ரெம்ப்ராண்டின் மன்னர்

ஓவியர் ரெம்ப்ராண்டினைப் பற்றிய கறுப்பு வெள்ளைத் திரைப்படத்தில் அவரது ஓவிய உலகை விடவும் வறுமையான வாழ்க்கையே அதிகம் சித்தரிக்கபட்டுள்ளது.

இன்று ரெம்ப்ராண்டின் ஓவியங்கள் பலநூறு கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆம்ஸ்டர்டாமில் அவர் வாழ்ந்த போது கடனைக் கட்ட முடியாமல் திவாலாகியிருக்கிறார். ஓவியம் வரைவதற்கான வண்ணங்கள் வாங்குவதற்குக் கூட வருவாய் இல்லாதவராக வாழ்ந்திருக்கிறார்.

ரெம்ப்ராண்டின் சுய உருவப்படங்களைக் காணும் போது அவரது ஆளுமையின் தனித்துவம் நன்றாக புலப்படுகிறது. குறிப்பாக ரெம்ப்ராண்டின் ஒளிரும் கண்கள். அது துணிச்சலான, பிடிவாதமான, அசாத்திய படைப்பாற்றல் கொண்ட கலைஞரின் கண்கள் என்பதை உணர்த்துகின்றன

1656-ல் ரெம்ப்ராண்ட் கடன் கட்ட முடியாமல் திவாலானதை மையமாகக் கொண்டு Rembrandt’s Money என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் பாப் வெஸ்ஸல்ஸ். இவர் ஒரு சட்ட அறிஞர். விரிவான ஆராய்ச்சியின் பின்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார். ரெம்ப்ராண்டின் குடும்ப வரலாற்றினையும், எதனால் கடன் ஏற்பட்டது என்பதையும் நுணுக்கமான ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.

1938ல் வெளியான திரைப்படத்தில் இந்த நிகழ்வில் சில காட்சிப்படுத்தபட்டுள்ளன. குறிப்பாக ரெம்ப்ராண்ட் தனது ஓவியங்களை எவருக்கும் விற்பனை செய்ய முடியாதபடி கடன்கொடுத்தவர்கள் நீதிமன்ற தடையாணை பெற்றிருந்தார்கள். ஆகவே ரெம்ப்ராண்டின் மனைவி ஒரு கலைப்பொருள் விற்பனையகத்தைத் துவங்கி அங்கே வேலை செய்யும் ரெம்ப்ராண்டின் ஓவியங்கள் யாவும் தனக்கே உரிமையானது எனச் சட்டவிதிகளைக் காட்டித் தடையை உடைத்தெறிகிறார்

வருமானமில்லாத நிலையில் நகரில் வாழ முடியாத ரெம்ப்ராண்ட் தனது தந்தைக் காண சொந்த கிராமத்திற்குச் செல்கிறார். வீட்டில் தந்தை அவரை வரவேற்று உணவளிக்கிறார். அப்போது விவசாயிகள் உண்ணும் ரொட்டியின் ருசியை நீண்ட காலத்தின் பின்பு ரெம்ப்ராண்ட் அனுபவிக்கிறார். அவர்கள் குடும்பம் மாவு தயாரிப்பதிலும் ரொட்டி செய்வதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அந்த ஊரின் விவசாயிகள் அவர் ஒரு ஓவியர் என்பதைப் பெரிதாகக் கருதவில்லை. உதவாக்கரையான பிள்ளை என்றே மதிப்பிடுகிறார்கள். கிராமவாழ்க்கையில் விரும்பி ஈடுபட முயன்று தோற்றுப் போகிறார் ரெம்ப்ராண்ட்.

அரசப்பிரதிகள் ஓவியம் வரைவதற்காகக் கொடுத்த பணத்தை அவர் ஆடம்பர வாழ்வில் செலவு செய்துவிட்டார் என்றும், மரச் செதுக்கு ஓவியத்தின் பிரதிகளை விற்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை ரெம்ப்ராண்ட் மீறியுள்ளார் எனவும் அவர் மீது நீதிமன்ற புகார் அளிக்கபட்டது. இது போலச் சில வாடிக்கையாளர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு ஓவியம் வரைந்து தரவில்லை என்ற புகாரும் இருந்திருக்கிறது என்கிறார் பாப்

ரெம்ப்ராண்டின் புகழ்பெற்ற ‘தி நைட் வாட்ச்’ ஓவியத்தை அன்றைய பார்வையாளர்கள் கேலி செய்தார்கள். அவரிடம் விளக்கம் கேட்டார்கள். அந்த ஓவியத்தைத் திருத்தம் செய்ய மறுத்து மக்களின் ரசனை மிகவும் மலினமாக உள்ளதாக ரெம்ப்ராண்ட் பதில் அளித்திருக்கிறார்

இந்தத் திரைப்படத்தில் விவிலியக்காட்சி ஒன்றை வரைவதற்காக மன்னர் சவுல் உருவத்திற்கு ஏற்ற ஆளை தேடுகிறார் ரெம்ப்ராண்ட். சாலையோரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரருக்கு காசு கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து மன்னரைப் போல உடையணியச் செய்து ஓவியம் வரைகிறார். அந்தப் பிச்சைக்காரன் சவுல் மன்னராகக் காட்சி தரும் போது மகிழ்ச்சி அடைகிறான். அந்தக் காட்சியின் போது சவுல் மன்னரைப் பற்றிய கதையை ரெம்ப்ராண்ட் விவரிப்பது சிறப்பானது.

தனது வாழ்நாளில் ரெம்ப்ராண்ட் நிறையப் பிச்சைக்காரர்களை ஓவியமாக வரைந்திருக்கிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர்வலத்தில் யாசகம் கேட்கும் காட்சியொன்றும் இருக்கிறது.

மனைவி சாஸ்கியாவை ரெம்ப்ராண்ட் மிகவும் நேசித்தார். அவளை வானுலகிலிருந்து வந்த தேவதை என்று புகழ்ந்திருக்கிறார். அவரது ஓவியங்களுக்குச் சாஸ்கியா மாடலாக இருந்திருக்கிறாள். அவர்களுக்கு டைட்டஸ் என்ற மகன் இருந்தான், அவனுக்கு ஒன்பது மாதங்களே ஆகியிருந்த போது எதிர்பாராமல் சாஸ்கியா இறந்து போனாள்.

அவளது மறைவால் நிலைகுலைந்து போன ரெம்ப்ராண்டின் துயரிலே ஆழ்ந்து கிடந்தார். அப்போது அவரது வாழ்வில் வந்த இரண்டாவது பெண் கீர்ட்ஜே. அவள் சாஸ்கியாவின் பணிப்பெண். அவள் அளித்த ஆறுதல்மொழிகளால் மீண்டு வந்த ரெம்ப்ராண்ட் மறுபடியும் ஓவியம் வரையத் துவங்கியிருக்கிறார். ஆனால் பழைய கடன்களிலிருந்து மீள முடியவில்லை. புதுக்கடன்களும், வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட சண்டையும் அவரைத் தீராக் கடனாளியாக்கியது

எப்படியாவது மன்னரைச் சந்தித்து ஓவியப்பணியைக் கேட்கும்படி நெருக்கடி தருகிறாள் கீர்ட்ஜே. அதை ரெம்ப்ராண்ட் விரும்பவில்லை. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உறவில் விரிசல் உருவாகியது.

இந்த நிலையில் அவரது வாழ்வில் ஹென்றிக்ஜே ஸ்டோஃபெல்ஸ் நுழைகிறாள். அவளும் பணிப்பெண்ணாக வந்தவளே. அவள் ரெம்ப்ராண்ட்டை விட 20 வயது இளையவள்.

தனது ஓவியத்திற்கான மாடலாக அவளை வரைந்த ரெம்ப்ராண்ட் அவளது அழகில் தனது மனதை பறிகொடுத்து அவளுடன் வாழத் துவங்கினார். இதனால் ஆத்திரமான கீர்ட்ஜே ரெம்ப்ராண்டின் மீது தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக நீதிமன்றப் புகார் அளித்திருக்கிறாள். அந்த நெருக்கடி அவரது கலைப்பணியை பாதித்திருக்கிறது.

நகரிலிருந்து விடுபட்டு நீண்ட தொலைவு சென்று கிராமப்புறத்தில் ரெம்ப்ராண்டும் ஹென்றிக்ஜேயும் திருமணம் செய்துகொள்ளாமல் ஜோடியாக வாழ்ந்து வந்தார்கள். திருமணம் செய்யாத உறவு தண்டனைக்குரியதாக இருந்த காலமது. ஆகவே அவர்களின் உறவு கண்டறியப்பட்டுத் திருச்சபையால் கண்டிக்கப்படவே நீதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் ரெம்ப்ராண்ட் அவளைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அவசர ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. ஆனால் திருமணத்தின் முன்பு நோயுற்ற ஹென்றிக்ஜே இறந்து விடுகிறாள். அப்போது அவளது வயது 37

சொந்த வாழ்வின் தொடர் துயரங்களும் , கடனும் ஒன்று சேர்ந்து கொள்ளவே வயதான ரெம்ப்ராண்ட் தனது அடையாளத்தைத் துறந்து கிழட்டுகுடிகாரன் போல வாழ்ந்திருக்கிறார், ஹென்றிக் ஜே மூலம் பிறந்த மகளுடன் அவர் வாழ்ந்து வந்தார் என்கிறார்கள்.

தான் வாழ்ந்த காலத்தில் ரெம்ப்ராண்ட் பலராலும் வஞ்சிக்கபட்டிருக்கிறார். சட்டப்பிரதிநிதிகள் அவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்கிறார் பாப்

ஒருமுறை தான் வரைந்த ஓவியத்திற்கான ஊதியம் கேட்டு ரெம்ப்ராண்ட் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். நடுவர்கள் உத்தரவால் ரெம்ப்ராண்டிற்குப் பணம் வழங்கப்பட்டபோதிலும், முக்கியப் பிரமுகர் மீது வழக்கு தொடர்ந்த காரணத்தால் நகரசபையிடமிருந்து ஓவியம் தீட்டும் பணிகளை அவர் இழந்திருக்கிறார், ஓன்பது ஆண்டுகள் நகரசபையால் எந்தப் பணியும் அவருக்கு வழங்கப்படவில்லை

ரெம்ப்ராண்டிற்கு மிக அவசியமாகப் பணம் தேவைப்பட்ட தருணத்தில் கூடத் தனது கலைத்தரத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை, தனது ஓவியத்திற்கான விலையை மிகவும் அதிகமாகவே வைத்திருந்தார். பணம் கிடைக்கிறதே என்பதற்காக விருப்பமில்லாத எந்த வேலையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் பாப் .

தனது ஓவியங்கள் குறித்த எந்த விமர்சனத்தையும் அல்லது தலையீட்டையும் சகித்துக்கொள்ளாத ரெம்ப்ராண்ட், தனது படைப்பில் எந்த மாற்றங்களையும் செய்ய விரும்பாதவர். அதுவே வாடிக்கையாளர்களுடன் அடிக்கடி பிரச்சனையை ஏற்படுத்தியது என்றும் பாப் குறிப்பிடுகிறார்

1634-ல், ரெம்ப்ராண்ட் சாஸ்கியா வான் உய்லன்பர்க்கை மணந்தார்; அந்த நாட்களில் ரெம்ப்ராண்ட் புகழ்பெற்ற உருவப்படக்கலைஞராக இருந்தார். மதிப்பிற்குரிய பிரபுகள் அவருக்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். அன்றைய பிற ஓவியர்களை விட இரண்டு மடங்கு ஊதியம் பெறுபவராகவும் இருந்திருக்கிறார்

ஆடம்பர வாழ்வு மற்றும் அரிய கலைப்பொருட்களை வாங்கிச் சேமிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாக நிறையப் பணத்தை இழந்திருக்கிறார். அதுவே அவர் கடனாளியாக முக்கியக் காரணம்.

1656-ஆம் ஆண்டில், அடமானத்தில் இருந்த அவரது வீடு விற்கப்பட்டது. அவர் வசமிருந்த அரிய கலைப் பொட்கள் யாவும் ஏலமிடப்பட்டன. ஆனாலும் கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. தொடர்ந்து ஓவியம் வரைந்தாலும் அவை கடன்காரர்களுக்கே சொந்தமாக வேண்டியிருந்தது. இந்த நெருக்கடியிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை.

ஆம்ஸ்டர்டாமின் ரோசென்கிராச்ட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ரெம்ப்ராண்ட் தனிமையிலும் ஏழ்மையிலும் இறந்தார் . அடையாளம் இல்லாத ஏழையாகவே அவர் அடக்கம் செய்யப்பட்டார், அவரது கல்லறை வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது என்கிறது தேவாலயப் பதிவேடு.

அவரது கல்லறையின் சரியான இடம் தெரியவில்லை; அது குறித்து அன்றைய இறப்புப் பதிவேட்டில் எந்த குறிப்புமில்லை

ஒளிரும் ஓவியங்களை வரைந்த மகத்தான கலைஞனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வெளிச்சம் குறைவாகவே இருந்திருக்கிறது. இன்று ரெம்ப்ராண்டின் ஓவியங்களைக் காணும் எவரும் அவரது கசப்பான இறுதிநாட்களை. தீராக்கடனை நினைவு கொள்வதில்லை. இன்று ஆம்ஸ்டர்டாமில் அவருக்கு மிகப்பெரிய நினைவகம் உருவாக்கபட்டிருக்கிறது. ஆனால் அவர் இறந்த போது கல்லறையில் அவரது பெயர் கூடப் பொறிக்கப்படவில்லை

••

0Shares
0