நீளும் கரங்கள்

சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ஒட்டகச்சிவிங்கியின் மொழி. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் நோர்வேயில் வசிக்கிறார். கணினித்துறையில் பணியாற்றுகிறார்,

இதிலுள்ள கட்டுரைகள் அவரது சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. தான் நேசித்த மனிதர்களை. அவர்களின் தனித்துவத்தை, நட்பை, உறவை சிறப்பாக எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முழுநாவலாக எழுத வேண்டிய அளவு விஷயங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதை நான்கு அல்லது ஐந்து பக்க அளவிற்குள் கச்சிதமான வடிவில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இந்தக் கட்டுரைகளின் பலம் அதன் காட்சிப்பூர்வமான சித்தரிப்பு மற்றும் நுணுக்கமான மொழிநடை. கட்டுரை என்றாலும் அதில் வரும் மனிதர்கள் பேசிக் கொள்வதை நம்மால் கேட்க முடிகிறது. சஞ்சயனின் சுயபகடி மற்றும் சரியான உணர்ச்சி வெளிப்பாடு இக்கட்டுரைகளை மிகவும் நெருக்கம் கொள்ள வைக்கிறது.

“ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கொடுக்ககூடிய அதியுயர்ந்த பரிசு சரிந்து அழுவதற்குத் தோளும், அழுது பிதற்றும் போது எதுவும் பேசாது கேட்டுக் கொண்டிருக்கும் காதுகளுமே. உங்களைச் சுற்றி இப்படியானவர்கள் இருப்பார்கள். அடையாளம் கொள்ளுங்கள் “என்கிறார் சஞ்சயன். இந்தத் தொகுப்பில் அவரே சிலரை அடையாளம் காட்டியிருக்கிறார்.

சஞ்சயனுக்கு நேர்ந்த அனுபவங்கள் என்றாலும் சில கட்டுரைகளை வாசித்து முடித்தவுடன் நாம் கண் கலங்கிவிடுகிறோம். இழப்பின் வலி நம்மையும் பற்றிக் கொள்கிறது

தீராத பேச்சுகள் கட்டுரையில் வரும் மனிதரின் கோபம் அசலானது. அவர் வாய் ஓயாத பேச்சின் வழியே தனது கடந்தகாலத் துயரங்களைக் கடந்து போக விரும்புகிறார். தன்னை மறைத்துக் கொள்ளவே பேச்சு பலநேரம் பயன்படுகிறது.

“கடலுக்கு அலைகள் வேண்டியிருப்பது போல மனிதனுக்குப் பேசிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அலைகளை ஏற்றுக் கொள்ளும் கரைகளைப் போல நாம் ஏன் நடந்து கொள்வதில்லை“ என்று கேட்கிறார் சஞ்சயன்.

தோழமையின் தோள்கள் கட்டுரையில் முதல் சந்திப்பிலே பிறேமசிறி தனது நட்பின் கரங்களை நீட்டிவிடுகிறார். அவர் சஞ்சயனை வெறும் பயணியாகக் கருதவில்லை. சிலரோடு மட்டுமே பார்த்த முதல் நிமிஷத்திலிருந்து நம்மால் நெருக்கமாகி விட முடிகிறது.

அப்படியான பிறேமசிறியோடு சஞ்சயனின் நட்பு தொடர்கிறது. ராணுவ நெருக்கடிகளை எதிர் கொள்ளும் சூழலில் அவர் செய்யும் உதவிகள் பிறேமசிறியைச் சொந்த சகோதரனைப் போல உணர வைக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பின்பாக வயோதிகத்தில் தனியே வாழும் பிறேமசிறியை தனது மகளுடன் சந்திக்கச் செல்கிறார் சஞ்சயன். அவரது மகள்களுக்குப் பிறேமசிறி ஆசி தரும் அந்த தருணம் உணர்ச்சிப்பூர்வமானது. உண்மையானது. கடைசிச் சந்திப்பிலும் சஞ்சயன் விரும்பிய ரொட்டி இடம்பெறுகிறது. ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த உணவால் மட்டுமே முடிகிறது போலும்.

கணிணி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வீட்டில் சஞ்சயன் ஒரு முதியவரைக் காணுகிறார் அவர் பார்க்கின்சன் நோயால் அவதிப்படுகிறவர். கூடவே மறதியும் சேர்ந்து கொள்கிறது. மருத்துவமனை அவருக்கென விசேச கணிணி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதன் பழுதை நீக்குகிறார் சஞ்சயன். விடைபெறும் போது அந்த முதியவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றைப் படிக்கத் தருகிறார். விசித்திரமான கடிதமது.

அந்தக் கடிதத்தில் தனது நோயைப் பற்றிக் குறிப்பிடும் முதியவர் தனது நடவடிக்கைகள் திடீரென மாறிப்போனதற்கு நோயே காரணம். இந்தப் புதிய வாழ்க்கைக்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை, என்னை என் நோயுடன் நேசியுங்கள் என்று எழுதியிருக்கிறார்.

அந்த முதியவர் தான் ஒட்டகச்சிவிங்கியின் மொழியைப் பற்றிச் சொல்கிறார்.

“ ஒட்டகச்சிவிங்கி உலகத்திலேயே நீளமான கழுத்தையுடையதால் அதன் கண்கள் மிக உயரத்தில் இருக்கும். ஆதலால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒட்டகச்சிவிங்கியின் காதுகள் பெரியவை அவை நீ மற்றவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று குறிக்கிறது. அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுடன் ஒப்பிடும் போது ஒட்டகச்சிவிங்கியின் இதயமே பெரியது. இது அன்பினைக் காட்டுகிறது என்கிறார்கள். “

இந்த முதியவரோடு நட்புடன் பழகியதைப் பற்றி எழுதும் சஞ்சயன் “நான் ஒட்டகச்சிவிங்கியின் மொழியைக் கற்றுக் கொண்டிருந்தேன்“ என்கிறார்.

அவர் மட்டுமில்லை. நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒட்டகச்சிவிங்கியின் அன்பு மொழியே.

இந்தத் தொகுப்பிலுள்ள முஸ்தபாவின் ஆடு என்ற கட்டுரை நிகரற்றது. அதன் கடைசிப் பத்தியை வாசிக்கும் போது நானும் முஸ்தபாவின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

பாலஸ்தீனத்தில் அவர் சந்தித்துப் பழகிய முகமட், சஞ்சயனின் இரண்டாம் தாயான எம்மி, முன்பின் தெரியாத மனிதரை தனது வீட்டிற்குள் வைத்து பல காலமாகப் பராமரிக்கும் பெண். வறுமையிலும் நோயிலும் சகமனிதனின் வலியை தனதாக நினைத்த ஓகோத் எனக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள பலரும் தனது தூய அன்பால் ஒளிருகிறார்கள்.

வாழ்க்கையைப் பற்றிய ஒராயிரம் புகார்களும் வெறுப்பு பேச்சுகளும் நிரம்பிய இன்றைய சூழலில் இது போன்ற அபூர்வ மனிதர்களைச் சஞ்சயன் அடையாளம் காட்டியிருப்பது முக்கியமானது. பாராட்டிற்குரியது.

“மொழி புரியாது விக்கிவிக்கி அழும் மனிதனின் மேல் இரக்கம் வந்தது. அவனது மொழி எனக்குப் புரியவில்லை. ஆனால் அந்த வலியின் மொழியினையும் வேதனையையும் புரியுமளவு எனக்கு மென்னுணர்வு இருந்தது“ என ஒரு கட்டுரையில் சஞ்சயன் எழுதியிருக்கிறார்.

அந்த மென்னுணர்வு தான் இந்த 28 கட்டுரைகளையும் எழுத வைத்திருக்கிறது. அதுவும் ஒட்டகச்சிவிங்கியின் மொழியில்.

•••

0Shares
0