மறைந்திருக்கும் உண்மை

பல்வேறு தேசங்களை, இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் அமெரிக்காவில் இன்றும் இனவெறி இருக்கிறது. ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. ரகசியமாக மறைந்திருக்கிறது. பல நேரங்களில் ஆசிய இனத்தவர்களுக்கு எதிராக வெளிப்படுகிறது என்று A Great Divide திரைப்படம் விவரிக்கிறது.

பொதுவெளியில் பேசத்தயங்குகிற உண்மையை மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜீன் ஷிம். இந்தப் படம் பேசும் விஷயங்கள் தங்கள் வாழ்வில் நடந்துள்ளதாக அமெரிக்காவில் வாழும் கொரியர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். 2020ல் அமெரிக்காவில் ஆசிய இனத்தவருக்கு எதிராக இனவெறி நேரடியாக வெளிப்பட்டதைக் கண்டேன். அந்தக் கோபமே இந்த படத்தை உருவாக்கத் தூண்டியது என்கிறார் இயக்குநர்

பெஞ்சமின் என்ற பதின்வயது பையனின் பார்வை வழியாகக் கதை விவரிக்கபடுகிறது.

லீயின் குடும்பம் கலிபோர்னியாவிலிருந்து வெளியேறி வயோமிங்கில் குடியேறுகிறார்கள். புதிய பள்ளியில் பெஞ்சமினுக்கு இடம் கிடைக்கிறது. பள்ளிக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒரு கட்டுரைக்காகத் தனது குடும்பத்தின் கடந்தகால நினைவுகளைப் பெஞ்சமின் அறிந்து கொள்ளத் துவங்குகிறான்.

படம் மூன்று வாக்குமூலங்களைக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா என்ற தேசம் புகலிடம் தேடிவந்த தங்களை நியாயமாக நடத்தவில்லை. இனவேற்றுமையுடன் நடத்தியது. அவமானப்படுத்தியது என்று குற்றம் சாட்டுகிறார் ஹால்மோனி என்ற கொரியப் பாட்டி.

தகுந்த படிப்பு, திறமை இருந்தும் தான் வேலை செய்த அமெரிக்க நிறுவனம் தன்னை இனவேற்றுமையுடன் நடத்தியது. சக ஊழியர்கள் தன்னை உருவக்கேலி செய்தார்கள். தனது வளர்ச்சியை நிறுவனம் தடுத்து நிறுத்தியது என்று குற்றம் சாட்டுகிறார் பாட்டியின் மருமகன் ஐசக்

பள்ளியில் தான் சகமாணவியால் அவமானப்படுத்தபட்டேன். வீட்டில் எனது அம்மாவே என்னைப் புரிந்து கொள்ளவில்லை. எனது வாழ்க்கை நானாக உருவாக்கிக் கொண்டது என்று ஹால்மோனியின் மீதும் குற்றம் சுமத்துகிறாள் அவரது மகள் ஜென்னா

இந்த மூன்றையும் கேட்டு அறிந்து கொள்ளும் பெஞ்சமின் வயோமிங்கில் இனவெறுப்பை நேரடியாகச் சந்திக்கிறான். பொய் குற்றம்சாட்டப்பட்டுக் குற்றவாளி போல நடத்தப்படுகிறான். அவனது குடும்பமே பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது. இதிலிருந்து அவர்கள் எப்படி விடுபட்டார்கள் என்பதே படத்தின் முடிவு.

வயோமிங் மேற்குஅமெரிக்காவின் இயற்கை எழில் சூழ்ந்த மாநிலமாகும். பெரிய மாநிலமாக இருந்தாலும் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்டிருக்கிறது. கானுயிர் காப்பகமான வயோமிங்கில் காட்டெருமை, கடமான் மற்றும் பாம்புகள் அதிகமிருக்கின்றன. இங்கே சிறப்பு வனப்பாதுகாப்புப் பிரிவு செயல்படுகிறது.

கொரியர்களான பெஞ்சமினையும் அவனது குடும்பத்தையும் பலரும் ஜப்பானியர் அல்லது சீனர் என்றே நினைக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். சில இடங்களில் அவர்கள் வெளிப்படையாக அவமானப்படுத்தபடுகிறார்கள். படத்தில் உணவகம் ஒன்றில் அவர்கள் நடத்தப்படும் காட்சி இதற்கான உதாரணம். காவல்துறை அதிகாரியிடம் வெளிப்படும் வெறுப்பு, ரேஞ்சர் நடந்து கொள்ளும் விதம். பெஞ்சமினையும் எல்லியையும் மிரட்டும் மெக்நேதரிடம் வெளிப்படும் கோபம் இவையே இனவெறியின் அடையாளங்கள்.

1945ல் கொரியா இரண்டாகப் பிளவு பட்ட போது வன்முறை வெடித்தது. அதிலிருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஹால்மோனியும் அவரது கணவரும் கையில் சொற்ப பணத்துடன் புதிய வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். ஹால்மோனியின் கணவர் கொரியாவில் பல்கலைகழப்படிப்பை முடித்தவர். ஆகவே அமெரிக்கப் பல்கலைகழகத்தில் சேர்ந்து உயர்கல்வி பெற முயற்சிக்கிறார். கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தனது ஆசையைக் கைவிட்டு பிழைப்பிற்காக லாண்டரி ஒன்றில் வேலை தேடிக் கொள்கிறார்.

பாட்டியின் மனதில் தனது பேரனாவது புகழ்பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசையுள்ளது. பேரனின் பள்ளிக்கட்டுரைக்காகத் தனது கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பாட்டியும் பேரனும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அற்புதமானவை. பாட்டியிடம் வெளிப்படும் நிதானம். மனவுறுதி, தனது கடந்தகால வலிகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் விதம், மகளின் கோபத்தை ஏற்றுக் கொள்ளும் மனது சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது

பெஞ்சமினின் பதின்வயது ஆசைகள், அவனுக்கும் எல்லிக்கும் இடையில் வளரும் காதல். பொதுவெளியில் அவன் காட்டும் தயக்கம், புதிய அனுபவத்தைப் பெற முயற்சிக்கும் துடிப்பு படத்தில் மிகவும் அழகாக வெளிப்படுகிறது. எல்லி இன்றைய தலைமுறையின் அடையாளம். பெஞ்சமினிடம் விடைபெறும் கடைசிக் காட்சியில் அவள் முதிர்ச்சி அடைந்த பெண்ணாக நடந்து கொள்கிறாள்.

கொரியர்களின் இசை, தொலைக்காட்சி நாடகம். உணவு, பண்பாட்டு நம்பிக்கைகளையும் படம் ஊடு இழையாக வெளிப்படுத்துகிறது. கார் பயணத்தில் ஜாக் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி. அதற்கு காரணமான பாடல். பெஞ்சமின் காதலைச் சொல்லும் தருணங்களில் வெளிப்படும் தொலைக்காட்சி நாடக காட்சி உதாரணம் போன்றவை அழகானது. ரே ஹுனாக்கின் அற்புதமான கேமரா வயோமிங்கின் அழகைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. நிலக்காட்சிகள் மறக்கமுடியாதவை.

இனவெறியைப் பற்றிப் பேசும் படம் வனவேட்டை, பணம்பறிப்பு. வீடியோ சாட்சியம் என வழக்கமான திசையில் சென்று முடிகிறது. அதுவே இதன் பலவீனம்.

0Shares
0