கேள்வி 1: தமிழ் இலக்கியப் படைப்புகள் உலகளாவிய அளவில் மற்ற நாட்டின் அறிஞர் /எழுத்தாளர்களால் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது?
பொதுவாக இந்தியாவெங்கும் தமிழ் இலக்கியம் என்றால் பழந்தமிழ் இலக்கியம் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். நவீன தமிழ்இலக்கியம் பற்றி பிற மாநிலங்களுக்கு அதிகம் தெரியாது. இந்திய அளவிலான இலக்கியக்கூட்டங்களுக்குப் போகும் போதெல்லாம் அவர்கள் வியப்போடு இப்படி எல்லாம் தமிழில் எழுதுகிறார்களா எனக்கேட்கிறார்கள். இன்றைய இலக்கியம் குறித்து இந்திய மொழிகளில் அறிமுகமேயில்லை. பின்பு எப்படி உலக அரங்கிற்குத் தெரிந்திருக்ககூடும். வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் தமிழ் ஆய்வு செய்பவர்களும் சங்க இலக்கியம் அல்லது மரபான தமிழ் இலக்கியப்பிரதிகள் பற்றியே ஆய்வு செய்கிறார்கள். அரிதான விதிவிலக்குகள் ஒன்றிரண்டு உண்டு. சோவியத் அரசு ஜெயகாந்தனைக் கொண்டாடியது. ரஷ்ய மொழியில் அவரது படைப்புகளை வெளியிட்டது. இந்த அதிர்ஷடம் வேறு எந்த எழுத்தாளருக்கும் கிடைக்கவில்லை. தமிழ் எழுத்தாளர்களில் க.நா.சு., அசோகமித்ரன்., லா.ச.ரா, புதுமைப்பித்தன், ந. முத்துசாமி, மௌனி, சா. கந்தசாமி. சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, அம்பை, சாரு நிவேதிதா, பெருமாள்முருகன், வாசந்தி, தேவிபாரதி, பாமா போன்றோரின் புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. திலீப்குமார் விரிவான சிறுகதை தொகுப்பு ஒன்றை ஆங்கிலத்தில் கொண்டு வந்திருக்கிறார். அவை உலக இலக்கியப் பரப்பில் போதுமான கவனம் பெறவில்லை. அவை குறித்து விரிவான கட்டுரைகள். ஆய்வுகள் எதுவும் வந்துள்ளதாகத் தெரியவில்லை. உலக அளவில் நவீனதமிழ் இலக்கியம் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதே உண்மை
கேள்வி 2: அயல்நாட்டில் உள்ள தமிழ் சங்கங்கள் தமிழ் மொழி / இலக்கியம் சிறப்புற எவ்வாறு பங்களிக்கலாம் ?
அயல்நாட்டுத் தமிழ்சங்கங்களில் பெரும்பான்மையினர் நடிகர் நடிகைகளை அழைத்துக் கொண்டாடுகிறார்கள். பட்டிமன்றம் நடத்துகிறார்கள். நாடகம் போடுகிறார்கள். திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவித்துப் பரிசு தருகிறார்கள். இதற்கு வெளியே அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளைப் பற்றி ஆங்கிலத்தில் அறிமுகம் செய்யலாம்.. இதற்காக அவர்கள் ஒரு இணையதளம் ஒன்றை ஆங்கிலத்தில் உருவாக்கலாம். தான் படித்த தமிழ் நூற்களைப் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள். அறிமுகங்கள் வெளியிடலாம். பிடித்த நூல்களைப்பற்றிப் பேசி வீடியோவாக வெளியிடலாம்.
ஒரு சங்கத்தில் பத்து பேர் முன்வந்தால் போதும் பத்து சிறந்த தமிழ் புத்தகங்களை மொழியாக்கம் செய்யலாம். சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்த கருத்தரங்குகள் நடத்தலாம். ஆளுக்கு ஒரு புத்தகம் பற்றிப் பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்யலாம்.
சிறந்த தமிழ் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அதை வாசித்து ஆடியோவாகப் பதிவேற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு தமிழ் சங்கமும் ஆண்டுக்கு ஒரு மலர் கொண்டுவருவது போலச் சமகாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து சிறந்த படைப்புகளைத் தொகுத்து ஒரு தொகைநூல் (Anthology) கொண்டு வரலாம். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களில் பிடித்தமானவற்றைத் தேர்வு செய்து விமர்சனக்கூட்டம் நடத்தலாம்.
தமிழ் மொழி கற்றுக் கொள்ளப் புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்கலாம். தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆங்கிலப் பதிப்பகங்களுக்குச் சிபாரிசு செய்து வெளியிடுவதற்கு உதவி செய்யலாம். டிஜிட்டல் நூலகம் ஒன்றை உருவாக்கலாம். இப்படி ஆயிரம் தேவைகள் இருக்கின்றன
கேள்வி 3: ஓர் எழுத்தாளராகத் தமிழ் சமகால இலக்கியப் படைப்புக்களை உலகறிய செய்வதுதற்கு அயல்நாட்டுத் தமிழ்ச்சங்கங்கள் எத்தகைய பங்கு வகிக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?
நான் கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய முக்கியப்படைப்புகள் எதுவும் ஆங்கிலத்தில் வரவில்லை. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வைத்துள்ளதை பதிப்பிக்க முடியவில்லை. ஆனால் நான் அயல்நாட்டு எழுத்தாளர்கள். அவர்களின் முக்கியப் புத்தகங்கள் குறித்து இதுவரை முந்நூறு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நிறைய மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறேன். தற்போது உலகின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்துத் தமிழில் ஒரே நூலாகக் கொண்டுவரும் முயற்சியிலிருக்கிறேன். இது போன்ற பணிகளுக்கு எந்த ஆதரவும் கிடையாது என்பதே உண்மை.
குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு தமிழ் சங்கம் என் போன்ற தமிழ் எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்யத் துணை நிற்கலாமே. அல்லது அமெரிக்காவில் நிதி திரட்டி தரலாமே. இவ்வளவு ஏன் எழுத்தாளர்களின் பிறந்தநாள் அன்று ஒரு வாழ்த்துச் சொல்லலாம் ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைக்கலாம். அதற்குக் கூடவா கற்றுதர வேண்டும்.
கேள்வி 4: தமிழ் இலக்கியப் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் என்னென்ன முட்டுக்கட்டைகள் உள்ளன?
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த வல்லமை கொண்ட எவரும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபாடுகாட்டுவதில்லை. நன்றாக ஆங்கிலம் தெரிந்தவருக்குத் தமிழ் இலக்கியத்தின் நுண்மைகள் புரிவதில்லை. ஆகவே ஒன்றோ, இரண்டோ மொழிபெயர்ப்பாளர்கள் இணைந்து செய்யலாம். அதை ஒருவர் எடிட் செய்யலாம்.
இரண்டாவது தமிழ் இலக்கியத்தைப் பிரபல ஆங்கிலப்பதிப்பகங்கள் எதுவும் கண்டுகொள்வதில்லை. ஆகவே யார் வெளியிடுவார்கள் என்ற பிரச்சனை எழுகிறது.
மூன்றாவது வெளியான புத்தகங்கள் எதற்கும் முறையான விமர்சனம், கல்விப்புல ஆய்வுகள் நடைபெறுவதில்லை. மொழியாக்கம் செய்வதற்கான நிதி நல்கை கிடைப்பதில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமில்லை என்று தவறான எண்ணம் வெளிநாட்டு தமிழர் பலரிடமும் இருக்கிறது. அது மோசமான நோய்கூறு. உலக இலக்கியத்தில் வெளியாகும் எந்தப் படைப்பிற்கும் தமிழ் படைப்புகள் குறைந்ததில்லை என்பதே நிஜம்.
சீனர்கள் எங்கே போனாலும் தங்கள் மொழியை. இலக்கியத்தை. பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கிறார்கள். அப்படித் தமிழர்கள் நடந்து கொள்வதில்லை. தமிழ் இலக்கியத்தை உலக அளவில் கொண்டு போவதற்கு அரசும் தயாராகயில்லை. தன்னார்வ அமைப்புகளும் தயாராகயில்லை. எழுத்தாளர்களே முட்டிமோத வேண்டியிருக்கிறது. அந்த நிலை மாறி தமிழ் நூல்களை உலக அளவில் கவனப்படுத்த பொது அமைப்பும் பெரும் நிதியும் தேவையாக உள்ளது.
கேள்வி 5: தமிழ் இலக்கியப் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் அயல்நாட்டுத் தமிழர்கள் அல்லது தமிழ்ச்சங்கங்கள் எவ்வாறு உதவலாம் ?
1) மொழிபெயர்க்க ஆர்வம் உள்ளவர்கள் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்
2) நவீன இலக்கியத்தில் எவற்றைமொழிபெயர்க்கலாம் எனக்கூடி விவாதிக்க வேண்டும். இது குறித்துப் பலரிடமும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது சிறப்பானது, காலநிர்ணயம் அவசியமானது.
3) ஒரு சங்கம் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டு வரலாம்.
4) சிறந்த மொழியாக்க நூல்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருது தரலாம்
5) ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியாகிற சிறந்த கவிதைகள். சிறுகதைகள். கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தொகை நூலாகக் கொண்டுவரலாம் .
6) குறைந்த பட்சம் ஈபுக்காக மொழிபெயர்ப்புகளை வெளியிடலாம்
7) தமிழ் கவிதைகள். கதைகள் நாவல்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதலாம். அவற்றைக் கல்விபுலங்களில் பகிர்ந்து கொள்ளலாம். உரை நிகழ்த்தலாம். அவற்றை இணையத்தில் வெளியிடலாம்.
8) அமெரிக்க நூலகங்களுக்குத் தமிழ் நூல்களை வாங்கிப் பரிசளிக்கலாம்
9) தமிழகத்திலிருந்து இது போன்ற பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு நிதி அல்லது தொழில்நுட்ப உதவிகள் செய்து தரலாம்
10) நவீன தமிழ் இலக்கியத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு புத்தகம் எனப் பத்து பேர் முனைந்தால் போதும் பத்துத் தமிழ் சங்கங்கள் மூலம் ஒரு ஆண்டிற்குள் நூறு புத்தகங்களை எளிதாக மொழியாக்கம் செய்துவிடலாம் . இது பேராசை. நிஜத்தில் ஆண்டிற்குப் பத்து வெளியானால் கூடச் சந்தோஷமே.
கனடாவிலிருந்து இயங்குகிற கனேடியத் தமிழ் சங்கம் (இயல்) என்ற இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த தமிழ்படைப்புகளுக்கு விருது தருகிறது. எழுத்தாளர்களைக் கனடாவிற்கு அழைத்துக் கௌரவிக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டாடுகிறது. மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு உதவி செய்கிறது. ஆங்கிலத்தில் தமிழ் படைப்புகளை அறிமுகம் செய்கிறது. தமிழ் கற்றுத்தருவதில் உதவி செய்கிறது. தொடர்ந்து இலக்கியக்கூட்டங்களை நடத்துகிறது. இதையே முன்மாதிரியான தமிழ் சங்கமாக நான் கருதுகிறேன். இது போன்ற செயல்பாடுகளை உலக அளவிலுள்ள தமிழ் சங்கங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்
•••
மிச்சிகன் தமிழ் சங்க காலண்டு இதழுக்காக நேர்காணல் செய்தவர்
சின்னையா பாண்டியன்