நூலக மனிதர்கள் 1 படிப்பதற்குப் பரிசு

நூலகங்களுடன் எனக்குள்ள தொடர்பு நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சின்னஞ்சிறிய மல்லாங்கிணர் கிராமப்புற நூலகத்தில் துவங்கி உலகின் மிகப் பெரிய நூலகங்கள் வரை தொடர்பு கொண்டிருப்பவன் என்ற முறையில் நூலகங்கள் தான் எனது உலகம். நான் நூலகத்திலிருந்து உருவாகி வந்தவன் . புத்தக அடுக்குகள் தரும் ஈர்ப்பினை வேறு எதுவும் தருவதில்லை.

சிறுவயதில் கிராம நூலகத்திற்குச் செல்லும் போது அங்கேயே உட்கார்ந்து படிக்க வேண்டும் என்பார்கள். படிப்பதற்கு ஏற்ற இருக்கைகள் இருக்காது. அதை விடவும் அடுத்தவர் முன்னால் உட்கார்ந்து படிப்பது மிகக்கூச்சமாக இருக்கும். சில வேளைகளில் நாம் என்ன படிக்கிறோம் என்று எட்டிப் பார்ப்பார்கள். அதைச் சகித்துக் கொள்ளவே முடியாது.

பத்துப் பக்கம் படித்து முடிப்பதற்குள் நூலகர் நேரம் முடிந்துவிட்டது என்று துரத்திவிடுவார். அடுத்த நாள் வந்து படிக்க அந்தப் புத்தகத்தை ரகசியமாக ஒளித்து வைத்துவிட்டு வரவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நூலகத்தில் கூட்டமிருக்கும். மற்றநாட்களில் பத்து பேர் வருவதே அபூர்வம்.

புத்தகங்களைப் போலவே அதை வாசிக்கும் மனிதர்களும் வியப்பானவர்கள். யோசித்துப் பார்த்தால் வித்தியாசமான பலரை நூலகத்தில் தான் சந்தித்திருக்கிறேன்.

ஒரே புத்தகத்தை வாசிக்கும் இருவரை வாசகர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதைத் தாண்டிய உறவு இருக்கிறது. புத்தகங்களின் வழியே மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படுகிறார்கள். மனித இதயம் நல்லெண்ணங்களால் தொடப்படுகிறது. வழிகாட்டப்படுகிறது.

மல்லாங்கிணர் கிராம நூலகத்திற்கு வரும் ஒருவர் நினைவில் பசுமையாக இருக்கிறார். அறுபது வயதிருக்கும். எப்போதும் கையில் கல்யாண வீட்டில் தந்த மஞ்சள் பை ஒன்றை வைத்திருப்பார். நெற்றியில் திருநீறு. சைக்கிளில் தான் வருவார். அவர் எப்போதுமே நிறையப் பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகமாகத் தான் எடுத்துக் கொண்டு போவார். அதுவும் ஒரேயொரு புத்தகம் தான்.

அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துத் திரும்பித் தரும் போது அதற்குள் ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை மறைத்து வைத்திருப்பார். அந்தப் புத்தகத்தை அடுத்து எடுத்துப் படிக்கப் போகிறவருக்கான பரிசு போலும்.

அதை நான் எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதே சுவாரஸ்யமான கதை.

நூலகத்தில் எப்போதும் நூலகருக்கு உதவியாகத் திரும்பி வந்த புத்தகங்களை ரேக்கில் அடுக்கி வைப்பது எனது வழக்கம். பதிவேடுகளில் எழுதித் தருவது, திரும்பித் தராத நூல்களுக்கு அஞ்சல் அட்டை எழுதுவது இதெல்லாம் எனது விருப்ப பணிகள்.

அப்படி ஒரு முறை திருப்பிக் கொண்டு வந்த புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது மஞ்சள்பைக்காரர் கொடுத்த புத்தகத்தைக் கையில் எடுத்தேன். தவறி கீழே விழுந்த போது புத்தகத்திலிருந்து ஒரு ரூபாய் வெளியே தெரிந்தது. ஒரு வேளை ஞாபக மறதியாக அந்த ரூபாயை வைத்திருப்பாரோ என நினைத்து அதை நூலகரிடம் பொறுப்பாகக் கொடுத்தேன்.

அவர் அதைத் தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார். மஞ்சள் பைக்காரரிடம் கொடுப்பாரா என்று தெரியவில்லை.

அடுத்த முறை அந்த மஞ்சள்பைக்காரர் இன்னொரு புத்தகத்தோடு வந்த போது அதே போல ஒரு ரூபாய் புத்தகத்திற்குள் இருப்பதைக் கண்டுபிடித்தேன். மறதியாக அவர் பணத்தைப் புத்தகத்திற்குள் வைக்கவில்லை. தெரிந்தே வைக்கிறார். யாரோ ஒரு முகமறியாத வாசகன் இந்த நூலைப் படிப்பதற்குப் பரிசு தருகிறார் என்பது நன்றாகப் புரிந்தது

அவர் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் பார்த்தேன். சாமிநாத சர்மா எழுதிய கிரீஸ் வாழ்ந்த வரலாறு. அதை இதுவரை இரண்டு பேர் தான் இரவல் எடுத்துப் போயிருக்கிறார்கள். அப்படி ஒருவர் கூட எடுத்துப் போகாத நிறையப் புத்தகங்கள் நூலகத்தில் இருக்கின்றன. அவற்றின் மீது வாசகனின் கருணை படுவதேயில்லை. மனிதர்களைப் போலத் தான் புத்தங்களுக்குக் காரணமேயில்லாமல் புறக்கணிக்கப்படுகின்றன.

சாமிநாத சர்மா புத்தகத்திலிருந்த ஒரு ரூபாயை நான் எடுத்துக் கொண்டேன். அந்த நன்றிக்காகக் கிரீஸ் வாழ்ந்த வரலாற்றை நாலைந்து பக்கங்கள் படித்துப் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. அந்த நாட்களில் நாவல்களை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தேன். ஆகவே கிரீஸ் வாழ்ந்த வரலாறு படிக்க விருப்பமில்லை. பின்னாளில் அதை முழுவதும் படித்து வியந்திருக்கிறேன்.

அதன்பிறகு அந்த மஞ்சள் பைக்காரர் எப்போது வருவார் என்று காத்துக் கொண்டேயிருப்பேன். அவர் ஞாயிற்றுக்கிழமை தான் வருவார். சில சமயம் படித்து முடிக்கவில்லை என்று கொண்டு வந்த புத்தகத்தை மறுதேதி போட்டு வாங்கிக் கொண்டு போவார். சில வாரம் வரமாட்டார்.

அவருக்கு நான் யார் என்று தெரியாது. ஆனால் எனக்கு அவர் ரகசியமான பரிசுத் தரும் தேவதை போலவே இருந்தார்.

ஏன் ஒரு மனிதர் தான் படித்த புத்தகத்தை அடுத்துப் படிப்பவனுக்கு ஒரு ரூபாய் பரிசு தருகிறார். அதை ஏன் ரகசியமாகச் செய்கிறார். புத்தகத்தைப் போலவே அந்த மனிதருக்குள்ளும் விந்தையிருக்கிறது. தான் மற்றவர்களைப் போன்ற ஒருவனில்லை. தனது விருப்பங்கள் வேறுவிதமானவை. தனது வெளிப்பாடு வேறுவிதமானது என்று அவர் நம்புகிறார். முகம் தெரியாத வாசகனைத் தனது தோழனாகக் கருதுகிறார்.

இப்படி அந்த ஒரு ரூபாயை நான் எடுத்துச் செலவு செய்வதை நூலகர் கண்டுபிடித்துவிட்டார். அதன்பிறகு மஞ்சள் பைக்காரர் கொண்டு வந்து தரும் புத்தகத்தை அவரே பிரித்து ஒரு ரூபாயை எடுத்துக் கொண்டுவிடுவார். இதைப்பற்றி அந்த மஞ்சள் பைக்காரரிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்திருக்கிறேன் ஆனால் எப்படிச் சொல்வது. நானும் அதைச் செலவு செய்திருக்கிறேனே என்ற குற்றவுணர்ச்சி தடுத்துவிடும்

யார் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கவலையில்லாமல் அந்த மனிதர் படித்த புத்தகத்திற்குள் ஒரு ரூபாய் வைத்துக் கொண்டேயிருந்தார். அது தான் புத்தகம் அவருக்குக் கற்றுத்தந்த நம்பிக்கை. உலகம் ஒருவனை ஏமாற்றக்கூடும். அதற்காக அவன் தன் நம்பிக்கையை இழப்பதில்லை. அவன் மனதில் நிச்சயம் நல்லது நடக்கும் என நம்புகிறான்

ஒரு நாள் அது போலவே அவர் நூலகத்தில் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் போது ஒரு இளைஞன் அதை உடனே தனக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டான். அப்போது அந்த மஞ்சள் பைக்காரர் முகத்தில் மெல்லிய சிரிப்பு தோன்றி மறைந்தது.

உண்மையில் இது ஒரு விளையாட்டு. அந்த விளையாட்டின் வழியே அறியாத ஒரு மனிதனைச் சந்தோஷப்படுத்துகிறார். காதலிப்பவர்கள் தான் இப்படி புத்தகங்களில் ஆங்காங்கே சில எழுத்துகளை வட்டமிட்டு விளையாடுவார்கள். ஆனால் இவர் செய்வது வேறுவிதமானது.

புத்தகங்கள் யாரை மகிழ்ச்சிப்படுத்தும் எவருடைய வேதனையை ஆற்றுப்படுத்தும் என்று எழுத்தாளருக்குத் தெரியாது. ஆனால் புத்தகங்கள் சப்தமில்லாமல் மனிதர்கள் வளர்வதற்கும் சிந்திப்பதற்கும் ஆறுதல் அடையவும் உதவியிருக்கின்றன என்பதே காலம் காட்டும் உண்மை.

இன்று பெரும்பான்மை நூலகங்களுக்கு வாசகர்கள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. அண்ணா நூலகம் போல ஒன்றிரண்டு பெரிய நூலகங்களில் மட்டுமே நிறைய கூட்டமிருக்கிறது.  கிராமப்புற நூலகங்கள் மேம்படுத்தபடவில்லை. நூலக இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்படவில்லை.

நூலகத்தை வெறும் புத்தகம் இரவல் தரும் இடமாக மட்டும் செயல்படுத்தாமல் அதை ஒரு பண்பாட்டு வெளியாக உருமாற்ற வேண்டும். உதயசந்திரன் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்த போது தமிழகம் முழுவதும் நூலகங்களில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. எழுத்தாளர்கள் கௌரவிக்கபட்டார்கள். ஒரே நாளில் நான்கு நூலகங்களில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வரும். ஆனால் கடந்த ஒராண்டிற்கும்  மேலாக அப்படி எதுவும் இல்லை. கொரோனா பாதிப்பு ஒரு காரணம். ஆனால் இந்த முயற்சிகள் மீண்டும் தொடரப்பட வேண்டும்.

நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகங்களுக்குள் காதல் கடிதங்கள். தொலைபேசி எண்கள். முகவரி அட்டை, ரசீதுகள் என எதை எதையோ கண்டிருக்கிறேன். சில நேரம் அந்த ரசீதைத் தேடி நூலகத்திற்கு வரும் ஆட்களையும் அறிவேன். ஆனால் இப்படி ஒரு ரூபாயை ரகசியமாக வைத்து அடுத்தவரைச் சந்தோஷப்படுத்தும் ஒருவரைக் கண்டதேயில்லை.

ஒரு மழைக்காலத்தில் நூலகத்தினுள் தண்ணீர் இறங்கி நிறையப் புத்தகங்கள் வீணாகிவிட்டன. புத்தகங்களை உலர வைக்க வேண்டியதற்காக மூன்று வாரங்கள் நூலகம் செயல்படவில்லை. அந்த இடைவெளிக்குப் பிறகு மஞ்சள் பைக்காரரை நான் திரும்பக் காணவில்லை. ஒருவேளை வெளியூர் போயிருப்பாரோ என்னவோ.

ஆனால் எந்த ஊரிலிருந்தாலும் நிச்சயம் அவரைப் போன்றவர்கள் நூலகத்திற்குப் போக மறக்க மாட்டார்கள். இப்படியான பரிசு தருவதையும் நிறுத்த மாட்டார்கள்.

••

0Shares
0