The Color of Pomegranates
என்ற செர்ஜி பரஜினேவின் திரைப்படத்தை பார்த்தேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரஷ்யப் படமது. பரஜினேவ் செர்ஜியாவை சேர்ந்த ஆர்மீனியர்.
சையத் நோவா (Sayat-Nova) என்ற பதினேழாம் நூற்றாண்டு கவிஞனின் வாழ்க்கையை பற்றியது. ஆர்மீனியாவின் தேசியக்கவியாக கொண்டாடப்படும் சையத் நோவா கம்பள நெசவு நெய்யும் குடும்பத்தில் பிறந்து தனது கவித்துவத்தால் அரசவைக் கவிஞனாக உயர்ந்து காதலின் காரணமாக வெளியேற்றபட்டு நாடோடி பாடகனாக புகழ்பெற்று இறந்து போனார். ஆயிரம் பாடல்ளுக்கு மேலாக பாடியிருக்கிறார். தற்போது அதில் 220 பாடல்களே அச்சில் இருக்கின்றன..
சையத் நோவா ஒரு பாணர். ஊர் ஊராக சென்று இசைத்து பாடும் மரபில் வருபவர். கவிஞனை பற்றிய படம் என்பதால் அவனது கவித்துவப் படிமங்களை அப்படியே படம் பயன்படுத்துகிறது. இந்தப் படத்தை கடந்த நூறு வருடங்களில் வெளியான சிறந்த Spiritual film என்று திரைவிமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள்.
கவியின் ஆன்மாவையும் அவனது கற்பனைகளையும் இப்படி உன்னதமாக காட்சிபடுத்தபடுவது அபூர்வமே. நுண்ணோவியமரபில் இருந்த வண்ணங்களையும் கவிதையிலிருந்து காட்சி படிமங்களையும் மரபான இசை, நடனம், உடையலங்காரம், உணவு முறைகள் என்று ஆர்மீனியாவின் கலாச்சார கூறுகளை இப்படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது. அத்துடன் நாட்டார் மரபின் தொடர்ச்சியான கலைவடிவமாக சினிமாவை உருமாற்றி சாதனை செய்திருக்கிறது. படத்தை காணும்போது நாம் எங்கோ திறந்த வெளியில் அமர்ந்தபடியே நாடோடிகவிஞனின் இசைப்பாடல்களை நடனத்துடன் அருகில் அமர்ந்து காண்பது போன்ற நெருக்கமே உருவாகிறது.
சர்ரியலிசக்காட்சிகள் போன்று மீன்கள் காற்றில் உயிரோடு பறக்கின்றன. தரை கம்பளங்கள் தானே பேசிக் கொள்கின்றன. புத்தகங்கள் தன்னை தானே வாசித்து கொள்கின்றன. சேவல்கள் நடனமாடுகின்றன. இப்படியாக காட்சிகளைத் தனித்தனி படிமங்களாக உருவாக்கி அதன்வழியே கதையை சொல்கிறார். முதல் பார்வையில் படம் புரியாது. இரண்டு மூன்று முறை பார்க்கும் போது தான் அதன் உன்னதமான கலைஉச்சம் புரிகிறது.
காரணம் இப்படம் கதையை விவரிப்பதில்லை. மாறாக கவிஞனின் மனக்காட்சிகளை சித்தரிக்கிறது. அவனது தனிமையை, விசித்திரமான கற்பனைகளை இயல்பு உலகோடு ஒன்றிணைக்கிறது. ஆகவே எது அவனது கற்பனை. எது யதார்த்தம் என்ற கோடு அழிந்து இரண்டு ஒன்றாகிவிடுகின்றன. மாயாஜாலம் போல நம் கண்முன்னே காட்சிகள் உருமாறுகின்றன.
ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான். எந்த காட்சிகள், எந்த சப்தங்கள். எந்த நினைவுகள் அவனை உருவாக்கின்றன. கவிஞன் உலகை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது பரஜினேவின் படம்.
சையத் நோவா என்ற அந்த நாடோடி கவிஞன் பால்யத்தில் படம் துவங்குகிறது. சிறிய கிராமம். அங்கே ஒடிக்கொண்டிருக்கும் சேவல். நீந்தும் மீன்கள். வீட்டு பெண்களின் உடைகள் என்று அந்த சிறுவன் எல்லாவற்றையும் வியப்போடு அறியத் துவங்குகிறான். அது பாதி கனவும் பாதி நிகழ்வுமானதாகவே காட்டப்படுகிறது.
வீட்டின் புறச்சூழலில் உள்ள வண்ணங்களும் வாசனையும் அவனை ஈர்க்கின்றன. கம்பளம் துவைக்கும் பெண்களின் கால்களின் வெண்மையை அவன் வசீகரமாக பார்த்து கொண்டிருக்கிறான். தனது பால்யம் தனித்த நிறமும் வாசனையும் கொண்டது எனும் சையத்நோவாவின் குறிப்பு அப்படியே காட்சிபடுத்தபட்டுளளது.
அதன்பிறகு அவன் வளர்க்கிறான். இப்போது பெண்களே அவன் உலகின் பிரதானம். பதின்வயதில் முதன்முறையாக பெண் உடலை நெருக்கமாக அறிகிறான். காதலிக்க துவங்குகிறான்.. சந்தோஷங்கள் மற்றும் வலிகளை அறிந்து கொள்கிறான். முடிவில் துறவியாக மடாலயத்தில் சேர்ந்து அங்கும் மனம்கொள்ள முடியாமல் வெளியேறி இறந்து போகிறான்.
படத்தின் இசை மிக அற்புதமானது. நாட்டார் இசைக்கருவிகள், குறிப்பாக துடி போன்ற உக்ரேனிய இசைக்கருவிகளை இசைத்து புராதனமான நினைவுகளுக்குள் கொண்டு செல்கிறார் பரஜினேவ். உலக சினிமாவின் போக்கினை திசைமாற்றம் செய்த முக்கிய திரைப்படம் இதுவென்பதற்கு இசையே சாட்சி.
படத்தின் துவக்கத்தில் பழைய ஏடுகள் போன்ற புத்தகங்கள் அடுக்கி வைக்கபட்டு அதன்மீது எடை வைக்கபடுகிறது. புத்தகத்திலிருந்து தண்ணீர் வழிந்து ஒடுகிறது. சிறியதும் பெரியதுமான நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெட்டவெளியில் காயப் போடுகிறார்கள். பழைய புத்தகங்களில் இருந்த ஈரம் வழிந்து ஒடுகிறது. புத்தங்களே மனிதர்களை வழிநடத்துகின்றன என்று முதியவர் சொல்கிறார்.
ஒரு சிறுவன் ஆள்உயரப் புத்தகம் ஒன்றைத் தூக்கி கொண்டு ஏணி போட்டு மிக உயரமான பழங்கால கட்டிடம் ஒன்றின் மீது ஏறி உட்காருகிறான். புத்தகத்தைப் புரட்டுகிறான். அதில் இருந்த சித்திரங்களை உன்னிப்பாக பார்க்கிறான். அவனுக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. அடுத்த காட்சியில் அவனைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. அவை காற்றில் தானே அசைகின்றன. புரண்டு கொள்கின்றன. சிறுவன் அசையாமல் அதன் நடுவே ஒடுங்கியிருக்கிறான். புத்தகம் எனும் பெரும்உலகிற்குள் ஒரு சிறுவன் மாட்டிக் கொள்கிறான் என்பதன் குறீயீடினை போலவே இக்காட்சி விரிகிறது. அல்லது புத்தகங்கள் தானே புரண்டு அவனோடு பேசுகின்றன. அவன் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறான் எனவும் புரிந்து கொள்ளலாம்.
இந்த துவக்க காட்சிக்குள் எத்தனை விதமான படிமங்கள். புத்தகங்களில் தண்ணீர் வடிவது. காயப்போடப்படும் சொற்கள். மனிதர்களை விட பெரியதாக உள்ள புத்தகங்கள். புத்தகம் படிக்க தேவைப்படும் உயரம். புத்தகம் புரளும் போது கூடவே புரளும் கற்பனை என்று பரஜினேவ் பார்வையாளனை தீவிர மனதூண்டலுக்கு ஆளாக்குகிறார்.
சம்பிரதாயமாக சினிமாவில் பார்வையாளன் திரை நிகழ்வுகளை பின்பற்றுவதோடு வேலை முடிந்துவிடுகிறது. இங்கே சதுரங்கம் போல திரைக்காட்சியோடு பார்வையாளன் மனது சமமாக முன்அமர்ந்து விளையாட வேண்டியிருக்கிறது. காட்சிகளை பரஜினேவ் படமாக்கியுள்ள விதம் மரபான கோணங்களில் இருந்து மாறுபட்டது. அவர் உணர்ச்சிகளை கற்பனையின் உச்சநிலையில் காட்சிபடுத்துகிறார்.
ஒரு கையில் மெழழுவர்த்தி மறுகையில் ரோஜா பூ. ஒரு கையில் கபாலம். முகத்தில் புன்னகை. ஒரு கையில் சேவல் மறு கையில் வெண்ணிற உடை ஒரு முகத்திரை அணிந்த பெண் அவள் முன்னால் அசைவுறும் திரைச்சீலை. ஒரு மயிலிறகு ஒரு ஆயுதம் என்று கவித்துவபடிமங்களாகவே நிறைய காட்சிகள் கரைந்து போகின்றன. சினிமாவின் மொழியை கதை சொல்வதற்காக மட்டுமே பெரும்பான்மை இயக்குனர் பயன்படுத்திவரும் போது அதைக் கவித்துவநிலைக்கு உயர்த்தி உருவகங்கள், படிமங்கள், உணர்வெழுச்சி என்று காட்சியியல் கவிதை போன்று படம் உருவாக்கபட்டிருக்கிறது.
Shadows of Our Forgotten Ancestors, Ashik Kerib என குறைவான படங்களையே இயக்கியுள்ள பரஜினேவ் 1990ல் இறந்து போனார். இந்த படத்தை ரஷ்யாவில் திரையிட அனுமதிக்கபடவில்லை. ஆகவே படத்தை கள்ளதனமாக கடத்திவந்து உலக திரைப்பட விழாவில் காட்டினார் பரஜினேவ். அரசியல்காரணங்களுக்காக கடுமையாக விமர்சிக்கபட்ட அவரை ஒரின சேர்க்கையாளர் என குற்றம்சாட்டி ஐந்து ஆண்டுகாலம் சைபீரிய சிறையில் அடைத்தது ரஷ்ய அரசாங்கம். அவரை விடுவிக்க சொல்லி உலகம் முழுவதும் சினிமா இயக்குனர்கள் விண்ணபித்தார்கள்.
ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி திறந்த கடிதம் எழுதி அரசாங்கத்திடம் முறையிட்டார். நான்குவருட சிறைவாழ்விற்கு பிறகே பரஜினேவ் விடுவிக்கபட்டார். தார்கோவெஸ்கியே சினிமாவின் கடவுள். அவர் காட்சிகளை கடவுள் எப்படி உருவாக்கியிருப்பார் என்ற இடத்திலிருந்தே உருவாக்குகிறார் என்று புகழ்ந்து சொல்லும் பரஜினேவ் தார்கோவெஸ்கியின் கவித்துவபடிமங்களே தனக்கு உந்துதலாக இருந்தன என்கிறார்.
அர்மான் ஒகானின் என்ற புகழ்பெற்ற ஆர்மீனிய எழுத்தாளர் ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறார். ஒரு வயதான ஆர்மீனியவாசி அமெரிக்க செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார். பரிசோதனை அதிகாரி அவர் பையில் இருந்து ஒரு மாதுளம்பழத்தை எடுத்து இதை விமானத்தில் அனுமதிக்கமுடியாது என்று சொல்கிறார். அவரோ கண்களை சிமிட்டியபடியே மாதுளம்பழம் தனக்கு பிடிக்கும். சிறுவயதில் இருந்து அது தான் தனது காலை உணவு என்கிறார். பரிசோதனை அதிகாரி விமானத்தில் மாதுளம்பழம் அனுமதிக்கபடுவதில்லை என்று பிடிவாதமாக மறுக்கிறார்.
சோதனை செய்து பாருங்கள் அதில் வெடிகுண்டு எதுவுமில்லை, அமெரிக்கர்களுக்கு எதை கண்டாலும் பயம் தானா என்று கேலி செய்கிறார் . அதிகாரி தன்னால் அதை அனுமதிக்கவே முடியாது. அதைவிடவும் தனக்கு மாதுளம்பழம் பிடிக்கவே பிடிகாது என்கிறார்.
மறுநிமிசம் அந்த ஆர்மீனியர் மாதுளம்பழத்தை உடைத்து முத்துகளை அவர் கைநிறைய எடுத்து வாயிலிட்டு ருசித்தபடியே நீங்களும் சாப்பிட்டு பாருங்கள். ஆர்மீனீயரின் அடையாளமே மாதுளம்பழங்கள் தான். இவை வெறும் மாதுளை முத்துக்கள் இல்லை. ரத்த துளிகள். உறைந்து போயிருக்கின்றன. இதில் எங்களது புராதன நினைவு பதிந்திருக்கிறது. மாதுளை ஆர்மீனீயாவிலிருந்தே உலகம் எங்கும் சென்றிருக்கிறது. மாதுளம்பழங்களை எங்கள் வாழ்விலிருந்து பிரிக்கவே முடியாது என்று சொல்லி விமானநிலையத்தில் அதை சாப்பிட்டு முடிக்கிறார்.
அர்மான் எங்கள் கனவில் கூட மாதுளம்பழங்கள் தோன்றுகின்றன. நாவில். எங்கள் சொற்களில் மாதுளையின் ருசியே படிந்திருக்கிறது என்கிறார். இந்த சம்பவம் ஒரு ஆர்மீனிய படத்திலும் காட்சிபடுத்தபட்டிருக்கிறது.
ஒவ்வொரு தேசமும் தனது விருப்பத்திற்குரியதாக ஒரு பழத்தை கொண்டிருக்கிறது. ஆர்மீனியாவின் அடையாளம் மாதுளம்பழங்களே.யூதர்கள் மாதுளையை கொண்டாடுகிறார்கள். வம்சவிருத்தியின் குறியீடாக அதை காண்கிறார்கள். ஆகவே அவர்களது திருமணத்தில் மாதுளை ஒரு முக்கியமான பொருள். மாதுளை சாற்றிலிருந்து சாயம் உருவாக்கி அதன்வழியே உடைகளை நிறமாக்குவதும் ஆர்மீனியாவில் உண்டு. ஆயிரக்கணக்கான வருசமாக மக்கள் மாதுளையை சாப்பிட்டபடியிருக்கிறார்கள். கிரேக்க புராணம் மாதுளையை பற்றிய கதையை சொல்கிறது.
மாதுளையை விதையுள்ள ஆப்பிள் என்றே குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தில் இன்றும் பெரும்பான்மையினருக்கு மாதுளை பிடிப்பதேயில்லை. எனது நண்பர்களில் ஒருவர் மாதுளை முத்துகளை பார்த்தவுடன் முகம் சுழிக்க கூடியவர். அதன் சுவையை பலரும் ஏனோ ரசிப்பதில்லை.
ஒரு மாதுளையில் எவ்வளவு முத்துகள் இருக்கின்றன. ஆர்மீனியர்கள் சரியாக விளைந்த மாதுளம்பழத்தில் எதை எடுத்தாலும் அதில் 613 முத்துக்களே இருக்கும் என்று சொல்கிறார்கள். அது ஒரு நம்பிக்கை. தோராவின் நீதிமொழிகளின் எண்ணிக்கை 613 .அது தான் ஒன்று திரண்டு மாதுளையாகியிருக்கிறது என்பதே யூத மரபு. ஆகவே அந்த எண்ணை குறிப்பதற்கு சில வேளைகளில் மாதுளையை உருவகமாக்கிவிடுகிறார்கள். அதுபோலவே கடவுள் விலக்கி வைத்திருந்த பழம் மாதுளையே அது அறிவின் அடையாளம். அதை உண்டதன் வழியாகவே மனிதர்கள் அறிவு பெற்றார்கள் என்ற நம்பிக்கையுமிருக்கிறது.
பரஜினேவின் சினிமாவும் மாதுளையைக் கவிதையின் குறீயீடாகவே சொல்கிறது. சொற்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கும் மாதுளையே நல்ல கவிதை என்று பரஜினேவ் சொல்கிறார். அது எல்லா தேசங்களின் கவிதைகளுக்கும் பொருந்தக்கூடிய உண்மையே.