திருடன் படித்த புத்தகம்

சில நாட்களுக்கு முன்பு ரோமில் ஆள் இல்லாத ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு வெளியேறும் போது புத்தகம் ஒன்றைக் காணுகிறான். இத்தாலிய எழுத்தாளர் Giovanni Nucci எழுதிய The Gods at Six O’Clock என்ற புத்தகத்தை வாசிக்கத் துவங்கி தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருக்கவே வீட்டின் உரிமையாளர் வந்துவிடுகிறார். தப்பியோட முயன்றவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள்

The Gods at Six O’Clock

தனது குற்றச்செயலை மறந்து திருடன் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்த நிகழ்வை இணைய இதழ்களும் சமூக ஊடகங்களும் பெரிதாக விவாதித்து வருகின்றன.

தனது புத்தகத்தைத் திருடன் மெய் மறந்து வாசித்துக் கொண்டிருந்த செய்தியை அறிந்த எழுத்தாளர் ஜியோவானி நுச்சி அவன் தனது புத்தகத்தை முழுமையாகப் படிக்க முடியாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது. ஆகவே தனது சார்பில் ஒரு புத்தகத்தைச் சிறைச்சாலைக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்

இந்த நிகழ்வை ஒட்டி இத்தாலிய இலக்கிய உலகில் ஒருவன் தன்னை மறந்து படிக்கக் கூடிய புத்தகம் எது என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் விமர்சகர்கள். எழுத்தாளர்கள். வாசகர்கள் கலந்து கொண்டு பதில் அளிக்கிறார்கள். இந்தச் செய்தியை மலையாள நாளிதழ்களில் கூடப் பெரிதாக வெளியிடப்பட்டிருக்கிறார்கள்

ஜியோவானி நுச்சியின் புத்தகம் ஹோமரைப் பற்றியது. திருடன் ஏன் ஹோமரை வாசிக்க ஆர்வம் கொண்டான். அவன் முன்பே ஹோமரை வாசித்தவனா. அல்லது அந்தத் தலைப்பு வாசிக்கத் தூண்டியதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அத்தோடு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் ஹோமர் விரும்பி வாசிக்கப்படுகிறார். ஆகவே கிளாசிக் புத்தகங்களே ஒருவரை மெய் மறந்து வாசிக்கவைக்கின்றன என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது

இந்த நூற்றாண்டில் தன்னை மறந்து வாசிக்கக் கூடிய புத்தகம் எழுதப்படவில்லை என்றொரு குற்றச் சாட்டினையும் முன்வைக்கிறார்கள்.

திருடப் போன இடத்தில் ஒருவன் புத்தகம் வாசிக்கிறான் என்பது ஏன் இவ்வளவு முக்கியமான செய்தியாகிறது.

இதற்கு முன்பு இது போலத் திருடப்போன வீட்டில் உள்ள உணவைச் சாப்பிடுகிற. அவர்கள் படுக்கையில் உறங்குகிற, அந்த வீட்டிலுள்ள அழுக்கு துணிகளைத் துவைத்துப் போடுகிற வேடிக்கையான திருடர்களைப் பற்றிய செய்தியை வாசித்திருக்கிறேன். ஆனால் அவர்களிலிருந்து வேறுபட்டவன் புத்தகம் வாசிக்கும் திருடன். திருடர்கள் படிப்பறிவில்லாதவர்கள். மூடர்கள். என்ற பொதுப்புத்தியே இந்தச் செய்தியின் பின்னால் வெளிப்படுகிறது.

திருடன் ஏன் புத்தக அலமாரியால் வசீகரிக்கப்பட்டான். ஹோமர் போர்க் களத்திலிருந்து வீடு திரும்புவதைப் பற்றி எழுதியதால் தனது வீடு திரும்புதல் குறித்த ஏக்கத்தில் தான் இந்த நூலைப் படிக்க முயன்றானா என்ற கேள்வி எழுகிறது.

புத்தகம் என்பது ஒரு வகையான குற்றத் தடுப்புச் சாதனம் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். சிறை அறையில் படிக்க அவனுக்கு நிறைய நேரம் கிடைக்கும். இங்கே நல்ல நூலகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை என்றொரு வாசகர் பதில் எழுதியிருக்கிறார்.

திருடன் படித்த புத்தகத்தை உடனடியாகப் படிக்க வேண்டும் என இத்தாலி வாசகர்கள் தேடித்தேடி நூலை வாங்குகிறார்கள். இது நோபல் பரிசு கிடைத்தால் உருவாகும் கவனத்தைப் போன்றது என்கின்றன பத்திரிக்கைகள்.

உங்களை மறந்து எந்தப் புத்தகத்தைப் படித்தீர்கள். எப்போது படித்தீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளும்படியாக இன்னொரு அலையை இந்த நிகழ்வு எழுப்பியிருக்கிறது. பலரும் இதற்குப் பதில் சொல்லி வருகிறார்கள்.

உங்கள் வீட்டிலுள்ள விலை மதிக்க முடியாத பொருட்களில் ஒன்றே புத்தகம். அதன் மதிப்பைத் திருடன் உணர்ந்திருக்கிறான். பொதுச் சமூகம் உணரவில்லை என்றொரு பேராசிரியர் பதில் எழுதியிருக்கிறார்.

வீட்டில் திருடப்புகுந்த திருடனிடமிருந்து புத்தகத்தை ஏன் காவல்துறையினர் பறித்தார்கள். அது அனுமதிக்கக்கூடிய செயலா. என்றொரு துணை விவாதமும் நடந்து வருகிறது.

ஹெர்ம்ஸ் என்ற கிரேக்க கடவுள் திருடர்களை, பொய்யர்களைப் பாதுகாக்கக் கூடியவர். இவரே கவிதைக்குமான கடவுள். அப்பல்லோவின் கால்நடைகளைத் திருடியதற்காகப் புகழ் பெற்றவர் ஹெர்மஸ். ஆகவே திருடர்களின் கடவுளாகக் கருதப்படுகிறார். சிறகுகள் கொண்ட செருப்பு அணிந்த இவர் பாதாள உலகத்திற்குள் தடையின்றி நுழைந்து வெளியேறக்கூடிய ஒரே கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறார்.

திருடன் படித்துக் கொண்டிருந்த அத்தியாயம் இந்த ஹெர்மஸ் பற்றியது. கிரேக்கப் புராணங்களைப் படிப்பதில் இன்றும் ஆர்வம் குறைந்துவிடவில்லை என்பதன் சாட்சியமாக இந்நிகழ்வினைக் குறிப்பிடுகிறார்கள்.

ஜியோவானி நுச்சி ஒரு இத்தாலியக் கவிஞர் மற்றும் எழுத்தாளர். இவரது The Gods at Six O’Clock இன்னமும் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை. ஆனால் இப்போதைய பரபரப்புக் காரணமாக உடனடியாக இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கிறது. ஒரு திருடன் எழுத்தாளர் நுச்சியை உலக அரங்கிற்கு உயர்த்திவிட்டான் என்கிறார்கள் பதிப்பாளர்கள். உங்கள் புகழை உலகிற்கு எடுத்துச் சொல்ல ஒரு திருடன் தேவை என்றொரு கேலியான குறிப்பையும் வாசித்தேன்.

கடவுள்களின் கண்ணோட்டத்தில் இலியட் பற்றி எழுதியிருக்கிறார் ஜியோவானி நுச்சி. இவர் கிரேக்கப் புராணங்கள் மீது ஆர்வம் கொண்டவர். அவற்றை புதிய கண்ணோட்டத்தில் எழுதி வருகிறார்.

புத்தகம் படித்துக் கொண்டிருந்த திருடனின் வயது என்ன என்ற கேள்வியை எனக்குள் முதலில் எழுந்தது அவனது வயது முப்பத்தியெட்டு. அந்த நூலை வீட்டில் வைத்திருந்தவர் எழுபது வயதான முதியவர். அவர் தனியே வசித்து வந்திருக்கிறார். ஒரு புத்தகம் யாரால் எப்போது வாசிக்கப்படப் போகிறது என்பது புதிரான விதி.

தனது குற்றச் செயலை மறந்து புத்தகம் வாசிக்கும் மனநிலை திருடனுக்கு எப்படி உருவானது. அந்த மனநிலை ஏன் நமக்கு இல்லை என்றும் விவாதிக்கிறார்கள். அது போலவே குற்றம் உருவாக்கும் அவசரங்கள் என்றொரு பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பாளர்களில் பலரும் புத்தகம் படிக்கக் கூடியவர்களே. அவர்களை இந்த நிமிஷத்தில் நினைவு கொள்கிறேன் என ஒரு வாசகர் பதில் எழுதியிருக்கிறார். திருடனால் ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அவனுக்கு நன்றி எனவும் வாசகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

திருடனின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அவன் திருடச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்த அதே வீதியில் தான் எழுத்தாளர் ஜியோவானி நுச்சியும் வசிக்கிறார். பல நேரங்களில் நிஜநிகழ்வுகளின் விசித்திரம் கற்பனைக்கு அப்பாற்பட்டதே.

••

0Shares
0