1862ல் தஸ்தாயெவ்ஸ்கி ஐரோப்பியப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பீட்டர்ஸ்பெர்க்கில் கிளம்பி பெர்லின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன் என நீண்டது அப்பயணம். இரண்டரை மாத காலப் பயணமது. இந்தப் பயணத்தின் வழியாக ஐரோப்பியப் பண்பாடு மற்றும் சமூக நிலையைப் பற்றித் தஸ்தாயெவ்ஸ்கி அறிந்து கொண்டார். Winter Notes on Summer Impressions என இந்தப் பயணத்தைப் பற்றிச் சிறிய நூல் ஒன்றையும் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்.
அதே பயணத்தைத் தற்போது தஸ்தாயெவ்ஸ்கியின் கொள்ளுப்பேரன் டிமிட்ரி மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார். அதை ஒரு ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். Dostovesksy`s Travels எனப்படும் இந்த ஆவணப்படத்தை. PAWEL PAWLIKOWSKI இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படத்தை நேற்றிரவு பார்த்தேன்.
தஸ்தாயெவ்ஸ்கியின் கொள்ளுப்பேரன் பெயர் டிமிட்ரி. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கதாபாத்திரம் என்பதால் அந்தப் பெயரை தனக்கு வைத்திருப்பதாக அவர் சொல்கிறார்.
ஜெர்மனியிலுள்ள தஸ்தாயெவ்ஸ்கி சொசைட்டி தங்களின் விருந்தினராக வரவேண்டும் என டிமிட்ரியை அழைக்கிறது. அவர்களே விசா மற்றும் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்கிறார்கள். எந்த வழியில். தஸ்தாயெவ்ஸ்கி பயணம் செய்தாரோ அதே வழியில் மறுமுறை பயணம் நிகழ்த்தப்படுகிறது
நான் தஸ்தாயெவ்ஸ்கி பேசுகிறேன் என டிமிட்டிரி தொலைபேசியில் பேசும் காட்சியில் இப்படித் தான் ஒரு காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கி இருந்திருப்பார் என யூகிக்க முடிகிறது. இருவரது முகத்தோற்றம் ஒன்றுபோலவே இருக்கிறது.
டிராம் ஒட்டுனராகப் பணியாற்றும் டிமிட்ரிக்கு தான் தஸ்தாயெவ்ஸ்கியின் வழிவந்தவன் என்பது பெருமையாக இருக்கிறது. ரஷ்யாவின் ஆன்மாவை அறிந்து கொள்ளத் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துகளே உதவுகின்றன எனப் பலரும் அவரிடம் பாராட்டுத் தெரிவிக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் குறித்த கேள்விகளுக்கு டிமிட்ரி பதில் சொல்கிறார். நாவலின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டுகிறார். தஸ்தாயெவ்ஸ்கி சென்ற இடங்களுக்கெல்லாம் இவரும் செல்கிறார்.
இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவச்சித்திரம், மற்றும் அவரது கதாபாத்திரங்களின் ஓவியங்களை மக்கள் ஆசையோடு பணம் கொடுத்து வாங்குவதைக் காணமுடிகிறது. அந்த ஓவியங்களை விற்று அதிலிருந்து சேகரித்த பணத்தைக் கொண்டு டிமிட்ரி second hand Mercedes கார் வாங்க முற்படுகிறார். இலக்கியக்கூட்டங்கள். சந்திப்புகள் என ஒரு தளத்திலும் தனக்கு விருப்பமான மெர்சிடிஸ் காரை வாங்க பழைய கார் விற்பனையாளருடன் அவருக்கு ஏற்படும் சந்திப்பு, பணம் திரட்டல் மறுதளத்திலுமாக ஆவணப்படம் விரிகிறது.
PAWEL PAWLIKOWSKI இயக்கிய ida, cold war ஆகிய இரண்டு படங்களும் மிகச் சிறப்பானவை. இரண்டும் கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட காவியங்கள். பாவெல் தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர வாசகர்.
