம் பெய்யும் போது உஷ்ணத்திற்கு வைத்தியம் சொன்ன முதியவர், ஒரு கையில்லாத பிச்சைகாரன், பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் டோக்கன் தரும் ஆள், கலவரத்தில் குத்துபட்டு குடல் சரிய செத்துகிடந்த இளைஞன், யானை போட்ட வீட்டின் முகப்பில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்ருந்த சித்தம் கலங்கிய பையன், மாடுகளை காயடிக்கும் முரட்டு ஆள், படித்த புத்தகங்களின் எழுத்தாளர் பெயரை அடித்து அங்கே தன் பெயரை எழுதிக் கொள்ளும் நூலகர் இப்படி யார் யாரோ நினைவில் ஒளிர்ந்தபடியே இருக்கிறார்கள். நான் என்பது தனி ஆளில்லை என்று தான் தோன்றுகிறது.
பள்ளி நாட்களில் என்னோடு படித்த சங்கரி என்ற பெண்ணின் அம்மா இறந்து போய்விட்டாள் என்று மாணவர்கள் அத்தனை பேரும் அவர்கள் வீட்டின் இறுதிசடங்கிற்காக சென்றிருந்தோம். சங்கரி கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். கலைந்த தலை, வீங்கிய கண்கள். அவள் அப்படி அழுது நாங்கள் பார்த்தேயில்லை. மாணவர்கள் எவரும் அழவேயில்லை. சில மாணவிகள் அறைகுறையாக ஆள் பார்த்து அழுதார்கள்.
சங்கரி எங்களை பார்த்து பார்த்து விம்மி அழுதாள். அவள் வீட்டின் முன்னால் ஒரு வாதாமரம் இருந்தது. அதில் வாதாம்பழம் இருக்கிறதா என்று மாணவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். சிலர் அருகாமை கல்கிடங்கில் நீந்தி குளிக்க போய்விட்டார்கள். மற்றவர்கள் சினிமா கதை பேசி விளையாடிக் கொண்டிருந்தோம்.
துக்கம் ஆறி பதினைந்து நாட்களுக்கு பிறகு பள்ளி திரும்பிய சங்கரி பசங்களோடு பேச மறுத்துவிட்டாள். காரணம் ஒருவனும் அவளது அம்மாவின் சாவிற்காக அழவேயில்லை என்று . போனால் போடி என்று விட்டுவிட்டார்கள். அடுத்த வருசம் அவள் படிப்பை தொடரவில்லை. அவள் என்ன ஆனாள் என்று கூட தெரியவேயில்லை.
இது நடந்து எத்தனையோ வருசங்களுக்கு பிறகு ஒரு நாள் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உறங்கி கொண்டிருக்கிறேன். கனவில் வந்த சங்கரி என் கையை பிடித்து கொண்டு நீயும் ஏன்டா அழவேயில்லை. எத்தனை நாள் எங்கம்மா உனக்காக பப்பாளிபழம் தந்திருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கேட்டாள். கட்டுபடுத்த முடியாத துக்கத்துடன் வெடித்து அழுதேன். கண்விழித்து பார்த்தபோது நகரம் கடுமையான குளிரோடு துயிலில் ஆழ்ந்திருந்தது.
இந்த கேள்வியை கேட்பதற்காக தானா அந்தப் பெண் இத்தனை வருசமாக என் நினைவில் தங்கியிருந்திருக்கிறாள். நடுக்கமாக இருந்தது.
நினைவு வலியது. அது மனிதனை சாந்தம் கொள்ளவும் செய்கிறது. நிம்மதியற்று அலைக்கழியவும் விடுகிறது.
மனதின் எந்த கதவு எப்போது திறக்கும் என்று யாருக்கு தெரியும் என்று நகுலனின் வரியொன்று இருக்கிறது. அது நினைவுகளுக்கு மிகச்சரியாக பொருந்தக்கூடியதே.
**