திருவண்ணாமலையில்

ஆகஸ்ட் 1 இரவு திருவண்ணாமலையில்  பவா. செல்லதுரை ஏற்பாடு செய்திருந்த நிலம் இலக்கியக் கூட்டத்தில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றி உரையாற்றினேன். எனக்கு  மிகவும் விருப்பமான எழுத்தாளரைப் பற்றிப்  பேசியது சந்தோஷம் அளித்தது.

மார்க்வெஸின் புகழ்பெற்ற சிறுகதைகளையும், எழுத்துமுறையின் சிறப்புகளையும் லத்தீன் அமெரிக்க அரசியல் சூழலையும் பற்றி விரிவாகப் பேசினேன்.  பார்வையாளர்கள் நிரம்பியிருந்தார்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக  திருச்சியிலிருந்து ஒரு வாசகர் வந்திருந்தார். இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள்.  திருவண்ணாமலையில் தேர்ந்த வாசகர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் முன்பாக உரையாற்றுவது   இனிமையான அனுபவம்

முதல்நாள் இரவே திருவண்ணாமலைக்குச்  சென்றிருந்தேன். ஜெயஸ்ரீவீட்டில் காலையுணவு. அவர் மொழியாக்கத்தில் வந்துள்ள நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.  சங்க இலக்கியப்பின்புலத்தில் அமைந்த சிறந்த மலையாள நாவல். ஜெயஸ்ரீ அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார்.

மாலை பவாவின் வம்சி புத்தகக் கடைக்குப் போன போது இளைஞர்கள் திரண்டிருந்தார்கள். இரண்டு மணி நேரம்  அவர்களுடன் இலக்கியம், சினிமா, பயண அனுபவம் என  கலந்துரையாடினேன். தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பலரும் திருவண்ணாமலைக்கு வந்து உரையாற்றியிருக்கிறார்கள். பவாவின் அன்பும்உபசரிப்பும் திருவண்ணாமலையை  தமிழ் இலக்கியத்தின் தலைநகராக மாற்றியுள்ளது.

நிகழ்வினை ஷைலஜா ஒருங்கிணைத்து நடத்தியதுடன் வந்திருந்திருந்த அத்தனை பேருக்கும் இரவு உணவிற்கு ஏற்பாடு  செய்திருந்தார்.

இலக்கியத்திற்காகவே வாழும் குடும்பம் என்றால் அது பவாவின் வீடு தான்.

வம்சி நிகழ்ச்சியை அழகான புகைப்படங்களாக எடுத்து அனுப்பியிருந்தான். வம்சிக்கு அன்பும் நன்றியும்.

•• புகைப்படங்கள்  : வம்சி

0Shares
0