மீட்கப்பட்ட சிறுமி.

News of the World என்ற டாம் ஹாங்க்ஸ் நடித்த திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது. அந்தப்படத்தினை நேற்றிரவு பார்த்தேன்

அதில் கேப்டன் ஜெபர்சன் என்ற கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருக்கிறார். நாளிதழில் வந்துள்ள முக்கியமான செய்திகளைத் திரட்டி அவற்றைத் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு அறிவிப்பு செய்யும் நியூஸ் ரீடர் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் மக்கள் கட்டணம் கொடுத்து செய்தி வாசிப்பினைக் கேட்டிருக்கிறார்கள்.

என் பத்துவயதுகளில் ராணுவத்தில் வேலைக்குப் போய் திரும்பி வருகிறவர்கள் இப்படி விசித்திரமான செய்திகளைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்

குறிப்பாக இந்திய சீன யுத்தம் பற்றி இது போன்ற விசித்திரமான செய்திகளை ராணுவ வீரர்களிடம் கேட்டிருக்கிறேன். இந்தப்படத்தில் டாம் ஹாங்க்ஸ் வைத்திருப்பது போல ஹிந்து உருது செய்தி தாட்களின் துண்டுச் செய்திகளை வைத்திருப்பார்கள். அதை வாசிக்கும் போது வியந்து ஊரே வியந்து கேட்டுக் கொண்டிருக்கும். தொலைக்காட்சி வருவதற்கு முன்பு செய்தியைத் தெரிந்து கொள்ள நாம் காத்துகிடக்கவே வேண்டியிருந்தது.

ரேடியோவில் செய்திகள் ஒலிபரப்பாகும் போது சுற்றி நின்று கேட்பார்கள். இதற்காகவே பஞ்சாயத்து அலுவலகத்தில் ரேடியோ ஒன்றிருக்கும். அதை இயக்கும் பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த நேரத்திற்கு ரேடியோவை ஆன் செய்து செய்தியை வைப்பார். செய்தியைக் கேட்டு முடித்தவுடன் மக்கள் கலைந்து போய்விட மாட்டார்கள். அதைப்பற்றி விவாதிப்பார்கள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்

பாவை கூத்து நடத்துகிறவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று வருவதால் அவர்கள் ஒரு ஊரின் சிறப்புகளை, செய்திகளை மற்ற ஊருக்கு எடுத்துச் செல்வார்கள். இவர்கள் மட்டுமின்றி கப்பலில் வேலை செய்து திரும்பியவர்கள். வெளிநாட்டிற்குப் போய் வந்தவர்கள் என அவர்கள் சொல்லும் செய்தியின் வழியாகவே உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. நிறைய செய்திகளை அறிந்து வைத்திருப்பவரை பெரிய அறிவாளியாக நினைத்தார்கள்.

இந்த நினைவுகள் முழுவதும் இப்படம் பார்க்கும் போது மனதில் எழுந்தபடியே இருந்தது.

நமது கையிலுள்ள செல்போனில் நிமிஷத்துக்கு நிமிஷம் உலகெங்கும் நடக்கும் விஷயங்களை செய்தியாக வந்து கொண்டேயிருக்கின்றன. இது தவிரச் செய்தி சேனல்கள். டுவிட்டர் பேஸ்புக் ஆன்லைன் இதழ்கள் எனச் செய்திகள் அருவியாகக் கொட்டப்படுகின்றன. இதில் மூச்சுத்திணறிப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழலுக்குள் நாட்டுநடப்புகளை அறிந்து கொள்ளாமல் சிறிய வட்டத்திற்குள் வாழும் மனிதர்களையும் அவர்களின் இருண்ட உலகையும் பேசுகிறது என்ற விதத்தில் இந்தப் படம் தனித்துவமாக உள்ளது

படத்தின் கதை1870 இல் டெக்சாஸ் மாகாணத்தில் நடக்கிறது. அந்த நாட்களில் இப்படிக் காசு கொடுத்துத் தான் மக்கள் செய்தித் தாளின் தொகுப்பினை அறிந்து கொண்டார்கள்.

உள்நாட்டுப் போரில் கலந்து கொண்ட ராணுவவீரரான கேப்டன் ஜெபர்சன் கிட் ஊர் ஊராகப் பயணித்துச் செய்தி அறிவிப்புப் பணியினை மேற்கொள்கிறார். எது போன்ற செய்திகளை அவர் தேர்வு செய்து வாசிக்கிறார் என்பது தான் முக்கியமானது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், டெக்சாஸின் பெரும்பகுதி முழுவதும் விரோதப் போக்கு நிலவுகிறது. இந்த நெருக்கடியான சூழலின் ஊடாகப் பயணம் செய்யும் கேப்டன் கிட் தற்செயலாக ஜோஹன்னா என்ற சிறுமியைக் காப்பாற்றுகிறார்.

அவளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காகக் கிட் மேற்கொள்ளும் பயணமே இந்தப் படம். ஜோஹன்னா ஜெர்மன் விவசாயி ஒருவரின் மகள். அவள் கியோவா பழங்குடியினரால் கடத்தப்பட்டு வளர்க்கப்படுகிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. பழங்குடியினரின் மொழி மட்டும் தான் தெரியும்.

உண்மையில் அவள் ஒரு தனியுலகம். கேப்டன் கிட் ஒரு உலகம். இரண்டு உலகிற்குள்ளும் நடக்கும் பரிவர்த்தனையும் புரிதலும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் தெரியாத அந்தச் சிறுமிக்கு மொழி கற்றுத் தருகிறார். அவளை வெகு தொலைவில் உள்ள அவளது மாமா வீட்டிற்கு அழைத்துப் போக முயல்கிறார். வழியில் ஏற்படும் தடைகள் பிரச்சனைகளை அவர்கள் எவ்வாறு இணைந்து எதிர்கொள்ளுகிறார்கள். மீளுகிறார்கள் என்பதை நேர்த்தியாக விவரிக்கிறார்கள்..

சிறுமியை விலைக்குக் கேட்பவர்களைக் கேப்டன் கிட் எதிர்கொள்ளும் விதமும் அவர்கள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தும் போது பதில் தாக்குதல் நடத்துகிற முறையும் சிறப்பாக உள்ளது.

எந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும். எந்தச் செய்தியை மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று அதிகாரத்திலிருப்பவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் முன்பு கேப்டன் கிட் செய்தி வாசிப்பதில் ஏற்படும் பிரச்சனையும் அதை அவர் கையாளும் விதமும் அழகானது.

கிட் மற்றும் ஜோஹன்னா இறுதியில் மாமாவின் பண்ணை நிலத்தை அடைகிறார்கள், அழிவின் சாட்சியமாக அந்த இடம் உள்ளது. கிட் தயக்கத்துடன் ஜோஹன்னாவை அவர்களுடன் விட்டுவிட்டு, சான் அன்டோனியோவுக்குத் திரும்புகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல ஜோஹன்னாவிற்குப் புது வாழ்க்கை அமையவில்லை . முடிவு என்னவாகிறது என்பதே படத்தின் மீதக்கதை.

வழக்கமான வெஸ்டர்ன் பட நாயகர்களின் வடிவம் போலவே கேப்டன் கிட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறார். ஒரே வித்தியாசம் அவர் செய்தி வாசிப்பவராகச் செயல்படுவது மட்டுமே. ஆனால் ஜோஹன்னாவை மீட்டு தன்னோடு அழைத்துச் செல்ல துவங்கியதும் அவரது செயல்பாடுகளும் நோக்கமும் மாறிவிடுகின்றன. கற்றுத்தருவதோடு அவளிடமிருந்து கற்றுக் கொள்ளவும் துவங்குகிறார் கேப்டன் கிட். வெஸ்டர்ன் திரைப்பட நாயகர்களைப் போலவே மிகக் குறைவாகப் பேசுகிறார். நீண்ட தொலைவு பயணம் செய்கிறார். திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் கிடையாது.

ஹாங்க்ஸ் பல ஆண்டுகளாக இதுபோன்ற நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் அவர் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

யாரோ ஒருவரின் பிள்ளையைக் காப்பாற்றி வளர்த்துத் தன்னைத் தந்தையைப் போல அடையாளப்படுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்களைச் சாப்ளின் நடித்த தி கிட் முதல் இன்று வரை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதே கதைக்கரு. கதாபாத்திரங்களின் பின்புலத்தை மாற்றி மாற்றி அந்தக் கதையை வெற்றியடையச் செய்கிறார்கள்.

எளிமையான படம். அதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.. James Newton Howard இசையும் Darius Wolski ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளன.

••

0Shares
0